இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1196ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது

(அதிகாரம்:தனிப்படர் மிகுதி குறள் எண்:1196)

பொழிப்பு: காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம்போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.

மணக்குடவர் உரை: ஒருதலை அன்பினாலுண்டாகிய காமம் இன்னாது: காவினது பாரம்போல இரண்டு தலையும் ஒத்த அன்பினா லுண்டாகிய காமமே இனிதாவது.
இது மேற்கூறிய சொற்கேட்ட தலைவர் அருள் செய்வாரென்றும் தெய்வக் குறிப்பினாற் கூறிய சொற்கேட்டுக் கூடினாலும் பயனில்லை யென்றும் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) காமம் ஒரு தலையான் இன்னாது - மகளிர் ஆடவர் என்னும் இரு தலையினும் வேட்கை ஒருதலைக்கண்ணேயாயின், அஃது இன்னாது; காப்போல இருதலையானும் இனிது - காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின் அஃது இனிது.
(மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக் கண் வந்தன. கா -ஆகுபெயர். 'என்மாட்டு உண்டாய வேட்கை அவர் மாட்டும்உண்டாயின், யான் இவ்வாறு துன்பமுழத்தல் கூடுமோ'?என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: காம வேட்கை காவடித் தண்டின் சுமைபோல இருபக்கமும் ஒத்திருப்பின் இனிது. அது ஒரு பக்கம் மட்டும் அமைந்திருப்பின் துன்பந்தரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது.


ஒருதலையான் இன்னாது காமம் :
பதவுரை: ஒருதலையான்-ஒருசார்பின் கண்; இன்னாது-இனிதன்று; காமம்-காதல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருதலை அன்பினாலுண்டாகிய காமம் இன்னாது;
பரிப்பெருமாள் :ஒருதலை அன்பினாலுண்டாகிய காமம் இன்னாது;
பரிதி: ஒருதலைக்காமமாகிய கைக்கிளை ஒண்ணாது; .
காலிங்கர்: நெஞ்சே! இவர்மாட்டு ஒருவழிப்பட ஒத்து நிற்பது அன்றிக் காமம் ஒருதலைபற்றி நிற்பது இன்னாது;
பரிமேலழகர்: (இதுவும் அது.) காமம் மகளிர் ஆடவர் என்னும் இரு தலையினும் வேட்கை ஒருதலைக்கண்ணேயாயின், அஃது இன்னாது;

'ஒருதலை அன்பினாலுண்டாகிய காமம் இன்னாது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமம் ஒரு பக்கம் இருப்பது துன்பம்', 'அப்படியின்றி ஒரு ப்க்கம் அதிகமாகவும் இன்னொரு பக்கத்தில் குறைவாகவும் இருந்தால் துன்பந்தான்', 'காதலானது ஒருவரிடத்து மாத்திர மிருந்தால் துன்பம் தருவதே', 'காதல் ஒரு பக்கத்து ஆயின் அது துன்பம் தருவதாகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

காதல் ஒரு பக்கத்து மட்டும் இருப்பது துன்பம் தருவதாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

காப் போல :இருதலை யானும் இனிது
பதவுரை: காப்போல-காவடி போல; இரு=இரண்டு; தலையானும்-சார்பின்கண்ணும்; இனிது-நன்றானது.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காவினது பாரம்போல இரண்டு தலையும் ஒத்த அன்பினா லுண்டாகிய காமமே இனிதாவது.
மணக்குடவர் குறிப்புரை: இது மேற்கூறிய சொற்கேட்ட தலைவர் அருள் செய்வாரென்றும் தெய்வக் குறிப்பினாற் கூறிய சொற்கேட்டுக் கூடினாலும் பயனில்லை யென்றும் தலைமகள் கூறியது
பரிப்பெருமாள் காவினது பாரம்போல இரண்டு தலையும் ஒத்த அன்பினா லுண்டாகிய காமமே இனிதாவது.
பரிப்பெருமாள் குறிப்புரை இது மேற்கூறிய சொற்கேட்ட பாங்காயினார் 'அன்பு செய்வாரைத் தலைவன் அருள் செய்வன்' என்று நகைக்குறிப்பினாற் கூறிய சொற்கேட்டுக் 'கூடினாலும் பயனில்லை' என்று தலைமகள் கூறியது
பரிதி: காவடியிற்பாரம் ஒத்ததுபோல, இரண்டுபேர்க்கும் ஒத்த இன்பம் நன்று.
காலிங்கர்: காவினது பாரம்போல இருதலையானும் ஒத்து நிற்பது உளதாயின் மிகவும் இனிது என்றவாறு.
பரிமேலழகர்: காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின் அஃது இனிது.
பரிமேலழகர் குறிப்புரை: மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக் கண் வந்தன. கா -ஆகுபெயர். 'என்மாட்டு உண்டாய வேட்கை அவர் மாட்டும்உண்டாயின், யான் இவ்வாறு துன்பமுழத்தல் கூடுமோ'?என்பதாம்.

'காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின் அஃது இனிது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காவடிப் பாரம்போல் இருபக்கமும் இருப்பது இன்பம்', 'காம ஆசை என்பது தராசு போலக் கணவன் மனைவி ஆகிய இருவரிடத்திலும் சமமாக இருந்தால்தான் இன்பம்.', '.காவடியின் பாரம்போல இருவரிடத்தும் ஒத்திருந்தால் அஃது இனிமை பயக்கும் ', '.சுமக்கும் கோலினது (காவினது) பாரம்போல் இரு பக்கங்களிலும் ஒத்திருப்பின் அஃது இனிமை பயக்கும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

காவடியின் பாரம்போல இருவரிடத்தும் ஒத்திருப்பது இன்பம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒரு பக்கமாகக் காதல் அமைந்திருத்தல் துன்பமாகும். காவடிபோல் இரண்டு பக்கங்களிலும் அது சமமாய் இருக்குமானால் இன்பம்.

காதல் ஒரு பக்கத்து மட்டும் இருப்பது துன்பம் தருவதாகும்; காவடியின் பாரம்போல இருவரிடத்தும் ஒத்திருப்பது இன்பம் என்பது பாடலின் பொருள்.
'காப் போல' குறிப்பது என்ன?

ஒருதலையான் என்ற் சொல்லுக்கு ஒரு பக்கத்து இருந்தால் என்பது பொருள்.
இன்னாது என்ற சொல் துன்பமானது என்ற பொருள் தரும்.
காமம் என்பது காதல் குறித்தது.
இருதலையானும் என்ற சொல்லுக்கு இருபக்கத்திலும் இருப்பது என்று பொருள்.
இனிது என்ற சொல் இனிமையானது எனப் பொருள்படும்.

மகளிர் - ஆடவர் என்னும் இருதலையினும் காதல் ஒருதலைக் கண்ணேயாயின் துன்பமானது. காவடியினது பாரம்போல,இரு சார்பிலும் ஒத்த அன்பு இருந்தால்தான் அது இனிதாகும்.

தலைவனின் பிரிவால் தலைவி துயருற்று இருக்கிறாள். அவள் உடல் கெடுகிறது. பசலை படர்கிறது. தலைவன் நினைவாகவே இருப்பதால் தூக்கம்னிறி இருக்கிறாள். தனிமை அவளை மிகவும் வாட்டுகிறது. அதுபொழுது உலகத்து மாந்தர் காதல் நிலைகளில் எப்படி இருப்பர் என எண்ணிப் பார்க்கிறாள். மனம் ஒத்த காதலர்கள் பேறு பெற்றவர்கள். அவர்கள் காழில் கனி போன்றவர்கள் அவர்களுக்கு வாழ்கிறோம் என்ற செருக்கு இருக்கும். ஆனால் ஒருவர் மட்டும் காதலித்து மற்றவர் அதே அளவு விருப்பம் காட்டாவிட்டால் எப்படி ஒருவர்க்கொருவர் வாழ்க்கைத் துணையாக இருக்க முடியும் எனச் சிந்திக்கிறாள்.
ஆண்பால், பெண்பால் என்னும் இருதலையினும் ஒத்த அளவில் இல்லாமல் ஒருதலைக்கண்ணே காதல் அமைந்திருந்தால் காதலில் வீழ்ந்தவர்க்கும் காதல் செய்யப்பட்டவர்க்கும் துன்பமாகவே இருக்கும். காவடியினது பாரம்போல காதல் இருதலையானும் ஒத்து நின்றால் இருவருக்கும் இனிதாக அமையும் ஒருதலைப்பாரமும் ஒருதலைக் காமமும் துன்பச் சுமையாகும்; என எண்ணுகிறாள்.
இப்பாடலிலுள்ள காமம் என்ற சொல்லுக்குக் காதல்இன்பம் என்று பொருள் கொள்வதே பொருந்தும். காதலர் வாழ்க்கை இன்பமாக இருக்கவேண்டுமென்றால், இருவரும் சமமாக அன்பு செலுத்தி வாழவேண்டும் என்பது கருத்து.

ஆண் பெண் என்று வேறுபாடு காட்டாமல் இருபாலர்க்கும் உரியதாக, ஏற்றத்தாழ்வற்ற, அறமாகவும் இக்கருத்து எடுத்துரைக்கப்படுகின்றது என்பது நோக்கத்தக்கது.

மணக்குடவரும் பரிமேலழகரும் இக்குறளைத் தலைவி கூற்றாகக் கொள்கின்றனர் மணக்குடவர் 'மேற்கூறிய சொற்கேட்ட தலைவி அருள் செய்யார் என்றும் தெய்வக் குறிப்பினால் கூறிய சொற்கேட்டுக் 'கூடினாலும் பயனில்லை' என்றும் தலைமகள் கூறியது' என்றும் பரிப்பெருமாள் இது மேற்கூறிய சொற்கேட்ட பாங்காயினார் 'அன்பு செய்வாரைத் தலைவன் அருள் செய்வன்' என்று நகைக்குறிப்பினாற் கூறிய சொற்கேட்டுக் 'கூடினாலும் பயனில்லை' என்று தலைமகள் கூறியது என்றும் சூழல் காட்டுவர். பரிமேலழகர் 'என்மாட்டு உண்டாய வேட்கை அவர் மாட்டும்உண்டாயின், யான் இவ்வாறு துன்பமுழத்தல் கூடுமோ' எனத் தலைவி கேட்பதாக அமைத்தார். .

'காப் போல' குறிப்பது என்ன?

காப்போல என்பதற்குப் பாரம் சுமக்கும் காவடித்தண்டு போல என்பது பொருள்..
‘கா’ என்பதற்கும் காவடித்தண்டு, தராசின் தட்டு, துலாக்கோல் என்று பொருள் கூறியுள்ளனர். அவற்றுள் காவடித் தண்டு என்னும் பொருள் பொருந்தும் (இரா சாரங்கபாணி:)
கா' என்பது சுமக்கும் கொம்பு அல்லது கோல் என்பதைக் குறிப்பது. காத்தண்டை காவடித் தண்டு என்றும் அழைப்பர். இது சுமை தூக்குவதற்காகப் பயன்படுத்தப்படும். சுமை தாங்குவார் காத்தண்டைத் தோளில் சுமந்து கொண்டு அதன் இரு புறங்களிலும் சுமக்க வேண்டியவைகளைக் கனம் ஒக்கத் தொங்க விட்டிருப்பர். சுமை ஒருபக்கம் மிகுந்து மற்றொரு பக்கம் குறைந்தால் அதைச் சுமக்க முடியாமல்போகும் காவடித்தண்டின் இரண்டு பக்கமும் பாரம் சமமாக வைத்தால்தான் காவடி தூக்க எளிதாகும்..கா என்பது இங்கு அதன் கண்ணுள்ள பாரத்தினை அதாவது சுமையை உணர்த்தும்.
சமயப் பற்றாளர்க:ள் தாங்கள் வழிபடும் தெய்வத்துக்கு,, சிறப்பாக முருகனுக்குக் காணிக்கையாக, பால், பூக்கள், பன்னீர் போன்ற பொருட்களை 'கா' வின் இருபுறங்களிலும் வைத்துச் சுமந்து செல்வதை நாம் விழாக் காலங்களில் இன்று காண்கிறோம். இது காவடி எடுத்தல் என்று அறியப்படுகிறது.
காப் போல' என்றது காதல் உணர்வானது அனபு செய்யும் இருபாலாரிடையேயும் சமமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தக் கூறப்பட்டது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈர்ப்பு காவடித் தண்டின் இருமுனைச் சுமைபோல சீராக இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும். இல்லறவாழ்வில் ஈடுபட்ட இவர்களில் ஒருவரிடம் மிகையாகவும், மற்றொருவரிடம் மாறுபட்டும் இருந்தால் வாழ்வு துன்பமாக அமையும்.

காதல் ஒரு பக்கத்து மட்டும் இருப்பது துன்பம் தருவதாகும்; காவடியின் பாரம்போல இருவரிடத்தும் ஒத்திருப்பது இன்பம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

மகளிர்-ஆடவர் இருவருடைய காதலும் சமமாக இருந்தால்தானே வாழ்க்கை இன்பமாக இருக்கும் எனத் தனிப்படர் மிகுதியில் தலைவி எண்ணுகிறாள்.

பொழிப்பு

காமம் ஒருபக்கம் இருப்பது துன்பம். காவடிப் பாரம்போல் இருபக்கமும் ஒத்திருப்பின் இன்பம்.