இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1177



உழந்துஉழந்து உள்நீர் அறுக விழைந்துஇழைந்து
வேண்டி அவர்கண்ட கண்

(அதிகாரம்:கண்விதுப்பு அழிதல் குறள் எண்:1177)

பொழிப்பு (மு வரதராசன்): அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.

மணக்குடவர் உரை: அழுதலை யுழந்துழந்து உள்ளநீர் அறுவனவாக; தாம் வேண்டினவரை விரும்பி நெகிழ்ந்து கண்டகண்கள்.
இஃது இவ்வாறு அழுதல் தகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது) விழைந்து இழைந்து வேண்டி அவர்க் கண்ட கண் - விழைந்து உள்நெகிழ்ந்து விடாதே அன்று அவரைக் கண்ட கண்கள்; உழந்துழந்து உள்நீர் அறுக-இன்று இத்துயிலாது அழுங்கலாய துன்பத்தினை உழந்து தம் அகத்துள்ள நீர் அற்றே போக.
(அடுக்கு இடைவிடாமைக்கண் வந்தது. அறுதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது)

இரா சாரங்கபாணி உரை: தாம் வேண்டியவரை விரும்பி நெகிழ்ந்து கண்ட கண்கள் துயிலாமல் அழுது வருந்தி வருந்தித் தம்மிடமுள்ள நீர் அறுவனவாக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
விழைந்து இழைந்து வேண்டி அவர்கண்ட கண் உழந்துஉழந்து உள்நீர் அறுக.

பதவுரை: உழந்துஉழந்து-வருந்தி வருந்தி, துன்பத்தைத் துய்த்துத் துய்த்து; உள்நீர்-உள்ளேயுள்ள நீர்; அறுக-அற்றுப்போக, இல்லாமல் போவதாக, (இங்கு) வறண்டு போகட்டும்; விழைந்து-விரும்பி; இழைந்து-உள்நெகிழ்ந்து; வேண்டி-விரும்பி, தேடி; அவர்-அவரை; கண்ட-பார்த்த; கண்-கண்கள்.


உழந்துஉழந்து உள்நீர் அறுக:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அழுதலை யுழந்துழந்து உள்ளநீர் அறுவனவாக;
பரிப்பெருமாள்: அழுதலை யுழந்துழந்து உள்ளநீர் அறுவனவாக;
பரிதி: உழைத்து உழைத்துக் கண்ணீர் உகுத்தது;
காலிங்கர் ('உழைந்துழைந்து' பாடம்): தோழீ! அலமந்து அலமந்து அழுது இங்ஙனம் உண்ணீர் செலவு அற்றுப்போக;
பரிமேலழகர்: (இதுவும் அது) இன்று இத்துயிலாது அழுங்கலாய துன்பத்தினை உழந்து தம் அகத்துள்ள நீர் அற்றே போக. [அழுங்கலாய - வருந்துதலாகிய; தம்மகத்துள்ள- தம்மிடத்திலிருக்கிற]
பரிமேலழகர் குறிப்புரை: அடுக்கு இடைவிடாமைக்கண் வந்தது. அறுதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது.

'அழுதலான துன்பத்தினை உழந்து தம் அகத்துள்ள நீர் அற்றே போக' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வருந்தி வருந்தி வறண்டு போகட்டும்', 'அழுது அழுது உள்ள நீரெல்லாம் அற்றுப் போகட்டும். எனக்கென்ன?', 'இன்று காணாது வருந்தி வருந்தி அவற்றின்கண் உள்ள நீர் அற்றுப்போவதாக', 'இன்று துயில முடியாத வகையில் துன்பப்பட்டுத் தம்மிடம் உள்ள நீர் வற்றிப்போக' என்ற பொருளில் உரை தந்தனர்.

வருந்தி வருந்தி தம்மிடம் உள்ள நீர் வறண்டு போகட்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

விழைந்துஇழைந்து வேண்டி அவர்கண்ட கண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் வேண்டினவரை விரும்பி நெகிழ்ந்து கண்டகண்கள்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இவ்வாறு அழுதல் தகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: தாம் வேண்டினவரை விரும்பி நெகிழ்ந்து கண்டகண்கள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இவ்வாறு அழுதல் தகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: விரும்பி அவரைக் கண்ட கண் என்றவாறு.
காலிங்கர்: முன்னம் தாம் விரும்பியவரைக் கண்டு இன்புற்ற கண் இவ்வாறு விரும்பிக் குழைந்து.
பரிமேலழகர்: விழைந்து உள்நெகிழ்ந்து விடாதே அன்று அவரைக் கண்ட கண்கள். [விழைந்து - விரும்பி]

'தாம் வேண்டினவரை விரும்பி நெகிழ்ந்து கண்டகண்கள்' என்றும் 'விரும்பியவரைக் கண்டு இன்புற்ற கண் இவ்வாறு விரும்பிக் குழைந்து 'விழைந்து' என்றும் உள்நெகிழ்ந்து விடாதே அன்று அவரைக் கண்ட கண்கள்' என்றும் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'விரும்பி உருகிக் காதலரைக் கண்ட கண்கள்', 'அவரைப் பார்த்து ஆசை மூட்டி எனக்கு இவ்வளவு துன்பமுண்டாக்கிவிட்ட இந்தக் கண்கள்', 'விரும்பியுருகி இடைவிடாமல் அன்று காதலரைக் கண்ட கண்கள்', 'விரும்பி மனம் கசிந்து விடாதே அன்று அவரைக் கண்ட கண்கள்' என்றபடி பொருள் உரைத்தனர்.

விரும்பி நெகிழ்ந்து தாம் வேண்டினவரைக் கண்ட கண்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
விரும்பி நெகிழ்ந்து தாம் வேண்டினவரைக் கண்ட கண்கள் உழந்துஉழந்து தம்மிடம் உள்ள நீர் வறண்டு போகட்டும் என்பது பாடலின் பொருள்.
'உழந்துஉழந்து' என்றால் என்ன?

அழு! நன்றாக அழு! கடைசித் துளி கண்ணீர் உள்ளவரை அழு! என்று தன் கண்களையே பழிப்புக்கு ஆட்படுத்துகிறாள் தலைவி.

விரும்பி நெகிழ்ந்து தாம் வேண்டினவரைக் கண்ட கண்கள் வருந்தி வருந்தி தம்மிடம் உள்ள நீர் வறண்டு போகும்வரை அழட்டும்.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகக் கணவர் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறார். பிரிவுத் துன்பத்தைத் தாங்கமுடியாமல் அவள் வருந்திக்கொண்டிருக்கிறாள். உள்ளமும் உடலும் வேதனையுறுகின்றன. பிரிந்தவரைக் காணவேண்டுமென்று கண்கள் விதுவிதுக்கின்றன. அவ்விரைவால் மனம் அழிந்து வருந்துகிறாள்.
தான் துய்க்கும் காதல்நோய் உண்டாவதற்கு தனது கண்கள் காதலரைக் காட்டியதுதானே காரணம்; ஆராயாமல் காதல் கொண்டுவிட்டன சரி. அதன்பிறகு பழகிய நாட்களில் நன்கு புரிந்துகொண்டோமே. இன்று ஏன் அவரிடம் பரிவு காட்டாமல் கண்கள் துன்பம் கொண்டு அழுகின்றன என வினவுகின்றாள்; இக்கண்கள்தாம் முதலில் அவரைச் சடக்கென்று பார்த்துக் காதல் கொண்டு மகிழ்ந்தன. அதே கண்கள் இப்பொழுது கலுழ்வது அவளுக்கு வியப்பாகவும் நகைக்கத்தக்கதாகவும் இருக்கின்றதாம்; மையுண்ட கண்கள் நான் உய்ய வழியில்லாதவாறு தணியாத நோயை என்னிடம் தங்கவைத்துத் தாமும் அழமுடியாத அளவில் கண்ணீர் வற்றி விட்டன; கடலும் சிறிதாகுமாறு பெரிய காமநோயைத் தனக்குத் தந்த கண்கள் தாமே ஒருபொழுதும் துயில மாட்டாமல் தவிக்கின்றன; தவிக்கட்டுமே! எனக்கு இந்தக் காமநோயைச் செய்த கண்கள் துன்பப்படட்டுமே!; இவ்வாறு கண்களை முன்னிறுத்தி தன் துன்பங்களை உரைத்துக் கொண்டிருக்கின்றாள் தலைவி.

இக்காட்சி:
பிரிந்த தலைவர் வீடு திரும்புவதைக் காணக் காத்து நிற்கின்றன தலைவியின் கண்கள். ஆனால் அவர் வருவதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. ஏமாற்றம் அடைந்த கண்கள் நீர் சொரிந்து கொண்டிருக்கின்றன. ஒருவர் மீது பற்று கொண்டுவிட்டால் எப்படி அவர் பயன்படுத்தும் உடைமைகள் மீதும் பற்று உண்டாகுமோ அதுபோன்றே ஒருவர்மீது வெறுப்புத் தோன்றினாலும் அவரை விரும்பும் பொருள்களின்மீதும் வெறுப்பு திரும்பும். இப்பொழுது அத்தகைய மனநிலையிலே தலைவி உள்ளாள். அவளது வெறுப்பு இப்பொழுது கண்ணீர் உகுக்கும் அவளது கண்கள் மீது செல்கிறது. 'அன்று அவரை விரும்பிப் பார்த்து காதல் வளரக் காரணமாயிருந்தவை இந்தக் கழி படர் உழந்த கண்கள்தாமே. அவை அலமந்து அலமந்து அழுது உள்நீர் முழுதும் வற்றிப்போகட்டும்' என வெறுப்பை உமிழ்கிறாள் தலைவி. காதலரை அன்று கதுவிக்கண்டு, தனக்குத் துன்பத்தினை உண்டாக்கிய கண்கள் நன்றாகத் துன்பம் அடையட்டும் என நிலைதடுமாறிய மனத்துடன், முறைதிறம்பிய வகையில், ஏறுமாறாகக் கூறுகிறாள் அவள். என்ன ஒரு சினம் தலைவிக்கித் தன் கண்கள் மீதே!

விழைந்து-ஆசைகொண்டு. இழைந்து-மனம் குழைந்து. வேண்டி-விரும்பி. இந்த மூன்று சொற்களும் ஏறத்தாழ ஒரே பொருளைத் தருவன. அழுத்தத்தைக் காட்ட அடுக்கப்பட்டுள்ளன (நாமக்கல் இராமலிங்கம்).
இப்பாடலை இதழகற்குறள் என்பர். இதழகற்குறள் என்பது ஒலிக்கும்போது இதழ்கள் (உதடுகள்) ஒட்டா வண்ணம் ஒலிப்பது.

'உழந்துஉழந்து' என்றால் என்ன?

'உழந்துஉழந்து' என்ற தொடர்க்கு அழுதலை யுழந்துழந்து, உழைத்து உழைத்து, அலமந்து அலமந்து அழுது, துயிலாது அழுங்கலாய துன்பத்தினை உழந்து, உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்தி, வருந்தி வருந்தி, அழுது வருந்தி வருந்தி, அழுது அழுது, துன்புற்றுத் துன்புற்று, துயில முடியாத வகையில் துன்பப்பட்டு, தூக்கமின்றி யழுந்துன்பத்தால் வருந்தி வருந்தி என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

உழந்து என்ற சொல்லுக்கு வருந்தி எனப் பொருள் உரைப்பர். துன்பம் துய்த்து என்றும் கொள்வர். உழந்து உழந்து என்னும் அடுக்கு நடுவே நீங்காமை, அதாவது தொடர்ந்து வருந்தி என்னும் பொருளில் வந்தது. இதற்கு 'உழைந்துழைந்து' என்று பாடம் கொண்டு அலமந்து அலமந்து எனப் பொருள் கூறினார் காலிங்கர். இவரது பாடம் எதுகைச் சிறப்புடையது என்பார் இரா சாரங்கபாணி.
அன்று மனம் உருகப் பார்த்த கண்கள் இன்று வருந்தி அழ நேரிட்டுவிட்டதே என்ற வருத்தமிகுதி சொல்லப்பட்டது.

'உழந்துஉழந்து' என்ற தொடர் வருந்தி வருந்தி என்ற பொருள் தரும்.

விரும்பி நெகிழ்ந்து தாம் வேண்டினவரைக் கண்ட கண்கள் வருந்தி வருந்தி தம்மிடம் உள்ள நீர் வறண்டு போகட்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

விரைந்துகாண விரும்பும் கண்களில் நீரற்றுப் போகட்டும் எனத் தலைவி வெறுத்துரைக்கும் கண்விதுப்பு அழிதல்.

பொழிப்பு

விரும்பி நெகிழ்ந்து தாம் வேண்டினவரைக் கண்ட கண்கள் வருந்தி வருந்தி தம்மிடம் உள்ள நீர் வறண்டு போகட்டும்.