இல்வாழ்க்கை அதிகாரம் மனைவி மக்களோடு குடும்பம் நடத்தி, அறம் செய்யும்முறையை விளக்குகிறது. இல்லாளோடு கூடி இல்லத்தை நடத்துவது இன்ப நுகர்ச்சிக்காக மட்டுமன்று. அது பலருக்கும் துணையாக நின்று உதவுதற்குரிய அறம் செய்வதற்கும் ஆகும். இன்பமும் அறமும் இணைந்ததே இல்வாழ்க்கையாகும். வீட்டிலிருந்து அறவாழ்க்கையை மேற்கொள்வதால் அது இல்லறம் எனப்படுகிறது.
மாந்தர் தாம், தமக்கு எனத் தன்னலவாழ்வு வாழாமல் துணைவி, பிள்ளைகள், பெற்றோர், சுற்றம், விருந்தினர், வறியர், ஆதரவு நாடுவோர் முதலானோருக்காக மேற்கொள்ளும் அறவாழ்வே குடும்ப வாழ்க்கை அல்லது இல்லறமாம்.
இல்லறமே மற்ற வாழ்வு நெறிகளுக்கும் ஆதாரமாக உள்ளது.
இல்லற வாழ்க்கையைச் சரியான முறையில் நடத்துவதற்கு பொறுப்பும் சகிப்புத் தன்மையும் மிகையாக வேண்டும். அதனால் இல்வாழ்வான் முயல்வாரு ளெல்லாம் தலையாவான்.
அதிகாரத்தின் முதல் மூன்று பாடல்கள் இல்வாழ்வார் கடமைகளைச் சொல்கின்றன. நான்காம் பாடல் அவரது பொறுப்புகளைக் கூறுகிறது. ஐந்தாவதும், ஆறாவதாகவும் அமைந்த குறள்கள் அறத்துக்கும் இல்வாழ்க்கைகுமுள்ள சிறந்த தொடர்புகளை விளக்குகின்றன. ஏழாம் பா இல்வாழ்வானது முயற்சியையும் எட்டாம் பா அவனுறும் துன்பங்களைப் பேசுகிறது. ஒன்பதாம் பாடல் அறமே இல்வாழ்க்கைதான் என்று சொல்கிறது. துறவு போன்ற வாழ்வுநெறிகள் பிறவற்றுள்ளும் இல்வாழ்வே ஏற்றமுடையது என்று 46, 47, 48, 49 ஆகிய பாடல்கள் நிறுவுகின்றன. இறுதிக் குறள் (50) இல்வாழ்க்கை மேற்கொள்பவன் தெய்வமாகவும் உயர்வான் என்று பகர்கிறது.
சமுதாயத்தில் குடும்பம் என்பது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு எனலாம். இவர்கள் நல்வழியில் நிற்றலுக்கு குடும்பத்தலைவனாக இல்வாழ்வான் துணையாயிருக்கிறான்.
அன்பும் அறமும் உடையது இல்லறம்; அன்பு என்னும் பண்பு உடைய குடும்பம் அறம் நிறைந்த பயனுடைய வாழ்வுநடாத்தும்.
இல்லறத்தில் இருப்போர் துறவிகள், பசித்திருப்போர், கைவிடப்பட்டவர்கள் ஆகியோரைப் பேணிக்காக்கின்றார்கள்.
இறந்த முன்னோர் நினைவுகளைப் பாதுகாப்பது, தெய்வ வழிபாடு செய்வது, விருந்தினர் மற்றும் சுற்றத்தார்களைக் காப்பாற்றுவது ஆகியவற்றை இவர்கள் கடமையாகச் செய்கிறார்கள்.
தன் குடும்பத்தின்மீது பழி ஏற்படாமல் காத்து, பகுத்துண்டு வாழ்கிறான் இல்வாழ்வான்.
அவன் இல்லறத்தின்படி குடும்ப வாழ்க்கையை நடத்துவதால் வேறு எந்த வாழ்வுநிலையையும் எண்ணிப்பார்க்க வேண்டியதில்லை; அங்குப் போய் பெறப்போவதும் இதனினும் மிக்கது ஒன்றுமில்லை.
வாழும்நெறிப்படி இல்வாழ்க்கை மேற்கொள்பவன் தெய்வமாகவே உயர்ந்துவிடுவான். இவை இந்த அதிகாரம் தரும் செய்திகள்.