இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1173கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்கது உடைத்து

(அதிகாரம்:கண்விதுப்பு அழிதல் குறள் எண்:1173)

பொழிப்பு (மு வரதராசன்): அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்துநோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.மணக்குடவர் உரை: இக்கண்கள் அன்று விரைந்து தாமேநோக்கி இன்று தாமே கலுழாநின்ற; இது சிரிக்கத்தக்க துடைத்து.
இஃது ஆற்றாமை மிகுதியால் நகுதல் மிக்க தலைமகளை இந்நகுதற்குக் காரண மென்னையென்று வினாவிய தோழிக்கு அவள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) தாம் கதுமென நோக்கித் தாமே கலுழும் இது - இக்கண்கள் அன்று காதலரைத் தாமே விரைந்து நோக்கி இன்றும் தாமே இருந்தழுகின்ற இது; நகத்தக்கது உடைத்து - நம்மால் சிரிக்கத்தக்க இயல்பினை உடைத்து.
('கண்கள்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'இது' என்றது மேற்கூறிய கழிமடச் செய்கையை. அது வருமுன்னர்க் காப்பார்க்கு நகை விளைவிக்கும் ஆகலான் 'நகத்தக்கது உடைத்து' என்றாள்.)

இரா சாரங்கபாணி உரை: இக்கண்கள் அன்று காதலரை விரைந்து தாமே நோக்கி இன்று தாமே விரைந்து அழுகின்றன. இச்செயல் நம்மால் இகழ்ந்து சிரித்தற்குரியதாக உள்ளது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தாம் கதுமென நோக்கித் தாமே கலுழும் இது நகத்தக்கது உடைத்து.

பதவுரை: கதுமென-விரைந்து(ஒலிக்குறிப்பினால் விரைவு குறிப்பதோர் சொல்); தாம்-தாமே, தாங்கள்; நோக்கி-பார்த்து; தாமே கலுழும்- தாமே கண்ணீர் சொரியும்; இது-இஃது, இச்செயல்; நகத்தக்கது-சிரிக்கத்தக்கது; உடைத்து-உடையது.


கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும் இது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இக்கண்கள் அன்று விரைந்து தாமேநோக்கி இன்று தாமே கலுழாநின்ற இது;
பரிப்பெருமாள்:: இக்கண்கள் அன்று விரைந்து தாமேநோக்கி இன்று தாமே கலுழாநின்ற இது:
பரிதி: கடுகென எழுந்து நாயகரைக் கண்டு தானே அழுகின்றது;
காலிங்கர் ('அதுநகத்' பாடம்): தோழி! நாம் இவரைக் கண்டு கைக்கொண்டவிடத்து மேல் நமக்கு இது வாய்க்கும் வாயாது என்றும் சீர்தூக்காது அன்று சடக்கெனத் தாமே நோக்கி இனிது இருந்து தாமே கலுழும் அது; .
பரிமேலழகர்: (இதுவும் அது.) இக்கண்கள் அன்று காதலரைத் தாமே விரைந்து நோக்கி இன்றும் தாமே இருந்தழுகின்ற இது;.
பரிமேலழகர் குறிப்புரை: 'கண்கள்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'இது' என்றது மேற்கூறிய கழிமடச் செய்கையை.

'அன்று விரைந்து தாமேநோக்கி இன்று தாமே அழுகின்ற இது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்று விரைந்து பார்த்தன; இன்று அழுகின்றன', 'திடீரென அவரைக் கண்டவுடனேயே ஆசை கொண்டுவிட்டு, இப்போது இநதக் கண்கள் அழுது கொண்டிருப்பது', 'அன்றைக்குத் தாமே விரைந்து நோக்கி இன்றைக்குத் தாமே அழுகின்றன', 'இக் கண்கள் அன்று காதலரைத் தாமே விரைந்து பார்த்து விட்டு இன்று தாமே அழுகின்ற இச்செயல்' என்ற பொருளில் உரை தந்தனர்.

அன்று சடக்கென காதல் நோக்குக் கொண்டதும் இன்று கண்ணீர் சொரிவதுமான இது என்பது இப்பகுதியின் பொருள்.

நகத் தக்கது உடைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சிரிக்கத்தக்க துடைத்து.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஆற்றாமை மிகுதியால் நகுதல் மிக்க தலைமகளை இந்நகுதற்குக் காரண மென்னையென்று வினாவிய தோழிக்கு அவள் கூறியது.
பரிப்பெருமாள்: சிரிக்கத்தக்க துடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஆற்றாமையால் நக்க மிக்க தலைமகளை இந்நகுதற்குக் காரண மென்னையென்று வினாவிய தோழிக்கு கூறியது.
பரிதி: எனக்குச் சிரிப்புடைத்து என்றவாறு.
காலிங்கர்: யாம் பெரிதும் சிரிக்கத் தக்கது ஒன்று உடைத்து என்றவாறு.
பரிமேலழகர்: நம்மால் சிரிக்கத்தக்க இயல்பினை உடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: அது வருமுன்னர்க் காப்பார்க்கு நகை விளைவிக்கும் ஆகலான் 'நகத்தக்கது உடைத்து' என்றாள். [அது-கழி மடச்செய்கை (மிகுந்த அறியாமையினாற் செய்த செயல்); காப்பார்க்கு-கழிமடச் செய்கை வாராதபடி அதனைத் தடுப்பார்க்கு]

''சிரிக்கத்தக்க இயல்பினை உடைத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இது கேலிக்கு உரியது', 'கேலிக் கூத்தாகத்தான் இருக்கிறது', 'இச்செய்தி சிரித்து இகழக்கூடிய தனமையுடையது', 'நம்மால் சிரிக்கத் தக்க இயல்பினையுடையது!' என்றபடி பொருள் உரைத்தனர்.

சிரிப்பாக இருக்கிறது என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
அன்று கதுமெனக் காதல் நோக்குக் கொண்டதும் இன்று கண்ணீர் சொரிவதுமான இது சிரிப்புக்கிடமாக இருக்கிறது என்பது பாடலின் பொருள்.
'கதுமென' என்றால் என்ன?

'தலைவரைச் சடக்கெனத் தாமே பார்த்துக்கொண்டன. இப்போதும் அவரைக் காணவேண்டித் தாமே அழுகின்றன. இதை நினைத்தால் எனக்குச் சிரிப்பாய் வருகிறது!' என்கிறாள் தலைவி.

அன்று கடிதில் காதல் கொண்டதும் இப்போது கண்ணீர் சொரிவதும் இந்தக் கண்கள் தாமே என்பதை எண்ணினால் சிரிப்புத்தான் வருகிறது. என்று கண்களைப் பழிப்பது போன்று நொந்து கொள்கிறாள் தலைமகள்.
காட்சிப் பின்புலம்:
கடமை காரணமாகத் தொலைவு சென்றுள்ள கணவர் எப்பொழுது திரும்பி வருவார் என்று அவரைக் காணத் துடித்துக் காத்துக் கிடக்கிறாள் தலைவி. பிரிவின் ஆற்றாமையால் உடல் மெலிந்து வருந்திக் கொண்டிருக்கிறாள். அவர் நினைவு வந்தவுடன் அவள் அழுகத் தொடங்குகிறாள். அப்பொழுது அவள் ஆற்றமுடியாமல் வெளியே சொற்களைக் கொட்டுகிறாள்: 'இதே கண்கள்தாமே காதல்நோயைத் தந்தவரை அப்பொழுது காண்பித்தன? தாமே குற்றம் செய்துவிட்டு இப்பொழுது தாமே ஏன் அழுகின்றன?' எனக் கண்களைக் குற்றம் சாட்டுகிறாள்; தலைவிக்குப் பழைய நினைவுகள் தோன்றியதும், 'அன்று அவரைக் கண்டபோது அவரைப் பற்றி ஆய்ந்தறியாமல் காதல் கொண்டேன். ஆனால் இவ்வளவு நாள் பழகி அவரைப் பற்றி நன்கு புரிந்துகொண்ட பின்னர் அவரைப் பரிவுடன் எண்ணாது கண்கள் ஏன் இப்பொழுது நீர் சொரிந்து துன்பப்படுகின்றன?' எனத் தன்னைத் தானே கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
காதல்கணவர் அருகில் இல்லாததால் ஏக்கமுற்றிருக்கும் தலைவிக்கு அவரைக் கண்ணால் காணமுடியவில்லையே என்பதை நினைக்க நினைக்க. அடக்கமுடியாமல் கண்களில் கண்ணீர் பெருகுகிறது. அழுகையின் கூடவே சிரிப்பும் வருகிறது. சிரிப்பு ஏன்? தன்னைக் கேட்காமல் ஓடி ஓடிப் போய் தலைவரைப் பார்த்து காதல் கொண்டது இதே கண்கள்தான்; இப்பொழுது அவரைக் காணாமல் கண்ணீர் மல்குவதும் இதே கண்கள் தாமே என எண்ணியவுடன் அவளுக்கு நகைப்புண்டாகிறது. கண்ணீர் உகுக்கும் கண்மேல் அவளுக்குச் சினமும் உண்டாகிறது. தன் கண்ணை நோக்கி 'நீ தான் என் துயரத்துக்கெல்லாம் காரணம். அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்து தீரா அன்பு கொண்டுவிட்டதால்தானே இன்றைக்குப் பிரிவினைத் தாங்கமுடியாமல் அழுகிறாய்?' என்று அவள் அதைக் கடிந்து கொண்டு 'இதை எண்ணினால் சிரிப்புத்தான் வருகிறது' என்று ஆற்றாமையாகக் கூறுகிறாள் அவள்.
கண்ணைத் தனக்குப் புறமாகிய பொருளாக வைத்து அது படும் வேதனையை விளையாட்டுப் போக்காக உரைக்கிறாள் மனைவி.

தெ பொ மீனாட்சி சுந்தரம் 'தலைவனின் அழகைக் காணச் செய்த கண்களை அவள் பழிதீர்க்க எண்ணுகிறாள். கவித்துவமான முறையில் அவள் தனது கண்களை வேறாக எண்ணிக் கண்ணீருக்காகப் பழிவாங்கும் மகிழ்ச்சி அடைகிறாள். இதில் கொஞ்சம் பைத்தியக்காரத்தனமும் உள்ளது' என நயமுரைப்பார்.

'கதுமென' என்றால் என்ன?

'கதுமென' என்ற சொல்லுக்கு விரைந்து, கடுகென, சடக்கென, திடீரென (கண்ட உடனே), ஓடிஓடி விரைந்து, திடுமென்று, அவசரமாக, பாய்ந்து சென்று, வேகமாக என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகிய மூவருமே கதுமென என்பதற்கு 'விரைந்து' என்று பொருளுரைத்தனர். பரிதி இச்சொல்லுக்குக் 'கடுகென' என்று உரைத்தார். கதுமென என்றதற்கு காலிங்கர் 'சடக்கென' அதாவது விரைவாக என்ற பொருளில் உரை தந்தார் ('சடக்கென' என்பது இன்றும் வழக்கில் இதே பொருளில் வழங்குகிறது).
'பிரிந்து சென்ற தலைவன் வந்து விட்டான் போலிருக்கின்றது என்று தெருவில் தேரோசை கேட்டுக் கதும் என எட்டிப் பார்ப்பதும் வந்த தேர் தலைவனுடையது அல்ல என்று அறிந்து சோர்ந்து அழுவதும்' என இக்குறளுக்கு விளக்கம் தருவார் மு கோவிந்தசாமி.
கதும் என்பது விரைவு குறிக்கும் ஒலிக்குறிப்பு இடைச்சொல். பொள்ளென ஆங்கே புறம்வேரார்.. (பொருள்: 'அப்பொழுதே உடனே' புறத்தில் சினம் கொள்ளமாட்டார்.....) என்ற பாடலில் (குறள் 487) உள்ள பொள் என்பதைப் போன்றது கதும் என்ற சொல்.

'கதுமென' என்ற சொல் விரைந்து எனப் பொருள்படும்.


அன்று சடக்கெனக் காதல் நோக்குக் கொண்டதும் இன்று கண்ணீர் சொரிவதுமான இது என்பது சிரிப்பாக இருக்கிறது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கண்களைப் பழித்துத் தன்துன்பத்தில் இன்பம் தேடும் தலைவியின் கண்விதுப்பு அழிதல்.

பொழிப்பு

அன்று சடக்கென்று நோக்கிக் காதல் கொண்டதும் இன்று கண்ணீர் சொரிவதுமான இது சிரிப்புக்கு இடமாக உள்ளது.