இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1172



தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்

(அதிகாரம்:கண்விதுப்பு அழிதல் குறள் எண்:1172)

பொழிப்பு (மு வரதராசன்): ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்புகொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?

மணக்குடவர் உரை: முன்பு அவர் நல்லரென்று தெரிந்து உணர்ந்து நோக்கிய உண்கண்கள் இப்பொழுது வருத்தமுற்று, நல்லரென்று உணராவாய், துன்பமுழப்பது எற்றுக்கு?
இது கண்ணினறியாமையைத் தோழிக்குச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) தெரிந்து உணரா நோக்கிய உண்கண் - மேல் விளைவதனை ஆராய்ந்தறியாது அன்று காதலரை நோக்கி நின்ற உண்கண்கள்; பரிந்து உணராப் பைதல் உழப்பது எவன் - இன்று இது நம்மால் வந்ததாகலின் பொறுத்தல் வேண்டும் எனக் கூறுபடுத்துணராது துன்பம் உழப்பது என் கருதி?
(விளைவது: பிரிந்து போயவர் வாராமையின் காண்டற்கு அரியராய் வருத்துதல், முன்னே வருவதறிந்து அது காவாதார்க்கு அது வந்தவழிப் பொறுத்தலன்றேயுள்ளது? அதுவும் செய்யாது வருந்துதல் கழிமடச் செய்கை என்பதாம்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: மேல் விளைவது அறியாது காதலரை நோக்கி அவரது அழகை உண்ட கண்கள் இத்துன்பம் தம்மால் வந்தபடியால் தாம் பொறுக்கவேண்டுமென்று உணராது துன்பப்படுவது எதனாலே?


பொருள்கோள் வரிஅமைப்பு:
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப். பைதல் உழப்பது எவன்

பதவுரை: தெரிந்து-ஆராய்ந்து; உணரா-உணர்ந்து, அறியாமல்; நோக்கிய-பார்த்த; உண்-மையுண்ட, உள்வாங்கிய; கண்-கண்; பரிந்து-வருத்தமுற்று, பரிவுடன், கூறுபடுத்தி; உணரா-அறியாமல்; பைதல்-துன்பம்; உழப்பது-துய்ப்பது; எவன்-என்ன பயன் கருதி?


தெரிந்துணரா நோக்கிய உண்கண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முன்பு அவர் நல்லரென்று தெரிந்து உணர்ந்து நோக்கிய உண்கண்கள்;
பரிப்பெருமாள்: முன்பு அவரை நல்லரென்று தெரிந்து உணர்ந்து நோக்கிய உண்கண்கள்;
பரிதி: தெரிந்து விசாரியாமல் பார்த்த கண் தாம் கண்டமையால் யான் கண்டேன்;
காலிங்கர்: தோழீ! யான் உன்னை ஒன்று வினவுகின்றேன்; மற்று அதனைச் சிறிது ஆராய்ந்து அறிந்து சொல்லுவாயாக; அவரிடத்துப் பரிந்து நோக்கிய என் மையுண்டு அகன்ற கண்ணானவை;
பரிமேலழகர்: (இதுவும் அது.) மேல் விளைவதனை ஆராய்ந்தறியாது அன்று காதலரை நோக்கி நின்ற உண்கண்கள்;
பரிமேலழகர் குறிப்புரை: விளைவது: பிரிந்து போயவர் வாராமையின் காண்டற்கு அரியராய் வருத்துதல், முன்னே வருவதறிந்து அது காவாதார்க்கு அது வந்தவழிப் பொறுத்தலன்றேயுள்ளது? அதுவும் செய்யாது வருந்துதல் கழிமடச் செய்கை என்பதாம். [அது- மேல்விளையும் வருத்தம்; அதுவும் - பொறுத்தலும்; கழிமடச் செய்கை- மிகுந்த அறியாமைச் செயல்]

'முன்பு அவர் நல்லரென்று தெரிந்து உணர்ந்து நோக்கிய உண்கண்கள்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'விசாரியாமல் பார்த்த கண்' என்பது பரிதியின் உரை. அவரிடத்துப் பரிந்து நோக்கிய என் கண்' என்றார் காலிங்கர். பரிமேலழகர் ''ஆராய்ந்தறியாது அன்று காதலரை நோக்கி நின்ற உண்கண்கள்' என உரை பகன்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்று ஆராயாது அவரை நோக்கிய கண்கள்', 'ஆராய்ந்து அறியாமல் காதலரை நல்லவர் என நோக்கிய மையுண்ட கண்கள்', 'ஆராய்ந்து அறிந்துகொள்ளாமல் அவசரப்பட்டு கண்டவுடனேயே அவர்மீது ஆசை கொண்டுவிட்ட இந்த அறிவில்லாத கண்கள்', 'மேல் உண்டாவதனை ஆராய்ந்தறியாது அன்று காதலரை நோக்கி நின்ற மைபூசப் பெற்ற கண்கள்', என்ற பொருளில் உரை தந்தனர்.

ஆராய்ந்து அறியாமல் அவரைப் பார்த்து உள்வாங்கிய கண்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

பரிந்துணராப் பைதல் உழப்பது எவன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இப்பொழுது வருத்தமுற்று, நல்லரென்று உணராவாய், துன்பமுழப்பது எற்றுக்கு?
மணக்குடவர் குறிப்புரை: இது கண்ணினறியாமையைத் தோழிக்குச் சொல்லியது
பரிப்பெருமாள்: இப்பொழுது வருத்தமுற்று, நல்லரென்று உணராவாய், துன்பமுழப்பது எற்றுக்கு?
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கண்ணினறியாமையைத் தோழிக்குச் சொல்லியது
பரிதி: தானும் அழுது என்னையும் வருத்தம் செய்தது கண் என்றவாறு.
காலிங்கர்: அங்ஙனம் அன்று அறியாவாயினும் இன்று உற்ற பின்னும் உணராவாய் உறுதுயர் உழப்பது என் கருதிக்கொல்லோ சொல் என்றவாறு.
பரிமேலழகர்: இன்று இது நம்மால் வந்ததாகலின் பொறுத்தல் வேண்டும் எனக் கூறுபடுத்துணராது துன்பம் உழப்பது என் கருதி? [இது-இவ்வருத்தம்; நம்மால் - கண்களாகிய நம்மால்]

'வருத்தமுற்று, நல்லரென்று உணராவாய், துன்பமுழப்பது என்ன கருதி' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிந்துணரா என்றதற்குப் பரிமேலழகர் 'கூறுபடுத்துணராது' என மாறுபாடாகப் பொருள் கொள்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இன்று பொறுக்காமல் துன்பப்படுவது ஏன்?', 'இன்று இக்காமநோய் நம்மால் வந்ததாதலின் பொறுத்துக் கொள்ள வேண்டும் எனக் கருதாது அவரை நினைந்து வருந்தித் துன்புறுவது ஏன்?', 'இப்போது பரிந்து பரிந்து அழுவது எதற்காக?', 'இன்று 'இது நம்மால் வந்தது. ஆதலின் பொறுத்தல் வேண்டும்' எனத் தெரிந்து உணராமல் துன்பம் அடைவது என்ன காரணம்?' என்றபடி பொருள் உரைத்தனர்.

பரிவுடன் எண்ணாமல் துன்பத்தில் உழல்வது எதனால்? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஆராய்ந்து அறியாமல் பார்த்து அவரை உள்வாங்கிய கண்கள் இன்று பரிந்துணரா துன்பத்தில் உழல்வது எதனால்? என்பது பாடலின் பொருள்.
'பரிந்துணரா' குறிப்பது என்ன?

அன்று நல்லவரென்று தெரிந்த உன் கண்களுக்கு இன்று பிரிவாற்றாமையால் வருத்தமுற்று, அவர் யாரென்று உணரமாட்டாமல் துன்பமுறுவது ஏன்?

ஆராய்ந்து அறியாமல், பார்த்த உடன் காதல்கொண்ட கண்கள் இன்று பரிவு காட்டாமல் துன்பம் துய்ப்பது எதனால்?
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகத் தொலைவு சென்றுள்ள கொழுநர் விரைவில் வீடு திரும்பவேண்டும் என்ற வேட்கையுடன் காத்திருக்கிறாள் தலைவி. பிரிவின் ஆற்றாமையால் வருத்தம் மிகக் கொண்டிருக்கிறாள். சினமும் துயரமும் பெருகிறது.
தணிக்கமுடியாத காதல் நோயை உண்டாக்கிய காதலரை இந்தக் கண்கள் காட்டியதாலேயே நான் கண்டேன்; அதே கண்கள் இன்று அழுவது எதனால்? எனக் தனது கண்களை நோக்கிக் கணைகளைத் தொடுத்துக்கொண்டிருக்கிறாள் அவள்.

இக்காட்சி:
கணவரது பிரிவுக்காலம் நீட்டிப்பதால் துயரம் தாங்காது மறுபடியும் தன் கண்களிடமே குறைகாண்கிறாள் தலைமகள். 'கண்டவுடன் காதல் கொண்ட கண்களே! இப்பொழுது துன்பப்பட்டு என் செய்வது' என்கிறாள் அவள். அன்று அவரைக் கண்கள் கண்டபோது அவரைப் பற்றி ஆய்ந்தறியாமல் காதல் கொண்டேன். ஆனால் இவ்வளவு நாள் பழகி அவரைப் பற்றி நன்கு புரிந்துகொண்ட பின்னர் அவரைப் பரிவுடன் எண்ணாது கண்கள் ஏன் இப்பொழுது நீர் சொரிந்து தவிக்கின்றன? எனத் தன்னைத் தானே உள்ளாய்வுசெய்து கொள்கிறாள்.
ஆராய்ந்து பார்த்தா காதல் உண்டாகிறது? யாருக்கும், அப்படிக் காதல் நிகழ்வதில்லை. ஆனாலும் வருத்த மேலீட்டால், தலைவிக்குப் பழைய நினைவுகள் தோன்றி அவளை அவ்விதம் கருதச் செய்கிறது. அன்று உணராமல் காதல் கொண்டுவிட்டாலும், இப்பொழுது இப்பிரிவுத் துன்பநிலை தம்மால் உண்டானதுதானே என இக்கண்கள் வருந்துவதில்லையே ஏன்? எனவும் கேட்கிறாள்.

முதலில் வரும் ‘உணரா’ என்பதற்கு உணர்ந்து என்றும் பின்னால் வரும் உணரா என்பதற்கு உணர்ந்து என்றும் பொருள் கொண்டு 'முன்பு அவர் நல்லரென்று தெரிந்து உணர்ந்து நோக்கிய உண்கண்கள் இப்பொழுது வருத்தமுற்று, நல்லரென்று உணராவாய், துன்பம் உழப்பது ஏன்?' எனப் பொருள் காண்பர். ஈரிடத்தும் 'உணரா என்றதற்கு உணராமல் எனப் பொருள் கொண்டு 'அங்ஙனம் அன்று அறியாவாயினும் நோக்கிய என் மையுண்டு அகன்ற கண்ணானவை, இன்று உற்ற பின்னும் அவரிடத்துப் பரிந்து உணராவாய் உறுதுயர் உழப்பது என் கருதிக்கொல்லோ சொல்' எனவும் உரைத்தனர். இவ்விருவகையான உரைகளும் ஏற்கத்தக்கனவே.
ஏன் தலைவனிடம் பரிவு கொள்ளவேண்டும் என்பதற்கு விளக்கமாக, 'இன்று இது நம்மால் வந்ததாகலின் பொறுத்தல் வேண்டும் எனக் கூறுபடுத்துணர வேண்டும்' என்று பரிமேலழகர் உரை கூறுகிறது.

இக்குறளில் உள்ள உண்கண் என்ற தொடர்க்கு 'மையுண்ட கண்' என்ற பொருள் அல்லாமல் காதலனை 'உண்டு விழுங்கி விடுவது போலக் கண்ட கண்கள்'; காதலன் 'அழகை உண்ட கண்கள்' என்றபடியும் உரை கண்டுள்ளனர்.

'பரிந்துணரா' குறிப்பது என்ன?

'பரிந்துணரா' என்ற தொடர்க்கு இப்பொழுது வருத்தமுற்று நல்லரென்று உணராவாய், இன்று உற்ற பின்னும் உணராவாய், இன்று இது நம்மால் வந்ததாகலின் பொறுத்தல் வேண்டும் எனக் கூறுபடுத்துணராது, இன்று அன்புகொண்டு உணராமல், இப்போது 'இது நம்மால்தானே வந்தது?' எனப் பரிவுடன் எண்ணிப் பொறுமை கொள்ளாமல், இன்று பொறுக்காமல். இன்று இக்காமநோய் நம்மால் வந்ததாதலின் பொறுத்துக் கொள்ள வேண்டும் எனக் கருதாது, இப்போது அவருக்காகப் பரிந்து அறிவில்லாமல், இப்பொழுது தம் தவற்றை உணராமல், இத்துன்பம் தம்மால் வந்தபடியால் தாம் பொறுக்கவேண்டுமென்று உணராது, இன்று 'இது நம்மால் வந்தது. ஆதலின் பொறுத்தல் வேண்டும்' எனத் தெரிந்து உணராமல், 'நாம்தானே பார்த்தோம்' என்று அமைதியாக இருக்க வேண்டியது அல்லாமல், அவர் அன்பை உணரமாட்டாது என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

பரிந்து என்ற சொல் வருந்தி என்ற பொருளிலேயே குறளில் ஆளப்பட்டுள்ளது என இரா சாரங்கபாணி கருத்துரைப்பார்.
அன்று, காதலுக்கே இயல்பான முறையில், ஆராய்ந்து பார்க்காமல் கண்கள் கண்டவுடன் தலைவனிடம் காதல் மலர்ந்தது. இன்று அவரை நன்கு புரிந்துகொண்டபின் அவர் மீது பரிவு கொள்ளாமல் இக்கண்கள் ஏன் துன்புற்று அழுகின்றன எனத் தெரியவில்லையே என்கிறாள் தலைவி.

'பரிந்துணரா' என்பதற்குப் பரிவுகொண்டு உணராமல்/அன்பு கொண்டு உணராமல் என்பன பொருந்தும் பொருள்.

ஆராய்ந்து அறியாமல் பார்த்து அவரை உள்வாங்கிய கண்கள் இன்று அவரைப் புரிந்து கொண்டபின்னர் பரிவுடன் எண்ணாமல் துன்பத்தில் உழல்வது எதனால்? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஆராயாமல் காதல்கொண்ட கண்கள் இப்பொழுது அவரைக் காணாமல் கண்விதுப்பு அழிதல்.

பொழிப்பு

ஆராய்ந்து அறியாமல் காதலரை நோக்கிய கண்கள் இன்று பரிவுடன் எண்ணாமல் துன்பத்தில் உழல்வது எதனால்?