இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0214ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்

(அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:214)

பொழிப்பு (மு வரதராசன்): ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான்; மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.

மணக்குடவர் உரை: ஒப்புரவறிவான் உயிர்வாழ்வானென்று சொல்லப்படுவன். அஃதறியான் செத்தவருள் ஒருவனாக எண்ணப்படுவன்.
இஃது ஒப்புரவறியாதார் பிணத்தோ டொப்ப ரென்றது.

பரிமேலழகர் உரை: உயிர் வாழ்வான் ஒத்தது அறிவான் - உயிரோடு கூடி வாழ்வானாவான் உலக நடையினை அறிந்து செய்வான், மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - அஃதறிந்து செய்யாதவன் உயிருடையானே யாயினும் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும்.
(உயிரின் அறிவும் செயலும் காணாமையின், 'செத்தாருள் வைக்கப்படும்' என்றார். இதனான் உலகநடை வழு வேத நடை வழுப்போலத் தீர்திறன் உடைத்து அன்று என்பது கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: தம்மைப் போன்று பிற உயிர்களையும் கருதி உதவுபவனே உண்மையாக உயிர் வாழ்வோனாவான். அங்ஙனம் உதவாதவன் உயிருடையனாயினும் செத்தவருள் ஒருவனாகக் கருதப்படுவான்,


பொருள்கோள் வரிஅமைப்பு:
உயிர்வாழ்வான் ஒத்தது அறிவான்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்.

பதவுரை:
ஒத்தது-உலகநடை; அறிவான்-தெரிபவன்; உயிர்-உயிர்; வாழ்வான்-உயிரோடு கூடி வாழ்பவன்; மற்றையான்-பிறன்; செத்தாருள்-இறந்தவருள்; வைக்கப்படும்-கருதத்தகும்.


ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒப்புரவறிவான் உயிர்வாழ்வானென்று சொல்லப்படுவன்;
பரிதி: ஒப்புரவு செய்வான் உயிருடன் வாழ்வான்;
காலிங்கர்: நெஞ்சை எரிப்பது ஒத்ததாகிய ஒப்புரவு அறிகின்றவன் யாவன்? மற்றவனே உயிர்வாழ்கின்றவனாவன்;
பரிமேலழகர்: உயிரோடு கூடி வாழ்வானாவான் உலக நடையினை அறிந்து செய்வான்;

'ஒப்புரவு அறிவான் உயிர்வாழ்வானென்று சொல்லப்படுவன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவரும் பரிதியும் ஒத்தது என்றதற்கு ஒப்புரவு எனப் பொருள் கொள்ள பரிமேலழகர் 'உலகநடை' எனக் கொண்டார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒத்த பொதுநலத்தை அறிந்தவனே வாழ்பவன்', 'ஒப்புரவு (பொதுநலத் தொண்டு) செய்பவனே உயிரோடு கூடி வாழ்பவனாவான்', 'தனக்கு ஒத்தது மற்றவர்களுக்கும் என்ற அறிவுள்ளவன்தான் உயிரோடிருப்பவன்', 'உலகத்தவர்க்குச் செய்யவேண்டிய கடமையை அறிந்து செய்பவன் உயிரோடு கூடி வாழ்பவன் ஆவான்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒப்புரவு அறிந்தவன் உயிரோடு கூடி வாழ்பவனாவான் என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃதறியான் செத்தவருள் ஒருவனாக எண்ணப்படுவன்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒப்புரவறியாதார் பிணத்தோ டொப்ப ரென்றது.
பரிதி: ஒப்புரவு அறியான் செத்தாரோடு ஒப்பன் என்றவாறு.
காலிங்கர்: மற்றையான் செத்தாருள் ஒருவனாக வைத்து எண்ணப்படுவது.
காலிங்கர் குறிப்புரை: எங்ஙனம் எனின் பிறர் முகமறிந்து உபசரிக்கும் அன்றே அதனால் அஃது இல்லாதானும் உயிரும் உணர்வும் உடையான் ஒருவன் அல்லன்; வெறும்நடைப்பிணமே என்று பொருளாயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: அஃதறிந்து செய்யாதவன் உயிருடையானே யாயினும் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: உயிரின் அறிவும் செயலும் காணாமையின், 'செத்தாருள் வைக்கப்படும்' என்றார். இதனான் உலகநடை வழு வேத நடை வழுப்போலத் தீர்திறன் உடைத்து அன்று என்பது கூறப்பட்டது.

'அஃதறிந்து செய்யாதவன் செத்தாருள் ஒருவனாக எண்ணப்படுவன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறியாதவன் செத்தவரைச் சேர்ந்தவன்', 'அதனைச் செய்யாதவன் இறந்தவர்களுள் ஒருவனாகக் கருதப் பெறுவான்', 'அது இல்லாதவன் செத்த பிணத்துக்குச் சமானம்', 'அதனை அறிந்து செய்யாதவன் செத்தவர்களில் ஒருவனாகக் கருதப்படுவன்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அதனை அறியாதவன் செத்தவர்களில் ஒருவனாகக் கருதப்பெறுவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒத்தது அறிவான் உயிரோடு கூடி வாழ்பவனாவான் அதனை அறியாதவன் செத்தவர்களில் ஒருவனாகக் கருதப்பெறுவான் என்பது பாடலின் பொருள்.
'ஒத்தது அறிவான்' யார்?

பிறர்க்கு உதவுதல் செய்வதைத் தெரிந்தவனே உயிரோடு வாழ்பவனாவான்; அந்த உணர்வு இல்லாதவர்கள் செத்தவர்களாகவே கருதப்படுவர்.
மனிதன் சமுதாயத்தோடேயே இணைந்து வாழ்ந்து கொண்டிருப்பவன். அதனால் அச்சமூகத்திற்கு என்ன தேவை, அதற்குத் தன் பங்களிப்பு என்ன என்பதனை அவன் உணர்ந்து செயற்பட வேண்டும். தன்னை ஒத்த உயிர்களின் வாழ்க்கை நிலையை அறிந்து வாழ்பவன் ஒத்தது அறிவான். அப்படி வாழ்பவனே உண்மையாக வாழுகின்ற பெற்றியுடையவன். இல்லையென்றால் அவன் 'செத்தான்' என்று கருதப்படுவான் என்கிறார் வள்ளுவர்.
சமுதாயக் கூட்டு வாழ்க்கைக்கு உரிய சிறந்த பண்புகளில் ஒன்று ஒப்புரவு அறிதல். 'ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும்' என்பதே ஒப்புரவின் சாரம். உலகமெல்லாம் ஒரு குடும்பமாய் ஒத்து இயங்கும் தன்மையை ஒருவன் அறிந்திருக்க வேண்டும். தனக்கு ஒத்தது பிறர்க்கும், என்று ஒத்திசைவுடன் வாழுகின்ற மனிதனே வாழ்பவன், தான் உண்டு தனது பணி உண்டு என்றிராமல் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது. தான் சார்ந்த உலகமக்களின் தேவைகள் என்ன என்று உணராமல் இருப்பவர் உளரெனினும் இல்லாரோடு ஒப்பர். இவ்வாறு உலகிற்கு உதவும் நற்பண்புகள் கொண்டவனாக வாழவேண்டும் என அறிவுரை தருவது இப்பாடல். யாருக்கும் உதவாது வாழ்கின்றவனை உலகம் 'நடைப்பிணம்' என்ற கணக்கில் மட்டுமே சேர்த்துக் கொள்ளும். அப்படிப்பட்டவனை ஒப்புரவு இல்லானை, நாட்டுக்கு ஒத்த செயலை அறிந்து செயல்படாதவனை, “செத்தான்” என்று மிகவும் இழிவான சொல் கொண்டு தூற்றுகிறார் வள்ளுவர், உயிர்க்குரிய இயல்பும் உணர்வும் இல்லாமையால் செத்தார் என்றார்.

'ஒத்தது அறிவான்' யார்?

'ஒத்தது அறிவான்' என்றதற்கு ஒப்புரவறிவான், ஒப்புரவு செய்வான், ஒப்புரவு அறிகின்றவன், உலக நடையினை அறிந்து செய்வான், லோக வாழ்க்கையை அறிந்து செய்கிறவன், உலக இயற்கையை அறிந்து நடக்கின்றவன், உலக நடை அறிந்து ஒப்புரவு செய்வான், ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன், தனக்குப் போலப் பசிக்குணவும் அறிவுக்குக் கல்வியும் இருக்க இடமும் நோய்க்கு மருந்தும் பிறர்க்கும் வேண்டுமென அறிபவன், சமநிலை அறிபவன் (சமநிலை என்பது இங்குப் பொருளியல் சமத்துவத்தைக் குறிக்கும்), உலக நடையை அறிந்து உதவிகள் செய்து பலரொடு கூடி வாழ்கிறவன், உலகியல்பு அறிந்து ஒப்புரவு செய்து வாழ்வோன், தனக்கு ஒத்தது பிறனுக்கும் என்ற அறிவுடையவன், பொது நலங்கருதி வாழ்பவன், உலகத்தவர்க்குச் செய்யவேண்டிய கடமையை அறிந்து செய்பவன், தம்மைப் போன்று பிற உயிர்களையும் கருதி உதவுபவன், மற்ற மாந்தரின் மகிழ்வையும் துயரையும் தனக்கு நேர்ந்தது போல் ஒன்றுபடுத்தி உணர்பவன், உலக நடைக்கேற்ற அறங்களை அறிந்து பிறர்க்கு உதவி செய்து வாழ்பவன், (நாட்டுக்கு) ஒத்த செயலைச் செய்பவன் எனப்பலவாறாக உரை கூறினர்.

'தன்னைப் போல் பிறரை நினை' என்ற அறவுரை கூறுவது போல, தனக்கு நலம் பயப்பனவெல்லாம் மற்றவர்க்கும் ஆம் என்று அறிந்து செய்தல் ஒத்ததறிதல் எனலாம். தன்னைச் சுற்றியுள்ள உலகத்தின் பொதுநலத்தை அறிந்து செயல்படுபவன் ஒத்ததறிவான். ஒத்தது அறிவான் என்பது தானே வலிய முயன்று அறிந்து செய்தலைக் குறிக்கும். இங்கு ‘ஒத்தது’ என்பது ஒப்புரவைக் குறிக்குமாதலால் 'ஒத்தது அறிவான்' என்ற தொடர்க்கு பொதுநன்மைக்கு ஒத்த செயலைச் செய்வான் என்பது பொருத்தமான பொருள்.

ஒப்புரவு அறிந்தவன் உயிரோடு கூடி வாழ்பவனாவான் அதனை அறியாதவன் செத்தவர்களில் ஒருவனாகக் கருதப்பெறுவான் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஒப்புரவறிதல் ஆற்றல் உள்ளவரே வாழ்கின்றவர் ஆவார்.

பொழிப்பு

பொதுநலம் அறிந்தவனே உயிரோடு கூடி வாழ்பவன்; அதனை அறியாதவன் இறந்தவராகக் கருதப் பெறுவான்.