இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-1191 குறள் திறன்-1192 குறள் திறன்-1193 குறள் திறன்-1194 குறள் திறன்-1195
குறள் திறன்-1196 குறள் திறன்-1197 குறள் திறன்-1198 குறள் திறன்-1199 குறள் திறன்-1200

தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி. தலைவன் பிரிந்து சென்ற பின்னர்த் தனியாக இருக்கும் தலைவி அவன் நினைவாகவே இருந்து கொண்டு காதல் இன்பச் சிறப்பையும் காதலன் துணைமையையும் எண்ணி வருந்துகின்றாள்.
- சி இலக்குவனார்

ஒரு செயல்நோக்கம் கருதித் தலைவன் பிரிந்தபின் உண்டான தனிமையில் தலைவிக்கு வந்த துன்பமிகுதியைக் கூறும் அதிகாரம். தான் பிரிவுத்துயர் தாங்காது வருந்துவதுபோல் தலைவனும் வருந்துவார் என்று தலைவி எண்ணுகிறாள். அதுசமயம் உலகத்துக் கணவன்-மனைவி உறவு பற்றி நினைக்கிறாள். மனம் ஒத்தவர்கள், ஒருதலையாய்க் காதல் கொண்டவர்கள் என்னும் இவர்கள் பற்றிய ஆழ்ந்த சிந்தனைகள் மனத்தில் எழுகின்றன..

தனிப்படர்மிகுதி

தனிமையால் வருந்தும் துன்ப மிகுதியைச் சொல்வது தனிப்படர்மிகுதி
கடமை காரணமாகத் தலைவன் வெளியிடம் சென்றிருக்கிறான். அவனது பிரிவு தாங்காமல் தலைவி உடல் மெலிவுற்று, நிறம் மாறி உறக்கம் இழந்து வருந்தி துன்பம் மிகுந்து இருக்கிறாள். அவ்வேளையில் அவள் உலகத்து மகளிர்-ஆடவர் மணவாழ்வு எப்படியெப்படியெல்லாம், அமைகிறது என்பது பற்றி எண்ணித் தன் உள்ளத்து உணர்வுகளை உரைப்பதாக அதிகாரம் உருவெடுக்கிறது.
இல்லற வாழ்வில் ஆண்-பெண் இடையேயான உறவு பற்றிய கருத்தாடல் செய்வதாக அதிகாரம் அமைந்துள்ளது. மணவினைக்குப் பின் அமையும் ஆடவர்-மகளிர் காதல் நிலையின் சீர்கேட்டை இலைமறை காய்மறையாகக் காட்டிப் பொதுவறம் கூறும் போக்கு காணப்படுகிறது. அவர்கள் உண்மை இன்பம் அடையவேண்டும் என்ற குறிக்கோள் தெரிகிறது.

"மனம் ஒத்த வாழ்வு என்பது விதை இல்லாத இனிய பழம் போன்றது; காதலரை விரும்பும் அன்பு இருந்தால் மட்டும் போதாது; அந்தக் காதலரும் அவ்வாறு அன்பு கொண்டால்தான், தடையற்ற இன்பம் உண்டாகும்; விரும்பப்படும் காதலரும் தம் விருப்பமான அன்பை அளித்தால், அது வாழும் மக்களுக்கு மழை கிடைத்த பயன் போன்றதாகும்; நாம் மட்டும் அன்பு செலுத்திக் காதல் கொண்டால், அந்தக் காதலர் நம்மிடம் அன்பு செலுத்தாவிட்டால், அவர் எப்படித் துணை ஆவார்?; மணவாழ்வு என்பது காவடிபோல் இரு பக்கமும் ஒத்திருந்தால்தான் இன்பமாய் அமையும்; ஒரு பக்கம் மட்டும் இருப்பது துன்பச் சுமையாகும் என்கின்றன பாடல்கள்.

இவ்வதிகாரம். தலைவர் காதலியாதிருப்பதாகவும் தான்மாத்திரம் காதலிப்பதாகவும் தலைவி நினைப்பதால் உளதாம் வருத்தம் என்று சில உரைகாரகள் விளக்கம் கூறுவர். இணக்கமான மணவாழ்க்கை நோக்கமாதலால், இவ்வதிகாரத்தில் கணவனை அன்பு இல்லாதவனாகச் சொன்னதெல்லாம், கணவனும் மனைவியும் விரும்புவராகவும் விரும்பப்படுவராகவும் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவே. அது, ஆண் பெண் என்று வேறுபாடு காட்டாமல், மேல்வரிச் சட்டமாக, இருபாலர்க்கும் ஏற்றத்தாழ்வற்ற அறமாக, இங்கு எடுத்துரைக்கப்படுகின்றது என்பது நோக்கத்தக்கது. துன்பமிகுதி கூறவந்த அதிகாரத்தில் அவலச்சுவை காணப்படவில்லை.

தனிப்படர்மிகுதி அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 1191 ஆம்குறள் இருபாலும் ஒத்த காதலுடையவரே விதையில்லாத காதல் இன்பக் கனியை முழுமையாகச் சுவைக்க முடியும்.எனச் சொல்கிறது.
  • 1192 ஆம்குறள் காதலர் ஒருவர்க்கு ஒருவர் செய்யும் அன்பு உலகோர்க்கு மழை கிடைத்ததுபோல் என்பதைக் கூறுவது. .
  • 1193 ஆம்குறள் காதலில் ஒருமித்து அன்பைப் பொழிந்து இருப்போருக்கு, நாம் வாழ்கிறோம் என்னும் செருக்கு வந்துவிடும் என்று கூறுகிறது.
  • 1194 ஆம்குறள் தாம் விரும்புபவர் தம்மை விரும்பாவிட்டால் நற்பேறு தமக்கில்லை என்று கொள்ளவேண்டியதுதான். என்கிறது..
  • 1195 ஆம்குறள் நாம் காதல் கொண்டவர், நம்மை விரும்பாவிடில், அவர் நமக்கு எப்படித் துணையாக இருக்க முடியுமோ? எனக் கேட்கிறது.
  • 1196 ஆம்குறள் ஒரு பக்கமாகக் காதல் அமைந்திருத்தல் துன்பமாகும். காவடிபோல் இரண்டு பக்கங்களிலும் அது சமமாய் இருக்குமானால் இன்பம் என்று சொல்கிறது...
  • 1197 ஆம்குறள் காமன் என்பான் ஒருவர்பால் நின்று காதலை உண்டுபண்ணியதால் அவ்வொருவர் காமநோயால் உறும் துயரத்தையும் துன்பத்தையும் அறியமாட்டானா?எனக் கேட்கிறது.
  • 1198 ஆம்குறள் பிரிவில் சென்றுள்ள காதலரிடமிருந்து இனிய செய்தி, பெறாது வாழ்பவரை விடவும் கொடிய நெஞ்சம் கொண்டவர், உலகில் கிடையாது எனச் சொல்கிறது
  • 1199 ஆம்குறள் காதலர் விரைந்து திரும்பி வந்து தண்ணளி செய்யவில்லை என்றாலும் அவர் பற்றிய எந்தச் செய்தியும் என செவிகளுக்கு இனிமையாகவே உள்ளன எனத் தலைவி சொல்வதைக் கூறுவது.
  • 1200 ஆவதுகுறள் நெஞ்சமே! காதலர் விரைந்து வந்து அருள்செய்வார் என்ற நடவாத ஒன்றைவிட கடலைத் தூர்ப்பது எளிதில் நடக்கும் என மனம் வெதும்பிப் பேசுவதைச் சொல்வது.

தனிப்படர்மிகுதி அதிகாரச் சிறப்பியல்புகள்

காதலர் இருவருக்கும் உரிய ஒப்புரிமையை நிலைநாட்டும் வகையில் வீழ்வார், வீழப்படுவார் என்ற சொல்லாட்சிகள் மேற்கொள்ளப்பட்டன. விரும்புவார், விரும்பப்படுவார் என்னும் பொருள்தரும் இச்சொற்கள் இவ்வதிகாரத்தில் அடிக்கடி ஆளப்பட்டன.
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி(குறள் 119) என்ற பாடல் இச்சொற்களின் முழுப்பொருளை வெளிக் கொணர்கிறது.

வான் நோக்கி வாழும் மாந்தர்க்கு மழை பொழிவது எவ்வளவு இனிமை பயக்குமோ அவ்வளவு அருள் கிடைத்தது போன்றது காதலர் ஒருவர்க்கொருவர் செய்யும் அன்பு என்பதைக் கூறும் வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி (குறள் 1192) என்னும் இனிமையான குறட்பா இவ்வதிகாரத்துள்ளே அமைந்தது.

மணவினைகொண்டோரில் யார் செம்மாந்து நடப்பர்? வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு (குறள் 1193) என்னும் பாடல் விடை இறுக்கிறது. காதலில் ஒருமித்து அன்பைப் பொழிந்து இருப்போர் 'நாம வாழ்கிறோம்' என்ற செருக்கு உள்ளவர்கள் எனச் சொல்கிறது இது.. .
குறள் திறன்-1191 குறள் திறன்-1192 குறள் திறன்-1193 குறள் திறன்-1194 குறள் திறன்-1195
குறள் திறன்-1196 குறள் திறன்-1197 குறள் திறன்-1198 குறள் திறன்-1199 குறள் திறன்-1200