இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-1171 குறள் திறன்-1172 குறள் திறன்-1173 குறள் திறன்-1174 குறள் திறன்-1175
குறள் திறன்-1176 குறள் திறன்-1177 குறள் திறன்-1178 குறள் திறன்-1179 குறள் திறன்-1180

பிரிந்தவரைக் காணவேண்டுமென்று கண்கள் விதுவிதுக்கும். துடிதுடிக்கும். அவ்விரைவால் மனமழிந்து வருந்துவது இது. விதுப்பு-காண விழையும் துடிப்பு.
- தமிழண்ணல்:

கண்விதுப்பு அழிதல் என்பது தலைவியின் கண்கள் பணி காரணமாகப் பிரிந்து சென்றிருக்கும் கணவரைக் காண்பதற்கு விரைதலால் உண்டாகும் வருத்தத்தைக் குறிப்பதாம். விதுப்பு காண்டற்கு விரைதலையும், அழிதல் வருந்துவதையும் உணர்த்தும். அவரைக் காட்டியவை அவளது கண்கள்தாம். இப்பொழுது உறக்கமின்மையாலும் அழுகையை அடக்கமாட்டாமையாலும் ஊரறியப் பிரிவின் துன்பத்தைத் தெரிவித்துக் கொண்டிருப்பதும் அவைதாம். அவளது கண்களின் நலம் குறைவதையும் அவை தலைவரைக் காண்டற்கு விரைதலையும் இத்தொகுப்பு விளக்குகிறது.

கண்விதுப்பு அழிதல்

விதும்பல் என்பது காணும் விருப்பத்தால் விரைதலாகும். தொலைவு சென்றுள்ள தலைவர் பணியிலிருந்து திரும்பிவருதல் நீட்டித்த விடத்து தலைமகள் பெரிதும் காண்டல் விரும்பினளானாள். இவ்வதிகாரத்துப் பாடல்கள் அனைத்துமே தலைவி கூற்றாக அமைந்துள்ளன.
தொழில் காரணமாகத் தலைவர் மனைவியைப் பிரிந்து சென்றிருக்கிறார். பிரிவுத் துன்பத்தால் மனைவியின் உள்ளம் வாடுகின்றது. உடலும் அழிகின்றது. உடம்பு உறும் துயரத்தை தூக்கமொழிந்த அவள் தோற்றமும் அவளது கண்கள் சொரியும் நீரும் மறைக்க முடியாதபடி அறிவித்துக் கொண்டிருக்கின்றன. இவ்வதிகாரப்‌ பாடல்கள்‌ அனைத்தும்‌ கண்ணை முன்னிட்டுக்‌ கூறுவனவாக உள்ளன. துயருற்றார்க்குக்‌ கண்ணீர்‌ முற்படத் தோன்றும். கணவரைப்‌ பிரிந்த துன்பத்தால்‌ வருந்தும்‌ தலைவி‌ தனது ஆற்றாமையை கண்ணின்‌ மேலிட்டுப்‌ பேசுகின்றாள்‌;‌ கண்ணீர்‌ உகுத்து வருந்துகிறாள்; காமவேதனையால் அவளது கண் உறும் துன்பமும் கூறப்பட்டன.

தான் துய்க்கும் காதல்நோய் உண்டாவதற்கு தனது கண்கள் காதலரைக் காட்டியதுதான் காரணம். பின் ஏன் அவை இப்பொழுது அழுகின்றன. சரி. ஆராயாமல் காதல் கொண்டுவிட்டன அப்பொழுது. அதன்பிறகு பழகிய நாட்களில் நன்கு புரிந்துகொண்டோமே. இன்று ஏன் அவரிடம் பரிவு காட்டாமல் கண்கள் துன்பம் கொண்டு அழுகின்றன. இக்கண்கள்தாம் முதலில் அவரைச் சடக்கென்று பார்த்துக் காதல் கொண்டு மகிழ்ந்தன. அதே கண்கள் இப்பொழுது கலுழ்வது அவளுக்கு வியப்பாகவும் நகைக்கத்தக்கதாகவும் இருக்கின்றதாம். தீர்வு காண முடியாத காதல்நோயினைத் தந்து தன்னைத் தூங்கவிடாமல் செய்ததும் இதேகண்களே. தனக்குத் துன்பத்தினை உண்டாக்கிய கண்கள் நன்றாகத் துன்பம் அடையட்டும் என நிலைதடுமாறிய மனத்துடன் கதறுகிறாள். அவளை விரும்பி விரைந்து வாராவிட்டாலும் கொழுநரைக் காணுவதற்காகக் அவளது கண்கள் அமைதியற்று அலைமோதுகின்றன என்று கூறுகிறாள். அவர் வரவு பார்த்துக்கொண்டே கண்கள் உறங்குவது இல்லை; வந்தால் நம்மை எங்கே தூங்கவிடப் போகிறார்; இரண்டுவழிகளிலும் உறக்கம் தொலைந்தது. தனது காதல்நோயினை தமது கண்களே பறை அறைவித்துதுப் பலரறியச் சொல்லுகின்றன என்று வருத்தம் மேலிடச் சொல்கிறாள் அவள்.

கண்விதுப்பு அழிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 1171 ஆம்குறள் அவரை நமக்குக் காட்டிய கண்கள் இன்று அவரைக் அவரைக் காண்பிக்கச் சொல்லி அழுகின்றனவே எனத் தலைவி உருகுகின்றாள் எனச் சொல்கிறது.
  • 1172 ஆம்குறள் காதல் கொண்ட சமயம் கண்கள் ஆராயாமல் இருந்திருக்கலாம். ஆனால் பழகிய பின் இப்பொழுது அவர்மேல் பரிவு காட்டாமல் ஏன் என் கண்கள் துன்பப்படவேண்டும் எனத் தலைவி உள்ளாய்வு செய்வதைச் சொல்வது.
  • 1173 ஆம்குறள் என்ன வேடிக்கை இது! இந்தக் கண்கள் தாமே அவரை முதலிலே ஓடி ஓடிப் பார்த்துக் காதல் கொண்டன. இன்று அழுகின்றனவே' என்று தலைவி கூறுவதைச் சொல்கிறது.
  • 1174 ஆம்குறள் தாமும் தப்பமுடியாது அழுது அழுது கண்ணீர் வற்றி எனக்கும் மீள வழி இல்லாமல் செய்து விட்டன என் கண்கள் எனத் தலைவி கூறுவதைச் சொல்வது.
  • 1175 ஆம்குறள் கடலை நோக்கச் சிறிதாகும் அளவு எனக்குக் காமம் தரவல்ல கண்கள் தாமே ஒருபொழுதும் துயில மாட்டாமல் தவிக்கின்றன எனத் தலைவி சொல்வதைக் கூறுகிறது.
  • 1176 ஆம்குறள் காதலைத் தந்த கண்களின் தவிப்பு இனிதுதான் எனத் தன்னைத்தானே தேற்றிக் கொள்ள முயல்கிறாள் தலைவி என்கிறது.
  • 1177 ஆம்குறள் கடைசித் துளி கண்ணீர் உள்ளவரை அழுது வருந்தட்டும் என் கண்கள் எனத் தலைவி சபிப்பதைச் சொல்கிறது.
  • 1178 ஆம்குறள் விரும்பி வீரைந்து திரும்பி வராத அவரைப் பார்க்காமல் என் கண்கள் அமைதியுறாவாமே! என்ன வகையான கண்கள் இவை? எனத் தலைவி சலித்துக் கொள்வதைச் சொல்கிறது.
  • 1179 ஆம்குறள் காதலர் இல்லாவிட்டாலும் உறங்கமுடியவில்லை; இருந்தாலும் துயிலமுடிவதில்லை. என் செய்வேன் எனத் தலைவி புலம்புவதைச் சொல்வது.
  • 1180 ஆவதுகுறள் எனது உறக்கம் இழந்த தோற்றமும் நீர் நிறைந்த கண்களும் நான் படும் துன்பத்தை மறைக்க முடியாதபடி உலகத்துக்கு உரக்கச் சொல்லிவிடும் எனத் தலைவி சொல்வதைக் கூறுலிறது.

கண்விதுப்பு அழிதல் அதிகாரச் சிறப்பியல்புகள்

கலுழும் கண், உணராவாய் பைதல் உழப்பும் கண் என்று கண்ணீர் சொரியும் கண்களையும், நீருலந்த கண், உழந்துழந்து உள்நீர் அற்ற கண் என்று அழுதழுது கண்ணீர் வற்றிய கண்களையும், இமைகள் மூட இயலா கண், ஆரஞர் உற்ற கண் என்று துஞ்சா கண்களையும், அமைவிலா கண் என்று அலைந்துதேடும் கண்களையும், அறைபறை கண் என்று மறைக்க இயலாமல் துயர் பறைசாற்றும் கண்களையும் வரைந்து தலைவி துன்புறும் வடிவைக் காட்சிப்படுத்தி, படிப்போர் மனதில் கண்ணீர் மல்கச் செய்கின்றன அதிகாரத்துக் குறட்பாக்கள்.

இல்லறத்தில் ஈடுபட்டுள்ள இணையர் ஒருவர்க்கொருவர் அருகில் இருப்பதையும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருப்பதையுமே பெரிதும் விரும்புவார்கள். கணவர் பிரிந்துள்ள வேளையில் அவரை மீண்டும் எப்பொழுது காணப்போகிறோமோ என்ற விழைவில் இருக்கும் தலைவியின் மனநிலையை நன்கு காட்டுகிறது இவ்வதிகாரப் பாடல்கள். மிகுந்த சோர்வுடன் உள்ள அவள் துயரம், அழுகை, சினம், வெறுப்பு, சலிப்பு, நகைச்சுவை என்று ஓர் உணர்ச்சியிலிருந்து மற்றோர் உணர்ச்சிக்கு மாறிக் கொண்டே இருப்பதைக் கண்கள்வழி கவிதை நயத்துடன் காட்டுகிறது கண்விதுப்பு அழிதல் அதிகாரம்.

பரிந்துணரா, கதுமென, பெயலாற்றா, படலாற்றா, ஓஓஇனிதே, உழந்துழந்து, பெட்டார், அறைபறைகண்ணார் என்பன நினையத்தக்க சொற்களாக உள்ளன.
குறள் திறன்-1171 குறள் திறன்-1172 குறள் திறன்-1173 குறள் திறன்-1174 குறள் திறன்-1175
குறள் திறன்-1176 குறள் திறன்-1177 குறள் திறன்-1178 குறள் திறன்-1179 குறள் திறன்-1180