இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0213



புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே
ஒப்புரவின் நல்ல பிற

(அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:0213)

பொழிப்பு (மு வரதராசன்): பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப்போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.

மணக்குடவர் உரை: ஒப்புரவு செய்தலின் நன்றாயிருப்பது தேவருலகத்தினும் இவ்வுலகத்தினும் பெறுதற்கு அரிதாம்.

பரிமேலழகர் உரை: புத்தேள் உலகத்தும் ஈண்டும் - தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும், ஒப்புரவின் நல்ல பிற பெறல் அரிது - ஒப்புரவுபோல நல்லன பிற செயல்களைப் பெறுதல் அரிது.
(ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லோரும் ஒரு தன்மையராகலின் புத்தேள் உலகத்து அரிதாயிற்று, யாவர்க்கும் ஒப்பது இது போல் பிறிதொன்று இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று. 'பெறற்கரிது' என்று பாடம் ஓதி, 'பெறுதற்குக் காரணம் அரிது' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஒப்புரவினது சிறப்புக் கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: எல்லோர்க்கும் பயன்படுமாறு பொது நன்மைகளுக்குச் செய்யும் ஒப்புரவு மிகவும் நல்ல செயலாகும். அதுபோன்ற நன்மை தரும் பிறிதொன்றைத் தேவருலகத்திலும் பெறுதல் இயலாது; இவ்வுலகிலும் இதுபோல ஒன்றைப் பெறுதலரிது; பொதுநலம் பேணுதலால் பெறும் மகிழ்ச்சி நோக்கியது இது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒப்புரவின் நல்ல பிற புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே .

பதவுரை:
புத்தேள்-வானவன்; உலகத்தும்-உலகத்திலும்; ஈண்டும்-இங்கும் (இவ்வுலகிலும்); பெறல்-அடைதல்; அரிதே-அருமையானதே; ஒப்புரவின்-ஒப்புரவு போல; நல்ல-நன்மையானவை; பிற-மற்றவை;.


புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தேவருலகத்தினும் இவ்வுலகத்தினும் பெறுதற்கு அரிதாம்;
பரிப்பெருமாள்: தேவருலகத்தினும் இவ்வுலகத்தினும் பெறுதற்கு அரிதாம்;
பரிதி: தெய்வலோகத்திலும் இல்லை; அது எப்படி என்றால் தெய்வலோகத்தில் தானதன்மம், பரோபகாரம் இல்லை. இந்த உலகத்தில் செய்த தானதன்ம பலத்தை அங்கே அனுபவிப்பது உள்ளது என்றவாறு;
பரிமேலழகர்: தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும் பெறுதல் அரிது.

'தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும் பெறுதல் அரிது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தேவர் உலகத்திலும் நம் உலகத்திலும் இல்லை', 'தேவருலகத்தும் இவ்வுலகத்தும் பெறுதல் இயலாது', 'வேறொன்று தேவருலகத்திலும் இல்லை; இந்த உலகத்திலும் இல்லை', 'தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறல் முடியாது.', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தேவருலகத்தும் இவ்வுலகத்தும் பெறுதல் இயலாது என்பது இப்பகுதியின் பொருள்.

ஒப்புரவின் நல்ல பிற:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒப்புரவு செய்தலின் நன்றாயிருப்பது.
பரிப்பெருமாள்: ஒப்புரவு செய்தலின் நன்றாயிருப்பது.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஈண்டுச் செய்யும் அறத்தினும் இதனின் மிக்கது இல்லை. தேவருலகிற் பெறும் பயனினும், இதனின் மிக்கது இல்லை.
பரிதி: ஒப்புரவுபோல ஒத்த இன்பம்.
பரிமேலழகர்: ஒப்புரவுபோல நல்லன பிற செயல்களை.
பரிமேலழகர் குறிப்புரை: ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லோரும் ஒரு தன்மையராகலின் புத்தேள் உலகத்து அரிதாயிற்று, யாவர்க்கும் ஒப்பது இது போல் பிறிதொன்று இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று. 'பெறற்கரிது' என்று பாடம் ஓதி, 'பெறுதற்குக் காரணம் அரிது' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஒப்புரவினது சிறப்புக் கூறப்பட்டது.

'ஒப்புரவு செய்தலின் நன்றாயிருப்பது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொது நன்மையினும் சிறந்த செயல்', 'ஒப்புரவு (எல்லார்க்கும் ஒத்த உதவி) போல நல்லனவாகிய பிற செயல்களை', 'பரோபகாரம் என்பதைக் காட்டிலும் சிறந்தது', பிறர்க்கு உதவுவன போன்ற நல்ல பிற செயல்களை' (உதவும் செயலே ஒப்பு அற்ற நற்செயலாம்)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பொது நன்மை செய்வதினும் நல்லன வேறு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒப்புரவின் நல்ல பிற தேவருலகத்தும் இவ்வுலகத்தும் பெறுதல் இயலாது என்பது பாடலின் பொருள்.
'ஒப்புரவின் நல்ல பிற' என்ற பகுதியின் விளக்கம் என்ன?

ஒப்புரவு போன்ற நன்மை தருவன தேவருலகத்திலோ இந்நிலவுலகத்தின் மற்ற செயல்களிலோ இல்லை. ஒப்புரவு செய்யக் 'கொடுத்து வைத்திருக்க' வேண்டும்.
புத்தேள் என்பது வானுலகம் அல்லது தேவர்கள் வாழும் மேலுலகத்தைக் குறிக்கும் சொல். ஈண்டு என்ற சொல் இங்கு எனப் பொருள்படுவதால் அது நிலவுலகைச் சுட்டும். ஒப்புரவு என்பது பல்லோர்க்குப் பயன்படும் பொதுநலப் பணிகள் ஆகும். ஒப்புரவுச் செயல்களானவை எல்லாராலும் உயர்த்திச் சொல்லப்படும் தேவருலகத்திலும் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள மற்ற செயல்களினும் சிறந்தன என்கிறது பாடல். ஒப்புரவு என்பது பெருங்கொடை. இது பொதுவாக சமுதாய நலன் கருதி மருத்துவ மனை, கல்வி நிலையம், நூலகம் அமைத்தல் போன்ற பணிகள் மூலம் உதவுதல் ஆகும். இந்த ஒப்புரவுபோன்ற நல்ல செயல்களை விண்ணுலகத்திலும் பெற முடியாது. மண்ணுலகமாகிய இங்கும் வேறு செயல்களில் இல்லை. ஒப்புரவின் அரிய தன்மை இக்குறளில் விளக்கப்பட்டது.

'ஒப்புரவின் நல்ல பிற' என்ற பகுதியின் விளக்கம் என்ன?

இப்பகுதிக்கு ஒப்புரவு செய்தலின் நன்றாயிருப்பது, ஒப்புரவுபோல ஒத்த இன்பம், ஒப்புரவுபோல நல்லன பிற செயல்கள், ஒப்புரவைப்போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகள், ஒப்புரவு அதுபோன்ற நன்மை தரும் பிறிதொன்று, பொது நன்மையினும் சிறந்த செயல், ஒப்புரவு போன்ற நல்ல செயல்கள், ஒப்புரவு (எல்லார்க்கும் ஒத்த உதவி) போல நல்லனவாகிய பிற செயல்கள், ஒப்புரவு என்பதைக் காட்டிலும் நல்லது வேறொன்று, ஒப்புரவு என்னும் உயர்ந்த தன்மைக்கு ஒப்பான மற்றொன்று, ஒப்புரவைப் போல வேறு நல்ல அறங்கள், பிறர்க்கு உதவுவன போன்ற நல்ல பிற செயல்கள் என்று உரையாளர்கள் பொருள் கூறினர்.

தேவருலகத்தில் காமதேனு, கற்பகத்தரு ஆகியன இருப்பதால் ஈவாரும் ஏற்பாரும் இல்லை என்பது தொன்மைக் கதைகள் சொல்வது. அதனால் ஒப்புரவென்னும் உயர்குணமும் உதவுந்தன்மையும் அவர்களுக்கு தேவை இல்லையென்றாலும் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என வள்ளுவர் வருந்துகிறார்போல் தோன்றுகிறது. ஆனால் தேவர்கள் 'மேவன செய்து ஒழுகுபவர்' அதாவது தனக்குத் தோன்றியவாறு வாழ்க்கை நடத்துபவர்கள் என்று வள்ளுவரே சொல்லியுள்ளார்..எனவே அவர்களுக்கு உடனுறைபவர்கள் பற்றிய கவலையும் இல்லை, ஆதலால் அவ்வுலகில் ஒப்புரவு என்ற நல்ல செயலும் இல்லை.
பிறர்க்கு உதவிடும் செயலாகிய ஒப்புரவு என்பதைவிடச் சிறந்த செயலை இன்றைய உலகிலும் இனிவரும் உலகிலும் காண்பது அரிது என்பது இக்குறள் கூறுவது. பரிப்பெருமாள் 'ஈண்டுச் செய்யும் அறத்தினும் இதனின் மிக்கது இல்லை. தேவருலகிற் பெறும் பயனினும், இதனின் மிக்கது இல்லை' என உரை தந்தார். 'ஒப்புரவு அறவகையுள் ஒன்றாதலின் ஈண்டுச் செய்யும் அறங்களின் உயர்ந்தது இல்லை. தேவருலகமாகிய ஆண்டுப் பெறும் பயன்களில் ஒப்புரவால் வரும் பயனிற் சிறந்ததொன்றும் இல்லை என அறம் செய்தலை மண்ணுலகிற்கும் அதன் பயன் நுகர்தலை விண்ணுலகிற்குமாகப் பகிர்ந்தளிக்கிறார். இது புதிய கருத்து. வினை செய்ய வேண்டிய இடத்துச் செய்யலாமேயன்றி அதன் பயனை நுகர்தல் இயலாது. பயன் நுகரவேண்டிய இடத்தில் செயலாற்ற இயலாது. ஆதலால், ஏனையோர் உரையினும் இவர் உரை சிறந்ததாகக் கருத இடமுண்டு' என இதற்கு விளக்கவுரை தருவார் தண்டபாணி தேசிகர்.
தேவநேயப் பாவாணர் 'அரிது என்னும் சொல், தேவருலகத்தை நோக்கின் இன்மைப்பொருளும், இவ்வுலகத்தை நோக்கின் அருமைப் பொருளும், தருவதாம்.ஏனெனின், தேவருலகத்தில் ஈவாரும் ஏற்பாருமின்றி எல்லாரும் ஒரு தன்மையர்; இவ்வுலகத்தில் ஒப்புரவு செய்வார் விரல்விட்டெண்ணவும் வேண்டாத ஒரு சிலரே' என விளக்கம் அளிக்கிறார். மாந்தருள் பெரும்பான்மையோர் ஒப்புரவு பற்றிச் சிந்திப்பதில்லை என்ற கருத்தில் அமைந்ததாக் உள்ளது இவர் உரை.
நாமக்கல் இராமலிங்கம் 'தேவருலகம் கற்பனையுலகம்; இவ்வுலகம் காட்சியுலகம் ஆதலால் ஒப்புரவைக்காட்டிலும் நல்லனவாகிய பிறவற்றை அங்கு எண்ணவும் முடியாது இங்குக் காணவும் முடியாது' என்கிறார்.
ஒப்புரவின் நல்ல பிற' என்றதற்குப் பொதுக் கொடையைவிடப் பெரிய நல்அறம் என்பது பொருள் .

பொது நன்மை செய்வதினும் நல்லன வேறு, தேவருலகத்தும் இவ்வுலகத்தும் பெறுதல் இயலாது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஒப்புரவறிதல் போன்ற நல்லது எவ்வுலகத்திலும் இல்லை.

பொழிப்பு

பொது நன்மை செய்வதினும் நல்லன வேறு, தேவருலகத்தும் இவ்வுலகத்தும் பெறுதல் இயலாது.