தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
(அதிகாரம்:இல்வாழ்க்கை
குறள் எண்:43)
பொழிப்பு (மு வரதராசன்): தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.
|
மணக்குடவர் உரை:
பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை.
தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார்.
இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது
வகையினரென்று கொள்ளப்படுவர்.
பரிமேலழகர் உரை:
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு
ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம்.
(பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், 'தென்புலத்தார' என்றார். தெய்வம்
என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு
அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று
செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று. 'என்ற என்பது விகாரமாயிற்று'. 'ஆங்கு' அசை. ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின்
'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.)
இரா சாரங்கபாணி உரை:
இறந்த முன்னோர், வழிபடும் தெய்வம், விருந்து, சுற்றம், தன் குடும்பம் எனப்பட்ட ஐந்திடத்தும் அறநெறி வழுவாது காத்தல் இல்லறத்தானுக்குத் தலைமையான அறம்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
பதவுரை: தென்புலத்தார்-இறந்த முன்னோர், தென்திசை இடத்திலுள்ளவர்; தெய்வம்-தேவர்; விருந்து-விருந்தினர்; ஒக்கல்-சுற்றத்தார்; தான் -தான்; என்று-என; ஆங்கு-(அசைநிலை); ஐம்-ஐந்து; புலத்து-இடத்தின் கண்; ஆறு-நெறி; ஓம்பல்-போற்றுதல், காத்தல், பேணுதல், வழுவாமற் செய்தல்; தலை-சிறப்பு, முதன்மையானது.
|
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னும்;
பரிதி: பிதிர்லோகத்தார்க்கும், வழிபடு தெய்வத்துக்கும் உறவின் முறையார்க்கும் தந்து தன்மரபையும்;
காலிங்கர்: தன்குடியில் இறக்கப்பட்ட பிதிர்களுக்கும் கடவுளர்க்கும் விருந்தினர்க்கும் சுற்றத்தார்க்கும் தனக்கும் என்று சொல்லப்பட்ட;
பரிமேலழகர்: பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட;
பரிமேலழகர் குறிப்புரை: பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், 'தென்புலத்தார'
என்றார். தெய்வம் என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு
அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று
செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று. 'என்ற என்பது விகாரமாயிற்று'. 'ஆங்கு' அசை.
'பிதிரர், தேவர், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட' என்று பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தென்புலத்தார் நிலத்தெய்வம் விருந்து சுற்றம் தன்குடும்பம் என்ற', 'இறந்த உயிர்க்குத் துணைநிற்கும் பிதிரர்கள், கடவுள், புதியராய்
உதவிநாடி வந்தோர் (அகதிகள்) சுற்றத்தார், தான் என்னும்', 'தென்நாட்டவர், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட', 'தன்குல முன்னோர், வழிபடுதெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற' என்றபடி உரை தந்தனர்.
தன் குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்து, சுற்றம், தான் எனப்பட்ட என்பது இப்பகுதியின் பொருள்.
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஐந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை.
மணக்குடவர் குறிப்புரை: தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு
கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின்
மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.
பரிதி: கிருகஸ்தன் ரட்சிப்பது தன்மம் என்றவாறு.
காலிங்கர்: ஐந்து கூற்று நெறியையும் வழுவாமல் பாதுகாத்தலே இல்வாழ்க்கைக்குத் தலைமை என்றவாறு.
பரிமேலழகர்: ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம்.
பரிமேலழகர் குறிப்புரை: ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று,
இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.
'ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறமாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஐவகையையும் காக்க', 'ஐந்து வகையாரிடத்துஞ் செய்யப்படும் நெறிச் செயல்களை வழுவாது செய்தல் முதன்மையான அறமாகும்',
'ஐந்து இடத்தும் செய்யும் அறநெறித் தொண்டினைத் தவறாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறமாம்', 'ஐந்திடத்துச் செய்யும் அறத்தையும் பேணுதல்
இல்லறத்தானுக்குத் தலையாய கடமையாம்' என்றபடி பொருள் உரைத்தனர்.
ஐந்து இடத்தும் செய்யப்படும் நெறிச் செயல்களைப் போற்றுதல் சிறப்பான இல்வாழ்க்கையாம் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
தன்குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்து, சுற்றம், தான் எனப்பட்ட ஐம்புலத்து ஆறு போற்றிக் காத்தல் சிறப்பான இல்வாழ்க்கையாம் என்பது பாடலின் பொருள்.
'ஐம்புலத்து ஆறு' என்றால் என்ன?
|
இல்வாழ்வான் எப்பொழுது சிறப்புப் பெறுகிறான்?
இல்வாழ்வானுக்கு தன்குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என வரும் ஐவகையினருக்கும் உரிய நெறியில் கடமைகளை ஆற்றுதல் சிறப்பு சேர்க்கும்.
அந்த ஐந்து வகையினர் யார் யார்?
தென்புலத்தார்
தென்புலத்தார் என்ற சொல்லுக்கு நேர் பொருள் தெற்குத் திசையிலுள்ள இடத்தில் இருப்பவர் என்பது.
இறந்துபோன மூதாதையர் தென்திசையில் உறைவதாகத் தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கையுண்டு. அதனால் காலமாகிவிட்ட முன்னோர்களைத்
தென்திசையிலுள்ளவர் எனக் கூறுவது ஒரு மரபு. பொதுவாக சுடுகாடு/இடுகாடு ஒரு ஊரின் தெற்குத் திசையில் அமையும். இதுவும் தென்புலம் என்ற
வழக்குக்குக் காரணமாகலாம். காலிங்கர் தென்புலத்தார் என்பதற்கு தன்குடியில் இறக்கப்பட்ட பிதிரர் என்று பொருள் கூறியுள்ளார்.
இல்லறத்தானின் கடமைகளில் ஒன்று. நம்மிடையே வாழ்ந்து மறைந்தோரை குறிப்பாக நமக்கு மிகவும் நெருங்கியவர்களும் அன்பிற்குரியவர்களும் இறந்த நாளில் அவர்களை நினைந்து வழிபடுதலாம். இது தென்புலத்தார்க்குச் செய்யும் அறவினையாகும். தென்புலத்தாரை ஓம்புதல் எப்படி? அவரை நினைத்து அடையாள முறையிற் சில உண்டிகளை, அவர் பெயரால், இரப்போர்க்கு சிறந்த உணவும் புத்தாடையும் உதவுதல் ஆகும். இது இன்றும் நம் இல்லங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள்தாம்.
தென்புலத்தார் நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர்களின் அருள்பார்வை நம்மை வாழவைக்கும் என்பதும் நம்பிக்கை.
நம்முடைய வாழ்க்கை முறையில் நம்முடைய முன்னோர்களை என்றும் மறப்பதில்லை. எனவேதான் வள்ளுவரும் தென்புலத்தாரை முதலில் வைத்துப் பாடினார்.
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்(புறநானூறு 9 பொருள்: தென்றிசைக்கண் வாழ்வோராகிய நுங்குடியில் இறந்தோர்க்குச் செய்தற்கரிய இறுதிச் சடங்குகளைப் பண்ணும்) என்ற சங்கச் செய்யுள் அடி ஒன்றில் தென்புலவாழ்நர் என்ற தொடர் இறந்தார் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. இறந்த வீரனுக்காக நடப்பட்ட கல்லுக்கு இறந்த நாளில், பூச்சூட்டிப் புகை காட்டிப் பொங்கலிட்டு எல்லாருடனும் இருந்து உண்டதாக (நடுகல் வணக்கம்) வரலாற்றுச் செய்தியும் உண்டு.
தம் குடும்பத்தில் தோன்றி மறைந்தவர் நினைவுகளைப் பாதுகாப்பது தென்புலத்தார் ஓம்பல் ஆகும்.
தெய்வம்
தெய்வம் என்ற சொல் பல்வேறு நிலையில் ஐயப்பாட்டிற்கு இடமாகிறது என்பார் தண்டபாணி தேசிகர்.
தொல்காப்பியம் மற்றும் சங்க கால இலக்கியங்களில் பயின்று வரும் 'தெய்வம்' என்ற சொல், இனக்குழுக்களின் சிறு தெய்வங்களையே குறிக்கிறது என்பர்.
எல்லாம் கடந்த முழுமுதற் பொருளுக்குக் கடவுள் என்பது பெயர்; மற்றக் கடவுளர் தெய்வம், சிறு தெய்வம் அல்லது தேவர் எனவாகலாம். பரிதி இக்குறளுக்கான உரையில் தெய்வம் என்ற சொற்கு 'வழிபடு தெய்வம்' எனப் பொருள் கண்டிருக்கிறார். இங்கு சொல்லப்பட்ட தெய்வம் குலதெய்வத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
இல்வாழ்வான் தெய்வத்தை ஓம்புதல் என்பது எவ்வாறு? இது தெய்வத்தைப் போற்றுவதைக் குறிக்கும். தெய்வத்தை நினைத்து வணங்குதலே தீமை
செய்யாமைக்கும், உண்மை வழி நிற்பதற்கும் துணை செய்யும். கோயில்களில் செய்யப்படும் உணவுக் கொடையும் தெய்வ வழிபாட்டின் பாற்படும்.
குலதெய்வ வழிபாடு தெய்வத்திற்குச் செய்யும் கடன் ஆகும்.
விருந்து
விருந்து என்பது இங்கு விருந்தினரைக் குறிக்கும். நாட்டால், மொழியால், சமயத்தால் அயல் வழியினர்; அறிமுகம் இல்லாதவர் விருந்தினராவர்.
விருந்தினர் எனப்படுபவர் நாடி வந்துள்ள அன்பர்கள்; அவர்களை மனம் நோகாதவாறு ஓம்புதல் பண்பாகும்.
இவர்களை வரவேற்று ஊண் உடை முதலியன வழங்கிப் பேணவேண்டும். இதனால் அயல்வழி உறவுகள் வளரும். குமுகாயம் விரிவடையும்.
புதிதாகத் தம் வீட்டை நாடி வரும் அயலார் யாவரே யாயினும் அவரை உவந்து வரவேற்று ஓம்புதல் அக்காலத்தில் மிகவும் வேண்டப்பட்டதாக
இருந்தது. இது இல்லறத்தான் கடமையாயாகவும் இருந்தது எனத் தெரிகிறது. இன்றும் புதியவர்களுக்கு இயலும் வரை உதவுவது அறச்செயல்தான்.
ஒக்கல்
ஒக்கல் என்பது சுற்றத்தைக் குறிப்பது. சுற்றம் என்பது இல்வாழ்வானது உடன் சுற்றமாகும். பிறப்பு மற்றும் திருமணத்தினால் உண்டான இயற்கையான உறவுகள்,
தொடர்புகள் இவற்றைக் குறிக்கும். சுற்றத்தார்களே உண்மையில் ஒருவரின் உடனடிச் சமூகம். இல்வாழ்வானது உடன்பிறந்தார் முதற்சுற்றம். அடுத்துத் தந்தை,
தாய்வழி, உடன் பிறப்புச் சுற்றம், தம் வாழ்க்கைத் துணைவழி உடன்பிறப்புச் சுற்றம் என்றவாறு விரியும்.
சுற்றத்தினரைப் பேணுதல் என்பது அவர்தம் வாழ்க்கைத் தேவைகளைப் பெறுதற்குரிய வாயில்களை அமைத்துத் தருதல் என்பது. சுற்றம் பழகும் பழக்கங்களால்
அகவுணர்வுகள் செழுமையாக வளர்ந்து பயன்தரும். அதனால் அடிக்கடி கண்டும் கலந்தும் மகிழ்ந்து உரையாடியும் கலந்து உண்டும், உதவிகள் செய்தும், உறவு
நிலைகளைப் பேணுதல் இன்றியமையாதது. சுற்றத்தினரை ஓம்பல் குடும்பம் வளமையாக அமையத் துணை செய்யும். உறவுகள் செழிப்பாக அமையாத சுற்றம்
சுமையாகிவிடும் என்பர்.
செல்வ நிலையிலிருப்போர் தம் சுற்றத்தாரை ஓம்புதல் வேண்டற்பாலது என்பதனைச் 'சுற்றம் தழாஅல்' எனும் அதிகாரத்திலும் சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான் பெற்றத்தால் பெற்ற பயன்(குறள் 524 பொருள்: சுற்றத்தாரால் சுற்றப்படும்படியாக அவர்களைத் தழுவி அன்பாக வாழ்தல் ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் பெற்ற பயனாகும்) என்ற குறள் வழி வள்ளுவர் வலியுறுத்துகின்றார்:
தான்
தான் இன்றி பிறர்க்குச் செய்யவேண்டிய அறங்களைச் செய்தல் இயலாது .'தான்' என்றது தன்னைப் போற்றிக் காத்தலும் இன்றியமையாதது எனச் சொல்வது.
சுவரின்றிச் சித்திரம் வரையமுடியாது ஆதலால், பிறருக்குத் தொண்டு செய்பவன் தன்னையும் பேணிக் கொள்ளல் வேண்டும்.
தன்னைப் போற்றுதலைக் குற்றம் என்போரும் உளர். ஆனால், வள்ளுவர் வெளிப்படையாகவே உன்னையும் போற்றிக் காத்துக் கொள் என உலகறிய உரைக்கின்றார்.
குடும்பத்தலைவன் இல்வாழ்க்கையின் ஆக்க நிலையில் அமைந்த உறுப்பு. ஆதலால் அவனும் காலத்தில் உணவு அளவாக உண்ணுதல், உடல்நலத்திற்குரிய பயிற்சிகளை மேற்கொள்ளல், நல்ல நூல்களைக் கற்றல், அன்பு நலத்தை வளர்த்துக் கொள்ளுதல் ஆகியவை வழி தன்னைப் பேணிக்கொள்ளுதல் வேண்டும்.
'எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று' என்று பரிமேலழகர் தன்னை ஓம்புதலும் அறச்செயலே
என்பதற்கு விளக்கம் தந்தார்.
|
'ஐம்புலத்து ஆறு' என்றால் என்ன?
ஐம்புலத்து ஆறு என்ற தொடர்க்கு 'ஐந்திடமாகிய நெறி' என மணக்குடவரும் 'ஐந்து கூற்று நெறி' எனக் காலிங்கரும் 'ஐந்திடத்தும் செய்யும் நெறி'
எனப் பரிமேலழகரும் உரை கூறுவர். 'ஐந்து வகையாரிடத்தும் செய்யப்படும் நெறிச் செயல்களை' என்றனர் கா சுப்பிரமணிய பிள்ளையும், சொ தண்டபாணிப் பிள்ளையும்.
'ஐந்திடத்திலும் அறநெறியை' என்பது திரு வி க., குழந்தை ஆகியோரது உரை.
'ஐம்புலத்து ஆறு' என்பது ஐந்திடத்தும் செய்யப்படும் அறநெறி' எனப் பொருள் தரும்.
|
தன்குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்து, சுற்றம், தான் எனப்பட்ட ஐந்து இடத்தும் செய்யப்படும் நெறிச் செயல்களைப் போற்றுதல் சிறப்பான இல்வாழ்க்கையாம் என்பது இக்குறட்கருத்து.
இல்வாழ்க்கையோடு ஒன்றியுள்ள ஐவகையினர்க்கு இல்வாழ்வான் ஆற்றவேண்டிய கடன்கள்.
தன்குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்து, சுற்றம், தான் எனப்பட்ட ஐந்து இடத்தும் செய்யப்படும் அறநெறிச் செயல்களைக் காத்தல் சிறப்பான இல்வாழ்க்கையாம்
|