இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

(காமததுப்பால்) தொல்கப்பியர் முதலியோர் தந்த இலக்கணத் தொல்நூல்களும், நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, முதலிய தொகை நூல்களும் கூறும் அகப்பொருள் மரபுகளின் சாராய் அமைந்துள்ளது. களவு, கற்பு எனக் காதலன், காதலியின் இல்வாழ்க்கை உலக வழக்கொடு பொருந்த நாடகப் பாணியில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
-மு சண்முகம் பிள்ளை

குறளின் காமத்துப்பால் சங்க அக இலக்கியங்களின் கருத்துப் பிழிவாய் அமைந்து கற்பனைவளமும் இலக்கியச்சுவையும் சேர்ந்து காதலரின் கூடல், பிரிதல், ஊடல் என்ற பிரிவுகளில் காதல் நாடகமாய் அமைகிறது. காமத்தினை இவ்வளவு தூய்மையாகப் பாடமுடியுமா என்று எல்லாரும் வியக்கும் வண்ணம் உள்ளது இப்பகுதி. காதலரின் பண்பட்ட நெஞ்சத்தை விளக்கும் கற்பனை கலந்த உணார்ச்சிக் குவியலாகத் தீட்டப்பட்டு அன்பும் அறனும் ஒன்றிய இன்பநெறியாய் ஒளிர்கிறது இது. காமத்துப்பாலில் வள்ளுவரின் கலையுள்ளம் வெளிப்பட்டு அவரை ஒரு தலை சிறந்த இலக்கியச் செல்வராக அடையாளம் காட்டுகிறது. காவியங்களில் காணப்படும் மிடுக்கு காமத்துப்பாலில் உலா வருகிறது.
காமத்துப் பால் சொல், பொருள், உவமை நயம் கொண்டு, மகிழ்ச்சி, இரங்கல், சோகம், காமம், உளவியல் இவற்றை அடக்கி இலக்கியச்சுவை ததும்பப் பாடப்பட்டது.

குறள் பகுப்பில் காமம்

பண்டைய தமிழ் மரபுப்படி நூல்களை அகமும் புறமும் என இருவகையாய்ப் பகுப்பர். அம்முறையில் குறளின் காமத்துப் பால் அகவகையாய் அமையும். பின்னாளில் பகுப்பு முறை மாறி அறம், பொருள், இன்பம் என்றாயிற்று. அவ்வகையில் காமத்துப்பால் இன்பப் பிரிவில் அடங்கும்.

மணக்குடவர் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என திணைக்கு ஐந்தாக காமத்துப்பால் அமையும் என்பதாகக் கொண்டார். (இது மணக்குடவர் பகுப்புத்தானா என்பது அறுதியாகத் தெரியவில்லை.) பரிப்பெருமாள் என்ற உரையாசிரியர் முதற் கூடல்(இயற்கைப் புணர்ச்சி), பிரிந்து கூடல், ஊடிக் கூடல், என்று மூன்று கூடுதல் வகையாகக் கூறுவதே காமத்துப்பால் என்பார். வள்ளுவமாலை ஆசிரியர்களில் ஒருவரான மோசிகீரனாரும் உரையாசிரியர் காலிங்கரும் ஆண்பாலியல், பெண்பாலியல், இருபாலியல் என மூன்றாகப் பகுத்துக் கொள்வர். பரிமேலழகரின் கருத்துப்படி காமத்துப்பால் களவு, கற்பு என்று இரு பிரிவுகளை உடையதாக விளங்குகிறது. இவற்றுள் பரிப்பெருமாள் பகுப்பும் பரிமேலழகர் பிரிவு முறையும் பொருத்தமுள்ளன என்று அறிஞர் கொள்வர். பரிப்பெருமாளின் முப்பால் பகுப்பு பொருளுள்ளது என்றாலும் பரிமேலழகரின் களவு, கற்பு என்ற அணுகுமுறையே இன்று பின்பற்றப்படுகிறது. காமத்துப்பாலில் வரும் குறள் ஒவ்வொன்றும் நாடக நூலில் வரும் பேச்சுக்கள் போல யாரேனும் ஒருவர் கூற்றாக அமைந்துள்ளது.

பரிமேலழகர் கண்டபடி காமத்துப்பாலின் முதல் ஏழு அதிகாரங்களும் களவு பற்றியும் மற்ற பதினெட்டு அதிகாரங்களும் கற்பு பற்றியும் பேசுகின்றன. களவு என்பதற்கு காதலியின் மனத்தினைத் காதலனும், காதலனின் மனத்தினைத் காதலியும் கவர்ந்து கொள்ளுதல் என்பது பொருள். களவியலில் உள்ளப் புணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியும் நடைபெறுகிறது. கற்பியலில் பிரிவின் துன்பமும் தலைவியின் உடல் நிலையும் உளநிலையும் கூறப்படுகின்றன.

காமத்துப்பால் தொல்காப்பிய இலக்கணங்களைத் தழுவினாலும், வேண்டும் இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு யாக்கப் பெற்றுள்ளது. அகத்திணை பாடுதற்குக் கலியும் பரிபாட்டுமே ஏற்புடைய செய்யுள் வகை என்று தொல்காப்பியம் கூறத் திருக்குறளின் காமத்துப்பால் குறள் வெண்பாவால் அமைந்து அகச் செய்திகளைச் சுவைபட அள்ளித் தருகிறது. தொல்காப்பியர் கூறும் பரத்தையிற் பிரிவைக் குறள் கூறவே இல்லை. அகத்திணை ஏழனுள் கைக்கிளை (ஒருதலைக் காமம்), பெருந்திணைகளை (மடலேறுதல், முதுமையில் களிபேருவகை, இரந்து நிற்றல், பொருந்தாக் காமம்) நீக்கி மற்ற ஐந்திணைகளைக் கூறுகின்றது. அவையாவன: குறிஞ்சி: காதலர் கூடியிருந்து மகிழ்தல். பாலை: பிரிந்து வருத்துதல். முல்லை: பிரிந்த பிறகு மீண்டும் கூடுவோம் என்று நம்பிக்கையோடு இருத்தல். நெய்தல்: பிரிந்த பிறகு மீண்டும் காணும் நம்பிக்கை இழந்து சோர்ந்து துயருறுதல். மருதம்: பிரிந்தவர் மீண்டும் வந்தபோது உரிமையோடு ஊடுதல்.

காமம் குறிப்பது

காமம் என்பது காதல் உணர்வுகளையும் காம நுகர்ச்சியையும் காட்டும்.

காமத்துப்பால் என்பது வள்ளுவர் இட்ட பெயர் தானா என்று தமிழ் அறிஞர்கள் சிலர் ஐயுற்றனர். குறளில் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் கூட காமத்துப்பால் என்பதைத் தவிர்த்து இன்பத்துப்பால் என்று கூறினர். காமம் என்பது அருவருக்கத்தக்க சொல்லா? இல்லை. காமம் என்பது காதலைக் குறித்த சொல். இது உடல் இன்பத்தை மட்டும் சுட்டுவதில்லை. காமம் என்ற சொல் சங்கப்பாக்களில் மிகப் பயின்று வந்ததாகும்.‘காமம் நன்றாமாறும் உண்டு’ என்று நக்கீரர் இறையனார் அகப்பொருள் உரையில் கூறுவார். தொல்காப்பியர் 'காமக் கூட்டம்' என்று அழகுறத் தொடர் அமைக்கிறார். 'சிறந்தது காமம்' என்று சொல்கிறது பரிபாடல். இன்பம் என்பது பொதுவான பெயர். காமம் காதலின்பத்திற்கே சிறப்பான பெயர். காமம் என்பது இன்ப அன்பு. அதன் பயன் இன்பம் என்று சொல்வார் தெ பொ மீ.
வள்ளுவர் பயன்படுத்திய ‘காமத்திற்கு இன்பம்’ என்ற தொடரே காமமும் இன்பமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாயினும் வேறு வேறு பொருளில் கூறப்பட்டது என்பதைத் தெளிவாக்கும். இன்பம் என்ற சொல் 26 இடங்களிலும் காமம் தனிச்சொல்லாகவும் காமம் என்ற சொல் கூடியதாகவும் 46 இடங்களிலும் குறளில் காணப்படுகின்றன. காமத்துப்பால் என்பது வள்ளுவர் இட்ட பெயர் அன்று என்று சொல்வது வலிவற்ற வாதமாகும்.

பொதுவாக, காமம் என்ற சொல் உடலின்பத்தையோ வெறியையோ உணர்த்தும் வகையில் புரிந்து கொள்ளப்படுகிறது. இதனால்தான் காமத்துப்பால் எனக் கேட்டவுடனே சிலர் மருட்சி அடைகின்றனர். இதனைச் சார்லஸ் இ கோவர், "கிருத்துவ உடையை அணிவதற்கு ஏற்றவகையில் மூன்றாவது (காமத்துப்) பால் அமையவில்லை" என்று அது சமயச் சான்றோர்களுக்குப் பொருந்தாதது என்ற பொருளில் நகைச்சுவையாக மொழிந்தார். ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்த ட்ரூவும் கூட "காமத்துப்பாலை மொழிபெயர்த்தால் மொழிபெயர்ப்பவரைப்பற்றி உலகம் தவறாக நினைக்கும்; பழிக்கும்" என்று அஞ்சினார். டாகடர் கிரவுலும் டாகடர் போப்பும் காமத்துப்பால் என்ற பெயர் நோக்கி முதலில் இதைத் தவறாக எண்ணினர். பின்னர் அதைப் படித்துவிட்டு உண்மை உணர்ந்தனர். நம் நாட்டிலேயே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோரும் கூட முதலில் படிக்கத் தயங்கிப் பின்னர் காமத்தினை இவ்வளவு தூய்மையாகப் பாட முடிகின்றதே என வியப்பர்; முன்னரே படிக்காததற்கு வருந்துவர். காமத்துப் பாலினை ஓதுகின்ற ஒவ்வொருவரும் இவ்வாறே உணர்வர்.

காமம் என்னும் சொல்லைக் கேட்டவுடன் பலருக்கு வாத்சாயனாரின் நூலான 'காமசாத்திரம்' நினைவுக்கு வந்து குழப்பமடைகின்றனர். காமம் என்ற சொல்லை வைத்து காமசாத்திரத்தின் மொழிபெயர்ப்புதான் காமத்துப்பால் என்றும் சிலர் கூறிச்சென்றனர். 'காமசாத்திர'த்துக்கும் காமத்துப்பாலுக்கும் எந்த அளவு தொடர்பு உண்டு? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குறள் உரையாசிரியர் பரிப்பெருமாள் “புணர்ச்சி மகிழ்தல்" ஒன்பதாவது குறட்பாவுக்கு (1109) எழுதியிருக்கும் கருத்துரை இவ்வினாவிற்கு விடை அளித்துத் தெளிவை உண்டாக்கும்:
“இது காமப் பகுதியன்றே, இதனை வடநூலாசிரியர் கூறியவாறு போல விரித்துக் கூறாதது என்னை எனின், அந்நூலகத்து விரித்துக் கூறியதெல்லாம் அளவும், காலமும், வேகமும் ஒவ்வாதாரை ஒப்பிக்கும் நெறியும் கைக்கிளை பெருந்திணப்பாற்பட்ட கன்னியரைக் கூடுந்திறனும், கணிகையர் சீலமும் கூறினார்; ஈண்டு உழுவலன்பினாற் கூடுகின்ற நற்கூட்டம் ஆதலின், இவையெல்லாம் விதியினாலே ஒக்க அமைந்து கிடக்கும் ஆதலின் கூறாரயினர் என்க(உழுவலன்பு - எழுமையுந் தொடர்ந்துவரும் அன்பு).”
வாத்சாயனார் கூறுவது எல்லாம் ஆண், பெண் உடல் சார்ந்த சேர்க்கை முறைகளும் அது சம்பந்தப்பட்ட கருத்துக்களேயாகும். காமசூத்திரம் மனைவி அன்றி ஆடல்,பாடல்களில் தேர்ந்த அழகு மகளிர், விலைமகளிர், பிறர் மனைவிமார் ஆகியோரிடம் துய்க்கும் இன்பம் பற்றியும் விரிவாகக் கூறும். வாத்சாயனரின் நூல் ஆண்கள் தாம் விரும்பும் பெண்களை அடைதற்குரிய வழிகள், பெண்கள் தாம் விரும்பும் ஆண்களை அடைதற்குரிய வழிகள் ஆகியவற்றைத் தம் நூலில் விரித்துக் கூறும். இன்பத்துக்குரிய கலவி வகைகளும், நகக்குறி, பற் குறிகளின் வகைகளும் அந்நூலில் இடம்பெற்றுள்ளன. பொதுமகளிர் இயல்புகள், அவர்கள் பொருளைக் கவர்ந்து கொள்ளும் முறைகள், கலவிப் பொருத்தம் முதலியன பற்றியும் அந்நூல் கூறுகிறது. இன்ப நோக்கமே காமசாத்திரத்தில் காணப்படுகின்றது. அதில் மாசற்ற உள்ளத்தில் ஊறிச் சுரக்கும் அன்புக்கும் முறை திறம்பாத அறநெறிக்கும் இடமில்லை.

குறளின் காமத்துப்பாலில் ஒருதலைக் காமமோ, விலைமகளிர், பிறன்மனைவி போன்றோரிடம் கூடும் பொருந்தாக் காமமோ எங்கும் கூறப்படவில்லை. இது ஆடவர் பெண்டிரின் பற்பல கட்டங்களுக்குமான உளநிலை உணர்வுகளையும் இல்லற இன்பநிலைகளையும் எடுத்துச் சொல்வது. வள்ளுவர் நோக்கில் காமம் என்பது வெறும் உடல் சார்ந்த ஐம்புலன்களோடு மட்டும் தொடர்புடைய ஓர் உணர்வு மட்டும் அன்று; அதற்கு மேலாக உயரிய நிலையில் அகம் சார்ந்தது; உயிர் சார்ந்தது. காமத்துப்பால் அடையவேண்டும் உயர்நிலையைச் சுட்டுவது; காமசாத்திரம் உலகில் உள்ளவற்றை இழிவு உயர்வு என்ற பாகுபாடின்றி எடுத்துக் கூறுவது. வள்ளுவர் வெறும் உண்மைகளைப் பற்றி அக்கறை கொள்ளாமல் மதிப்புகளைப் பற்றி அக்கறை கொள்கிறார். குறள் கவிதை; வாத்சாயனம் காம ஆராய்ச்சி (தெ பொ மீ). எனவே, திருவள்ளுவரின் காமத்துப் பாலை காமசாத்திரத்தோடு ஒப்பு நோக்குவது முற்றிலும் பொருந்தாது.

காமம் மொழிவது

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப் படுவார்
(குறள் எண்:1289)
(பொருள்: காமம் மலரைவிட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.)
இதுதான் காமத்துப்பாலின் உயிர்நாடியான குறட்பா. இதுவே அதன் பருப்பொருளும் ஆகும். காதல் வேட்கை உடற்பசி போல இயற்கையாக எழும் உயிர்ப்பசியாகும். அது உயிர் தளிர்க்கச் செய்யும் இயல்பினது. எனவே மலரினும் மெல்லிதாய காமத்தை அதன் செவ்வியறிந்து துய்க்க வேண்டும் என்று நல்லுரை பகர்கிறார் வள்ளுவர். அதைக் கசங்கிப் போகும்படி முரட்டுத்தனமான முறைகளில் கையாண்டு இன்பத்தைத் துன்பமாகச் செய்து கொள்ளுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டித் தவறான காம நுகர்ச்சிகளைத் தவிர்க்கச் சொல்லுவது குறள்; மலர் போன்ற அம்மென்மையை அறிந்து அது வாடிக் கசங்கிக் குழைந்து மணம் கெட்டுப் போகாதபடி பக்குவம் பார்த்து அனுபவிக்க உணர்த்துகிறது.

தனி வாழ்க்கையை வள்ளுவர் விரும்பவில்லை என்பதையும் அவர் குறள் மூலம் அறிகிறோம்.
'...மிக நலம் பெற்றாள் தமியள் மூத்தற்று' (குறள் எண்:1007) (பொருள்: ....மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது. ) எனத் தனி நிலைக்கு இரக்கம் கொள்கிறார்.

தலைமக்களின் உணர்வுகளை நுனித்தறிந்து உளவியல் நோக்கில் படைக்கப்பட்டது காமத்துப்பால். இது இக்கால உளவியல் கொள்கைகளுக்கு ஏற்புடைத்தக்க அமைந்திருப்பது வியக்கத்தக்கது. கற்பு வாழ்வு மேற்கொள்ளப் போகும் தலைமக்களுக்கு பயிற்சிக் களமாக காமத்துப்பால் விளங்குகிறது. இப்பாலானது ஒரு காதல் பாடப் புத்தகம், பாலியல் பயிற்சிக் களம் என்பதைக் காதல் மாந்தர் முற்றும் உணர்வர் என்பார் தமிழண்ணல்.

காதலரிடையே பூசல் தோன்றுதல் உண்டு. காதலனைச் சீண்டிப் பார்க்கவேண்டும் என்றே காதலி சில சமயங்களில் பூசலைத் தோற்றுவிப்பாள். புலவி, ஊடல், துனி என்ற மூன்று நிலைகளில் காதற்பூசல் அமையும். புலவி காதற்பூசலின் தொடக்கநிலை; ஊடல் அதற்கு அடுத்த நிலை. துனி இன்பத்திற்கு மாறான துன்பந்தரும் முதிர்ந்த நிலை. ஊடல் காதலின்பத்துக்குத் தேவை என்பதை வள்ளுவர் வலியுறுத்துவார். ஊடல் கூடுதல் இன்பத்தை எப்படி உண்டாக்கும் என்பதை நுணுக்கமாக விளக்கி பக்குவப்பட்ட காதலின்பத்திற்கு இட்டுச் செல்கிறார். அவர் கூறும் புலவி, ஊடல் என்பன கணவன் மனைவியரின் இனிய நட்பினால் விளைந்த மகிழ்வு தரும் உரையாடல்கள், செல்லக் கோபங்கள், சிரிப்பு விளையாட்டுகள், என இவை அடங்கியவையாகும். உணவிற்கு உப்பு எப்படி தேவையோ அது மாதிரி காதலிரிடையே ஊடல் அமையவேண்டும் என்று குறள் கூறும்.

காமத்துப் பால் முழுவதும் காதலரின் இளமைப் பருவத்தில் ஒரு குறுகிய கால அளவில் நடக்கும் நிகழ்ச்சிகளாக அமைந்துள்ளன. இதில் உள்ள குறள் ஒவ்வொன்றும் பேச்சுப்போல யாரேனும் ஒருவர் கூற்றாக அமைந்துள்ளதால் இதை நாடக நூல் என்றும் கூறுவர்.
காமத்துப்பால் நாடகத் தொடக்கக் காட்சியில் தலைவன் தலைவியை முதன் முதலில் காண்கிறான். அவள் உடல் வனப்பைக் கண்டு மயங்கி அவளை வருணிக்கிறான். பின் உள்ளத்துக் கவர்ச்சி உண்டானவுடன் மெய்ப்புணர்ச்சி நடக்கிறது.(மண வாழ்வுக்கு முன் உடல் புணர்ச்சியை வள்ளுவர் மறுக்கவில்லை என்பது தெரிகிறது. மணவினை பற்றிக் காமத்துபாலிலோ அல்லது மற்ற இடங்களிலோ குறளில் எங்கும் கூறப்படவில்லை என்பதும் நோக்கத்தக்கது.)
பின்னர் "உடம்புக்கும் உயிர்க்கும் எவ்வளவு உறவோ அவ்வளவு உறவு எனக்கும் என் காதலிக்கும்" என்று காதலன் கூறுகின்றான். அடுத்து போருக்காகவோ, தொழில் நிமித்தமாகவோ அல்லது மற்ற ஏதோ பணி காரணமாகவோ பிரிவு ஏற்படுகிறது. காதலர் பிரிவில்தான் ஒருவரை ஒருவர் எண்ணிப் பார்த்து அன்பு கூர்தற்குப் வாய்ப்புகள் மிகுதி. காமத்துப்பாலில் காணப்பெறும் பிரிவிலும் இரங்கலிலும் தோன்றும் அவலச்சுவையை விவரித்த விதம் நம் மனத்தை உருக்குவதாக உள்ளது. தலைவன் எப்போது தன்னை வந்து கூடுவான் என்பதிலும் எப்படிக் கொஞ்சமாக ஊடல் செய்து அந்தக் கூடலின் இன்பத்தைப் பெருக்கலாம் என்பதையும் தலைவி சிந்திப்பது அடுத்து வரும் காட்சிகள். தும்மல் படலம் அரங்கேறுகிறது. ஊடலால் கலவி இன்பம் கூடுகிறது. நாடகம் முடிகிறது.

காமத்துப் பாலின் சிறப்பு

உலகத்திலுள்ள எல்லா உயிர்கட்கும் காம உணர்ச்சி இயல்பான ஒன்று; பசிப்பதுபோல், தாகம் எடுப்பதுபோல் ஏற்படும் ஓர் உணர்வு. மனிதர்கள் ஆணும் பெண்ணுமாகக் கூடி மகிழ்வது உயிர் இயல்பாகும். இக்கூடுதலில் விளையும் உள்ளப் புணர்ச்சியையும் உடல் புணர்ச்சியையும் கூறுவது காமத்துப்பால். கூடுதல் என்னும்போது பிரிதலும் நேர்கிறது. கூடுதலால் தோன்றும் இன்பமும் பிரிதலால் உண்டாகும் துன்பமும் மாறி மாறி வரும் நிலையினை நெஞ்சை அள்ளும் கவிதை வரிகளால் படைக்கப்பட்டது குறளின் காமத்துப்பால்.

சொல்லித் தெரிவதில்லை காமக்கலை என்பது உண்மையானாலும் மலரினும் மெல்லிய காமத்தை அதன் செவ்வி தலைப்பட நுகர்வேண்டும் என்று புரிந்து கொள்ளவேண்டும். இதனாலேயே வள்ளுவர் போன்ற சான்றோர் தூய காமப்பனுவல்களை இலக்கியச் சுவை நிரம்ப இயற்றினர். காமக் கல்வி பெற்றால் இல்லற வாழ்க்கை இனிய வெற்றி தரும். காமத்துப்பாலை ஓதுவோர் காமத்தின் முழுச்சுவை காண வல்லவர் ஆவர். 'காமத்துப்பாலின் நுதலும் பொருளைப் பல முறையும் சிந்தித்தால் ஒருகாலைக்கொருகால் கருத்து ஆழ்ந்து செல்லும் அழகைக் காணலாம்' என்பர் திருமணம் செல்வக் கேசவராயர்.

வள்ளுவர் காமத்துப்பாலில் ஒருதலைக் காமத்தையோ பொருந்தாக் காமத்தையோ கூறவில்லை. தொல்காப்பியம் கூறிய 'அன்பின் ஐந்திணை' அதாவது ஒன்றுபட்ட காதலர்களிடையே நிகழும் காதல் ஒழுக்கத்தையே கூறுகின்றார்.

காமத்துப்பாலில் உள்ள 250 பாடல்களும் முழுக்கமுழுக்க அகப்பொருள் சார்ந்தவை. ஆனால் இவற்றில் ஒன்றில்கூட இடக்கர்ச் சொல் இடம்பெறவில்லை. புணர்ச்சியின் வருணனையில் அருவருப்பு சிறிதும் இல்லை. பால் உறுப்புக்கள் பற்றிப் பேசப்படவில்லை.

பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காதற்பூசலுக்குக் காரணமாக பரத்தையிடத்தில் சென்று திரும்புவது சொல்லப்படும். அதாவது தலைவன் பரத்தையர் அல்லது காமக்கிழத்தியரோடு தங்கியபின் இல்லம் திரும்பும்போது தலைவி அவனை அன்புடன் வரவேற்காமல் சினமும் வெறுப்பும் கொள்வதாகவும் பிறகு அவன் பணிந்து வேண்டிக் கொண்டபின் சினம் தணிவதாகவும் சங்கப் பாடல்கள் உள்ளன. அவற்றில் காட்டப்படும் ஊடல் பிற பெண்கள் தொடர்பினால் ஏற்படுவது. ஆனால் வள்ளுவர் விலைமகள் உறவை கடிந்து கூறியவர். எனவே கற்பனை நயத்திற்காககூட பரத்தையிற் பிரிவை வெளிப்படயாகவோ அல்லது குறிப்பாகவோ காமத்துப்பாலில் கூற விரும்பவில்லை. திருவள்ளுவரது தலைவன் இராமனைப் போல ஒருவனுக்கு ஒருத்தியே என்ற கொள்கை உடையவன். குறள் பரத்தையரைத் தொடர்பு படுத்தாமலே ஊடலைச் சுவைபடப் புனைந்துள்ளதை வள்ளுவரின் புரட்சிப் போக்கு என அறிஞர்கள் போற்றுவர். ஊடலை நன்குபுனையப் பரத்தமையே நல்வாய்ப்பு எனக் கருதிய பழம் போக்கை மாற்றி அதனைச் சுவைமிகப் புனைந்த தனித்திறன் வள்ளுவரின் சிறப்பிற்குரியது என்பர் இரா சாரங்கபாணி.

ஊடுதல் தொடர்பாகக் காமத்துப்பாலில் புலவி, புலவி நுணுக்கம், ஊடலுவகை என்னும் மூன்று அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவற்றில் தலைவி ஊடலுக்கான காரணங்களைக் கற்பனை செய்து கூறுவதாகப் பாடியுள்ளார். வள்ளுவர் இங்கு தன் கலைத்திறன் முழுதும் பயன்படுத்தி ஊடல் இன்பத்தை காட்சி வடிவில் அமைக்கிறார். அம்மூன்று அதிகாரங்களும் இலக்கியச் செழுமை வாய்ந்த, பொருள் நயம் மிக்க, கற்பனைக் களஞ்சியமாகத் திகழ்கின்றன. ஊடல் காட்சிகளில் தலைவி தலைவனை மடக்கி மடக்கி வினா தொடுப்பதும் தலைவன் நிலை தடுமாறி விழித்துத் தவிப்பதும் படிப்பவர்கள் அக்காட்சிகளை நேரே காண்பது போல் நாடக ஆக்கம் பெற்றுள்ளன. திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டும் படைப்பு இலக்கியமாகத் திகழ்கின்றன அவை.