இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 50வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

(அதிகாரம்: இல்வாழ்க்கை குறள் எண்:50 )

பொழிப்பு (மு வரதராசன்):

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.மணக்குடவர் உரை: இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன்.
இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு.

பரிமேலழகர் உரை:

வாழ்வாங்கு வையத்துள் வாழ்பவன் - இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன்; வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்- வையத்தானே எனினும் வானின்கண் உறையும் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும்.
பின் தேவனாய் அவ்வறப்பயன் நுகர்தல் ஒருதலையாகலின், 'தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். இதனான் இல்நிலையது மறுமைப்பயன் கூறப்பட்டது. இம்மைப் பயன் புகழ், அதனை இறுதிக்கண் கூறுப.(அதி.24.புகழ்)

இரா சாரங்கபாணி உரை:

உலகில் வாழுமுறைப்படி இயல்பாக வாழ்பவன் வானகத்துள்ள தெய்வங்களுள் ஒருவனாக மதிக்கப் பெறுவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.

பதவுரை: வையத்துள்-நிலவுலகத்துள்; வாழ்வாங்கு- வாழும் முறைப்படி; வாழ்பவன்-வாழ்க்கை நடத்துபவன்; வான்-விண்ணுலகம்; உறையும்-தங்கும்; தெய்வத்துள்-தெய்வத் தன்மையில்; வைக்கப்படும்-மதிக்கப்படும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே;
பரிதி: பூமியிலே இல்லறம் நடத்தும் முறையாலே நடப்பவன்;
பரிமேலழகர்: இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன்;

'உலகத்திலே இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழ்பவன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தில் மணந்து முறையாக வாழ்பவன்', 'இவ்வுலகத்திலே வாழவேண்டிய முறைப்படி மனையாளோடு வாழ்பவன்', 'இவ்வுலகில் இல்லறத்தில் வாழும் முறைமையோடு வாழ்கின்றவன்', 'இம்மண்ணில் வாழ்வாங்கு வாழ்பவன்' என்றபடி உரை தந்தனர்.

உலகத்திலே வாழும் முறைப்படி வாழ்பவன் என்பது இப்பகுதியின் பொருள்.

வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன்.
மணக்குடவர் குறிப்புரை: இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு.
பரிதி: தேவர்க்கு நிகராவன் என்றவாறு.
பரிமேலழகர்: வையத்தானே எனினும் வானின்கண் உறையும் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: பின் தேவனாய் அவ்வறப்பயன் நுகர்தல் ஒருதலையாகலின், 'தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். இதனான் இல்நிலையது மறுமைப்பயன் கூறப்பட்டது. இம்மைப் பயன் புகழ், அதனை இறுதிக்கண் கூறுப.(அதி.24.புகழ்)

'வானின்கண் உறையும் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படுவான்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மேலுலகத் தேவராக மதிக்கப்படுவான்', 'விண்ணுலகிலுள்ள தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன்', 'வானில் வாழ்வதாகக் கருதப்படும் தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவான்', 'வானுறையும் தெய்வங்களின் வரிசையில் வைத்தெண்ணப்படுவான்' என்றபடி பொருள் உரைத்தனர்.

வானுலகத்திலுள்ள தேவர்களில் ஒருவராக எண்ணப்படுவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உலகத்திலே வாழ்வாங்கு வாழ்பவன் வானுலகத்திலுள்ள தேவர்களில் ஒருவராக எண்ணப்படுவான் என்பது பாடலின் பொருள்.
'வாழ்வாங்கு வாழ்பவன்' யார்?

திருக்குறள் நூலுக்கான தொகுப்புரைச் செய்யுளாக இப்பாடலை எண்ணலாம். இக்குறளில் சொல்லப்பட்ட கருத்து புதுமையானது; புரட்சிகரமானது. திருவள்ளுவர் உலகின் மற்றச் சிந்தனையாளர்களிலிருந்து வேறுபட்டவர் என்பதைக் காட்டும் குறட்பாக்களில் இதுவும் ஒன்று. இல்வாழ்க்கை நடத்துபவன் எய்தக்கூடிய உச்ச நிலையைக் கூறுகிறது.

இல்வாழ்க்கையிலிருந்து ஐம்புல இன்பங்களை ஆரத் துய்த்துக் கொண்டு தீதின்றி வந்த பொருள் கொண்டு அற உணர்வுடையவனாகி, வாழும்முறைப்படி வாழ்பவன், விண்ணுலகிலுள்ள தெய்வங்களுக்குச் சமமாகக் கருதப்படுவான் என்று இக்குறள் சொல்கிறது. இல்வாழ்க்கை அதிகாரத்தில் இப்பாடல் வருவதால் வாழ்வாங்கு வாழ்பவன் இல்லறத்தானைக் குறிக்கிறது என்பது சொல்லாமல் விளங்கும்.
வாழும் நெறிப்படி வாழ்தல் அருமையுடைய முயற்சி; அது மனிதனிடமுள்ள தெய்வத்தன்மையை வெளிக்கொணர்கிறது. 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை' என உறுதிபட உரைத்த வள்ளுவர் 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற கருத்தும் கொண்டவர். உலக வாழ்வில் மேன்மை பெற இல்வாழ்வே போதுமானது; பண்பும் பயனும் மிக்க இல்லறத்தை நடத்துபவன் எல்லாராலும் போற்றப்பட்டு தெய்வத்தன்மை கொண்டவனாக எண்ணப்படுவான் என்னும் கருத்தை இங்கு முன்வைக்கிறார்.
வானுலகம் என்று ஒன்று உள்ளது; தெய்வநிலை பெற்றவர்கள் அங்கே உறைகிறார்கள் என்பது மக்களிடையே உள்ள ஒரு பொதுவான நம்பிக்கை. தெய்வநிலை பெற்றவர்கள் தேவர் அல்லது தெய்வத்தன்மை உடையவர் என்று அறியப்படுவர். தெய்வநிலை எய்துவது எப்படி? மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்தால் மனிதன் வானுலகில் உள்ளோர் போல் தெய்வநிலையை அடையலாம்; அப்படி வாழ்பவர் தெய்வமாக மதிக்கப்படுவர் என்கிறார் வள்ளுவர். உலக வாழ்க்கையைக் கண்டு அஞ்ச வேண்டாம்; அதைப் புறக்கணிக்க வேண்டாம்; நல்ல நெறியைப் பின்பற்றி வாழ்ந்தால் இங்கேயே - இவ்வுலகிலேயே பேரின்பம் கிட்டும்; வாழ்வின் முழுமையைப் பெறலாம்; தெய்வநிலையை அடையமுடியும் என உணர்த்துகிறார்.

இயல்பான இல்வாழ்வு நடத்தி இன்ப துன்பங்கள் பற்று பாசங்கள் கொண்ட வாழ்வினில் பங்கு பெறுவோரும் தெய்வநிலை அடைய முடியும் என்றது பெரிதும் மாறுபட்ட சிந்தனை. இக்குறட்கருத்தை வள்ளுவர் ஐயத்திற்கிடமில்லாத உறுதியோடு அறிவிக்கிறார்.
வைக்கப்படும்' என்றதனால், வள்ளுவர் இதைத் தன் கூற்றாகக் காட்டவில்லை என்றும் வாழ்வாங்கு வாழும் இல்வாழ்வான் மற்றவர்களால் தெய்வமாக வைக்கப்படுகிறான் என்ற கருத்து நயத்தையும் ஆய்வாளர்கள் சுட்டுவர்.

எளிய நல்வாழ்வு வாழும் மக்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் ஊட்டவல்ல குறள் இது. அமைதியும் நிறைவும் தரும் வாழ்க்கையை இல்லறத்திலேயே பெறமுடியுமா என்னும் வினா நமக்குள் அடிக்கடி எழுவதுதான். வாழ்வாங்கு வாழ்பவரால் அதைப் பெற முடியும் என்கிறது இப்பாடல். மகாத்மாக்களை மனதில் கொண்டு பாடப்பட்டதல்ல இக்குறள். இது வரலாற்றில் வராத, பாடல் பெறாத, வாழ்வாங்கு வாழும் எண்ணற்ற தெய்வப் பண்பு கொண்ட மனிதர்களை நினைத்துப் படைக்கப்பட்டதாகும்.

'வாழ்வாங்கு வாழ்பவன்' யார்?

'வாழ்வாங்கு வாழ்பவன்' என்றதற்கு இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன், இல்லறம் நடத்தும் முறையாலே நடப்பவன், இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால் வாழ்பவன், இல்லறத்தோடு கூடிப் பெருஞ்செல்வத்தோடும் பேரறத்தோடும் வாழும் இயல்புடையவன், வாழவேண்டிய முறையில் வாழ்கின்றவன், இயற்கை படைத்த நியதிப்படி, இல்லறத்தில் வாழ்வாங்கு வாழ்பவன், மணந்து முறையாக வாழ்பவன், வாழுமுறைப்படி இயல்பாக வாழ்பவன், மனைவி மக்களோடு இல்லறம் நடத்தி வாழ வேண்டிய முறையில் வாழ்கின்றவன், வாழவேண்டிய முறைப்படி வாழ்பவன், வாழவேண்டிய முறைப்படி மனையாளோடு வாழ்பவன், இல்லறத்தில் வாழும் முறைமையோடு வாழ்கின்றவன், நல்ல முறையில் வாழ்க்கை நடத்துபவன், இல்லறத்து வாழும் முறைப்படி வாழ்கின்றவன் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'வாழ்வாங்கு வாழ்தல்' என்பது வாழவேண்டிய முறையில் வாழ்வதைக் குறிப்பது. இதுதான் வாழும் முறை என்று வரையறை செய்வது இயலாது. அன்பும் அறமுங் கொண்டு இயல்பினால் இல்லறம் பேணுவது வாழும் நெறியாகும் என்று பொதுமையில் இதை விளக்கலாம்.
நல்ல முறையில் செய்ய வேண்டியதையெல்லாம் செய்தும் செய்யக்கூடாததை எல்லாம் செய்யாமல் விலக்கியும் இல்லற வாழ்க்கையிலிருந்து ஆற்றும் உயர்ந்ததோர் ஒழுக்கம் வாழும் முறை ஆகும். ஒருவன் அவன் மனதிற்குத் தோன்றுமாறு நடந்து கொள்வதோ அல்லது தான் கற்பவற்றை நல்ல முறையில் தேர்வு செய்யாமலும் தேர்ந்தவற்றை ஆராயாமலும் அப்படியே ஒழுகுதலோ வாழும் நெறிகள் ஆகா.
வாழவேண்டிய முறை என்பதற்கு திரு வி க தரும் விளக்கமாவது: 'முறைகள் பலபட்டன. அவைகளிற் சிறந்தனவற்றை அறிவுறுத்துவது திருவள்ளுவர் நூல். ஒருத்தியும் ஒருவனும் கற்பன கற்று, கேட்பன கேட்டு, மணம் புரிந்து, இல்வாழ்க்கையில் தலைப்பட்டு, மன மாசற்று, விடுதலை பெறுதற்குப், பிள்ளைப் பேறுண்டாகவும், அன்பு, பெருகவும், விருந்து நிகழவும், அடக்கம் அமையவும், ஒழுக்கம் ஊடுருவவும், பொறை பொருந்தவும், ஒப்புரவு உயரவும், ஈகை எழவும், அருள் வளரவும், தவம் ஓங்கவும், வாய்மை சிறக்கவும், அவா அறவும், துறவு நிலைக்கவும், மெய்யுணர்வு மேம்படவும் வாழ்வு நடாத்தல் வேண்டும். இவ்வாறு வாழ்தல் முறைப்படி இல்வாழ்க்கையில் ஒழுகுவதாகும்.'

'வாழ்வாங்கு வாழ்பவன்' என்ற தொடர்க்கு வாழவேண்டிய முறையில் வாழ்கின்றவன் என்பது பொருள்.

உலகத்திலே வாழும் முறைப்படி இல்வாழ்க்கை வாழ்பவன் வானுலகத்திலுள்ள தேவர்களில் ஒருவராக எண்ணப்படுவான் என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

இல்வாழ்க்கை வாழ்வான் தெய்வமாகவும் உயரலாம்.

பொழிப்பு

வாழும் முறைப்படி இவ்வுலகில் வாழ்பவன் மேலுலகத் தேவராக மதிக்கப்படுவான்.