இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0042துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:42)

பொழிப்பு (மு வரதராசன்); துறந்தவர்க்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கின்றவன் துணையாவான்.

மணக்குடவர் உரை: வருணத்தினையும் நாமத்தினையுந் துறந்தார்க்கும், துறவாது நல்குரவாளரா யுண்ணப் பெறாதார்க்கும், பிறராய் வந்து செத்தார்க்கும் இல்வாழ்வானென்று சொல்லப்படுமவன் துணை யாவான்.
(வறுமையாளர், கைவிடப்பட்டவர், திக்கற்றவர்) மேற்கூறிய மூவரும் வருணநாமங்களைத் துறவாமையாலீண்டுத் துறந்தாரென்று கூறினார். செத்தார்க் கிவன் செய்ய வேண்டிய புறங்காட்டுய்த்தல் முதலாயின. இது மேற்கூறியவர்க்கேயன்றி இவர்க்கும் துணையென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: துறந்தார்க்கும்- களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும்; துவ்வாதவர்க்கும் - நல்கூர்ந்தார்க்கும்; இறந்தார்க்கும்-ஒருவருமன்றித் தன்பால்வந்து இறந்தார்க்கும்; இல்வாழ்வான் என்பான் 'துணை'-இல்வாழ்வானென்று சொல்லப்படுவான் துணை
(துறந்தார்க்குப் பாவம் ஒழிய அவர் களைகணாய் நின்று வேண்டுவன செய்தலானும், துவ்வாதவர்க்கு உணவு முதலிய கொடுத்தலானும், இறந்தார்க்கு நீர்க்கடன் முதலிய செய்து நல்லுலகின்கண் செலுத்தலானும், துணை என்றார். இவை இரண்டு பாட்டானும் இல்நிலை எல்லா உபகாரத்திற்கும் உரித்தாதல் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: பற்றற்ற துறவிகளுக்கும் வாழ்க்கையைத் துய்க்க இயலாத ஏழைகளுக்கும், நெறிமாறி நடந்து வாழ்விழந்தார்க்கும் இல்லறத்தான் எனப்படுபவன் துணையாவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.

பதவுரை: துறந்தார்க்கும்-துறவிகளுக்கும்; துவ்வாதவர்க்கும்-வறியவர்கட்கும்; இறந்தார்க்கும்-நிலைதிரிந்தவர்க்கும், நெறிமாறி நடந்து வாழ்விழந்தார்க்கும்; இல்வாழ்வான்-இல்லற வாழ்க்கை நடத்துபவன்; என்பான்-என்று சொல்லப்படுபவன்; துணை-உதவி.


துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வருணத்தினையும் நாமத்தினையுந் துறந்தார்க்கும், துறவாது நல்குரவாளரா யுண்ணப் பெறாதார்க்கும், பிறராய் வந்து செத்தார்க்கும்; [நாமம்-பெயர்]
பரிப்பெருமாள்: வருணத்தினையும் நாமத்தினையுந் துறந்தார்க்கும், துறவாது நல்குரவாளரா யுண்ணப் பெறாதார்க்கும், பிறராய் வந்து செத்தார்க்கும்;
முற்குறளில் இயல்புடைய மூவரில் ஒருவரான துறந்தார் வைதிக முனிவர்; ஈண்டுக் கூறியது ஏனைய இருடிகளை.
பரிதி: மண், பொன், பெண் இந்த மூன்று வகை ஆசையைத் துறந்தார்க்கும் போன சென்மத்தில் தன்மம் செய்யாமல் தேகி என்பார்க்கும், இறந்தார்க்கும்; [தேகி-கொடு என்று இரப்பவர்]
காலிங்கர்: முன்சொன்னவர்களே யன்றி ஒரூதியம் அற்றதால் உடன்துறந்தார்க்கும், கடவுளைப்பற்றி நாணினைத் துறந்தார்க்கும், குடிப்பிறந்தாரால் ஒரோர் காரணத்தினால் வெகுண்டு துறக்கப்பட்டார்க்கும், முற்பிறப்பின்கண் ஏற்றவற்கு ஈயாது இறந்த வறியோர்க்கும், கல்வியினால் மிக்கோர்க்கும் அநாதராய் இறந்தவர்க்கும்; [ஒர் ஊதியம்-வருவாய் ஒன்றும்; அநாதர்-ஆதரவு அற்றவர்]
பரிமேலழகர்: களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும், நல்கூர்ந்தார்க்கும், ஒருவருமன்றித் தன்பால்வந்து இறந்தார்க்கும்;

பழைய ஆசிரியர்கள் அனைவரும் துறந்தார் என்பதற்குத் துறவியர் என்றே பொருள் கொண்டனர். ஆனால் எதைத் துறந்தார் என்பதை விளக்குவதில் அவர்கள் வேறுபடுகின்றனர். துவ்வாதார் என்பதற்கு வறியோர் எனவும் இறந்தார் என்பதற்கு செத்தவர் எனவும் இவர்கள் உரை தந்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துறவிக்கும் வறியவர்க்கும் நிலைதிரிந்தவர்க்கும்', 'துறவிகளுக்கும், பசித்திருக்கும் எவருக்கும், நிலை கெட்டுப் போனவர்களுக்கும்', 'சுற்றத்தாராற் கைவிடப்பட்டவர்கட்கும், வறியவர்கட்கும், ஆதரவின்றித் தன்பால் வந்து உயிர்நீத்தவர்கட்கும்', 'பிறர் நலம் பேணுவதற்காக தந்நலத்தை விட்டவர்க்கும், வறியோர்க்கும், இல்வாழ்க்கைக் கடந்த அறிவோர்க்கும்' என்றபடி உரை தந்தனர்.

துறவிகளுக்கும், வறியவர்கட்கும், நிலைதிரிந்து ஆதரவற்று நிற்போர்க்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

இல்வாழ்வான் என்பான் துணை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இல்வாழ்வானென்று சொல்லப்படுமவன் துணை யாவான்.
மணக்குடவர் குறிப்புரை: மேற்கூறிய மூவரும் வருணநாமங்களைத் துறவாமையாலீண்டுத் துறந்தாரென்று கூறினார். செத்தார்க் கிவன் செய்ய வேண்டிய புறங்காட்டுய்த்தல் முதலாயின. இது மேற்கூறியவர்க்கேயன்றி இவர்க்கும் துணையென்று கூறிற்று.
பரிப்பெருமாள்: இல்வாழ்வானென்று சொல்லப்படுமவன் துணை யாவான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறிய மூவரும் வருணநாமங்களைத் துறவாமையாலீண்டுத் துறந்தாரென்று கூறினார். செத்தார்க் கிவன் செய்ய வேண்டிய புறங்காட்டுய்த்தல் முதலாயின. இது மேற்கூறியவர்க்கேயன்றி இவர்க்கும் துணையென்று கூறிற்று. முற்குறளில் இயல்புடைய மூவரில் ஒருவரான துறந்தார் வைதிக முனிவர்; ஈண்டுக் கூறியது ஏனைய இருடிகளை.
பரிதி: இந்த மூவர்க்கும் கிருகஸ்தன் துணையாம் என்றவாறு. [கிருகஸ்தன்-இல்வாழ்வான்]
காலிங்கர்: ஏற்ற இல்வாழ்வான் என்று சொல்லப்படுவானே துணையாவான் என்றவாறு.
பரிமேலழகர்: இல்வாழ்வானென்று சொல்லப்படுவான் துணை
பரிமேலழகர் குறிப்புரை: துறந்தார்க்குப் பாவம் ஒழிய அவர் களைகணாய் நின்று வேண்டுவன செய்தலானும், துவ்வாதவர்க்கு உணவு முதலிய கொடுத்தலானும், இறந்தார்க்கு நீர்க்கடன் முதலிய செய்து நல்லுலகின்கண் செலுத்தலானும், துணை என்றார். இவை இரண்டு பாட்டானும் இல்நிலை எல்லா உபகாரத்திற்கும் உரித்தாதல் கூறப்பட்டது. [நீர்க்கடன்-இறந்தாரை நோக்கிச் செய்யும் எள்ளும் நீரும் இறைத்தல் முதலியன]

'இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான் துணையாவான்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இல்லறத்தானே துணைவன்', 'குடும்ப வாழ்க்கை நடத்துகிறவன் தான் உதவியாவான்', 'இல்வாழ்வான் தக்க துணையாவான்', 'இல்லற வாழ்க்கையில் உள்ளவன் துணையாவான்' என்றபடி பொருள் உரைத்தனர்.

இல்லற வாழ்க்கையில் உள்ளவன் துணையாவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
துறவிகளுக்கும், வறியவர்கட்கும், இறந்தார்க்கும் இல்லற வாழ்க்கையில் உள்ளவன் துணையாவான் என்பது பாடலின் பொருள்.
இங்கு சொல்லப்பட்ட 'இறந்தார்' யார்?

குடும்பத்துக்கு வெளியே வாழ்வுநிலைக்கான உதவி தேவைப்படுவோர்க்கும் இல்வாழ்வான் துணை நிற்கிறான்.

துறவறம் பூண்டவர்களுக்கும், வறுமையிலே உழல்பவர்களுக்கும், திக்கற்றவர்க்கும் இல்வாழ்வினனே துணையாவான்.
துறந்தார்:
துறந்தார் என்ற சொல் மன மாசுகள் இல்லாதவராய், உலக ஆசைகளை நீக்கிய துறவியரைக் குறிக்கும்.
இதற்குக் களைகண்ணானவரால் துறக்கப்பட்டவர் என்றும் பொருள் கூறினர். இது, கணவனால் துறக்கப்பட்ட பெண், பெற்றோரால் துறக்கப்பட்ட குழந்தைகள் போன்றோரைக் குறிப்பதாக விளக்கினர். காலிங்கர் 'குடிப்பிறந்தோரால் ஓரோர் காரணத்தினால் வெகுண்டு துறக்கப்பட்டாரை' யும் துறந்தாருள் இணைக்கிறார். இது நாட்டாரால், ஊராரல் சமூகத்தினின்றும் தள்ளிவைக்கப்பட்டாரைக் குறிப்பதாகக் கொள்வர். துறந்தார் என்னுஞ்சொல் செய்வினைப் பொருள் தருவதால், அதற்குத் துறக்கப்பட்டார் என்று செயப்பாட்டுவினைப் பொருள் கூறுவது பொருந்தாது என்று இப்பொருளை அறிஞர் ஏற்க மறுப்பர். பரிதி 'மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசையென்ற மூவகையாசைகளையும் துறந்தவர்' என்ற எளிய விளக்கம் தந்தார். துறந்தார் என்பதற்கு வாழ்வின் துன்ப நிலைக்கஞ்சி வாழ்வினை வெறுத்து விட்டவர். வாழ்க்கையின் துன்பச்சுமையிலிருந்து தப்புவதற்குத் தற்கொலை புரிவோர், வீட்டைவிட்டுக் கிளம்புவோர் போன்றோர் துறந்தார் எனப்படுகின்றனர் எனவும் சிலர் பொருளுரைத்தனர்.
துறந்தார் என்பது உலகப் பற்றுக்கோடு அற்று, துறவறத்திற்குரிய உயரிய ஒழுக்கத்தில் வழுவாது இருப்பவரைக் குறிக்கும்.
இல்வாழ்க்கை அறம்‌ முறையாக நடைபெறாதெனின்‌, துறவறமும்‌ நிலைபெறமுடியாது; துறவியர்க்கு வேண்டியனவற்றை அளித்து ஆதரிப்பவர் இல்லறவாழ்வு நடத்துவோரே. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (தவம் 263 பொருள்: துறந்தவர்கட்கு உணவு முதலியவற்றை வழங்கிப் பேணுவதற்காகவே துறவாத மற்றவர்கள் தவஞ்செய்தலை மறந்தனர் போலும்!) எனப் பின்வரும் துறவறயியலுள்ளும் வள்ளுவர் நகைச்சுவையுடன் கூறுவார். பற்றுக்களைத் துறந்த துறவியருக்கும் வாழ்வாதாரத் தேவைகள் உண்டு. அவர்கள் யாதொரு உடைமையும் இல்லாதவர்கள். ஆதலால் அவர்களைப் புரத்தல் இல்லறத்தார் கடன். துறவிகளுக்கு உண்டியும் உடையும் அறுநோய்க்கு மருந்தும் தந்து காப்பர் இல்லறத்தார்.

துவ்வாதவர்:
துவ்வாதவர் என்பது நுகர்தற்குரியனவற்றைத் துய்க்க வழிஇல்லாதவராம். வாழ்வு நடத்தத் தேவையான பொருளில்லாமல் இருப்பவர் அல்லது பொருள் தேட வகையற்று நிற்கும் வறியரைக் குறிப்பது. அடிப்படைத் தேவைகளான உணவு, ஆடை இவற்றைக்கூட நுகர இயலாத நிலையிலிருப்பவர் இவர்கள். தொடர்புடையாரால் கைவிடப்பெற்ற உடல் நோயுற்றோர், குருடர், முடம் போன்ற உடற்குறைகள் கொண்டோர், மனநலக் குறைவுடையார் ஆகியோரும் துவ்வாதவருள் அடங்குவர். பசியால் வாடும் நல்கூர்ந்தார் துவ்வாதார் எனப்படுவர்.
இல்வாழ்க்கை நடத்துபவனே அவர்தம் உயிர்வாழ்க்கை நடத்துதலுக்குரிய இன்றியமையாதனவற்றைத் தந்து உதவுபவன்.

பற்றற்ற துறவியர்க்கும் வறியவர்க்கும் வாழ்விழந்து நிலைதிரிந்தவர்க்கும் இல்லறத்தானே துணைவன் என்கிறது பாடல்.
ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து இல்லற வாழ்வு நடத்துவது இன்பத்திற்காக மட்டுமன்று; அறத்திற்காகவுமாகும். இன்பமும் அறமும் இணைந்ததே இல்வாழ்க்கையாம். இல்வாழ்வான் என்பவன் முயன்று உழைத்துப் பொருளீட்டி வாழ்க்கை நடத்துகிறான். ஆனால் அவனைப் போல் நுகர்ச்சி வாழ்வு இயலாதவர் உலகில் பல வகையினர் உண்டு. அவர்களை மூன்று வகையினராகக் காட்டி அவர்களுக்கு இல்வாழ்வான் துணை செய்கிறான் என்கிறார் வள்ளுவர் இங்கு. இயல்பாகவே தன்னைச் சார்ந்திருக்கும் பெற்றோர், மனைவி, குழந்தைகள் என மூவருக்கும் நல்ல துணையாக இருந்து அவர்களை நல்வழியில் வழி நடத்திச் செல்கிறவன் இல்வாழ்வான் என்று முந்தைய குறள் (41) கூறியது. இங்கு இயல்பின் நீங்கிய மூன்று இனத்தைச் சொல்லி அவர்களுக்கும் அவன் உதவியாய் நிற்கிறான் எனச் சொல்லப்படுகிறது.
துறந்தார்தம் உயிர்வாழ்க்கை நடத்துதலுக்குரிய இன்றியமையாதனவற்றைத் தருதலுக்கு இல்வாழ்வான் துணை புரியலாம் என்றும் துவ்வாதார்தம் துய்க்கும் வேட்கையைத் தீர்த்து வைத்தற்கு இல்லறத்தான் உதவி செய்யலாம் என்றும் இறந்தார் அதாவது நெறி கடந்தவர்கள் திருந்தி இயல்பு வாழ்வு திரும்ப வழி செய்யலாம் என்றும் இக்குறள் கூறுகிறது.
இல்வாழ்வான் அவன் உண்டு அவன் குடும்பம் உண்டு என்று எண்ணிக்கொண்டு சுற்றியுள்ள சமுதாயத்தை மறந்துவிடாது, ஆதரவற்றவர்க்குத் துணையாக இருக்கவேண்டும் என அறிவுறுத்துகிறார் வள்ளுவர்.

இங்கு சொல்லப்பட்ட 'இறந்தார்' யார்?

'இறந்தார்' என்ற சொல்லுக்குப் பிறராய் வந்து செத்தார், இறந்தார், கல்வியினால் மிக்கோர் அநாதராய் இறந்தவர், ஒருவருமன்றித் தன்பால்வந்து இறந்தார், முதுமைப்பருவத்தில் மெலிவு வந்து ஒருவரும் இல்லாமல் தன்பால்வந்து இறந்த பேர், அனாதைப் பிரேதமாக இறந்தவர், தன்னிடத்தே இறந்தவர், (திக்கற்றவராய்ச்‌) செத்தார், நீர்க்கடன் செய்வாரின்றி இறந்து போனார், யாதொரு துணையுமின்றி இறந்துபோனவர், நிலைதிரிந்தவர், நெறிமாறி நடந்து வாழ்விழந்தார், அளவுக்கு மீறிய வாழ்க்கை நடத்திக் கெட்டுப்போனவர், பாதுகாப்பு இல்லாதவர், ஆதரவின்றித் தன்பால் வந்து உயிர்நீத்தவர், இல்வாழ்க்கைக் கடந்த அறிவோர், நோய் நொடி மூப்பு முதலியவற்றால் வருந்தி ஆதரவற்று இறந்தவர், பேணுதல் அற்றவர்கள், பாதுகாப்போர் இல்லாதவர், ஒருவருமின்றித் தன்னிடம் வந்து இறந்தார், யாசிப்பவர், (சுற்றம் இலராய்த் தம்பால் வந்து) இறந்தவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இச்சொல்லுக்கு 'இறந்தவர்' அதாவது 'யாதொரு ஆதரவுமின்றித் அநாதையாய் செத்தவர் அல்லது சாவு நிலையில் இருப்போர்' என்று ஒரு சாராரும், இறத்தல் என்பதற்குக் கடத்தல் என்று பொருள் கொண்டு வரம்பின்றி வாழ்ந்து கெட்டவர்கள் அல்லது நிலைகெட்டுப் போனவர்கள் என்றவாறு மற்றொரு சாராரும் உரை செய்தனர்.
இறந்தார்க்குச் செத்தார் எனச் சொன்னவர்கள் இல்வாழ்வான் செய்யுந்துணை நீர்க்கடனும் (இறந்தாரை நோக்கிச் செய்யும் எள்ளும் நீரும் இறைத்தல்), இறுதிக் சடங்கும், தென்புலத்தார் படையலுமாம் என்று எழுதினர். இறுதிச் சடங்குகள் செய்யாவிட்டாலும் இறந்தாரை அப்புறப்படுத்தி அவர்கள் உடலைப் பாங்குடன் நல்அடக்கம் செய்தலும் ஒரு சிறந்த பொதுநலத் தொண்டு ஆகும். இப்பயன்கள் செத்தார்க்கு நேரே சென்று அடைவதில்லை என்றாலும் இது போற்றத்தக்க அறச்செயலாகும்.
இறந்தார் என்பதற்கு 'எல்லை கடந்தவர்கள்' எனச் சிலர் பொருள் கொண்டனர். இப்பொருளில் வ சுப மாணிக்கம் 'நிலைதிரிந்தவர்' என்றும் இரா சாரங்கபாணி 'நெறிமாறி நடந்து வாழ்விழந்தார்' என்றும் நாமக்கல் இராமலிங்கம் 'வரம்பின்றி வாழ்ந்து கெட்டவர்' என்று கொண்டு உரைவரைந்தனர். 'சங்க இலக்கியங்களில் ‘இறந்தார்’ எனும் சொல் செத்தார் என்று பொருள் படாது கடந்தார் என்றே பொருள்படும்; ஆகவே, நெறிகடந்தார் என்ற பொருளே பொருந்தும்; .......இறந்தார்வாய் இன்னாச்சொல் நோக்கிற் பவர் (பொறையுடைமை 159 பொருள்: ...............வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்) என்புழியும் ‘இறந்தார்’ நெறிகடந்தார் என்னும் பொருளதாதல் காண்க' என இரா சாரங்கபாணி உரைத்தார். இல்வாழ்வான் நிலை திரிந்தவர்களுக்கு உதவி செய்து மீண்டும் அவர்களை வாழ வைக்கத் துணையாகிறான் என்பது இவர்களது கருத்தாகிறது.
சுகாத்தியர் 'வயது கடந்த முதியவர்' என்றும் சி இலக்குவனார் 'யாவற்றையும் கடந்தவர்/இல்வாழ்வைக் கடந்த அறவோர்' என்றும் உரை பகன்றனர். இன்னும் சிலர் இறந்தார் என்பதற்கு 'பாதுகாப்பவர் இல்லாதவர்', இல்வாழ்க்கை வாய்ப்புக்களை இழந்தவர்', 'பேணுதல் அற்றவர்' 'கடந்தார் கடத்தப்பட்டார் (இல்லத்தாரால் ஊராரால் நாட்டாரால் பல காரணங்களால் விலக்கப்பட்டார்) என்றபடி பொருள் கண்டனர். இறந்தார் என்ற சொல்லில் உள்ள றகரத்தை இடையின ரகரமாகக் கொண்டு இரந்தார் என்று கொண்டால் பொருள்தேட வகையில்லாமல் பிறரை நோக்கியே வாழவேண்டிய நிலையில் இரந்து நிற்பாரைக் குறித்துக் குறட்பொருளுக்குப் பொருந்தி வரும்; எனவே இச்சொல் பாடபேதமாக இருக்கலாம் என்பது வேறு சிலர் கருத்து. ஆனால் இரந்தார் துவ்வாதாரில் அடங்குவர் என்பதால் இக்கருத்தை மற்றவர் ஏற்கமாட்டார்.

பொருள் நாடி நிற்போரையே இக்குறள் பேசுகிறது. அந்த வகையில், இறந்தார் என்பதற்கு 'செத்தவர்' என்பதைவிட 'நிலைதிரிந்து ஆதரவற்று நிற்போர்' என்ற பொருள் இங்கு சிறக்கும்.

துறவிகளுக்கும், வறியவர்கட்கும், ஆதரவற்றோர்க்கும் இல்லற வாழ்க்கையில் உள்ளவன் துணையாவான் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வேறுவழி ஏதுமில்லாத ஆதரவற்றோர்க்கு இல்வாழ்க்கை மேற்கொள்பவன்தான் உதவுகிறான்.

பொழிப்பு

துறவியர்க்கும், வறியவர்க்கும், நிலைதிரிந்தவர்க்கும் இல்லறத்தான் துணையாவான்