இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

திருவள்ளுவர் அறநெறியில் ஆழ்ந்த பற்று உடையவர்; அரசியலிலும் மற்ற உலகியலிலும் தெளிந்த அறிவு உடையவர்; கலைத்துறையில் அழகுணர்ச்சியும் கற்பனை வளமும் நிரம்பியவர்.
-மு வரதராசன்

குறள் படைத்த வள்ளுவர் தம் நூற்பெருமையில் பெருநோக்குடையராய் இருந்தவர்; காலங்காலத்திற்கும் பின்பற்றக்கூடிய நன்னூல் படைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நூல் யாத்தார் என்பதைக் குறள் படித்தவர் உணர்வர். சமயக் கருத்துக்களை முற்றிலும் புறந்தள்ளியதால் அவை அவரைப் பாதிக்கவில்லை. எந்தக் கட்டுக்குள்ளும் சிக்காமல் செம்பொருள் கண்டு அடிப்படையான உண்மைகளை உணர்த்தினார். அவர் தாம் யார் என்பதையும் அடையாளம் காட்டவில்லை.

திருவள்ளுவர்

தமிழுக்குப் பெருமை சேர்த்த திருக்குறளை படைத்த ஆசிரியர் வள்ளுவர். தமிழனின் பண்புகளைத் திரட்டியும், அற்றை நாளைய பண்பாட்டில் காணப்பட்ட நல்வாழ்வுக்குப் பொருந்தாதவைகளைக் களைந்தெறியும் நோக்கத்திலும், புதிதாக வெளியில் இருந்து வந்த கோட்பாடுகளிலுள்ள தாழ்வுகளைக் கண்டித்தும், உலகத்து மக்கள் அனைவருக்கும் ஏற்ற வாழ்வியல் முறைகளை குறள் மூலம் நல்கியவர்.
வள்ளுவர் அறக்கொள்கைகளில் அசையாத நம்பிக்கை உடையவராதலால், உயிர் வாழ்வைப் பொருட்படுத்தாமல் மிக உயர்வான குறிக்கோளோடு அறவாழ்வு வாழவேண்டும் என்றார். தீயன செய்வதற்கு ஒரு சிறுதளவும் இடம் கொடார். பொருளீட்டுவதிலும் காமவாழ்விலும் அறம் பேண விழைவார்.
உலகத்தோடு ஒட்டிய வழக்குகளை பின்பற்றச் சொல்லுவார். காலத்தோடும் ஊரோடும் ஒட்டிச்சென்று நல்லனவென்று கருதப்பட்டதைக் கண்டுணர்ந்து அவற்றை அறவுரைகளாகத் தந்த நூல்தான் குறள். ஆயினும் மாற்றுச் சிந்தனையாளர்; எனவே மரபுகளை மீறியும் அறிவுரை பகன்றுள்ளார். கூர்ந்து கவனிக்கிறபோது பாடல்களிடையே நிற்கும் மௌனங்களும், ஆங்காங்கே சீற்றத்துடன் வெடிக்கும் சொற்களும் வள்ளுவரின் கலக மனநிலையையும் வெளிக்காட்டும்.

பன்முகம் கொண்டவர். பரந்துபட்ட பல்வேறு துறைகளுக்குரிய விழுமிய கருத்துக்களை எடுத்துரைத்த புலவர் கோமகன் அவர்; அறத்துப்பாலில் ஒரு சான்றோராய் தோற்றமளித்து அருள்மொழி பகர்கிறார்; பொருட்பாலில் அரசியல் அறிஞராகிறார்; காமத்துப்பாலில் கற்பனை நயங்களுடன் கூடிய ஒரு நாடகக் கவிஞனாக மாறி நம்மை இன்பத்தில் திளைக்க வைக்கிறார்.

இவர் தானே முழுவதுமாக உணர்ந்து வெண்பாக் குறளால் எழுதி உருவான நூல் அறநெறி கூறுவதோடு இலக்கியச் சுவையில் நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய் உள்ளது; இவர் பாட்டின் வளம் உரைக்கின் வாய்மடுக்கும்; எல்லாப் பொருளும் குறட்பாவில் உள; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை; அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்தது குறள்; இந்நூல் சிந்தைக்கு இனியது செவிக்கு இனியது வாய்க்கு இனியது. இவ்வாறாக பழம் புலவர்கள் இவரது படைப்பைப் போற்றிக் கொண்டாடினார்கள்.

பிற மொழித் தாக்குதலால் தமிழ் அழிந்து போவதைத் தொல்காப்பியர் தடுத்தார் என்றால், திருவள்ளுவர், வெளியில் இருந்து வந்தவர்களது செல்வாக்கால் தமிழ்ப்பண்பாடு அழிந்து போவதை நிறுத்தி அரண் அமைத்துக் காத்தார்.

வள்ளுவர் காலம்

சங்க இலக்கியங்களிலே குறளைப் பற்றிய செய்தி இல்லை; ஆனால் சங்க இலக்கியக் கருத்துக்கள் பல குறளில் காணப்படுகின்றன. சங்க நூல்களுக்குப் பிற்பட்டதே குறள் என்று குறிப்பதாக இது அமைகிறது என்று ஆய்வாளர்கள் கூறுவர். சங்க நூல்கள் எல்லாம் ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல்களிலே ஆக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் குறள் வெண்பாவினால் ஆகியது. இந்த யாப்பு முறையும் குறள் சங்க காலத்தைச் (கி மு 500-கி பி 200) சேர்ந்தது அல்ல என்பதற்கு ஒரு சான்றாக கருதப்படுகிறது.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்களிலே கள், புலால் உணவு, விலைமாதர் உறவு ஆகியன விலக்க வேண்டியவை என்று கூறப்படவில்லை. குறளிலே இவை கண்டிக்கப்படுகின்றன; விலக்கப்பட வேண்டியவை என்று வலியுறுத்தப்ப்டுகின்றன. இவற்றையெல்லாம் நோக்கி குறள் சங்க காலத்திற்குப் பிந்தியது என்று ஊகித்துச் சொல்லப்படுகிறது.
அடுத்து, சங்க காலம் முடிவுக்கு வந்ததை சங்கம் மருவிய காலம் (கி பி 100-கி பி 500) என்று சொல்லுகிறோம். வள்ளுவர் காலத்தை வையபுரிப் பிள்ளை கி பி 5ஆம் நூற்றாண்டுக்குக் கொண்டு செல்கின்றார். ஆனால் தெ.பொ.மீ போன்றோர்க்கு அதில் உடன்பாடு இல்லை; அக்கருத்தை மறுத்து சங்க காலம் முடிகின்ற கி பி 3-ஆம் நூற்றாண்டுக்குள் வள்ளுவர் தோன்றியிருப்பார் என்று நிறுவியிருக்கின்றனர். ஆகவே வள்ளுவர் காலம் கி பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி பி ஐந்தாம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலம் என்று கொள்ளலாம். வள்ளுவர் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தவர் என்பது பெரும்பான்மையான அறிஞர்களின் முடிவு.

வள்ளுவர் குலம்,தொழில்,தோன்றிய/வளர்ந்த இடம்

வள்ளுவர் தோன்றிய குலம் பற்றியும் செய்த தொழில் பற்றியும் பலவேறு வகையான மாறுபட்ட செய்திகளுடன் பழம்பாடல்களும் புனை கதைகளும் உள்ளன.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன மாபெரும் சிந்தனையாளரின் குலம் பற்றி ஆராய்வது பொருளற்றதாகும்; அவர் செய்த தொழிலும் அவர்க்குச் சிறப்போ இழிவோ தரப்போவதில்லை.
வள்ளுவர் தோன்றிய, வாழ்ந்த இடங்களைப் பற்றியும் நிறைய ஆராய்ச்சிகளும் ஊகங்களும் காணக்கிடக்கின்றன. தோன்றிய ஊரினாலும் அவர் புகழ் கூடவோ குறையவோ போவதில்லை.
அவர் தமிழர்; அவர் தோன்றிய இடம் தமிழ்நாடு; அவர் சிந்தித்தது தமிழில்; நூல் யாத்தது தமிழில். இவை நமக்குப் பெருமை தருவன.

சங்க நூல்களின் தாக்கம்

சில அடிப்படையான மேம்பாடுடைய வாழ்வியல் கருத்துக்கள் தமிழர்களிடையே வேரூன்றி வலுப்பெற்றிருந்தன என்பது சங்க நூல்களிலிருந்து பெறப்படும். இக்கருத்துக்களின் சாரத்தையெல்லாம் உட்கொண்டு குறள் புதிய இன்னும் சீரிய செம்மையான வழியில் படைக்கப்பட்டது. சங்க நூல்களின் செல்வாக்கு எவ்வளவு ஆழமாகக் குறளில் பதிந்துள்ளது என்பதற்குப் பல சான்றுகள் உள. வள்ளுவர் பின்பற்றிய ஆசிரியர் தொல்காப்பியர் ஆவார். தொல்காப்பிய இலக்கண அமைதியைக் கொண்டே குறள் ஆக்கப்பட்டது. கணியன் பூங்குன்றனின் புகழ்பெற்ற சங்கப் பாடல் வள்ளுவரைப் பாதித்த மெய்யியல் கோட்பாடு:
யாதும் ஊரே யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவ(து)அன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா(து) என்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொரு(து) இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம்; ஆகலின், மாட்சியிற்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
(புறநானூறு:192)
(பொருள்: சொந்த ஊர் என்று ஒன்று இல்லை. எல்லாம் நம் ஊரே. உறவினர் என்று சிலர் மட்டும் இல்லை. மக்கள் எல்லாரும் உறவினர்களே. தீமையும் நன்மையும் யாரோ ந்மக்குச் செய்வனவற்றால் வருவன அல்ல. துன்புறுதலும் ஆறுதல் பெறுதலும் அவ்வாறே பிறரால் வருவன அல்ல. சாதல் என்பதும் புதுமையானது அல்ல. வாழ்தல் இன்பமானது என்று யாம் மகிழ்ந்தது இல்லை. வெறுப்பால் வாழ்க்கை துன்பமானது என்று ஒதுங்கியதும் இல்லை. பெரிய ஆற்றில் நீர் ஓடும் வழியில் ஓடும் தெப்பம் போல், உயிர்வாழ்க்கை இயற்கை முறை வழியே நடக்கும் என்பதை தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம். ஆகையால் உலகில் பிறந்து வாழ்வோரில் சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை. பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.) இந்தச் சிந்தனை குறளில் பல இடங்களில் எதிரொலிப்பதைக் காணலாம்.
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
(கல்வி 397)
என்ற குறட்பாவில் முதலடியில் மேலே சொல்லப்பட்ட புறநானூற்றுச் செய்யுள் வரியை நேரடியாகப் பயன் படுத்தியுள்ளார்.
மற்ற பிற சங்கப்பாக்களின் கருத்திற்கு ஒப்பான குறள்களில் சில:
பகுத்தூண் தொகுத்த ஆண்மைப்
பிறர்க்கென வாழ்திநீ ஆகன்மாறே
[பதிற்றுப்பத்து]
என்பது
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நுலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
(கொல்லாமை 322)
என்னும் குறளை ஒக்கும்.
பேதமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்
[பழைமை 805]
என்பது
பேதமையாற் பெருந்தகை கெழுமி
நோதக செய்ததென்றுடையேன் கொல்லோ
[குறுந்தொகை 230]
என்னும் சங்கச் செய்யுளை நினைவுபடுத்தும்.
ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின்
சாதலும் கூடுமாம் மற்று
[கலித்தொகை 61]
என்பது
சாதலின் இன்னாதது இல்லை இனிது அதுவும்
ஈதல் இயையா கடை
(ஈகை 230.)
என்ற குறளின் பொருள்படுகிறது.

காமத்துப்பாலில் சங்கப் பாக்களின் தாக்குறவு இன்னும் மிகையாக உள்ளது.

சமயம் நீங்கிய வள்ளுவர்

நமது சிந்தனை, செயல்பாடு, நடைமுறை நிலைகளில் சமயமும், சமயச் செயல்பாடுகளும் மரபுகளும் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டபடியால், இவற்றினின்று உண்மையான மெய்யியலை அறிய நாம் தவறிவிடுகிறோம். குறளையும் அந்தக் கண்ணோட்டத்திலேயே, சமயமின்றி அது நிலைக்காது என்ற நிலையிலேயே சிலர் பார்க்கின்றனர்.
குறள் எந்தச் சமயத்தையும் வழிமொழிகிறதா? பழம் புலவர் கல்லாடர் தெளிவுபடுத்துகிறார்:
ஒன்றே பொருள்எனின் வேறுஎன்ப; வேறுஎனின்
அன்றுஎன்ப; ஆறு சமயத்தார் நன்றுஎன
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி.
- கல்லாடர் (திருவள்ளுவமாலை)
(பொருள்: ஆறுவகை மதத்தாரில் ஒரு மதத்தார், தாம் எழுதிய நூலிலே ஒரு பொருளின் இயல்பை இன்னது என்று ஒரு மதத்தைச் சார்ந்தவர் கூறினால், மற்றொரு மதத்தார் அதனை மறுத்து வேறு ஒரு பொருளைக் காட்டுவர். ஆனால், திருவள்ளுவர் முப்பாலில் சொன்னவற்றை அனைத்து மதத்தினரும் நன்றென்று ஏற்றுக்கொள்ள உடன்படுவர்.)
சமயக் கணக்கர் மதிவழி கூறாது
உலகியல் கூறிப் பொருளிது வென்ற
வள்ளுவன் ....
- கல்லாடர் (கல்லாடம்)
(பொருள்: சமயங்களை வளர்ப்போர் தத்தம் சமயத்திற்குப் பொருந்துவன கூறுவர். அவ்வாறு கூறாமல் எல்லாச் சமயத்தார்க்கும் பொருந்தும் வழி உலகியல் கூறிய வள்ளுவர் ...)
கல்லாடர் கூற்றுப்படி எக்காலத்தினருக்கும் எக்கொள்கையினருக்கும் ஏற்றதொரு பொது நூல் குறள்.

குறள் ஒரு சமய நூல் அன்று; வள்ளுவர் சமய வழி நின்று குறளைப் படைக்கவில்லை; இது சமயச்சார்புடைய சமயப் பொதுமையை நாட்டும் நூலும் அன்று.
இங்கே சிந்தைக்கு எட்டாத 'வீடு' இல்லை; கன்மம் இல்லை; கழுவாய் இல்லை. வழிபாட்டு முறைகள், சடங்குகள், விழாக்கள்,சமயம் சார்ந்த நம்பிக்கைகள், கோவில்கள் இல்லை. "செய்யவள், செய்யாள், தாமரையினாள், தாமரைக்கண்ணன் போன்ற பெயர்கள் குறளில் கூறப்பட்டாலும் அவை வழிபடத்தக்கவகையில் வைக்கப்படவில்லை. சொல்லப்போனால், 1103 ஆம் குறளில் 'தன் தலைவியிடம் பெற்ற இன்பத்தைவிட, தாமரைக்கண்ணனின் உலகு இனியதா?' என்று தலைவன் கேட்பதிலிருந்து தாமரைக் கண்ணன் உலகை எந்தத் தளத்தில் வள்ளுவர் வைத்திருக்கிறார் என்பது நன்கு விளங்கும். வானோர், வானுலகம், மறுபிறப்பு பற்றிப் பேசினாலும், 'தேவர் அனையர் கயவர்' என்ற கூற்றை காணும்போது, வள்ளுவரின் நோக்கம், சொல்லும் செய்தி மக்களுக்கு எளிதில் சென்று அடைய வேண்டும் என்பதுதான் என்பது விளங்கும். ஆனால் அவர் தம் சமயத்தவர் என்று சமண, பெளத்த, சைவ, வைணவ போன்ற பல பிரிவினர் உரிமை கொண்டாடி சான்றுகள் பல கூறி வருகிறார்கள். சங்கக் கருத்துக்களை மிகையாகப் பயன்படுத்திக் கொண்டு அன்றிருந்த எந்தச் சமய கோட்பாடுகளுக்கும் சிறுதும் இடம் கொடுக்காமல் குறளை வழங்கினார். வள்ளுவரது சமயக் கோட்பாடு என ஒன்று தனித்து இல்லை. எந்தச் சமயத்தின் கருத்துக்களோடும் வள்ளுவர் கருத்துக்கள் முழுமையாக ஒத்து வரவில்லை. சமயக் கருத்துக்களுக்கு மாறான கருத்துக்கள் குறளில் உண்டு. மேலும் போலித் துறவிகளின் வேடங்கள் முதலியவற்றையும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
குறளில் எந்த ஒரு குறிப்பிட்ட தெய்வத்தைப்பற்றிய குறிப்பும் இல்லை என்பது மிகத் தெளிவு. கடவுள் என்ற சொல் குறளில் எங்கும் இல்லை. ஆனால் குறளில் சங்ககாலச் சொல்லான 'அனைத்தையும் கடந்து நிற்கும் ஒன்று' என்று பொருள்படும் 'கடவுள்' உண்டு; "வாழ்க" என வாழ்த்தாது கடவுள் ஒருவர் உளர், அவரை நினைந்து வணங்க வேண்டும் என்ற கருத்துப்படக் கடவுளின் உண்மை கூறியுள்ளார்.
இவை சமயங்கள் உதவியின்றி கடவுளை அடைய முடியும் என்று வள்ளுவர் கருதினார் என்பதையே நமக்குக் காட்டுவன.

சான்றோர் வள்ளுவர்

சமணர்கள் தங்கள் நூல்களில் வைதிக சமய சடங்குகளை இழித்துப் பழித்து எழுதினர். அதுபோல் வைதிக நூல்களும் சமணர்களத் தாக்கி எழுதின. ஆனால் சான்றோராகிய வள்ளுவர், தமிழர் விரும்பாத ஆரிய வழக்குகளைப் பழிக்கமாட்டார்; புகழவுமில்லை; மக்கள் மனதில் பதிந்த ஆரிய கதை மாந்தரை குறளில் ஆங்காங்கே குறிப்பிட்டவர் ‘ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை நன்று’ என்று வேள்வியை விலக்குக என்ற பொருளில் இடித்துரைக்கவும் தயங்கவில்லை.
வள்ளுவர் அறநெறியை விதிகளாக வகுத்துக் கூறவில்லை. கடவுளின் ஆணையாகக் குறளைச் சொல்லவில்லை. குறளின் அறச் செய்திகள் மிக மென்மையான ஒலியிலே வலியுறுத்தப்படுகின்றன.
குறிப்பிட்ட சமயம், சடங்கு முதலியவற்றை வற்புறுத்தாதது போலவே தாம் போற்றிய கொள்கைகளையும் பிடிவாதமாக வற்புறுத்தித் திணிக்கவில்லை. அடிப்படை உண்மைகளை மட்டும் எடுத்துரைத்து மற்றவற்றை சிந்தனை செய்து உணரும் வகையில் தூண்டுகிறார். எந்தக் கருத்தையும் எத்தன்மைதாயினும் யார் சொன்னாலும் கண்மூடி ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது அவர் தரும் அறிவுரை.

மாற்றுச் சிந்தனையாளர் வள்ளுவர்

மக்கள் வாழ்வில் காணப்படும் பொருந்தாத மூட நம்பிக்கைக் கொள்கைகளை எதிர்த்து போர் முழக்கம் செய்தவர் வள்ளுவர்.
சமுதாய நிலைப்பேற்றிற்கு என்ற பெயரில், வர்ணாசிரமம் என்ற மனித குலத்துக்கு எதிரான, மனித வரலாற்றின் மிகப் பெரிய மோசடி, ஆரிய செல்வாக்கால் இங்கு திணிக்கப்பட்டது. இதன்படி பிறப்பால் உயர்வும் இழிவான தாழ்வும் மக்களுக்கு என்றும் மாறாது என்று சொல்லி நால்வேறு வகையில் வாழ்க்கையுரிமை வகுத்துக் கொடுத்து சாதிக்கொரு நீதி விதிக்கப்பட்ட்து. கல்வி, புலமைச் சிந்தனை, விடுதலை வாழ்வு என்பன சாதியின் பெயரால் பெரும்பாலோர்க்கு விரும்பினும் குற்றமாகும் என்று சொல்லப்பட்டது. அதை மறுத்து
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்
(பெருமை 972)
(பொருள்: எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது. எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.)
என்று முழங்கினார் வள்ளுவர். ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்றது வர்ணாசிரம தர்மம் என்று சொல்லப்படுவதற்கு, நேர் எதிர்க் கருத்தாக அமைந்த முதல் தமிழ் இலக்கிய வரியாகும். பிறப்பாலுரிமை பேசியது மட்டுமல்ல ஒருவர்க்கு பெருமையும் சிறுமையும் எவ்விதம் ஏற்படுகிறது என்பதற்கு
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்
(தெரிந்துதெளிதல் 505)
(பொருள்: மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரை கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.)
என்ற வரையறையையும் சொன்னார்.
கல்வி, மனைமாட்சி, தவம், துறவு என்பன எல்லா மாந்தர்க்கும் ஏற்றது என்பது குறளறம்; ஒழுக்கத்தால் உயர்ந்தாரே நல்ல குடியில் பிறந்தோர் ஆவார் என்று கூறினார்; கல்வி அனைவருக்கும் பொது என்றார்; உயிர்ப்பலி கொடுத்து வேள்வி செய்வதைக் கண்டித்தார்; “அந்தணர் யார்” என்று விளக்கம் கொடுத்து போலி அந்தணர்களை அடையாளம் காட்டி அவர்களைப் புறக்கணிக்க வழிகோலினார். இவையெல்லாம் மக்களைப் பிரித்தாளும் வைதிக சமயம் வலுவாய் இருந்த காலத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படச் செய்த வீர முழக்கங்களாகும்.

'சாதலைவிட கொடியது இல்லை, ஆனால் கொடைக்கு முடியாத நிலைவந்தால் அதுவும் இனிதே’ என்ற குறள் உண்மையில் மிகக் கடுமையானது. இரப்பவர்களுக்கும் அறவோருக்கும் கொடுப்பதே இல்லறத்தார் கடமை என்று சொல்லி அப்படிக் கொடுக்க முடியாதபோது சாவதே மேல் என்று அழுத்தமாகக் கூற வரும் குறள் அந்நிலையில் மரணமும் இனியதாகிவிடும் என்றே கூறி அமைகிறது. கொடுத்தலால் வீடு அடைதல் போன்றே பெறுதலாலும் வீடு அடையலாம் என்ற கொள்கை பரப்ப்பட்டு வந்தது; அந்தணர் கடமைகளாக வேட்டல் வேட்பித்தல், கற்றல், கற்பித்தல், இரத்தல், புரத்தல் ஆகியன சொல்லப்பட்டன; ஆனால் வள்ளுவர்
நல்லாறு எனினும் கொளல் தீது; மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று
(ஈகை 222)
என்று சொன்னது எத்தகைய புரட்சிக் கொள்கை!

மகளிரின் உயர்வுக்காகப் போராட்டம் தொடங்கியவரும் வள்ளுவரே. பெண்களின் சமநிலைக்காக அவர் கூறியுள்ள கருத்துக்கள் இன்றும் என்றும் பொன்போலப் போற்றத்தக்கன. மனைவியை வாழ்க்கைத் துணை என முதல் முதலாக அழைத்தவரும் அவரே. கணவனும் மனைவியும் நண்பர் போன்று வாழ்தல் வேண்டும் என்று கட்டுரைத்தவரும் அவரே. ஆண்மகனுடைய ஒழுக்கத்திற்குப் பெண்மகளை எடுத்துக்காட்டாகக் கூறியவரும் இப்பெரியாரே -
ஒருமை மகளிரே போல் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு
(பெருமை 974)
என்ற குறள் ஆண்கற்பை வலியுறுத்தும்.
(பொருள்: ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப் போல், பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.)
பரத்தையர் பிரிவைக் கண்டித்த முதல் புரட்சியாளரான வள்ளுவர் ஊன் உண்ணுதலை எதிர்த்தார்; கள் உண்ணுதலைக் கடிந்தார்; சூதாடுதலை இகழ்ந்தார்.

வறியவரின் சார்பாக வள்ளுவரின் அறச்சீற்றமாக வரும் அனல் கக்கும் வரிகளை நோக்குங்கள்:
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றியான்
(இரவச்சம் 1062)
(பொருள்: பிச்சை எடுத்துதான் உயிர் வாழ வேண்டும் என்று படைத்திருந்தால், இந்த உலகத்தைப் படைத்தவனும் இரப்பவர்போல் அலைந்து கெடுவானாக!)
வள்ளுவர் போன்ற தூய நேரிய அருளாளர்களால் மட்டுமே துயர் நீங்க வழியின்றி வாடும் உயிர்களுக்காக, மனதைக் கலங்கடிக்கும் இத்தகைய சொற்களால் கூறமுடியும்.

கவிஞர் வள்ளுவர்

வள்ளுவர் தேற்றம் மிகு கவிதை நலமும் மொழி மேலாண்மையும் கொண்டவர். கட்டுக்கோப்பான குறள் வடிவம், சொற் சிக்கனம், உவமை ஆளுமை, சின்னஞ்சிறு பாக்களில் செம்மையாக வடித்தெடுக்கும் யாப்பு வல்லமை, காலத்தை வென்று நிற்கும் உண்மைகளை இலக்கியமாக வடித்தது இன்னபிற அவரை சிறந்த கவிஞராக அடையாளம் காட்டுவன. சிறந்த சொற்தேர்வு, செம்மையான தொடர்கள், அழகு மிகுந்த அருமையான வாக்கியச் சேர்க்கைகள் இவற்றால் கவிதைகளை ஆக்கி வெற்றி கண்டவர் வள்ளுவர். கற்பனை கலவாமல் தாம் உணர்ந்தவற்றை உணர்ந்தவாறே எடுத்துரைத்துள்ள கருத்துகள் கொண்ட சில குறட்பாக்களில் வள்ளுவரின் உணர்ச்சிகளை நாம் நேரடியாக உணரமுடியும். வள்ளுவரின் உள்ளம் இவற்றில் மிகவும் ஈடுபட்டிருந்தமையால், அவற்றை உணர்ச்சியாக எடுத்துரைக்க அவரால் முடிந்தது.

செய்யுள் யாத்த முறையில் சங்க நூல்களிலிருந்து வேறுபடுகின்றார். மொழி இயல்புகளில் புதுமைப் போக்கையும் மொழியமைப்பில் புதுமைப் பண்புகளையும் காணமுடிகிறது. வழக்கிறந்த சொற்களோ இலக்கண முடிவுகளோ மரபுகளோ திருக்குறளில் இடம்பெறவில்ல; மாறாக மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திய பேச்சுமொழியின் இயல்புகள் பல திருக்குறளில் இடம்பெற்றிருக்கின்றன என்பார் க த திருநாவுக்கரசு. மேலும் இத்தமிழறிஞர் குறளில் தோன்றும் புதிய பண்புகள் பற்றி ஆய்ந்து இவ்வாறு கூறுகிறார்: 'இப்பண்புகள் சங்க நூல்களான அகத்திலும் புறத்திலும் காணப்படவில்லை. குறுந்தொகையிலும் நற்றிணையிலும் இடம் பெறவில்லை. கலித்தொகையிலும் பரிபாடலிலும் அவை அங்கொன்றும் இங்கொன்றுமாக நுழைந்துள்ளன. இவை இரண்டும் இசைப்பாடல்களால் இயற்றப்பட்டவை. இவ்விசைப்பாடல்களைச் செந்துறை மார்க்கப் பாடல்கள் என்பர். இவை செய்யுள் வழக்கினை மட்டும் பின்பற்றாமல் இசை வழக்கினையும் பின்பற்றுவதால் இப்பாடல்களை இயற்றிய புலவர்கள் எல்லாரும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் பேச்சு வழக்கினயும் பின்பற்றி இருக்கலாம். இதைப்போன்றே உலகிற்கு அறத்தினை எடுத்துரைக்க முன்வந்த திருவள்ளுவர், தம்நூலை, எல்லோரும் ஓதியுணர்ந்து பயன்பெறவேண்டும் என்ற கருத்துடன் செய்யுள் வழக்கினை மட்டும் பின்பற்றாமல் அன்றைய மக்களின் பேச்சு வழக்கினையும் தழுவியே தம்முடைய 'முப்பாலை' இயற்றினார் எனக் கொள்ளுவது சாலவும் பொருந்தும்.'

ஒரு பொருளின் இலக்கணத்தைக் கூறுதலும், அதன் இன்றியமையாமையை விளக்குதலும் அதனால் பெறப்படும் பயனை அறிவுறுத்தலும், அதனை நாம் மேற்கொள்ளுதற்குரிய வழிமுறைகளை உரைத்தலும், நம் கண் முன்னே காணப்படும் பொருள்களின் வாயிலாக ஒப்பு நோக்கி மொழிதலும் வள்ளுவர் உத்திகள். மக்கள் விலக்க வேண்டியவற்றை வெஃகாமை. கள்ளாமை என்று எதிர்மறை முகத்தால் கூறுவார். ஒரு கருத்தை உடன்பாட்டு முகத்தாலும் மறைமுகத்தாலும் தெளிவுபடுத்துவார். ஒரு நீதிக்கு மற்றொரு நீதியை உவமையாக வைத்து இரண்டையும் வற்புறுத்துவார்.
நயம் தோன்றவும் நகைச்சுவையாகவும் அறவழியைக் கூறும் இடங்கள் பல.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு
(விருந்தோம்பல் 86)
என்று ஒருவன் விருந்தோம்பி வாழ்வானாயின் வானுலகில் அவனுக்கு விருந்து காத்திருக்கிறது என்று சொல்லுவார்.

நன்றறி வாரின் கயவர் திருவுடையார்
நெஞ்சத்து அவலம் இலர்
(கயமை 1072)
கயவர் நல்லவரை விடவும் பேறு பெற்றவர் என்று கூறும்போது இது ஏன் என்று குழம்புகிறோம். அடுத்து அவர் நெஞ்சில் எதைப்பற்றியும் கவலை கொள்ளாதவர் அதனால் என்று முடிக்கும்போதுதான் வள்ளுவருடைய கருத்து புலப்படும்.
தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்துஒழுக லான்
(கயமை 1073)
கயவர் தேவரைப் போன்றவர் என்று சொல்லும்போது தேவரை நிந்திக்கிறாரா அல்லது கயவரை பாராட்டுகிறாரா என்று புரிவதில்லை. ‘அவரும் தாம் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால்’ என்று விளக்கியபின்தான் அவரது கவித்திறன் தெரிகிறது. இது போன்ற எண்ணற்ற நயங்கள் நூல் முழுவதும் பரவிக் கிடக்கின்றன.

காமத்துப் பால் கற்பனைவளமும் இலக்கியச்சுவையும் சேர்ந்து அமைக்கப்பட்ட காதல் நாடகம். ஆண் பெண் உறவில் அக வாழ்வின் பதிவாக விளங்கும் சுவையான சொல்லோவியங்களாகவே புலவி, புலவி நுணுக்கம், ஊடலுவகை என்னும் காமத்துப் பாலின் இறுதி மூன்று அதிகாரங்களும் அமைந்துள்ளன. இலக்கியச்சுவை மிகுந்த இந்த இன்பப் பகுதியை படித்து முடிக்கும்போது 'வள்ளுவர் முற்றிலுமான நாடக இலக்கியங்களை ஏன் படைக்கவில்லை? அவற்றைப் படிக்கும் பேறு பெற்றோம் இல்லையே' என்ற எண்ணங்கள் இயற்கையாகவே எழுகின்றன.

நுண்ணோக்கம்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற
(அறன்வலியுறுத்தல் 34)
(பொருள்: ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே; மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.) இவ்வாறு அறத்துக்கு எளிய ஆழமான இலக்கணம் வகுத்த பெருமை வள்ளுவர் ஒருவருக்கே உண்டு. இது உலகம் அனைத்தும் விரும்பி ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்தாகும்.

குறளின் கருப்பொருளாக விளங்கும் பாடல்களில் மிகச்சிறப்பானது:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
(இல்வாழ்க்கை 50)
(பொருள்: உலகத்தில் வாழவேண்டிய முறையில் இல்வாழ்க்கை நடத்தி வாழ்பவன், வானில் உள்ள தேவர்களோடு வைத்துப் போற்றத்தக்க பெருமையுடையவன்.)
என்னும் குறளே.
"பிற சமயவாதிகள் துறவறம் தவங்கட்குத் தரும் சிறப்பையெல்லாம் வள்ளுவர் இல்லறத்திற்குத் தரும் நுட்பம் காண்க. வாழ்வாங்கு வாழ்பவனைத் "தெய்வம்" என்றே கூறுவது, அவர் கருத்தின் மணிமுடியாகத் திகழ்கிறது. பிறரெல்லாம் துறவியர் முன் மக்களை மண்டியிட வைத்துள்ளனர். அதற்கு நேர் எதிரான கருத்து இது." என்று இக்குறளுக்குத் தமிழண்ணல் நுண்ணுரை வழங்கியுள்ளார்.
'வாழ்வாங்கு வாழும் முறை' என்பது என்ன? திரு வி க விரிவுரை அதை விளக்குகிறது: "ஒருத்தனும் ஒருத்தியும் கற்பன கற்று, கேட்பன கேட்டு,மணம் புரிந்து, இல்வாழ்க்கையில் தலைப்பட்டு, மனமாசற்று, விடுதலை பெறுதற்குப், பிள்ளைப் பேறுண்டாகவும், அன்பு பெருகவும், விருந்து நிகழவும், அடக்கம் அமையவும், ஒழுக்கம் ஊடுருவவும், பொறை பொருந்தவும், ஒப்புரவு உயரவும், ஈகை எழவும், அருள் வளரவும், தவம் ஓங்கவும், வாய்மை சிறக்கவும், அவா அறவும், துறவு நிலைக்கவும், மெய்யுணர்வு மேம்படவும், வாழ்வு நடாத்தல் வேண்டும். இவ்வாறு வாழ்தல் முறைப்படி இல்வாழ்க்கையில் ஒழுகுவதாகும். இதை "வாழ்வாங்கு வாழ்பவன்" என்று சுருங்கச் சொற்றனர் ஆசிரியர்."

இதுதான் மனிதன் மன்பதைக்குச் சொன்ன அறம். அந்த மனிதன் திருக்குறள் தந்த தெய்வத்திருவள்ளுவர்.