இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0046



அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவது எவன்?

(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:46)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?

மணக்குடவர் உரை: இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்தவல்லவனாயின் புறநெறியாகிய தவத்திற் போய்ப் பெறுவது யாதோ?
மேல் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்றார் அவ்வாறு செய்யின் தவப்பயனும் இதுதானே தருமென்றார்.

பரிமேலழகர் உரை: இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் - ஒருவன் இல் வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்; புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன் - அவன் அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது?
('அறத்தாறு' என்பது பழி அஞ்சிப் பகுத்து உண்டலும், அன்பு உடைமையும் என மேற்சொல்லிய ஆறு. 'புறத்தாறு' இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார் போஒய்ப் பெறுவது எவன் என்றார்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: ஒருவன் தனது இல்வாழ்க்கையை அறவழியிலே நடத்துவானாயின், அதற்குப் புறம்பாகிய நெறியிலே போய்ப் பெறும் பயன் யாதோ? (செவ்விய இல்வாழ்க்கையே எல்லாப் பயனையும் கொடுக்கும் என்பது கருத்து.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன்?

பதவுரை: அறத்து=அறத்தினது; ஆற்றின்-வழியில், நெறியின்கண்; இல்வாழ்க்கை-இல்லாளோடு கூடிய வாழ்க்கை; ஆற்றின்-செய்தால், நடாத்தினால், செலுத்தவல்லவனாயின்; புறத்து-புறமாகிய; ஆற்றில்-நெறியின்கண்; போஒய்-சென்று; பெறுவது-அடைவது; எவன்-யாது?


அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்தவல்லவனாயின்;
பரிதி: தருமத்தின் மேலாகிய இல்லறத்தின்வழி நிற்பது அன்றியிலே;
பரிமேலழகர்: ஒருவன் இல் வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்;
பரிமேலழகர் குறிப்புரை: 'அறத்தாறு' என்பது பழி அஞ்சிப் பகுத்து உண்டலும், அன்பு உடைமையும் என மேற்சொல்லிய ஆறு. [மேற்சொல்லிய 'ஆறு' - இவ்வதிகாரத்தின் நான்காம் குறளிலும் ஐந்தாம் குறளிலும் கூறப்பட்டவை]

'இல்வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்' என்று பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறத்தின்படி குடும்பம் நடத்தினால்', 'ஒருவன் இல்வாழ்க்கையை அறநெறியில் நடத்துவானாயின்', 'ஒருவன் தர்மநெறி தவறாமல் மனைவி மக்களோடு இல்வாழ்க்கை நடத்தினால்', 'அறவழியில் இல்லற வாழ்க்கையை நடத்தினால்' என்றபடி உரை தந்தனர்.

அறவழியில் இல்லற வாழ்க்கை நடத்தப்படுமாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன்?:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புறநெறியாகிய தவத்திற் போய்ப் பெறுவது யாதோ? [புறநெறியாகிய தவம் - இல்வாழ்க்கைக்குப் புறம் ஆதலின் தவத்தைப் புறநெறி என்றார்]
மணக்குடவர் குறிப்புரை: மேல் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்றார் அவ்வாறு செய்யின் தவப்பயனும் இதுதானே தருமென்றார். [சீலன் - எளியன்]
பரிதி: பாவத்தின் வழியிலே நின்று என்னபேறு பெற்றான் என்றவாறு. [பாவவழி - அறநெறிக்குப் புறம்பான பாவநெறி]
பரிமேலழகர்: அவன் அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது?
பரிமேலழகர் குறிப்புரை: 'புறத்தாறு' இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார், போஒய்ப் பெறுவது எவன் என்றார்.

மணக்குடவர் புறத்தாறு என்பதை தவநெறி என்று குறிப்பிட்டு 'அங்குப் பெறும் பயனும் இதுதானே' என்று உரை தருகிறார். பரிதி புறவழியைப் பாவவழி என்று கொண்டு 'அவ்வழியிலே என்ன பேறு பெற்றான்?' என்கிறார். பரிமேலழகர் புறத்தாறு என்பது வனத்துச் செல்லும் நிலை அதாவது வனப்பிரத்தன் நிலை என்று கொண்டு 'அதனினும் இல்லறம் பயனுடைத்து' என்று விளக்கினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதனைச் துறந்துபோய்ப் பெறுவது என்ன?', 'அவன் புறநெறியாகிய துறவால் எய்துவது யாது?', 'துறவறத்துக்குப் போய் அடையக்கூடிய நன்மை என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை', 'வேறு வழிகளில் சென்று அடைய வேண்டியது ஒன்றும் இல்லை (இங்கு வேறு வழி என்பது துறவற நெறியை)' என்றபடி பொருள் உரைத்தனர்.

புறம்பாகிய நெறியிலே போய்ப் பெறும் பயன் என்ன? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறவழியில் இல்லற வாழ்க்கை நடத்தப்படுமாயின், புறத்தாற்றில் போய்ப் பெறும் பயன் என்ன? என்பது பாடலின் பொருள்.
புறத்தாறு குறிப்பது என்ன?

பண்புடைய குடும்பவாழ்க்கையே மேம்பாடான வாழ்வுநெறியாம்.

அறநெறி தவறாது இல்வாழ்க்கையை ஒருவன் நடத்தி வருவானானால், அவன் வேறு நெறியிலே போய் என்ன பெறப்போகிறான்?
ஆற்றின் என்ற சொல் இப்பாடலில் இரண்டு இடங்களில் வேறுவேறு பொருளில் ஆளப்பட்டது. அறத்துஆற்றின், புறத்தாற்றில் என்பனவற்றிலுள்ள ஆற்றின் என்பதற்கு வழியில் அல்லது நெறியில் என்பது பொருள். இல்வாழ்க்கைஆற்றின் என்பதிலுள்ள ஆற்றின் என்பதற்குச் செய்தால் அல்லது நடத்தினால் என்பது பொருள். அறத்தாற்றின் என்பது இல்வாழ்வான் அறவழியில் பொருளீட்டி அறவழியில் இன்பங்களைத் துய்ப்பதைச் சொல்வது.
இவ்வாழ்வில் அறம் செழிக்க வள்ளுவர் சில நன்னெறிகளை இவ்வதிகாரத்திலேயே வகுத்துச் சொல்லியுள்ளார்: இல்வாழ்வான் துறந்தவர்களுக்கும் இல்லாதார்க்கும் வாழ்விழந்தவர்களுக்கும் துணையாய் இருப்பான்; தன்குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்து, சுற்றம், தான் எனப்பட்ட ஐந்திடத்தினையும் போற்றிக் காப்பான்; பழிக்குப் பயந்தும் பகுத்துண்டும் வாழ்வான்; அறமும் அன்புமுடைய வாழ்க்கை வாழ்வான்; இவனுக்கு இறையருள் இயல்பாகக் கிடைக்கும் என்பன. இவ்வாறாக அறநெறியில் இல்வாழ்க்கை நடத்தும் ஒருவன் இங்கேயே 'பேரின்பம்' பெறுவான்.

இல்லறத்தில் இருந்துகொண்டே அறநெறி ஆற்றி இறையருள் பெறமுடியும் என்பது ஒரு கொள்கை. துறவால் மட்டுமே அதை அடையமுடியும் என்பது மற்றொரு கோட்பாடு. இரண்டில் எது சிறந்தது என்ற வினா வரும்போது இல்லறத்தையே வள்ளுவர் மிகவும் போற்றுகிறார். துறவு வழியில் என்ன கிடைக்கப்போகிறது என்று சற்று ஏளனத்தோடேயே இங்கு கேட்கிறார் அவர்.
இல்லறத்திற்கு புறம்பான துறவு வாழ்க்கை என்ன பயன் நல்கும்? துறவு வழிச்சொல்வோர், 'வீடு' எனப்பட்ட, இறையோடு இணையும், பேரின்ப நிலையைப் பெறும் நோக்கோடு தவநெறி தழுவுவர். குடும்ப, சமூக சிக்கல்களின் அழுத்தம் தாங்க முடியாமல் இல்லறவாழ்வில் வெறுப்புக் கொண்டு துறவறம் மேற்கொள்வோரும் உண்டு. துறவறத்தில் உடல் வருத்தித் துன்புற்று, தனது வீடுபேற்று நிலை ஒன்றையே குறிக்கொண்டு, சமுதாயத்திற்கு ஒருவகையிலும் உதவாமல் துறவோர் வாழ்வு கழிகிறது; இவர்களுள் சிலர் கூடாவொழுக்கத்திற்கு ஆளாகியும் போவர்; இறுதியில் 'விடுதலை வாழ்வு' எய்தினாரா என்பதும் தெரியப்போவதில்லை. எனவே நோன்பு ஒன்றனையே மேற்கொண்டொழுகுவாரை வள்ளுவம் ஏற்பதில்லை.

இல்லறமே நல்லறம் என்கிறது இக்குறள். துறவு வாழ்வை விடவும் இல்வாழ்வே ஏற்றமுடையது; செவ்விய முறையில் குடும்பம் நடத்தினால் அதனினும்‌ பெரும்பயன்‌ தரும் வாழ்வுமுறை பிறிதொன்றில்லை என்கிறது இது. அறவழியிலே செலுத்தப்படும் இல்வாழ்க்கை புற வழியாகிய துறவுடன் ஒப்பு நோக்கப்பட்டு இல்லற வாழ்வே துறவுநெறியினும் மேலானது எனத் துணிகிறது.
இப்பாடல் தவிர்த்து இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை (47 பொருள்: இயல்பான இல்வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் மேலான வாழ்வு பெறவேண்டுமென்று முயற்சி செய்கின்றவர்கள் எல்லாருள்ளும் முதன்மையானவன்), ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து (48 பொருள்: பிறரை நெறியில் நடத்தித் தானும் அறநெறி பிறழாது ஒழுகுவானது இல்வாழ்க்கை, தவம் செய்வார் நிலையினைவிட ஆற்றல் மிக்கது) ஆகிய பின்வரும் இவ்வதிகாரத்துப் பாடல்களும் இல்வாழ்வையும் துறவு வாழ்க்கையையும் ஒப்பிட்டு இல்வாழ்க்கையே மேலானது என்பதை நிலைநாட்டும்.
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர் (துறவு 348 பொருள்: பற்றினை முழுதும் விட்டவரே துறவு கைகூடியவராவர்; மற்றவர்கள் அறியாமையால் துன்பவலையுள் அகப்பட்டவராவர்) எனப் பிறிதோரிடத்தில் குறள் கூறியது இப்பாடலுடன் முரணுகிறதே என்று சிலர் வினவுவர். இவர்கள் தலைப்பட்டார் என்ற சொல்லுக்குத் துறவு கைகூடியவராவர் என்பதல்லாமல் வீட்டினை யடைந்தவராவர் எனப் பொருள் கொள்பவர்கள். எனவே இக்குறள் முரண்பட்ட உயர்வு நவிற்சியுரையல்ல.

'புறத்தாற்றின் போஒய்ப் பெறுவ தெவன்' என்னும் பகுதியில் காணப்படும் அளபெடையில் 'அறியாமையால் வீழ்தல்!' என்னும் பொருளும் 'அந்தோ! போய்ப் பெறுவதென்ன?' என்னும் இரக்கமும் ஒலிப்பதாகத் திரு வி க கருத்துரைப்பார்.
'புறத்தாறு' என்ற சொல்லாட்சியும், இல்லறம் இருக்கும்போது புற நெறிகள் எதற்கு என்ற வினாவும், 'போஒய்' என்பதிலுள்ள ஓகார ஓசையும் 'அங்கு போய் என்னத்தைப் பெறப்போகிறாய்?' என்ற ஓர் இகழ்ச்சிக் குறிப்பை வெளிப்படுத்துகிறது.

'புறத்தாறு' குறிப்பது என்ன?

'புறத்தாறு' என்ற சொல்லுக்குப் புறநெறியாகிய தவம், பாவத்தின் வழி, (இல்வாழ்க்கைக்குப்) புறம் ஆகிய நெறி, அதர்மமான வழி, வேறு நெறி, தவநெறி, இல்வாழ்க்கைக்குப் புறம்பான பிரமச்சரியம் முதலிய நெறிகள், அறமல்லாத நெறிகள், குடும்பத்தைத் துறந்த வழி, புறநெறியாகிய துறவு, வேறு வழிகள், இல்வாழ்வு அல்லாத பிறவழிகள், இல்வாழ்க்கைக்குப் புறம்பாகிய நெறி, மறம், துறவற நெறி, துறவறம், துறவு முதலிய பிற வாழ்க்கை முறை, இல்லறவாழ்க்கைக்குப் புறம்பாகிய துறவு நெறி, துறவற வாழ்க்கை, துறவு நெறி என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மணக்குடவர் புறத்தாறு என்பதற்குப் புறநெறியாகிய தவம் என்று பொருள் கூறுவதால் அதைத் துறவுநெறி என்று அவர் குறிப்பிடுகிறார் என அறியலாம். அடுத்து வந்த பரிதி புறத்தாறு என்பதற்குப் 'பாவத்தின் வழி' என்று பொருள் கூறுகிறார். பின்வந்த பரிமேலழகர் புறத்தாறு என்பதற்கு 'இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை' என்கிறார். இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை என்பது வடவரது நான்கு வாழ்வுநிலைகளில் (பிரம்மசரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம்) மூன்றாவதான வானப்பிரத்தம் ஆகும். இவ்விதமாக புறத்தாறு என்றதற்கு 'இல்லறத்திற்குப் புறம்பான துறவுநெறி', 'அறத்திற்குப் புறம்பான தீயநெறி', 'புறத்தே அமைந்த வானப்பிரத்தநிலை அதாவது காடுறை வாழ்க்கை நிலை' என்ற மூவகையான மாறுபாடான விளக்கங்கள் காணப்பெறுகின்றன.
வ சுப மாணிக்கம் புறத்தாறு என்பது இளமைத் துறவைக் குறிப்பதாகக் கொண்டு இத்துறவு நெறியை இயற்கைக்குப் 'புறத்தாறு' என்பார்.

'துறவே மறுமை நலமடையும் வழி' என்று சமண, புத்த, வைதிக சமயங்கள் துறவுக்கு முதன்மை தந்து துறவறத்தினால் மட்டுமே மாந்தர் 'வீடு' என்னும் மேலான நிலையை அடைய முடியும் என்னும். துறவு வாழ்வு நம் மண் சார்ந்ததல்ல; இங்குள்ள மரபுப்படி துறவறம் எனத் தனியே ஒரு வாழ்வு முறை இல்லை. இல்லறத்தில் வாழ்ந்து வளரும் நிலையே துறவும் தவமும் ஆகும். உலகவாழ்க்கையின் நோக்கம் தன் கடனும் பிறர் நலமும் பேணுவதாம். மனையறமே மக்களுக்கு மாண்பை வழங்கும். இல்வாழ்வான் அறவாழ்வில் எய்தும் நிறைவையும் அதனால் அவன் பெறும் இன்பத்தையும் கண்கூடாகக் காணமுடியும். நன்னெறியில் அமைந்த இல்வாழ்வே பேரின்பம் பயப்பதுதான் என்பது வள்ளுவம். அறநெறி பின்பற்றிய இல்வாழ்க்கையில் பெறமுடியாத எதனையும் துறவு வாழ்க்கையில் பெற முடியாது என்பது வள்ளுவரின் துணிபாகும். அப்பிற நெறியிற்சென்று காணும் பயனை அறவழி ஒழுகினால் இல்லறத்திலேயே பெறலாம். இதனால்தான் 'அறம் எனப்பட்டதே இல்வாழ்க்கை' என்று உறுதியாகக் கூறினார் அவர். எப்படியேனும், இக்காலச் சூழலில் துறவு என்ற வாழ்வு நிலை ஒன்று இல்லை என்னும் அளவு அது பெரிதும் அருகி விட்டது.

புறத்தாறு என்பதற்கு இல்வாழ்க்கைக்குப் புறமாகிய நெறி அதாவது துறவுநெறி என்பது பொருள்.

அறவழியில் இல்லற வாழ்க்கை நடத்தப்படுமாயின் அதற்குப் புறம்பாகிய நெறியிலே போய்ப் பெறும் பயன் என்ன? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இல்வாழ்க்கையில் கிடைக்காத ஒன்று பிற வாழ்வுநெறிகளில் பெறமுடியும் என்பதில்லை.

பொழிப்பு

அறநெறியில் இல்வாழ்க்கையை நடத்துபவன், அதனைச் துறந்து வேறுநெறியில் போய்ப் பெறுவது என்ன?