இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

இரு எல்லைகளுக்கும் செல்லாது, அளவான, நடுநிலைப்பட்ட, கட்டுப்பாடான வாழ்க்கையே இன்பம் பயப்பதாகும் என்பது திருக்குறள் உணர்த்தும் அறவியல் கோட்பாட்டின் சாரமாகும். அறம் என்பது ஒருவகை வாழ்க்கை நெறி; மனித வாழ்க்கை மாட்சியுற மனிதன் மனிதனாக வாழ, தெய்வநிலை எய்த, அவன் எண்ணங்களையும், உள்ள உணர்ச்சிகளையும் முறைப்படுத்தி நெறிப்படுத்தும்-இயக்கும்-இயற்கைப் பேராற்றலே அறமாகும்.
-க த திருநாவுக்கரசு

அறத்துப்பாலில் கடவுள் உண்மை கூறப்பட்டுச் சமயச் சார்பற்ற அறம் போதிக்கப்படுகிறது; அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்று சாற்றப்படுகிறது; அன்புநெறி எல்லா இடங்களிலும் வலியுறுத்தப்படுகிறது; செயல்நிலை அறமே பெரிதும் வற்புறுத்தப்படுகிறது; பரந்துபட்ட பொறுமையுணர்வு அறிவுறுத்தப்படுகிறது.

குறள் பகுப்பில் அறம்

குறளின் பெரும்பிரிவுகளான பால் பகுப்பில் அமைந்த அறம், பொருள், காமம் என்பனவற்றுள் அறம் வழக்கமாக முதலில் வைத்துப் பேசப்படுகிறது.

இயல்கள் என்று அழைக்கப்படும் நான்கு சிறு பகுதிகளாக-முதலில் பாயிரம்,-அடுத்து இல்லறம், துறவறம்- கடைசியில் ஊழ் என அறத்துப்பால் உள்ளதாக திருவள்ளுவமாலை மூலமும் உரைசெய்தவர்கள் மூலமும் அறிகிறோம்.
பாயிரமான முதல் பகுதி கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் எனும் நான்கு அதிகாரங்களாக அமைந்து குறளுக்கு ஒரு முன்னுரையாக வருகிறது. இந்த நான்கையும்
கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே

(தொல்.புற-33) எனத் தொல்காப்பியம் குறிப்பிடும் கடவுள் வாழ்த்து, கொடிநிலை, கந்தழி, வள்ளி ஆகிய வாழ்த்து நிலைகளோடு தொடர்புப்படுத்தி இவற்றை மனதில் வைத்தே வள்ளுவர் பாயிரம் படைத்தார் எனச் சொல்வர்.
பாயிரத்தை அடுத்து இல்லறம் சொல்லப்பட்டுள்ளது. இல்லறத்தில் இருப்பவர்கள், வீட்டிலும் வெளியே சமுதாயத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களும், கடமைகளும், செய்ய வேண்டிய செயல்களாகவும், செய்யக்கூடாதவையாகவும் பிரித்துக் காட்டப்பட்டு, 200 குறட்பாக்களாக இல்லறவியலில் இடம்பெற்றுள்ளன.
அடுத்துத் துறவறவியலில் மனித வாழ்வின் முதிர்ந்த நிலை விளக்கப்படுகிறது. முதிர் நிலையாகிய துறவறத்தில் நிலையாமை கூறி, அருளுடைமை, கொல்லாமை, வாய்மை, அவா அறுத்தல் ஆகிய நிலைத்த அறங்களும் கூறப்பட்டுள்ளன. மேலும் துறவறவியலில் சமயங்களின் பொய்ம்மையான கொள்கைகளுக்கும் போலித்துறவிற்கும் எதிரான கருத்துக்களையும் வள்ளுவர் பதிவு செய்துள்ளார். மொத்தம் 130 குறட்பாக்களில் துறவறவியல் அமைந்துள்ளது. துறவறம் இல்லறத்தின் எதிர்ப்பண்பு என்று கருதப்படவில்லை; இல்லறத்தின் தொடர்ச்சியே துறவறம்; இல்லறத்திற்குள்ளேயும் துறவறத்தைப் பயிற்சி செய்யலாம். துறவறமென்பது வாழ்க்கையை வெறுத்து ஓடுவது அன்று; இல்லறத்திலும் மேம்பட்ட விரிந்து பரந்த அன்பு வழியைப் பேணுவதென்பதும் வள்ளுவர் எண்ணமாதலின் அவர் துறவறவியலில் வாழ்வை வெறுத்தலையும் உலகை மறுத்தலையும் பேசவில்லை என்பது குறிக்கத்தக்கது.

துறவறத்தில் கூறிய பல குறள்கள் இல்லறத்தாருக்கும் ஏற்றனவாய் இருக்கின்றன. இல்லறத்தாரும் துறவறவழியில் நின்றவரே என்பதையும் குறள் நிலைநாட்டுகின்றது. இவ்வாறு மாற்றி அமைக்கத்தக்கவாறு இல்லறவியலும் துறவற இயலும் அமைந்துள்ளதாலும் இல்லறவியல் துறவறவியல் பாகுபாடு இல்லாமலே அறத்துப்பாலின் இப்பகுதிகள் புரிந்துகொள்ளப்படுவதாலும் வள்ளுவமாலை பாடியோராலும் அவற்றை ஏற்று உரை பகன்ற உரையாசிரியர்களாலும் செய்யப்பட்ட இந்த இயல் பகுப்புமுறை தேவைதானா என்ற வினா எழுகிறது. மேலும் இன்றைய சூழலில் நாம் துறவறத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே இல்லறம் துறவறம் என்ற பகுப்பில்லாமல் அறத்துப்பாலைப் பயில்வதே பயனளிக்கும்; கள்ளாமை ஏன் துறவறவியலில் சொல்லப்பட்டுள்ளது? என்பது போன்ற தேவையற்ற ஐயங்களும் தவிர்க்கப்படும்.

இறுதிச் சிறுபகுதி ஊழைப் பற்றிச் சொல்லும் ஓரே ஒரு அதிகாரம் கொண்டது. ஊழ் என்ற சொல் முறை அல்லது இயற்கையின் செயல் எனப் பொருள்படும். ஊழிற்பெருவலி யாவுள? என்று கேட்டு ஊழின் வலிமையை நமக்கு உணர்த்துகிறார் வள்ளுவர். அறத்துப்பாலின் இறுதியில் வரும் ஊழ் அதிகாரம் உயிர்களால் ஆவது எதுவுமில்லை; நடப்பது நடந்தே தீரும் என்ற முடிவோடு நிறைவெய்துகிறது என்பதாகத் தோற்றம் அளிக்கிறது.

இவ்வாறாக பாயிரம் 4 அதிகாரங்களையும் இல்லறம் 20 அதிகாரங்களையும் துறவறம் 13 அதிகாரங்களையும் கடைசியாக ஊழ் 1 அதிகாரத்தையும் கொண்டு அறத்துப்பால் மொத்தமாக 38 அதிகாரங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அறம் குறிப்பது

மனிதனையும் சமுதாயத்தையும் செந்நெறிப்படுத்தும் ஒழுக்க நெறி அறம் எனப்படுகிறது. அறம் குறிக்கும் பொருள்கள் பலவெனினும் நற்பண்பு அல்லது ஒழுக்கம் என்னும் பொருளிலேயே பெரும்பாலும் அது வழங்கி வந்துள்ளது. குறளிலும் அப்பொருளே மேற்கொள்ளப்பட்டது.
வரைவிலக்கணம் கூற முடியாத அறத்திற்கு வள்ளுவர் சில சொற்களால் மிகச் சீரிய முறையில் இலக்கணம் கூறியுள்ளார்; மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறன் அதாவது உள்ளத்தில் குற்றம் இல்லாமலிருத்தலே அறமாகும் என்ற மாட்சிமையான குறள் தந்தார். அறம் என்ற சொல்லுக்கு ஒத்த சொல் வடமொழியில் தருமம் என்பது. ஆங்கிலத்தில் இதற்கு இணையான, இதன் பொருள் முழுமையும் அடக்கிக் காட்டக்கூடிய சொல் ஒன்றும் இல்லை என்பர் அறிஞர்.

தனி மனிதன், குடும்பம் முதலியவற்றை மையமாகக் கொண்ட அறத்துப்பால் மனிதனின் தனி வாழ்க்கையை விளக்கி அன்பை வளர்த்து அறத்தைப் போற்றி மனத்தூய்மை பெற்று வாழும் வகையைக் கூறுகிறது. அறநெறியில் அழுத்தமான நம்பிக்கை உடைய வள்ளுவர் நூலின் அறம், பொருள், இன்பம் என்கிற முப்பாலிலுமே அறம் விரவி நிற்கிறது. இன்பமும் அறம் சார்ந்த இன்பமாகக் கருதுதல் வேண்டும் என்று வள்ளுவர் எண்ணினார். எனவேதான் அவர் காலத்தில் இலக்கிய மரபுக்காகவாவது ஓதியே ஆகவேண்டி இருந்த பரத்தையின் பிரிவையும் ஒழுக்க மீறலாகக் கருதப்படாத பல பெண்டிர் சேர்க்கையையும் முற்றும் அகப்பாடல்களையே கொண்ட காமத்துப்பாலில் இருந்து முழுவதுமாக நீக்கினார். (இவற்றை அறம் சாரா இன்பம் என்று பொருட்பாலிலும் அவர் கடிந்துரைத்து உள்ளார்.)

அறத்தால் வருவதே இன்பம்; அறம் என்பது ‘ஒழுகுநெறி’ அல்ல; அது ‘ஒழுகியாகவேண்டிய நெறி’ ஆகும்; அறத்தை மறத்தல் ஒன்றே ஒருவனுக்கு கேடு விளையப் போதுமானது; அறநோக்கை இடைவிடாது செல்லும் வாய் எல்லாம் செயல்படுத்தவேண்டும்; மற்றும் நன்மை மட்டுமே அன்றி தீமை இன்மையும் அறம் ஆகும். முடிவு நல்லதாக ஏற்படுமானால் அதை அடைவதற்குள்ள வழி தவறாக இருந்தாலும் அத்தவற்றைச் செய்யலாம் என்பதில் வள்ளுவருக்கு உடன்பாடு இல்லை; வழியும் தூய்மையாகவே இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவார். ஈன்றாள் பசி காண்பாள் ஆயினும் சான்றோர் பழிக்கும் வினையைச் செய்யாதே என்பது குறள் தரும் அறவுரை.

அறத்தின் பயன்

இல்வாழ்க்கைதான் அறம்; இல்லறத்திலிருந்து வாழ்வாங்கு வாழ்பவன் தெய்வத்துக்கு ஒப்ப கருதப்படுவான்; இல்வாழ்வில் நின்று ஒழுகுபவர்கள், ஒப்புரவறிந்து, ஈகையால் புகழ் பெற்று, அதனையும் கடந்து அருள் முதலிய விரதங்களை மேற்கொண்டு, தவத்தால் நீங்கப் பெற்று, நிலையாமையை உணர்ந்து, துறவு நிலை மேற்கொண்டு, எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றுணர்ந்து, அம்மெய்யறிவால் துன்பத்துள் துன்பம் விளவிக்கும் அவாவை அழித்து, சிறப்பெனும் செம்பொருள் காண்கிறார்கள். அற ஒழுக்கத்தின் பயன் சிறப்பும் செல்வமும் ஆகும். இதுவே அறத்துப் பால் தரும் திரட்டு.

குறள் அறத்தின் சிறப்பு

பழைய வடவர் பனுவல்களில் "தர்மம்" என்பது மனித இனத்தை அனைத்து நிலைகளிலும் சமன்மைப் பார்வையோடு நோக்காமல், நடுவு நிலையற்ற, ஒரு சார்பு கொண்ட ஒரு சமுதாய முறைமையையே விளக்கியது. ஆனால் குறளறம் சமன்மை கொண்ட ஒரு சமுதாய அமைப்பு முறையை எடுத்துக் காட்டியது.

குறள் காலத்தில் போற்றப்படாத நெறிகள் அறத்துப்பாலில் வலியுறுத்தப்பட்டுள்ளன:
முதன் முதலாக குறளில்தான் ஆணுக்குப் பாலியல் ஒழுக்கத்துக்கான ஓர் அறம் கூறப்பட்டது; வள்ளுவர் அதை 'பிறன் மனை நோக்காத பேராண்மை' என்று சொல்லி அழைத்தார். மனைவியை விடுத்துப் பிற பெண்களிடம் செல்வது, பரத்தையர் என்ற பொதுமகளிரிடம் செல்வது போன்றவை மரபான செயல்களாகக் கருதப்பட்ட வேளையில் அவற்றை மறுத்துச் சாடியுள்ளார்.

உணவுக்காக உயிர்களை வேட்டையாடிக் கொல்லுவது தொல்மரபில் கொலை அன்று. குறள் உயிர்களைக் கொல்லாதிருப்பதோடு புலால் உண்ணாதிருப்பதும் அறம் என்றது. ஆயிரம் வேள்வி செய்வதைவிட ஒன்றன் உயிரைக் கொன்று உண்ணாமை சிறந்தது; கொல்லாதவனை -புலால் உண்ணாதவனை உலகம் கைகூப்பி வழிபடும் என்கிறது குறள்.

ஒழுக்கம் ஒருவர்க்கு உயிரைவிட மேலானது என்று சொல்லும் குறள் அதுவே ஒருவருடைய உயர்குடிப் பிறப்புத் தகுதிக்குக் காரணம் என்கிறது. உயர்குடி/குலத்தில் பிறந்தவன் ஒழுக்கத்திலிருந்து வழுவினால் இழிந்த குடி/குலப் பிறப்பானவாய் வீழ்ச்சி அடைவான் என்று கூறி ஒழுக்கமே உயர்குடி/தாழ்குடிக்கு மதிப்பீட்டு அளவுகோல் என்று குறள் கொண்டது.

நம்நாட்டு அறக்கொள்கைகளில் 'ஊழ்' சிறப்பிடம் பெற்றுள்ளது. மனிதன் அடையும் இன்ப துன்பங்களும் முந்தைய பிறவியில் செய்த நல்வினை, தீ வினைகளால் உண்டாகின்றன எனும் எண்ணப் போக்கு வலிந்து ஊட்டப்பட்டு வந்தது. முதல் பார்வையில் அறத்துப்பாலின் ஊழ் பகுதி உயிர்வாழ்வு பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல இயற்கைவழி இயங்கும் என்பதே வள்ளுவரின் சிந்தனையுமாகும் என்று நம்மை எண்ண வைக்கிறது. ஆனால் குறள் மனிதனுக்கு விருப்பம்போல் செயல்பட உரிமை உண்டு என்று கூறுவது. ஊழே எங்கும் முந்தி நிற்கும் என்று சொல்பவரே முயன்றால் ஊழையும் புறமுதுகு காணுமாறு செய்யலாம் என்றும் இன்னோர் இடத்தில் சொல்வார். ஊழை அழித்தொழிக்க வேண்டுமானால் மனிதனுடைய ஆற்றல் மிகப் பெரியதாக இருக்க வேண்டும் என்ற உணர்வை எழுப்புவதற்காகத்தான் ஊழைப் பெரிதுபடுத்தி வள்ளுவர் பேசுகிறார்; மனிதனுடைய அறிவு-சிந்தனை-முயற்சி ஆகியவற்றின் மூலம் ஊழை வெல்வதற்கு மனிதன் தன் பேராற்றலைப் பெருக்கிக் கொள்ள்வேண்டும் என்பது குறளின் ஊக்கவுரை.