இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1197பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்

(அதிகாரம்:தனிப்படர் மிகுதி குறள் எண்:1197)

பொழிப்பு: (காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?

மணக்குடவர் உரை: தான் ஒருவர் பக்கமாகநின்று ஒழுகித் துன்பஞ்செய்கின்ற காமதேவன் நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணானோ?
காண்பானாயின் நம்மை வருத்தானே, தெய்வமாகலான்.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன் - காமம் நுகர்தற்கு உரிய இருவரிடத்தும் ஒப்பநிற்றல் ஒழிந்து ஒருவரிடத்தே நின்று பொருகின்ற காமக் கடவுள்; பருவரலும் பைதலும் காணான்கொல் - அவ்விடத்துப் பசப்பானாய பருவரலும் படர் மிகுதியும் அறியான் கொல்லோ.
('விழைவும் வெறுப்பும் இன்றி எல்லார்கண்ணும் நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண் வேறுபட்டான், இனி யான் உய்யுமாறு என்னை'? என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: காதலர் இருவரிடத்தும் ஒப்ப நில்லாமல் ஒருவரிடத்தே மட்டும் நின்று போரிடும் காமக் கடவுள் அங்கே வருத்தத்தையும் துன்பத்தையும் காண மாட்டானோ?


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன், பருவரலும் பைதலும் காணான்கொல்?


பருவரலும் பைதலும் காணான்கொல்:
பதவுரை: பருவரலும்-வருத்தமும்; பைதலும்-துன்பமும்; காணான்கொல்-.-அறிய மாட்டானோ.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணானோ?
பரிப்பெருமாள்: நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணாதான்;
பரிதி: மயலான கிலேசமும் பசலையும் காணானோ;
காலிங்கர்: நெஞ்சே! யாம் உறுதுயரமும் இதனால் உள்ளுறும் இரக்கமும் கண்டிலன் போலும்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) அவ்விடத்துப் பசப்பானாய பருவரலும் படர் மிகுதியும் அறியான் கொல்லோ;

யாம் உறுதுயரமும் இதனால் உள்ளுறும் துன்பமும் கண்டிலன் போலும் என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமத் துன்பமும் வருத்தமும் அறியானோ?', 'அவன் நான் படும் துன்பத்தையும் துயரத்தையும் அறியமாட்டானா?', ' பசப்புத் துன்பத்தையும் தனிமைத் துன்பத்தையும் அறியாதவர் போலும் ', 'அவரிடத்தில் துன்பமும் பசலையும் அறிய மாட்டானோ? ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

துன்பத்தையும் துயரத்தையும் அறியமாட்டானா என்பது இப்பகுதியின் பொருள்.

காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான்:
பதவுரை: காமன்-காமன்; ஒருவர்கண்-ஒருவர் இடத்தில்; நின்று-நிலை நின்று;- ஒழுகுவான்-பொருகின்றவன்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தான் ஒருவர் பக்கமாகநின்று ஒழுகித் துன்பஞ்செய்கின்ற காமதேவன்.
மணக்குடவர் குறிப்புரை: காண்பானாயின் நம்மை வருத்தானே, தெய்வமாகலான்.
பரிப்பெருமாள்: ஒருவர் பக்கமாக நின்று ஒழுகித் துன்பஞ்செய்கின்ற காமதேவன்;
பரிப்பெருமாள் குறிப்புரை: காண்பானாயின் நம்மை வருத்தானே, தெய்வமாதலான்
சேய்மைக்கண் பிரிதலே அன்றி அணுமைக்கண் பிரியும் பிரிவும் உள; அவையாவன்: அவைக்களனும் மாசவையும் அத்தாணியும் புகுதவும் நல்லிசை நயந்து வந்தோர் காணவுன், பணை நிலைப் புரவி காணவும் வாரியுள் யானை காணவும், நாட்டகத்துப் பிரியும் பிரிவு. அவற்றுள் யாதானும் ஒன்றானால் தலைமகன் பிரிந்துழி ஆற்றாளாகிய தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. சேய்மைக்கண் பிரிந்தான் ஆயின் பருவம் காணின் அல்லது இக்கூற்றினால் பயன் இல்லை. பரத்தையிற் பிரிவு ஆயின், புலவி தோன்றும். ஆதலால் அணுமைக்கண் பிரிந்தானைப் பற்றிக் கூறப்பட்டது என்று கொள்ளப்படும். இவ்வுரை மேல்வருவனவற்றிற்கும் ஒக்கும்.
பரிதி: காமன்; என்னையேன் சண்டையிடுவது என்றவாறு,
காலிங்கர்: இங்ஙனம் ஒருவர் கண்ணே நின்று இடம் செய்து ஒழுகுவானாகிய இந்தக் காமன் என்கின்றவன்; .
காலிங்கர் குறிப்புரை: எனவே இதனை அவன் கண்டானாகில் ஆண்டும் சென்றும் அடர்ப்பன் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: காமம் நுகர்தற்கு உரிய இருவரிடத்தும் ஒப்பநிற்றல் ஒழிந்து ஒருவரிடத்தே நின்று பொருகின்ற காமக் கடவுள்;
பரிமேலழகர் குறிப்புரை: விழைவும் வெறுப்பும் இன்றி எல்லார்கண்ணும் நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண் வேறுபட்டான், இனி யான் உய்யுமாறு என்னை'? என்பதாம்.

'தான் ஒருவர் பக்கமாகநின்று ஒழுகித் துன்பஞ்செய்கின்ற காமதேவன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மன்மதன் ஒருவரிடமே இருக்கின்றான். ஆதலின்', 'இருபாலருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய காமக் கடவுளான மன்மதன் ஒரு பக்கத்தில் சேர்ந்துகொண்டு (என் காதலர் மீது பாணம் விடாமல் என் மீது மட்டும் பாணம் விட்டு) பாரபட்சம் செய்கிறானே,', 'இருவரிடத்திலும் சமமாக நில்லாது ஒருவரிடத்து மாத்திரமே நிண்ரு இயங்கும் காமக்கடவுள், அங்ஙனஞ் செய்ததா லுண்டாகும் ', 'காதற்கடவுள் ஒருவரிடத்தே பொருந்தி வருத்துகின்றான்.' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

ஒருவரிடம் மட்டுமே காதலை உண்டுபண்ணினானே காமன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காமன் என்பான் ஒருவர்பால் நின்று காதலை உண்டுபண்ணியதால் அவ்வொருவர் காமநோயால் உறும் துயரத்தையும் துன்பத்தையும் அறியமாட்டானா?

ஒருவரிடம் மட்டுமே காதலை உண்டுபண்ணிய காமன்; அவர் உறும் துன்பத்தையும் துயரத்தையும் அறியமாட்டானா என்பது பாடலின் பொருள்.
பாடலில் சொல்லப்பட்ட அந்த 'ஒருவர்' யார்?

பருவரலும் என்ற சொல்லுக்கு வருத்தமும் என்பது பொருள்.
பைதலும் என்ற சொல் துன்பமும் என்ற பொருள் தரும். பசப்பும் என்று சிலர் கொண்டனர்.
காணான்கொல் என்றது அறிய மாட்டானோ குறித்தது.
காமன் என்பது காதல் தெய்வம் என்று அறியப்படுபவன்,
ஒருவர்கண் என்ற தொடர் ஒருவரிடத்து என்ற பொருளது.
நின்றொழுகுவான் என்றதற்கு பொருந்தியிருந்து செயலாற்றுபவன் என்று பொருள்.

காதல்தெய்வம் ஒருவரிடத்தே நின்று வருத்துகின்றது; அவ்விடத்தில் உண்டாகும் துயரமும் துன்பமும் அறிய மாட்டானோ?

தலைவன் கடமை காரணமாக தொலைவு சென்றிருக்கின்றான். அவனது பிரிவைத் தாங்கவொண்ணாத தலைவி அவனையே நினைத்துக் கொண்டிருப்பதால் உடல் தளர்ந்தாள். தூக்கத்தைத் தொலைத்தாள். நிறம் மாறியது. தனிமைத் துயரில் வாடிய அவள் உலகத்துக் காதலர்கள் எப்படி .இருப்பார்கள் என்று சிந்திக்கத் தொடங்குகிறாள். நாங்கள் இருவரும் அதாவது தலைவன் - தலைவி நற்பேறு பெற்றவர்கள், வாழ்கிறோம் என்ற செருக்குடன் உள்ளோம். எல்லாருக்கும் அப்படிப்பட்ட வாழ்க்கை அமைவதில்லை என்பதையும் உணர்கிறாள். கணவன் -மனைவி இருவரில் ஒருவர் மட்டும் அன்பு செலுத்தி மற்றவர் ஈடுபாடு இல்லாமல் இருப்பதும் உண்டு. .எக்காலத்திலும் தொடர்பில்லாதவர் போல் உள்ளவர்களும் உண்டு. அவர்களால் ஒருவர்க்கொருவர் எப்படித் துணையாக இருக்க முடியும்? ஒருபக்காமாகக் காதல் இருப்பது துன்பம் தருவதுதானே. எனப் பலவாறு எண்ணுகிறாள். ஒருதலைக் காமத்தை உண்டாக்கிய காதல்தெய்வம் அப்படிப்பட்ட காதலில் வீழ்ந்தவர் உறும் வருத்தத்தையும் துயரங்களையும் உணரமாட்டானா என அவர்கள் சார்பாக இரங்கிக் கேட்கிறாள்.
காமன் என்பது தொன்மங்களில் குறிக்கப்பெறும் காதல் தெய்வம் ஆகும், இவன் மன்மதன் என்றும் அறியப்படுவான். காதலைத் தோற்றுவிப்பவன் என்று கருதப்படுபவன். மக்களுக்குக் காம இச்சையை வளர்க்கும் தெய்வமாகக் காமன் விளங்குகின்றான் என்று சொல்லப்படுகிறது காமன் வில்லம்பு எய்திய ஒரு அழகான இளைஞனாக காட்டப்படுவான். அவனுடைய வில் கரும்பால் ஆனது, காமனின் அம்பு நறுமண மலர்களால் ஆனது. அவன் காமக்கணை தொடுப்பான். காமன். இருவர்பாலும் காதல் விருப்பத்தை உண்டு பண்ணி இருவரையும் கூட்டுவிக்க வேண்டும். ஆனால் அவன் ஆண்-பெண் இருவரில் யாரேனும் ஒருவர் மாட்டு நின்று செயலாற்றி ஒருதலைக் காதலை உண்டுபண்ணினால் அவர் அனுபவிக்கும் துயரத்தையும் துன்பத்தையும் அறிய மாட்டானா? இன்னொரு பக்கமும் கணைகள் தொடுக்க மாட்டானா? எனத் தலைவி தன் நெஞ்சைக் கேட்டுக் கொள்கிறாள்.

பருவரல், பைதல் என்னுஞ் சொற்களுக்கு வெவ்வேறு பொருள் கூறப்பட்டது. பருவரல் என்பதற்கு வருந்தும் என்பதுவும் ‘‘பைதல்’ என்பதற்குத் துன்பம் என்ற பொருளும் பொருந்தும். என்று கூறி வருத்தத்தைக் காரணமாகவும் துன்பத்தைக் காரியமாகவும் கொள்க என விளக்கம் செய்வார் இரா சாரங்கபாணி

பாடலில் சொல்லப்பட்ட அந்த 'ஒருவர்' யார்?

தான் ஒருவர் பக்கமாகநின்று ஒழுகித் துன்பஞ்செய்கின்ற காமன் என்கிறது பாடல். இந்த ஒருவர் ஆண். பெண் இருவரில் ஒருவரைக் குறிப்பதால் பலர்பால் விகுதி பெற நின்றது என்பர். அந்த இருவரில் யார் இந்த ஒருவர்? உரையாசிரியர்களில் பெரும்பானமையோர் இப்பாடலைத் தலைவியின் கூற்றாகக் கருதி 'தான் மட்டும் துயரும் துன்பமும் அனுபவிப்பதாக' பொருள் கூறியதால் இவர்கள் உரையின்படி 'ஒருவர்' என்பது தலைவியைக் குறித்ததாகிறது. மிகச் சிலர் குறளில் கிடந்தாங்கு பொதுவில் பொருள் செய்தனர். இவர்கள் உரை ஆண், பெண் இருவரிடமும் சமமாக நில்லாது ஒருவரிடத்து மாத்திரமே நின்று இயங்கும் காமன், இன்னொருவரின் வருத்தத்தையும் துன்பத்தையும் அறிய மாட்டானோ? எனக் கூறும். ஒருதலைக்காதல் இருவர்க்கும் பொருந்துவதே என்ற கருத்து உடையவர்கள் இவர்கள் . இதுவே குறள் கூற வருவது அதாவது ஆடவர் - மகளிர் இருவருமே ஒருதலைக் காதல் துன்பத்துக்குள்ளாகக் கூடியவர்களே. .

'ஒருவர்' என்பது ஆண்-பெண் இருவரில் யாரேனும் ஒருவர் ஆவர்.

ஒருவரிடம் மட்டுமே காதலை உண்டுபண்ணிய காமன்; அவர் உறும் துன்பத்தையும் துயரத்தையும் அறியமாட்டானா என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இருவரிடத்தும் காதலை ஒப்ப நிகழ்விக்காத காதல்தெய்வம் மீது தனிப்படர் மிகுதியில் தலைவி சினம் கொள்கிறாள்.

பொழிப்பு

ஒருவரிடத்தே நின்று காதலை உண்டுபண்ணிய காம தெய்வம் அவ்விடம் வருத்தத்தையும் துன்பத்தையும் காண மாட்டானோ?