இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1195நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை

(அதிகாரம்:தனிப்படர் மிகுதி குறள் எண்:1195)

பொழிப்பு: நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?

மணக்குடவர் உரை: நாம் காதலித்தார் நமக்கு யாதினைச் செய்வர்: தாம் காதலியாதவிடத்து

பரிமேலழகர் உரை: ('அவர்மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்து ஆற்றினாய்', என்ற தோழிக்குச் சொல்லியது.) நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்ப - நம்மால் காதல் செய்யப்பட்டவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்; தாம் காதல் கொள்ளாக்கடை - அவ்வாறே தாமும் நம்கண் காதல் செய்யாவழி.
(எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'அக்காதல் உடைமையால் நாம் பெற்றது துன்பமே' என்பதாம்.)

தமிழண்ணல் உரை: நாம் காதல் கொண்டவர் நாம் அவரைக் காதலிப்பதுபோலவே, அவரும் நம்மிடம் காதல் கொள்ளாதவிடத்து, நமக்கு என்ன இன்பத்தைச் செய்யப் போகிறார்? அக்காதலால் துன்பமேயன்றி இன்பமில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை.


நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ:
பதவுரை: நாம்-நாம்; காதல்-காதல்; கொண்டார்- செய்யப்பட்ட்ர்; நமக்கு-நமக்கு; எவன்-என்ன; செய்பவோ-செய்வரோ.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாம் காதலித்தார் நமக்கு யாதினைச் செய்வர்
பரிப்பெருமாள்: நாம் காதலித்தார் அக்காதல் நமக்கு யாதினைச் செய்யும்;
பரிதி: ஒருதலைக் காமம் நன்றல்ல;
காலிங்கர்: நாம் காதல் கொண்டிருக்கிற காதலர் நமக்கும் என்ன துனை செய்வரோ யாதும் செய்யார்;
பரிமேலழகர்: ('அவர்மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்து ஆற்றினாய்', என்ற தோழிக்குச் சொல்லியது.) நம்மால் காதல் செய்யப்பட்டவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்;

நாம் காதலித்தார் நமக்கு யாதினைச் செய்வர் என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாம் காதலித்தவர் அவர் நமக்கு வேறு என்ன நலம் செய்வார்?', 'நாம் காதல் கொண்டவர் அவர் நமக்கு என்ன நலம் செய்வர்?', 'நம்மாற் காதலிக்கப்பட்டவர் நமக்கு என்ன நன்மையைச் செய்யக்கூடும்?', 'நம்மால் காதலிக்கப்பட்டவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்?', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நாம் காதல் கொண்டிருக்கிறவர் நமக்கு என்ன செய்வரோ என்பது இப்பகுதியின் பொருள்.

தாம்காதல் கொள்ளாக் கடை:
பதவுரை: தாம்- தாம்; காதல்-காதல்; கொள்ளா-செயாத; கடை-இடத்து.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் காதலியாதவிடத்து
பரிப்பெருமாள்: அவர் தாம் காதலியாதவிடத்து என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: புணர்வு கேட்ட நெஞ்சிற்கு நின் காதலினால் பயன் இல்லை என்று தலைமகன் கொடுமையை உட்கொண்டு அவன் பாங்காயினார் கேட்பத் தலைமகள் கூறியது.
பரிதி: இருதலைக் காமம் நன்று என்றவாறு.
காலிங்கர்: தாமும் நம்மாட்டுக் காதல் கொள்ளாதபின். அதனால் யாம் இத்தனிப்படர் உறுதலே உளது என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வாறே தாமும் நம்கண் காதல் செய்யாவழி.
பரிமேலழகர் குறிப்புரை: எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'அக்காதல் உடைமையால் நாம் பெற்றது துன்பமே' என்பதாம்.

'தாம் காதலியாதவிடத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி சுருக்கமாக இக்குறளுக்கு உரை கூறியுள்ளார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நம்மைக் காதலிக்கா விடின்', 'தாமும் நம்மிடைக் காதல் கொள்ளாதவிடத்து', 'நம்மிடத்தில் விருப்பங் கொள்ளாதபோது', 'அவ்வாறே தாமும் நம்மிடம் காதல் செய்யாத வழி ' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

தாம் நம்மிடததில் விருப்பம் கொள்ளாதபோது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நாம் காதல் கொண்டவர், நம்மை விரும்பாவிடில், அவர் நமக்கு எப்படித் துணையாக இருக்க முடியுமோ?

நாம் காதல் கொண்டிருக்கிறவர் தாம் நம்மிடத்தில் விருப்பம் கொள்ளாதபோது நமக்கு என்ன துணை செய்வரோ என்பது பாடலின் பொருள்.
'நமக்கெவன் செய்பவோ' குறிப்பது என்ன?

நாம்காதல் கொண்டார் என்றது நம்மால் காதலிக்கப்பட்டவர் எனப் பொருள்படும்.
தாம் என்ற சொல் இங்கு மேற்சொன்ன காதலிக்கப்பட்டவரைக் குறிப்பது.
காதல் கொள்ளாக் கடை என்ற தொடர் காதல் கொள்ளாதபோது என்ற பொருள் தரும்.

நாம் காதல் கொண்டிருக்கிறவர் தாமும் நம்மீது விருப்பம் கொள்ளாதபோது அவர் நமக்கு எங்ஙனம் துணையாக இருக்க முடியும்?;

தலைவன் கடமை காரணமாக தலைவியிடம் விடைபெற்று அயல் சென்றிருக்கிறான். தலைவிக்கு அவனது பிரிவைத் தாங்க முடியவில்லை. எந்த நேரமும் அவனையே நினைத்திருப்பதால் உடல் மெலிகிறது. படர் உண்டானது. உறக்கம் தொலைந்தது. தனிமை தன்னை வாட்டிய நேரம் காதல் நிலையில் உள்ள உலக மாந்தரை எண்ணிப் பார்க்கிறாள். மனம் ஒத்த காதலர்கள் காழில் கனி போன்றவர்கள் அவர்களுக்கு வாழ்கிறோம் என்ற செருக்கு இருக்கும் என உணர்கிறாள். ஆனால் ஒருவர் மட்டும் காதலித்து மற்றவர் அதே அளவு விருப்பம் காட்டாவிட்டால் என்ன ஆகிறது என்பதையும் நினைத்துப் பார்க்கிறாள்.
நாம் மட்டும் அன்பு செலுத்த காதலிக்கப்பட்டவர் நம்மிடம் அன்பு செலுத்தாவிட்டால், நமக்கு என்ன கிடைக்கும் என்று காதல்கொண்டோர் நினைப்பர். இருவர் உளமும் ஒன்றுபட்டால்தான் காதல் இன்பம் பெறமுடியும் அவ்வாறு இல்லையென்றால் இன்பமாகக் கருதப்பட்ட பொருளே துன்பத்துக்குக் காரணமானதாக ஆகிவிடுகிறது. ,ஒருதலைக் காதலில் ஒருவர்க்கு மற்றவர் எப்படி வாழ்க்கைத் துணையாக இருக்க முடியும் என ஐயவினா எழுப்புகிறாள். அது முடியாதே என்பதுவே பதில் என்பதையும் அறிகிறாள். அந்த இன்னொருவர் மீது இரங்கி நிற்கிறாள்.

இக்குறளில் உள்ள காதல் கொண்டார் என்பதற்குப் பரிப்பெருமாள் காதல் 'கொண்டால்' என்றும் அதற்கு ஏற்ற வகையில் செய்பவோ என்பதற்குச் 'செய்யவோ' என்றும் பாடம் கொண்டார். இப்பாடங்களும் ஏற்கத்தக்கனவே.
காலிங்கர்: காதலர் தாமும் நம்மாட்டுக் காதல் கொள்ளாதபின் நமக்கும் என்ன துனை செய்வரோ யாதும் செய்யார்; அதனால் யாம் இத்தனிப்படர் உறுதலே உளது என குறட்கருத்தை விளக்குவார்.. 'புணர்வு கேட்ட நெஞ்சிற்கு நின் காதலினால் பயன் இல்லை என்று தலைமகன் கொடுமையை உட்கொண்டு அவன் பாங்காயினார் கேட்பத் தலைமகள் கூறியது' எனக் காட்சி அமைக்கிறார் பரிப்பெருமாள். 'அவர்மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்து ஆற்றினாய்', என்ற தோழிக்குச் சொல்லியது' என பரிமேலழகர் எனச் சூழல் அமைத்தார்.
தாம் காதல் கொள்ளாக் கடை என்பதில் உள்ள இறுதிச் சீரான கடை கடைப்பட்டது என்பதை உணர்த்தியது என்பார் வ சுப மாணிக்கம்

'நமக்கெவன் செய்பவோ' குறிப்பது என்ன?

'நமக்கெவன் செய்பவோ' என்ற தொடர்க்கு நமக்கு என்ன செய்வார்? (ஒன்றுமில்லை.) என்பது நேர் பொருள்.
உரையாளர்கள் 'நமக்கும் என்ன துனை செய்வரோ (யாதும் செய்யார்)' 'நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்?' 'நமக்கு வேறு என்ன நலம் செய்வார்?', 'நமக்கு என்ன இன்பத்தைச் செய்யப் போகிறார்? (அக்காதலால் துன்பமேயன்றி இன்பமில்லை)', 'எனக்கு என்ன இன்பம் இருக்கப் போகிறது?;, ;நமக்கு வேறு என்னதான் நன்மையைச் செய்துவிடப்போகிறா?', 'நமக்கு என்ன நன்மையைச் செய்யக்கூடும்?', 'நமக்கு அவரால் என்னதான் பயன்? (துன்பமே பயன்' என்றபடி இத்தொடரை விளக்கினர்.

'நமக்கெவன் செய்பவோ' என்றதற்கு 'என்ன துனை செய்வரோ' என்ற விளக்கம் பொருத்தமாகிறது.

நாம் காதல் கொண்டிருக்கிறவர் தாம் நம்மிடததில் விருப்பம் கொள்ளாதபோது நமக்கு என்ன துணை செய்வரோ என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஒருதலைக் காதலில் யாரும் யாருக்கும் துணையாக முடியாது என்று தலைவி தனிப்படர் மிகுதியில் எண்ணுகிறாள்

பொழிப்பு

நாம் காதல் கொண்டவர் தாமும் நம்மை விரும்பாவிட்டால் அவர் நமக்கு என்ன துணை செய்வார்?