இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1180மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து

(அதிகாரம்:கண்விதுப்பு அழிதல் குறள் எண்:1180)

பொழிப்பு (மு வரதராசன்): அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று

மணக்குடவர் உரை: எம்மைப்போல அறைபறையாகிய கண்களையுடையார் மாட்டு உளதாகிய மறையை யறிதல் ஊரார்க்கு எளிது.

பரிமேலழகர் உரை: ('காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவர் கொடுமையை மறைக்க வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது) எம் போல் அறைபறை கண்ணார் அகத்து மறை பெறல் - எம்மைப் போலும் அறைபறையாகிய கண்ணிணையுடையார் தம் நெஞ்சின்கண் அடக்கிய மறையையறிதல்; ஊரார்க்கு அரிதன்று - இவ்வூரின்கண் உள்ளார்க்கு எளிது.
('மறை' என்றது ஈண்டு மறைக்கப்படுவதனை. அகத்து நிகழ்வதனைப் புறத்துள்ளார்க்குஅறிவித்தலாகிய தொழிலாம் ஒற்றுமை உண்மையின் 'அறைபறையாகிய கண்' என்றாள். இங்ஙனம் செய்யுள் விகாரமாக்காது, 'அறைபறைக் கண்ணார்' என்று பாடம் ஓதுவாரும் உளர். 'யான் மறைக்கவும் இவை வெளிப்படுத்தா நின்றன' என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: செய்தியை வெளிப்படையாக அறிவிக்கும் அறைபறை ஒத்த கண்களை உடைய எம் போன்றோரிடத்து மறைவான செய்தியை அறிந்து கொள்ளுதல் ஊரில் உள்ளோர்க்கு அரிய செயலன்று (எளியதாம்).


பொருள்கோள் வரிஅமைப்பு:
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து.

பதவுரை: மறை-இரகசியம்; பெறல்-பெறுதல், அறிதல்; ஊரார்க்கு-ஊரிலுள்ளவர்க்கு; அரிது-அருமையுடையது; அன்று-இல்லை; ஆல்-(அசைநிலை); எம்போல்-எம்மைப் போன்ற; அறை-அடிக்கப்படும்; பறை-தப்பு என்னும் ஒருவகை இசைக்கருவி; கண்ணார்-கண்களையுடையார்; அகத்து-மனத்திலுள்ளது குறித்தது.


மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மறையை யறிதல் ஊரார்க்கு எளிது;
பரிப்பெருமாள்: மறையை யறிதல் ஊரார்க்கு எளிது;
பரிதி: மறைப்பது அரிது; .
காலிங்கர்: தோழீ! அகத்து அடங்கு பொருளைப் புறத்து எளிதிற் பெறுதல் அவ்வூரவர்க்கு அரிது அன்று; யார்மாட்டு எனின்;
பரிமேலழகர்: ('காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவர் கொடுமையை மறைக்க வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது) மறையையறிதல் இவ்வூரின்கண் உள்ளார்க்கு எளிது;
பரிமேலழகர் குறிப்புரை: மறை என்றது ஈண்டு மறைக்கப்படுவதனை.

'மறையையறிதல் இவ்வூரின்கண் உள்ளார்க்கு எளிது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மறைவை ஊரார் அறிதல் கடினமில்லை', 'காம வேதனையை ஊரார்க்கு எப்படி மறைக்க முடியும்?', 'புதைவை அறிதல் ஊரார்க்கு எளிதே', 'மறைத்து வைத்துள்ள மறையினை (இரகசியத்தை) அறிதல் ஊரார்க்கு எளிது' என்ற பொருளில் உரை தந்தனர்.

மறைவை ஊரார் அறிதல் கடினமில்லைதான் என்பது இப்பகுதியின் பொருள்.

எம்போல் அறைபறை கண்ணார் அகத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எம்மைப்போல அறைபறையாகிய கண்களையுடையார் மாட்டு உளதாகிய.
பரிப்பெருமாள்: எம்மைப்போல அறைபறையாகிய கண்களையுடையார் மாட்டு உளதாகிய.
பரிப்பெருமாள் குறிப்புரை: வரையாது பிரியப்பட்ட தலைமகள் 'என் கண்ணினாலே இவ்வொழுக்கம் பிறர்க்குப் புலனாகா நின்றது. அதற்கு யாங்ஙனம் செய்வோம்' என்று தோழிக்குக் கூறியது.
பரிதி: பலருமறியத் தட்டிச் சாற்றும் பறைபோல என் கண்ணீர் பலருமறிய என் காமத்தை அறிவிப்பது என்றவாறு.
காலிங்கர்: எம்போலக் கருத்துற்றது ஒன்றனை வெளிப்பட அறையும் பறைபோலும் கண்ணினையுடையார் மாட்டு என்றவாறு.
பரிமேலழகர்: எம்மைப் போலும் அறைபறையாகிய கண்ணிணையுடையார் தம் நெஞ்சின்கண் அடக்கிய. [அறைபறை-அறையப்படும் பறை-ஒரு இசைக் கருவி]
பரிமேலழகர் குறிப்புரை: அகத்து நிகழ்வதனைப் புறத்துள்ளார்க்குஅறிவித்தலாகிய தொழிலாம் ஒற்றுமை உண்மையின் 'அறைபறையாகிய கண்' என்றாள். இங்ஙனம் செய்யுள் விகாரமாக்காது, 'அறைபறைக் கண்ணார்'என்று பாடம் ஓதுவாரும் உளர். 'யான் மறைக்கவும் இவை வெளிப்படுத்தா நின்றன' என்பதாம்.

'எம்மைப் போலும் அறைபறையாகிய கண்ணிணையுடையார் தம் நெஞ்சின்கண் அடக்கிய' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பறைபோலும் கண்ணுடைய மகளிரிடமிருந்து', 'இப்படி எப்போதும் அழுது கொண்டிருக்கும் நிலைமையைப் பறை சாற்றுகின்ற கண்களையுடைய நான் என் மனத்திலுள்ள', 'பறையடித்து உள்ளதை வெளிப்படுத்தும் கண்ணினையுடைய எம்மைப் போல்வாரது மனத்திலேயுள்ள', 'எம்மைப் போல உள்ளத்தை அறிவிக்கின்ற பறையாகிய கண்களை உடையார் தம் நெஞ்சில்' என்றபடி பொருள் உரைத்தனர்.

எம்மைப் போல உள்ளத்தை வெளிப்படுத்தும் பறையாகிய கண்களை உடையார்தம் மனத்திலேயுள்ள என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எம்மைப் போல அறைபறை கண்ணார் தம் மனத்திலேயுள்ள மறைவை ஊரார் அறிதல் கடினமில்லைதான் என்பது பாடலின் பொருள்.
'அறைபறை கண்ணார்' என்றால் என்ன?

'உள்ளத்தில் புதைந்துள்ள துயரை என் கண்களே ஊரார்க்குக் காட்டிக்கொடுத்து விடுமே!' - தலைவி.

எம்மைப் போல் அறைபறையாகிய கண்களை உடையவரின், நெஞ்சிலுள்ள மறையை அறிதல், இவ்வூரார்க்கு எளிதுதான்.
காட்சிப் பின்புலம்:
கணவர் தொழில் முறையாகத் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறார். பிரிவின் துயர் தலைவியை வெகுவாக வாட்டுகிறது. அவள் உடல் மெலிந்தது; உறக்கமும் இழநதாள். அவர் நினைவு தோன்றத் தோன்ற கண்களில் நீர் சொரிந்து கொண்டே இருக்கின்றன. இவற்றை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
'தனக்குத் துயர் தந்துகொண்டிருக்கும் காதல்நோய் உண்டாவதற்கு தனது கண்கள் காதலரைக் காட்டியதுதானே காரணம். பின் ஏன் அவை இப்பொழுது அவரைக் காணவேண்டுமென்று அழுகின்றன?; தான் தான் காரணம் என்றுணர்ந்து பொறுக்காமல் துன்பம் உறுவது ஏன்?; அவரைக்காட்டி அவர்மீது காதல்கொள்ள வைத்த இக்கண்களே இப்பொழுது கலுழ்வது வியப்பாகவும் நகைக்கத்தக்கதாகவும் இருக்கின்றது; அவரை நினைந்து நினைந்து உள்ளம் நிலைகுலைந்ததால் வெளிவரும் கண்களின் நீரும் வற்றிவிட்டது; கடல்போன்ற காமநோயை தனக்குத் தந்த கண்கள் தாமும் உறங்க முடியாமல் தவிக்கின்றனவே; தனக்குத் துன்பம் நேரக் காரணமான கண்களை இந்நிலையில் காண்பது தனக்கு இனிமையாகத்தான் இருக்கிறது; தாம் விரும்பியவரைக் கண்டு நெகிழ்ந்த கண்கள் நீரின்றிப் போகட்டுமே!; இத்துணை இருந்தும் அவரைக் காணாமல் தனது கண்கள் உறக்கம் கொள்ளாது அலை பாய்கின்றன; கணவர் வாராதபோது அவர் வருகையை நோக்கி கண்கள் உறக்கம் கொள்ளவில்லை, வந்துவிட்டபின் மறுபடியும் பிரிந்து சென்றுவிடுவாரோ என்றஞ்சி தூங்குவதில்லை, இருவழியும் கண்கள் துன்பத்தைத் துய்க்கின்றன.' இவ்வாறு கண்களை வசைபாடியும் அதே சமயம் அவைபடும் துன்பத்திற்காக இரங்கியும் அக்கண்களால் காதல்கணவர் வரவை எதிர்நோக்கி இருக்கிறாள் தலைவி.

இக்காட்சி:
கணவர் பிரிவை ஆற்றமுடியாமல் தலைவியின் உள்ளமும் உடலும் வேதனையுறுகின்றன. தனிமை காரணமாகப் பல நாட்கள் தூங்காமலிருந்ததாலும் அழுது அழுது அவரையே எந்நேரமும் நினைந்து இருந்ததாலும் நீர் நிறைந்து வீங்கிப்போயுள்ள அவளது கண்கள் அவளுறும் துயரத்தைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.
தான் துய்க்கும் துன்பத்தை பிறர்க்குத் தெரியாமல் மறைக்க எண்ணுகிறாள். 'தூக்கமொழிந்த தன் கண்களைக் காண்கின்றவர்களுக்குத் தான் படும் துன்பத்தை அறிதல் கடினமன்று' என்பதையும் உணர்கிறாள் தலைவி. இதைத் 'தனது உறக்கம் இழந்த கண்களின் தோற்றம், உள்ளத் துயரத்தை மறைக்க முடியாதபடி பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன' எனக் கூறுகிறாள் அவள்.
மறை என்ற சொல் மறைக்க வேண்டியதைக் குறிப்பது. இங்கே மறைக்க வேண்டியது தன் கணவரைக் காணும் துடிப்பாகும். ஆனால் அதை மறைக்க முயன்றாலும், பிரிவின் வருத்தத்தால் வாடிவிட்ட நிலையில், அவள் கண்கள் வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கின்றன. மறை பொறுக்கும் நிறை நெஞ்சம் தலைவி கொண்டிருந்தாலும் தலைவன் பிரிவால் உள்ளம் உறும் துயரத்தை அவள் கண்கள் கொட்டி முழக்கிச் சாற்றுகின்றன என்பது கருத்து. மறை பெறல் என்றது உள்ளத்தில் மறைந்துள்ள துயரத்தை அவளைக் காண்போர் அறிந்து கொள்ளுதலைச் சொல்வது.

'அறைபறை கண்ணார்' என்றால் என்ன?

'அறைபறை கண்ணார்' என்ற தொடர்க்கு அறைபறையாகிய கண்களையுடையார், பலருமறியத் தட்டிச் சாற்றும் பறைபோல, அறையும் பறைபோலும் கண்ணினையுடையார், அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய, பறை அறைந்து பகர்வது போலும் கண்களையுடையவர்கள், பறைபோலும் கண்ணுடைய மகளிர், அறைபறை ஒத்த கண்களை உடைய, பறையடித்துக் கொண்டிருக்கிற கண்களையுடையவர்களுடைய, அடிக்கும் பறை போல உண்மையை வெளிப்படுத்தி விடும் கண்களையுடைய, பறையடித்து உள்ளதை வெளிப்படுத்தும் கண்ணினையுடைய, பறையாகிய கண்களை உடையார், பறை அறிந்து ஊருக்குச் செய்தி அறிவிப்பது போல (கண்ணீரைப் பொழிந்து) உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிடும் கண்களைப் பெற்றிருக்கும், பறையறையும் கண்ணையுடையார், பறைசாற்றி அறிவிக்கும் கண்ணையுடையவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருளுரைத்தனர்.

அறைபறை கண்ணார் என்பதற்கு அறைந்து கூறும் பறை போலும் கண்களையுடையவர் என்று பொருள். பறை என்பது ஒரு தோல் இசைக் கருவி. அதை அறைந்தால் அதாவது அடித்தால் பேரொலி எழும். பறை தட்டி ஊரார் கவனத்தை ஈர்த்துச் செய்தியை அவர்களுக்கு அறிவிக்கும் நடைமுறை உண்டு. மக்களைக் கூடச் செய்து செய்தியை அறியச் செய்ய பறையொலி எழுப்பப்படுகின்றது. அது எல்லாருக்குமான செய்தியாதலால் அதில் மறை எதுவுமில்லை. இங்கு தலைவியின் கண்கள் பறையாகின்றன. அவள் உள்ளம் படும் துன்பத்தை அவள் மறைக்க நினைத்தாலும் தம்பட்டங்கொட்டும் பறையாகியகண்கள் அதை உரக்கச் சொல்லிவிடுகின்றன என்கிறாள் தலைவி.
பலருமறியத் தட்டிச் சாற்றும் பறைபோல அவளது கண்கள் பலருமறிய அவள் உள்ளம் படும் துயரை அறிவிக்கின்றன. எனவே தலைவி தன்னைத் தானே அறைபறை கண்ணார் என அழைத்துக்கொள்கிறாள். உறக்கமில்லாமல் களைப்புடன் இருப்பதாலும், இடைவிடாது சொரிந்துகொண்டே இருக்கும் கண்ணீர் நிறைந்ததாக இருப்பதாலும் அவள் கண்களைப் பார்த்தவுடன் அவள் படும் துயரத்தை ஊரார் அறிந்து கொள்கிறார்கள். எனவே தனது, கண்களை அறைந்து ஊரார்க்கு அறிவிக்கும் பறை போன்றவை என்று அவள் கூறுகிறாள்.
இதே அறைபறை உவமையை அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான் (கயமை 1076 பொருள்: தாம் கேட்ட மறைச்செய்தியை இடந்தோறும் கொண்டுசென்று சொல்லுதலால் கயவர் அடிக்கப்படும் பறைக்கருவி போன்றவர்) என முன்பு பொருட்பாலிலும் வள்ளுவர் பயன்படுத்தினார்.

'அறைபறை கண்ணார்' என்ற தொடர் பறையாகிய கண்களை உடையார் எனப்பொருள்படும்.

எம்மைப் போல உள்ளத்தை வெளிப்படுத்தும் பறையாகிய கண்களை உடையார் தம் மனத்திலேயுள்ள மறைவை ஊரார் அறிதல் கடினமில்லைதான் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தன் கண்களைப் பார்த்து ஊராரெல்லாம் எளிதில் தன் உள்ளத்துநோயை அறிந்து கொள்கின்றனர் என்னும் தலைவியின் கண்விதுப்பு அழிதல்.

பொழிப்பு

எம் போன்ற உள்ளத்தை வெளிப்படுத்தும் பறையாகிய கண்களை உடையார் மனத்திலுள்ள மறைவை ஊரார் அறிதல் கடினமில்லை.