இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1198



வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்

(அதிகாரம்:தனிப்படர் மிகுதி குறள் எண்:1198)

பொழிப்பு (மு வரதராசன்): தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் (பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப்போல் வன்கண்மை உடையவர் இல்லை,

மணக்குடவர் உரை: தம் காதலரிடத்துநின்று வரும் இனியசொற்களைக் கேளாது உயிர்வாழ்வாரைப்போல வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை.

பரிமேலழகர் உரை: (தலைமகன் தூது வரக்காணாது சொல்லியது.) வீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின் - தம்மால் விரும்பப்படும் காதலர் திறத்துநின்றும்ஓர் இன்சொல்லளவும் பெறாதே பிரிவாற்றி உயிர் வாழ்கின்ற மகளிர் போல; வன்கணார் உலகத்து இல் - வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை.
('காதலர்திறத்துச் சொல் யாதானும் எனக்கு இனிது', என்னும் கருத்தால் 'இன்சொல் என்றாள். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. யான் வன்கண்ணேனாகலின் அதுவும் பெறாது உயிர் வாழாநின்றேன் என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: தாம் விரும்பும் காதலரிடமிருந்து ஓர் இன்சொல் கூடக் கிடைக்கப் பெறாமல் பிரிவுத் துன்பத்தைத் தாங்கிக் கொண்டு உயிர்வாழும் மகளிரைப் போலக் கொடியவர் இவ்வுலகத்தில் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து. வாழ்வாரின் வன்கணார் இல்

பதவுரை: வீழ்வாரின்-விரும்பப்படுபவரின்; இன்சொல்-இனிய மொழி/செய்தி; பெறாஅது-கிடைக்காமல், அடையமுடியாமல்; உலகத்து-உலகத்தில்; வாழ்வாரின்-வாழும் மாந்தர்போல, மாந்தரைவிட; வன்கணார்-கொடியவர், தறுகணாளர்; இல்-இல்லை.


வீழ்வாரின் இன்சொல் பெறாஅது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம் காதலரிடத்துநின்று வரும் இனியசொற்களைக் கேளாது;
பரிப்பெருமாள்: தம் காதலரிடத்துநின்று வரும் இனியசொற்களைக் கேளாது;
பரிதி: விரும்பப்பட்ட நாயகரின் இன்சொற்கேளாமல்; .
காலிங்கர்: தோழீ தாம் எப்பொழுதும் நினைந்து விரும்புவர் ஆகிய தலைவரைப் பெறாக் காமம் மற்று அவரிடத்து இன்று ஓர் இன்சொல் பெறுதலும் இன்றி;
பரிமேலழகர்: (தலைமகன் தூது வரக்காணாது சொல்லியது.) தம்மால் விரும்பப்படும் காதலர் திறத்துநின்றும்ஓர் இன்சொல்லளவும் பெறாதே;
பரிமேலழகர் குறிப்புரை: 'காதலர்திறத்துச் சொல் யாதானும் எனக்கு இனிது', என்னும் கருத்தால் 'இன்சொல் என்றாள். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது.

'தம் காதலரிடத்துநின்று வரும் இனியசொற்களைக் கேளாது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலரின் இன்சொல்லைப் பெறாமல்', 'பிரிந்து போயிருக்கிற தம் காதலர்களிடமிருந்து ஓர் இனிய சேதிகூட வராமலிருந்தும்', 'காதலரிடத்திலிருந்து தூதாக ஓர் இனிய சொல்லுங்கூடக் கிடைக்கப்பெறாது', 'காதலிக்கப்படும் காதலரின் இனிய சொல்லினைப் பெறாமல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

காதலரின் இனிய செய்தியைப் பெறாமல் என்பது இப்பகுதியின் பொருள்.

உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உயிர்வாழ்வாரைப்போல வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை
பரிப்பெருமாள்: உயிர்வாழ்வாரைப்போல வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை
பரிப்பெருமாள் குறிப்புரை: தூது விடுதல் குறிப்பினால் தோழிக்குச் சொல்லியது.
பரிதி: உலகத்து வாழ்வார்போல வன்கண்ணியர் இல்லை என்றவாறு.
காலிங்கர்: வையகத்து உயிர் வாழ்வார் ஆகிய மகளிர்போல இவ்வுலகத்து வன்கண்மையுடையார் மற்று யாரும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: பிரிவாற்றி உயிர் வாழ்கின்ற மகளிர் போல வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: யான் வன்கண்ணேனாகலின் அதுவும் பெறாது உயிர் வாழாநின்றேன் என்பதாம். [வன்கண்ணேன் - கொடுமையுடையோர்; அதுவும் - ஓர் இன்சொல் அளவும்]

''உயிர்வாழ்வாரைப்போல வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை'' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் ' பிரிந்து உலகத்து இருக்கும் மகளிரே கொடியவர்', 'உலகத்தில் உயிரை வைத்துக் கொண்டிருக்கிற பெண்களைவிட நெஞ்சழுத்தமுள்ளவர்கள் யாருமில்லை', 'உலகத்தில் உயிர் வாழ்கின்றவர்களைப் போல வலிய நெஞ்சமுடையவர்கள் வேறு யாருமில்லை', 'உலகத்து வாழ்கின்ற மகளிரைப்போல கல்நெஞ்சுடையார் இவ்வுலகத்தில் இல்லை' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

உலகத்தில் வாழ்கின்றோரைப்போல் வலியநெஞ்சுடையார் இவ்வுலகத்தில் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காதலரின் இனிய செய்தியைப் பெறாமல், உலகத்தில் வாழ்கின்றோரைப்போல் வலியநெஞ்சுடையார் இவ்வுலகத்தில் இல்லை என்பது பாடலின் பொருள்.
'இன்சொல் பெறாஅது' குறிப்பது என்ன?

அவர் இல்லம் திரும்பிவருகிறார் என்னும் இன்பச் செய்தியை எப்பொழுது கேட்கப்போகிறேனோ?

தாம் விரும்பும் கணவரிடத்திலிருந்து இனிய செய்தி கிடைக்கப்பெறாது, (பிரிந்து) வாழ்கின்ற பெண்களை விட வலிய நெஞ்சமுடையவர்கள் உலகில் வேறு யாருமில்லை.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகத் தலைவன் தொலைவு சென்றிருக்கிறான். அவனது பிரிவு தங்க முடியாமல் தலைவி பெரிதும் மனத் துயருறுகிறாள். உடல் மெலிந்து நிறம் மாறித் துன்பப்படுகிறாள். அவ்வேளையில் உலகத்து மற்ற கணவன்-மனைவி உறவு எவ்விதம் இருக்கும் என்று நினைக்கத் தொடங்குகிறாள். மனம் ஒத்த ஆடவர்-மகளிர் வாழ்வு என்பது விதை இல்லாத பழம் போன்றது-முழுவதும்‌ சுவைக்கப்படுவதுபோல முழுமையான காம இன்பம்‌ பெறுவர்; மனைவிக்குக் கணவர் சமயம் அறிந்து செய்யும் அன்புச்செயலானது, வேண்டும் காலத்தில் மழை கிடைப்பது போன்றதாகும்; விருப்பம் இல்லா காதலர் வாழ்க்கை உரிமையற்ற வாழ்க்கையாகும்; அது இன்பமில்லாததுமாகும்; காதல் ஒரு பக்கத்ததானால் துன்பமாகும்; காதற்கடவுள் ஏன் இணையரில் ஒருவரிடத்தே பொருந்தி வருத்துகின்றான் - இவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
பிரிவில் சென்றுள்ள கணவரை நேரில் பார்க்க முடியவில்லை; பேசமுடியவில்லை. அவர் தனக்குச் சொல்லியனுப்பியதாக செய்தி எதுவும் வரவுமில்லை. இவை தனிமையில் வாடிக் கொண்டிருக்கும் காதல் மனைவியை மேலும் வருத்தமடையச் செய்கிறது. 'தாம் விரும்புவரிடமிருந்து இனிய செய்தி ஏதும் கேளாது துயரத்தைத் தாங்கிக்கொண்டு வாழ்பவரை விடவும் வலிய நெஞ்சம் கொண்டவர், உலகில் கிடையாது' எனத் தன்னைதானே நொந்து கூறுகிறாள் தலைவி.
நீண்ட பயணமாகப் பிரிந்து செல்பவர் அடிக்கடி செய்தி அனுப்பிக்கொண்டே இருத்தல் நன்மை பயக்கும். 'நான் நலமாக வந்து சேர்ந்துவிட்டேன்', 'இங்கு இன்பநலங்கள் வழங்கும் பொருட்கள் எல்லாமே கிடைக்கின்றன', 'இங்குள்ளோர் நன்கு பழகுகின்றனர்', 'எனக்கு எந்தவிதக் குறையுமில்லை' என்பன போன்ற செய்திகளைத் தன் மனைவிக்கு இடைவிடாது தெரிவித்துக்கொண்டிருப்பது நல்ல பழக்கம்.

தொலைத் தொடர்புத் துறையில் முன்னேற்றங்கள் பல இன்று நிகழ்ந்து வருகின்றன. எப்பொழுதுமே தொடர்பில் இருக்கக்கூடிய வசதிகள் இப்பொழுது கிடைத்து உள்ளன. இந்தச் சூழலிலும் பணிச்சுமை, உடல்நலக் குறைவு, சோர்வு போன்ற காரணங்களால் தலைவனால் ஒரு குறுஞ்செய்தி (SMS/Texting) கூட அனுப்பமுடியாதிருக்கலாம். அவ்விதம் அச்செய்தி வரக் காலத் தாழ்வு ஏற்பட்டாலும் காதல்கொண்ட பெண்ணின் மனம் துடிதுடிப்புக்குள்ளாகும். முற்காலத்தில் அனுப்பிய செய்தி பெறுவரிடம் சென்றடைய நாட்கள் பலவானது. உடனடிச் செய்தி கிடைக்க ஏதுவாகும் கருவிகள் உள்ள இந்நாளில் செய்தி வரச் சிறிதே காலத்தாழ்ச்சி ஆனாலும் காதலர் உள்ளம் மிகுந்த துயரடையும். செய்தி வரும்வரை அவர்கள் ஆற்றமாட்டாமல் தவிப்பார்கள். செய்தி ஏதும் வராவிட்டால் 'தான் ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறேன்?' என்ற எண்ணம் மனைவிக்கு உண்டாகத் தொடங்கும். இக்கருத்தைக் 'காதல் கணவரிடமிருந்து இனிய சொல் கிடைக்கப் பெறாதவள் உயிருடன் இருப்பதற்குக் கல்நெஞ்சுடையவளாகவே இருக்க வேண்டும்' என இக்குறள் சொல்கிறது.

வீழ்வார் என்ற சொல்லால் இங்கு தன் கணவரைக் குறிக்கிறாள் தலைவி. விழைவு வீழ்தல் என்பன உள்ளம்‌ ஒன்றும்‌ காதல்‌ பற்றிய கலைச்‌ சொற்கள்‌. வீழ்வார் என்றது தம்மால் விரும்பப்படும் கணவர் என்ற பொருள் தருகிறது.
இப்பாடலைத் தலைவனுக்கும் உரித்தாக்கலாம். அதாவது தலைவியிடமிருந்து இனிய செய்தி ஏதும் பெறாத தலைவனும் மிக்க துயர் அடைவான் என்றும் கருத்தாகக் கொள்ளலாம்.

'இன்சொல் பெறாஅது' குறிப்பது என்ன?

'இன்சொல் பெறாஅது' என்றதற்கு இனியசொற்களைக் கேளாது, இன்சொற்கேளாமல், இன்று ஓர் இன்சொல் பெறுதலும் இன்றி, காதலர் திறத்து நின்றும்ஓர் இன்சொல்லளவும் பெறாதே, இனிய சொல்லைப் பெறாமல், ஓர் இன்சொல்லாவது பெறாது, இன்சொல்லைப் பெறாமல், ஓர் இன்சொல் கூடக் கிடைக்கப் பெறாமல், ஒரு இனிய சேதிகூட வராமலிருக்கும், இனிய சொல்லைப் பெற மாட்டாமல், ஓர் இனிய சொல்லுங்கூடக் கிடைக்கப்பெறாது, இனிய சொல்லினைப் பெறாமல், ஓர் இனிய சொல்லைக் கூடப் பெறமுடியாமல், ஓரின் சொல்லளவும் வரப்பெறாதே, இனிமையான சொல்லைக் கேட்டு மகிழாது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இன்சொல் பெறாஅது என்பதற்கு இனியமொழி கிடைக்காமல் என்பது பொருள். இன்சொல் என்பதற்குத் தலைவன் விடுக்கும் தூதுச் சொல் அதாவது தலைவன் அனுப்பிய செய்தி என்றும் தலைவனே நேரில் சொல்லும் சொல் என இருதிறமாக உரையாளர்கள் பொருள் கூறினர். இவற்றுள் முதல் கருத்து பொருத்தமாயுள்ளது. வீழ்வாரிடமிருந்து பெறும் இனிய செய்தி எப்பொழுதுமே வீழப்பட்டார்க்கு மகிழ்வூட்டும். ''காதலர்திறத்துச் சொல் யாதானும் எனக்கு இனிது', என்னும் கருத்தால் 'இன்சொல் என்றாள்' என்பது பரிமேலழகர் உரை.

தாம் விரும்பும் காதலரிடமிருந்து அன்பான செய்தி ஒன்றும் கிடைக்கப் பெறாமல் பிரிவுத் துன்பத்தைத் தாங்கிக் கொண்டு வாழும் மகளிர் பற்றிய பாடல் இது.
காதலரிடமிருந்து பெறக்கூடிய இனிய சொற்களைப் பெறாமல்- அதனைப் பொருட்படுத்தாமல்- அதனைப் பெறாமலும் நான் இருந்து கொள்வேன் என்று வாழ்ந்து வருகின்ற மகளிரை விடவும் வன்நெஞ்சர் இவ்வுலகில் வேறு யாரும் இருக்கமாட்டார்கள் என்றும் ஓர் உரை உள்ளது. மேலும் 'தாம் விரும்பும் கணவரின் இனிய சொல்லைப் பெறாமல்' தனித்து வாழ்கின்ற மகளிர் என்றும் 'தாம் காதலிப்பவர் தம்மை விரும்புவார் என்ற நம்பிக்கையால் இன்சொல் பெறாமல். கடைசிவரைக் கைக்கிளைக் காமத்துடனேயே கணவனொடு காலங்கழிப்பர் பல பெண்டிர்' என்றும் 'இன்சொல் பெறாஅது' என்ற தொடரை விளக்குவனவாக உள்ள உரைகளும் காணப்படுகின்றன.

'இன்சொல் பெறாஅது' என்பதற்குப் (பிரிந்து சென்றுள்ள காதலரிடமிருந்து) இனிய செய்தி கிடைக்கப் பெறாமல் என்பது பொருள்.

காதலரின் இனிய செய்தியைப் பெறாமல், உலகத்தில் வாழ்கின்றோரைப்போல வலியநெஞ்சுடையார் இவ்வுலகத்தில் இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இன்சொல் பெறமுடியாது, தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்ட கணவரை நினையும் தனிப்படர் மிகுதி.

பொழிப்பு

காதலரிடமிருந்து செய்தியைப் கிடைக்கப் பெறாமல் பிரிவுத் துன்பத்தைத் தாங்கிக் கொண்டு உயிர்வாழ்வோரைப் போலக் கொடியவர் இவ்வுலகத்தில் இல்லை.

.