இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0216



பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்

(அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:216)

பொழிப்பு (மு வரதராசன்): ஒப்புரவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சோந்தால், அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.

மணக்குடவர் உரை: பயன்படுமரம் ஊர்நடுவே பழுத்தாற் போலும்: பிறரால் விரும்பப்படுவான்மாட்டுச் செல்வ முண்டாயின்.
இது வேண்டாதார்க்கும் பயன்படு மென்றது.

பரிமேலழகர் உரை: செல்வம் நயன் உடையான்கண் படின் - செல்வம் ஒப்புரவு செய்வான் கண்ணே படுமாயின், பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்று - அது பயன்படுமரம் ஊர் நடுவே பழுத்தாற்போலும்.
(உலக நீதி பலவற்றுள்ளும் ஒப்புரவு சிறந்தமையின் அதனையே 'நயன்' என்றார்.எல்லார்க்கும் எளிதில் பயன் கொடுக்கும் என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: உலக அன்பு உடையவனிடம் செல்வம் இருப்பது பழமரம் ஊர்நடுவே பழுத்தது போன்றது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செல்வம் நயன் உடையான்கண் படின் பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்.

பதவுரை:
பயன்-பயன்படுகின்ற; மரம்-மரம்; உள்ளூர்-நடுவூர்; பழுத்து-கனிந்து; அற்று-அத்தன்மைத்து; ஆல்-(அசை); செல்வம்-பொருள் மிகுதி; நயன்-ஒப்புரவு; உடையான்-உடையவன்; கண்-இடத்தில்; படின்-உண்டானால்.


பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பயன்படுமரம் ஊர்நடுவே பழுத்தாற் போலும்;
பரிதி: பயன்படு மாமரம், பலாமரம், பனைமரம் ஒருவன் சுதந்தரம் அற்றதாகத் தன்னிலே பழுத்தற்கு ஒக்கும்; [ஒருவன் சுதந்தரம் அற்றதாக - ஒருவனுக்குச் சொந்தமாயில்லாமல் அதாவது ஊர்ப் பொதுவாக உள்ள]
பரிமேலழகர்: அது பயன்படுமரம் ஊர் நடுவே பழுத்தாற்போலும்.

'பயன்படுமரம் ஊர் நடுவே பழுத்தாற்போலும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அஃது ஊர் நடுவில் பயந்தரும் மா, பலா முதலிய மரம் பழுத்தாற் போல எல்லார்க்கும் பயன் தரும்', 'அது இனிப்பான பழந்தரக்கூடிய மரம் நடு ஊரில் பழுத்துக் குலுங்குவது போன்றது', 'அது கனிதரும் மரம் ஊர் நடுவே பழுத்தாற்போலும்', 'எல்லோர்க்கும் பயன்படும் மரம் ஊர் நடுவே பழுத்துள்ளது போன்றது ஆகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பயன் தரும் மரம் ஊர் நடுவில் பழுத்துள்ளது போன்றது ஆகும் என்பது இப்பகுதியின் பொருள்.

செல்வம் நயனுடை யான்கண் படின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறரால் விரும்பப்படுவான்மாட்டுச் செல்வ முண்டாயின்.
மணக்குடவர் குறிப்புரை: இது வேண்டாதார்க்கும் பயன்படு மென்றது.
பரிதி: நல்லோர் செல்வம் என்றவாறு.
பரிமேலழகர்: செல்வம் ஒப்புரவு செய்வான் கண்ணே படுமாயின்,
பரிமேலழகர் குறிப்புரை: உலக நீதி பலவற்றுள்ளும் ஒப்புரவு சிறந்தமையின் அதனையே 'நயன்' என்றார்.எல்லார்க்கும் எளிதில் பயன் கொடுக்கும் என்பதாம்.

'பிறரால் விரும்பப்படுவான்மாட்டு/நல்லோர்/ஒப்புரவு செய்வான் கண்ணே செல்வம் உண்டாயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'செல்வம் அன்புடையவனிடத்தில் இருப்பின்', 'அன்பு மிகுந்தவனிடத்தில் செல்வம் இருந்தால்', 'செல்வமானது நன்மை செய்பவனிடத்துப் பொருந்துமாயின்', 'செல்வம் பிறர்க்கு உதவும் நன்மையுடையான்கண் உண்டாகுமானால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிறர்க்கு உதவும் நன்மையுடையான் இடத்து செல்வம் உண்டாகுமானால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நயனுடையான் இடத்து செல்வம் உண்டாகுமானால், பயன் தரும் மரம் ஊர் நடுவில் பழுத்துள்ளது போன்றது ஆகும் என்பது பாடலின் பொருள்.
'நயனுடையான்' யார்?

பிறர்க்கு உதவும் நன்மையுடையான் இடத்திலே செல்வம் சேர்ந்தால் அது ஊருக்குள் இருக்கும் பயன் தரும் மரம் பழுத்துக் குலுங்குவது போன்றது.
பயன்மரம் என்ற தொடர் பயன் தரும் மரம் என்ற பொருளது. ஊர் நடுவில் பயன் மரம் எனச் சொல்லப்பட்டதால் அது ஒருவர்க்கு உரிமையானதாக இல்லாமல் யாவரும் பயன்கொள்ளத் தக்கதாக, ஊர் மன்றத்தினராலோ அல்லது தனி நபர்களாலோ, நட்டு வளர்க்கப்பட்ட பழ மரங்களைக் குறிக்கும். பயன் மரத்துக்கு எடுத்துக்காட்டாக மாமரம், பலாமரம், பனைமரம் இவற்றைக் குறிப்பிட்டார் பரிதி. பனை மரம் ஏன் சொல்லப்பட்டது? அ கி பரந்தாமன் இவ்வாறு விளக்குகிறார்: 'பசிக்குப் பனம்பழம் என்பது பழமொழி. பசியெடுத்தால் பனைமரத்திலேறிப் பனம் பழத்தைப் பறித்துச் சுட்டுத் தின்று பசியாற்றிக் கொள்ளலாம்'.
பயனுள்ள மரம் ஊர் நடுவே பழம் நிறைந்து பழுத்ததைப் போன்றது எல்லோரிடத்திலும் அன்புசெலுத்தும் தொண்டு மனப்பான்மை கொண்டவனிடம் செல்வம் சேர்வது என்கிறது பாடல். பழுத்த மரம் இன்னார் இனியார் எனப் பாராது தன்னுடைய கனிகளைச் சமுதாயத்திற்குக் கொடுப்பது என்ற கடமையுணர்வோடு மட்டுமே கனிகளைத் தரும். ஊர் நடுவில் இருந்தால் அது இன்னார்க்குரியது என்றும் பாராது அனைவரும் பழங்கொள்வர். அதுபோலவே நயனுடையான் வேண்டியவன் இவன், வேண்டாதவன் இவன் எனப்பாராது ஒப்புரவு செய்தல் கடமை என்று எல்லோருக்கும் பயன்பட வேண்டுமாறு செய்வான். பசித்தவன் தன் தேவைக்குப் பழத்தைப் பறித்துக் கொள்ளலாம் என்ற உவமை, துய்க்கக்கூடியதும், இனிமையானதும், உடலுக்குப் பயனாவது போன்ற குணத்தை உடையதையும் குறிக்கும். காடுகளிலும் பழமரங்கள் உள்ளனவே, அங்கு சென்று பறித்து பழங்களை உண்ணலாமே என்ற வினா எழலாம். காட்டுமரப் பழங்களைப் பெறுவது எளிதல்ல. அதற்குப் பெருமுயற்சி தேவை. நடுவூர் பழுத்த மரம் என்றது, ஒப்புரவாளன் செல்வம் எல்லோருக்குமே உரிமையானதும், எளிதில் கிடைக்கக்கூடியதுமாம் என்பதை உணர்த்துதற்காக. மக்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும் பறவைகளும் அவற்றை அணுகி உண்டு பயன்பெறும்.

பிறர்க்குப் பயன் படாதவன் செல்வத்திற்கு நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று (நன்றியில் செல்வம் 1008 பொருள்: பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர்நடுவில் நச்சுமரம் பழுத்தாற் போன்றது) என்று பிறிதோரிடத்தில் இக்குறளுக்கு ஒத்த கருத்துடைய ஆனால் எதிர்மறையான உவமை கூறியுள்ளார் வள்ளுவர்.
ஊருள் என்பது உள்ளூர் என முறை மாறியது. 'உள் ஊர்: ஊருள் என முன்பின்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமை' என்றும் இலக்கணமரூஉ என்றும் இதை விளக்குவர்.

'நயனுடையான்' யார்?

'நயனுடையான்' என்ற சொல்லுக்குப் பிறரால் விரும்பப்படுவான், நல்லோர், ஒப்புரவு செய்வான், ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன், பலரும் விரும்பும் நற்பண்புடையான், ஒப்புரவு செய்யும் நேர்மையாளன், உலக அன்பு உடையவன், அன்புடையவன், பொது நலங்கருதும் நல்லோன், நன்மை செய்பவன், பிறர்க்கு உதவும் நன்மையுடையான், மனித நேயமுடையவன், ஒப்புரவு செய்பவன், ஒப்புரவு செய்யும் நேர்மையாளன், ஒப்புரவாகிய நல்லியல்பு நிறைந்தவன், ஒப்புரவு உடையான் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஒப்புரவாளனை நயனுடையான் என இங்கு குறிக்கிறார் வள்ளுவர். நயன் என்றதற்கு நன்மை என்ற பொருள் உண்டு. நயனுடையான் என்பது நன்மையுடையான் எனப் பொருள் தரும். நன்மையுடையான் என்பது ஒப்புரவாளனைச் சுட்டும். தேவநேயப்பாவாணர் 'ஒப்புரவு நேர்மை மிக்க செயலாதலின் அதை நயன் என்றார்' என நயன் என்ற சொல்லுக்கு விளக்கம் தருவார்.
பிறர்க்கு உதவும் நன்மையுடையான் 'நயனுடையான்' ஆவான்.

பிறர்க்கு உதவும் நன்மையுடையான் இடத்து செல்வம் உண்டாகுமானால், பயன் தரும் மரம் ஊர் நடுவில் பழுத்துள்ளது போன்றது ஆகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஒப்புரவறிதல் உடையவனிடம் செல்வம் சேர்வது எல்லோரது பயனுக்காகவும் ஆகும்.

பொழிப்பு

உயிர்களுக்கு உதவும் நன்மையுடையான் இடத்து செல்வம் சேர்ந்தால் பயன் தரும் மரம் பழுத்துள்ளது போன்றது.