இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0047இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை

(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:47)

பொழிப்பு (மு வரதராசன்): அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்கின்றவன்- வாழ முயல்கின்றவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகின்றவன் ஆவான்.

மணக்குடவர் உரை: நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவனென்பான், முயல்வாரெல்லாரினுந் தலையாவான்.
முயறல்- பொருட்கு முயறல்.

பரிமேலழகர் உரை: இல் வாழ்க்கை இயல்பினான் வாழ்பவன் என்பான் - இல்வாழ்க்கைக்கண் நின்று அதற்கு உரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான்; முயல்வாருள் எல்லாம் தலை - புலன்களை விட முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன்.
(முற்றத் துறந்தவர் விட்டமையின், 'முயல்வார்' என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை. அந்நிலைதான் பல வகைப்படுதலின், எல்லாருள்ளும் எனவும், முயலாது வைத்துப் பயன் எய்துதலின், 'தலை' எனவும் கூறினார்.)

குன்றக்குடி அடிகளார் உரை: இயல்பான இல்வாழ்க்கை வாழ்பவன் வாழ்க்கை முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அனைவரிலும் தலையாயவன். இயல்பினான் இல்வாழ்க்கை-வாழ்க்கை வாழ்வதற்கே. பொறிகளும் புலன்களும் துய்த்து மகிழ்வதற்கே. இதுவே வாழ்க்கையின் இயற்கையாய் அமைந்த இயல்பு. மற்ற முயற்சிகள் செயற்கை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இல்வாழ்க்கை இயல்பினான் வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை.

பதவுரை: இயல்பினான்-இயல்போடு, இயற்கைப்படி, இயற்கை உந்தும் வழி; இல்வாழ்க்கை-இல்லாளோடு கூடிய வாழ்க்கை; வாழ்பவன்-வாழ்க்கை நடத்துபவன்; என்பான்-என்று சொல்லப்படுபவன்; முயல்வாருள் எல்லாம்-முயற்சி செய்பவர் எல்லாருள்ளும்; தலை-முதன்மை.


இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவனென்பான்;
பரிப்பெருமாள்: நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவனென்பான்;
பரிதி: இல்லறத்தில் முறையால் நடப்பானாகில் அவன்;
காலிங்கர்: முதற்சொன்ன மூவர்க்கும் நற்சார்பு இவன்தானே ஆதலால் இச்சொன்ன மரபினாலே இல்லறத்தை நடத்துகின்றவன் என்று சொல்லப்படுகின்ற இவன்;
பரிமேலழகர்: இல்வாழ்க்கைக்கண் நின்று அதற்கு உரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான்;

'நெறியான வாழ்க்கை வாழ்பவன்' என்று மணக்குடவரும் 'முறையாக இல்லறம் நடத்துபவன்' என்று பரிதியும், 'அறநெறியில் இல்லறம் நடத்துகின்றவன்' என்று காலிங்கரும் 'இல்வாழ்க்கையில் நின்று அதற்கு உரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இயல்பாகக் குடும்ப வாழ்வு வாழ்பவன்', 'இல்வாழ்க்கையை முறைமையாக நடத்துபவன் என்னும் சிறப்பைப் பெறுபவன்', '(சிறந்த ஒழுக்க) முறையிலே இல்லிருந்து வாழ்பவன்', 'இல்வாழ்க்கையை மேற்கொண்டு அதற்குரிய இயல்போடு வாழுகின்றவன் என்று சொல்லப்படுபவன்' என்றபடி உரை தந்தனர்.

இயல்பான இல்வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் என்பது இப்பகுதியின் பொருள்.

முயல்வாருள் எல்லாம் தலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முயல்வாரெல்லாரினுந் தலையாவான்.
மணக்குடவர் குறிப்புரை: முயறல்- பொருட்கு முயறல்.
பரிப்பெருமாள்: 'வித்துமிடல் வேண்டுங்கொல்லோ, விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்' என்றாராகலின் இதனானே பொருளும் உண்டாம் என்று கூறினார்.
பரிதி: அறிய முயல்வாரினும் பெரியன்.
பரிதி குறிப்புரை: தவம் செய்வார், ஆகாரம், நித்திரை முதலானவற்றை விட்டுச் சரீரத்தை ஒறுத்துத் தவம் செய்வார்; இவன் சரீரத்தை வருத்தாமல் இல்லறம் நடத்தி முத்தி பெறுவான் என்பதாம்.
காலிங்கர்: மூன்று ஒழுக்கத்தினும் முயல்கின்றவருள் எல்லாம் தலையாவான் என்றவாறு. [மூன்று ஒழுக்கம் - கல்விநிலை, தவமுயலும் நிலை, தவ நிலை ஆகிய மூன்று நிலைகள்.]
பரிமேலழகர்: புலன்களை விட முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன். [புலன்களை விட-பொறிகள், புலன்களைப் பற்றா வண்ணம் அடக்கி ஆள]
பரிமேலழகர் குறிப்புரை: முற்றத் துறந்தவர் விட்டமையின், 'முயல்வார்' என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை. அந்நிலைதான் பல வகைப்படுதலின், எல்லாருள்ளும் எனவும், முயலாது வைத்துப் பயன் எய்துதலின், 'தலை' எனவும் கூறினார்.

'பொருட்கு முயல்வார் எல்லாரினும் தலை' என்று மணக்குடவரும் 'விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலத்திற்கு 'வித்துமிடல் வேண்டாமை போலப் பொருள் தானே உண்டாம்' என்று பரிப்பெருமாளும் 'அறிய முயல்வாரினும் பெரியன்' என்று பரிதியும் 'மூன்று ஒழுக்கத்தினும் முயல்கின்றவர்களில் தலை' என்று காலிங்கரும் 'புலன்களை விட முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர். மூன்றாம் நிலை என்று பரிமேலழகர் கூறுவது மனைவியுடன் காட்டுக்குச் சென்று கடுந்தவம் செய்யும் நிலையாகும்.

இன்றைய ஆசிரியர்கள் 'முன்னேற முயல்வார் எல்லாரிலும் சிறந்தவன்', 'வீடுபெற முயலும் துறவியர் எல்லாருள்ளும் சிறந்தவனாவான்', '(பிறவியின் நின்று உய்திகூட) முயற்சி செய்கின்றவர்கள் யாவருள்ளும் முதன்மை யானவனாவான்', 'பற்றினைவிட முயல்கின்றவர்கள் அனைவரினும் மேம்பட்டவன் ஆவான்' என்றபடி பொருள் உரைத்தனர்.

முயற்சி செய்கின்றவர்கள் யாவருள்ளும் முதன்மையானவன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இயல்பான இல்வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் முயல்வார் எல்லாருள்ளும் முதன்மையானவன் என்பது பாடலின் பொருள்.
'முயல்வார்' யார்?

இல்வாழ்க்கைதான் இயற்கையானது.

இல்வாழ்க்கையில் நின்று இயல்பாக வாழ்பவன் மற்ற வழிகளில் வாழமுற்படுவாரினும் மேம்பாடானவன்.
இயல்பான இல்வாழ்வு நடத்துபவன் வாழ்க்கை முறைகள் முயல்வோர் அனைவரினும் சிறந்தவன். 'இயல்பினான் இல்வாழ்க்கை' என்றது இயற்கை ஒழுங்கு அமைப்பின் பாற்பட்ட இல்வாழ்க்கை குறித்தது. ஆணும் பெண்ணும் கூடி வாழ்தலே இல்வாழ்க்கை எனப்படுவது. இணைவிழைச்சு ஒன்றிற்காக மட்டும் அவர்கள் சேர்ந்து வாழ்வதில்லை. இருவேறு வகையாய் விளங்கும் ஆண்-பெண் இவர்களின் பண்பும் ஒன்றிணைந்து உயர்ந்த ஒழுக்கத்தில் வாழ்தல் இல்லறமாம். வாழ்க்கை வாழ்வதற்கே; பொறிகளும் புலன்களும் துய்த்து மகிழ்வதற்கே என்பதுவே வாழ்க்கையின் இயற்கை அமைவு. இயல்பான இல்வாழ்க்கை என்பது, காதல் பெண்ணோடு கூடிக் கலந்து மகிழ்ந்து வாழ்தல், நன்மக்களைப் பெறுதல். பொருள் ஈட்டுதல், துய்த்தல், ஈத்து மகிழ்தல், புகழ் சேர்த்தல் என்பனவற்றை உள்ளடக்கும். கடவுளின் படைப்பின் நோக்கமும் அது நிறைவேறும் வழியும் இதுதான். எனவே இல்லறமே இயற்கையோடு இயைந்ததென்பது வள்ளுவரது முடிந்த முடிபு.
இல்வாழ்வுதான் இயல்பு என்றால் மற்ற வாழ்வு வாழ்பவர் இயற்கையோடு மாறுபட்ட செயற்கை வாழ்க்கை யுடையார் என்பதாகிறது.

மற்ற வழிகளில் வாழமுற்படுவது என்பது துறவு வாழ்க்கையை மேற்கொள்வதாம். இல்வாழ்க்கையும் துறவும் தனித்தனித் தளங்களில் இயங்குபவை. இவ்வதிகாரத்தில் இதற்கு முந்தைய-பிந்திய பாடல்களான....புறத்தாற்றிப் போஒய்ப் பெறுவதென்(46), .....இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை யுடைத்து(48) என்பன இல்லறநெறியை துறவு நெறியோடு ஒப்பு நோக்குவனவாக அமைந்துள்ளன. இக்குறளும் உலகியல் வாழ்வை மேற்கொள்பவர்களையும் துறவை முயல்பவர்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பதாகவே உள்ளது.
உலகவாழ்வில் வெற்றி பெற மாந்தர் வெவ்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். வாழ்க்கை வெற்றியை எது தீர்மானிக்கிறது? செல்வம் சேர்ப்பதும் மனித வாழ்வின் வெற்றியை முடிவு செய்வதில் சிறப்பான பங்கு வகிப்பது. இதனால்தான் மணக்குடவர் முயல்வார் என்பதற்கு பொருட்கு முயறல் என்று குறிப்பு தந்தார். இல்லறத்தை ஒழுங்காக நடத்தினால் 'விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலத்திற்கு' வித்துமிடல் வேண்டாமை போலப் பொருள் தானே உண்டாம் என்று இதனை பரிப்பெருமாள் வேறுவிதமாக விளக்குவார்.
ஆனால் பொருளியல் வாழ்வு மட்டுமே வாழ்க்கையாகாது. மக்கட்செல்வம், புகழ் போன்ற மற்ற பேறுகளைப் பெற்று நல்வாழ்வு வாழ மாந்தர் முயல்கின்றனர். இந்தவகையான இயல்பான இல்வாழ்வு வாழ்ந்தாலே வெற்றி வாழ்க்கைதான் என்கிறார் வள்ளுவர்.
துறவிகளும் முயற்சி செய்கிறார்கள், ஆனால் அவர்களது உழைப்பின் நோக்கம் வேறு.
இவர்களுள் இல்வாழ்வு வாழ்பவனை முயல்வாருளெல்லாம் தலை என்கிறார் வள்ளுவர்.

'என்பான்' என்ற சொல் உண்மையாக இல்வாழ்க்கையில் வாழ்வோன் என்று உலகம் அறுதியிட்டுக் கூறுவதை உணர்த்தி நிற்கிறது (திரு வி க).

'முயல்வார்' யார்?

'முயல்வார்' என்ற சொல்லுக்கு முயல்வார், அறிய முயல்வார், மூன்று ஒழுக்கத்தினும் முயல்கின்றவர், புலன்களை விட முயல்வார், புலன்களையும் ஆசையையும் அடக்கித் தபசு பண்ணும் முனிவர், தவம் முயல்வார், தவம் செய்ய முயல்வார், வாழ முயல்கின்ற பல திறத்தார், வாழ்க்கையில் ஈடேறப் பிரமச்சரியம் முதலிய பலநெறிகளில் முயல்வார், வாழ்க்கை முயற்சியில் ஈடுபட்டிருப்பவன், முன்னேற முயல்வார், வீடுபெற முயலும் துறவியர், மேலான வாழ்வு பெறவேண்டுமென்று பற்பல வழிகளில் முயற்சி செய்கிறவர், தம்மை மேம்படுத்த முயலும் முயற்சியாளர், (பிறவியின் நின்று உய்திகூட) முயற்சி செய்கின்றவர், பற்றினைவிட முயல்கின்றவர், ஐம்புலன்களையும் அடக்கித் தம் வயப்படுத்த முயற்சி செய்பவர், வாழ்வை முன்னேற்ற முயல்பவர், பற்றறுக்க முயலும் துறவு நெறியார், திருவருளைக் காண முயல்பவர், (வீட்டுப் பேற்றை அடைய) முயல்பவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'முயல்வார்' என்றதற்குப் 'பொருட்கு முயலுவார்' என மணக்குடவரும், 'உணவு உறக்கம் நீத்து உடலை ஒறுத்துத் தவஞ் செய்து அறியமுயல்வர்' எனப் பரிதியும் பொருள் கண்டனர். பரிமேலழகர் 'புலன்களை விட முயல்வார்' என்கிறார்.
பிற்காலத்தவர்களில் சிலர், முக்தியாகிய வீடு பேற்றை முயல்வோர், இறைவன் திருவருளைக் காண முயல்பவர், பற்றினை விட முயலுகின்றவர், புலன்களை விடத் தவஞ்செய்வார், உயிர் உய்திபெற முயல்வோர், நல்ல கதி அடைய முயற்சி செய்வோர் என்று பொருள் கூறினர். நாமக்கல் இராமலிங்கம் முயல்வார் என்பதற்குப் 'பலவித முயற்சிகள் செய்கிறவர்கள் அதாவது துறவறம் பூண்டு பல வழிகளில் தவம் செய்கிறவர்கள், சாகாமலிருக்க காயகற்பம் தேடுகிறவர்கள், வெவ்வேறு சித்திகள் பெறுவதற்காக வெவ்வேறு மந்திர தந்திரங்களை நாடுகிறவர்கள் முதலானோர்' என்பார்.
'இல்லறம் இடையூறாக இருக்கும் என்று கருதி, இல்லற வழியை எய்தாது முயல்கின்றவர்களும் உளர். திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழ்ந்தும், துறவு நிலையை மேற்கொண்டும், பிறர் பணிக்கெனத் தம்மை ஆளாக்கியும், ஏதேனும் தமக்கு விருப்பமான துறையில் தம்மை ஈடுபடுத்தியும், வாழுகின்றவர்கள்' என்பது சி.இலக்குவனார் 'முயல்வார்' என்றதற்குத் தரும் விளக்கம்.
குன்றக்குடி அடிகளார் 'வாழ்க்கையை வெற்றிகரமாக-இன்பமாக அமைத்துக் கொள்ள முயற்சி செய்வார்' என்ற விளக்கம் செய்தார்.

‘முயல்வார்’ என்னும் பொதுவான சொல். இதற்கு நேர் பொருள் முயற்சி செய்கிறவர்கள் என்பது. பிறப்பெடுக்கும் அனைத்து மக்களும் பலதிற முயற்சிகளில் தலைப்படுதலால் முயல்வாருள் எல்லாம் எனச் சொல்லப்பட்டது. 'முயல்வது' என்ற சொல்லே முயற்சிகள் எல்லாம் கடினம் என்பதைக் குறிப்பாகக் காட்டுகிறது.
துறவிகள் மனஉறுதி கொண்டு பசி, காமம், வெகுளி முதலியவற்றை அடக்கி நோற்கின்றனர். இது ஒருவகை முயற்சி. அது போலவே, இல்லறத்தை நடத்துகிறவனும் தன்னுடைய கடமைகளைச் செலுத்துவதில் துன்பப்படுகிறான். இல்லறத்தை முறைப்படி நடத்துவது எளிதல்ல. அறம் வழுவாமல் நடத்தப்படும் இல்லறவாழ்க்கையில் பெருமுயற்சி இருக்கிறது. துறவிகளுக்கு வேண்டிய ஆற்றலானது நெறி தவறாத குடும்பத்தார்க்கும் வேண்டும். இல்லறமும் தவநிலைக்கு ஈடாகும்.

இக்குறளிலுள்ள 'முயல்வார்' என்ற சொல் இல்லற நெறியில் நின்று இயல்பான வாழ்க்கை வாழ முயல்பவர்கள், வீடுபேற்றைக் குறிக்கொண்டு துறவு மேற்கொண்டு முயல்பவர்கள் ஆகிய இருசாராரையும் குறிப்பதாக உள்ளது. உலகவாழ்வில் முன்னேற விரும்புவர்கள், உயிர் உய்தியடைய விழைவர்கள் என மாந்தர் முயலும் துறைகள் பலப்பல. இதில் பின்னவர்கள் அதாவது வீடுபேறெய்த முயல்பவர்கள் இன்று வெகுசிலரே. நல்வாழ்வும் அதற்கு இன்றியமையாத பொருளீட்டமும் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற இன்ப விருப்பமும் கொண்டு அவற்றை எய்துதற்காக முயற்சிகொள்ளும் மாந்தரே இயல்பானவர்கள். இவர்களில் தலையாயினர் இல்லறநெறியில் முயல்வாரே என்கிறது பாடல்.

'முயல்வார்' என்ற சொல் வாழ முயல்கின்ற பல திறத்தாரைக் குறித்து நின்றது.

இயல்பான இல்வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் மேலான வாழ்வு பெறவேண்டுமென்று முயற்சி செய்கின்றவர்கள் எல்லாருள்ளும் முதன்மையானவன் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இல்வாழ்க்கையில் ஈடுபட்டவனே முயன்று வெற்றி பெறுபவனாவான்.

பொழிப்பு

இயல்பாகக் குடும்ப வாழ்வு வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் நல்வாழ்வு பெறவேண்டுமென்று முயற்சி செய்கின்றவர்கள் எல்லாருள்ளும் முதன்மையானவன்.