இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1194



வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்

(அதிகாரம்:தனிப்படர் மிகுதி குறள் எண்:1194)

பொழிப்பு (மு வரதராசன்): தாம்விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.

மணக்குடவர் உரை: நற்குணங்கள் பலவுடையரென்று உலகத்தாரால் விரும்பப்பட்டாரும் தம்மால் காதலிக்கப்பட்டவரால் தாம் காதலிக்கப்படாராயின், விருப்பமில்லாராவர்.
இது வாழ்க்கையை முனிந்து கூறிய தலைமகளுக்கு நீ இவ்வாறு கூறுவையாயின் நின்னைப் புகழ்கின்ற உலகத்தாருள் மிக வாழ்வார் யாரென்ற தோழிக்கு அவள் கூறியது. கொண்டான் காயிற் கண்டான் காயுமென்பது பழமொழி.

பரிமேலழகர் உரை: ('காதலரை இயற்பழித்தலை அஞ்சி அவரருளின்மை மறைத்த நீ கடவுட் கற்பினையாகலின், கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுதி', என்ற தோழிக்குச் சொல்லியது.) வீழப்படுவார் - கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும்; தாம் வீழ்வார் வீழப்படார் எனின் கெழீஇயிலர் - தாம் விரும்பும் கணவரான் விரும்பப் படாராயின் தீவினையாட்டியர்.
(சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. கெழீஇயின்மை: நல்வினையின்மை; அஃது அருத்தாபத்தியால் தீவினையுடைமையாயிற்று. 'தீவினையுடையோற்கு அந்நன்கு மதிப்பால் பயனில்லை', என்பதாம்.)

இரா சாரங்கபாணி: தாம் விரும்புகின்றவரால் மகளிர் விரும்பப்படார் என்றால் அம்மகளிரால் விரும்பப்படுவர் பழந்தொடர்புடையவர் அல்லர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின்.

பதவுரை: வீழப்படுவார்-நன்கு விரும்பப்பட்டார்; கெழீஇ இலர்-எவ்வுறவும் இல்லாதவர், உரிமையற்றவர், நல்வினை இல்லாதார், விருப்பமில்லார்; தாம்-தாங்கள்; வீழ்வார்-விரும்பப்படுபவர்; வீழப் டாஅர்-விரும்பப்பட மாட்டார்; எனின்-என்றால். .


வீழப் படுவார் கெழீஇயிலர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நற்குணங்கள் பலவுடையரென்று உலகத்தாரால் விரும்பப்பட்டாரும் விருப்பமில்லாராவர்;
பரிப்பெருமாள்: நற்குணங்கள் பலவுடையரென்று உலகத்தாரால் விரும்பப்பட்டாரும்; விருப்பமில்லாராவர்
காலிங்கர் ('கெழியிலரே' பாடம்): நெஞ்சமே! நாம் விரும்பப்படுபவர் தாமும் நம்மாட்டு விரும்பப்படுவராயின் முன்னமே நாம் பேறுடை மகளிர் ஆவோம்; அல்லது மற்று அவர்மாட்டு நாமே காதலை வைக்கப்பட்டோம் ஆயின் முன்னமே அவரோடு நட்புப் பூண்டிருப்பதற்குப் பேறு பெற்றிலேம்
பரிமேலழகர்: ('காதலரை இயற்பழித்தலை அஞ்சி அவரருளின்மை மறைத்த நீ கடவுட் கற்பினையாகலின், கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுதி', என்ற தோழிக்குச் சொல்லியது.) கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும்; தீவினையாட்டியர்.
பரிமேலழகர் குறிப்புரை: சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. கெழீஇயின்மை: நல்வினையின்மை; அஃது அருத்தாபத்தியால் தீவினையுடைமையாயிற்று. 'தீவினையுடையோற்கு அந்நன்கு மதிப்பால் பயனில்லை', என்பதாம். [கெழீஇயின்மை- பொருந்துதல் இன்மை; அந்நன்கு மதிப்பல் - கற்புடைய மகளிர் மேம்பாடு செய்து பேசுதலால்]

'உலகத்தாரால் விரும்பப்பட்டாரும் விருப்பமில்லாராவர்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் நாம் விரும்பப்படுபவர் முன்னமே அவரோடு நட்புப் பூண்டிருப்பதற்குப் பேறு பெற்றிலேம்' என்றார். பரிமேலழகர் 'கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும் தீவினையாட்டியர்' என இப்பகுதிக்கு உரை கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'விரும்பிய மகளிர் எவ்வுறவும் இல்லாதவர்', 'அம்மகளிரால் விரும்பப்படுவர் பழந்தொடர்புடையவர் அல்லர்', 'அவர் அன்பில்லாதவரே', 'விரும்பப்படுகின்றவர் பழந்தொடர்புடையுடையவர் அல்லர் என்பதையன்றி என்ன செய்வது?' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

விரும்பப்படுவர் எவ்வுறவுமில்லா அன்பற்றவர் என்பது இப்பகுதியின் பொருள்.

தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மால் காதலிக்கப்பட்டவரால் தாம் காதலிக்கப்படாராயின் .
மணக்குடவர் குறிப்புரை: இது வாழ்க்கையை முனிந்து கூறிய தலைமகளுக்கு நீ இவ்வாறு கூறுவையாயின் நின்னைப் புகழ்கின்ற உலகத்தாருள் மிக வாழ்வார் யாரென்ற தோழிக்கு அவள் கூறியது. கொண்டான் காயிற் கண்டான் காயுமென்பது பழமொழி.
பரிப்பெருமாள்: தம்மால் காதலிக்கப்பட்டவரால் தாம் காதலிக்கப்படாராயின்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வாழ்க்கையை முனிந்து கூறிய தலைமகளை, இவ்வாறு கூறுவாய் ஆயின் நினைப் புகழ்கின்ற உலகத்தாரும் இகழ்வர் என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 'கொண்டான் காயிற் கண்டார் காய்வர் என்பது உலக வழக்கம்.
பரிமேலழகர்: தாம் விரும்பும் கணவரான் விரும்பப் படாராயின்.

'தம்மால் காதலிக்கப்பட்டவரால் தாம் காதலிக்கப்படாராயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தாம் விரும்பியவரே விரும்பவில்லை யெனின்', 'தாம் விரும்புகின்றவரால் மகளிர் விரும்பப்படார் என்றால்', 'நாம் காதலிக்கிற கணவர் நம்மைக் காதலிக்காவிட்டால்', 'தாம் விரும்புகின்றவர் தம்மை விரும்பாராயினார் என்றால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

தாம் விரும்புகின்றவரால் விரும்பப்படார் என்றால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தாம் விரும்புகின்றவரால் விரும்பப்படார் என்றால் விரும்பப்படுவர் கெழீஇயிலர் என்பது பாடலின் பொருள்.
'கெழீஇயிலர்' யார்?

காதலிக்கப்படும் கணவர் தம்மை விரும்பவில்லையென்றால் அன்பற்ற அவர் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

தாம் காதலிக்கின்ற கணவரால் தாம் விரும்பப்படவில்லையென்றால், அவர் எவ்வுறவுமில்லா அன்பற்றவர் எனக் கொள்ளவேண்டியதுதான்.
காட்சிப் பின்புலம்:
தொழில் தொடர்பாகக் காதல் கணவர் பிரிந்து தொலைவு சென்றுள்ளார். தனிமையில் இருக்கும் தலைவி அவர் நினைவாகவே இருக்கிறாள். பிரிவாற்றாமையால் உடல்நலன்கள் இழந்து, தூக்கம் தொலைத்து வாடியிருக்கிறாள். அதுசமயம் உலகத்து கணவன்-மனைவி உறவு பற்றிய எண்ணங்களில் மூழ்கிவிடுகிறாள்.
மணவாழ்வு நடத்தும் ஆண்-பெண் இருவரும் ஒத்த காதலுடையவராய் இருந்தால்தான் விதையில்லாத இனியகனியை முழுமையாகச் சுவைப்பதுபோல் வாழ்க்கையை நுகர முடியும்'; 'காதலிக்கப்படுபவர் காதலிக்கிறவர்க்குச் செய்கிற அன்பானது, உயிர் வாழ்வார்க்கு வானத்தினின்று மழை பெய்வது போன்றது'; 'மனமொத்த கணவன் - மனைவி முழுமையான இன்பம் பெற்று நாம்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற செருக்குடையவராயிருப்பர்'; இவ்வாறாக அவளது மனதில் மனமொத்த இணையர்கள் பற்றிய பல எண்ண ஓட்டங்கள் நிகழ்கின்றன.

இக்காட்சி:
இப்பொழுது மனம் ஒத்துப்போகாதபடி இல்லற வாழ்க்கை அமைந்தவர்களைப் பற்றி தலைவி எண்ணத் தொடங்குகிறாள்.
ஒருவள் நற்குணங்கள் பலவுடையள். அவளை உற்றார், உறவினர், நண்பர்கள், ஊர்மக்கள், மற்றும் அறிந்தவர்கள் அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் அவள் தன் கணவனால் விரும்பப்படவில்லை. ஒருவர் காதலித்து மற்றவர் விரும்பாவிட்டால் என் செய்வது? மனம் பொருந்திய வாழ்வின்றேல், நன்மதிப்பு அமையாது. விருப்பம் இல்லா அதாவது ஒருதலைக் காதலான இல்வாழ்க்கை உரிமையற்ற இன்பமில்லா வாழ்க்கையாய்த் துன்பம் மிகுந்ததாய் இருக்கும்; கற்பியல் வாழ்க்கை இறைவன் கொடுத்த கொடை. இருதலையாகக் காதல் அமையாவிட்டால் விரும்பப்படாதவர் அன்பற்ற நற்பேறு இல்லாதவர் என்று விரும்புபவர் நினைத்துக் கொள்வர். மணவினை மேற்கொள்ளும் பல குடும்பங்களில் காதலிக்கப்படாத ஆண்களோ பெண்களோ இப்படி எண்ணிக்கொண்டுதான் வாழ்வை நகர்த்திச் செல்கின்றனர்.
தாம் விரும்புகிறவர் தம்மைக் காதலிக்காவிடின், விரும்பப்படுகின்றவர் எவ்வுறவுமில்லா அன்பற்றவர் என்று எண்ணிக் கொள்ளவேண்டியதுதான் என்பது கருத்து.

இக்குறளுக்கு உரையாளர்கள் தாம் விரும்புகின்றவர் தம்மை விரும்பாராயினார் என்றால்:
நற்குணங்கள் பலவுடையரென்று உலகத்தாரால் விரும்பப்பட்டாரும் விருப்பமில்லாராவர் என்றும்
முன்னமே அவரோடு நட்புப் பூண்டிருப்பதற்குப் பேறு பெற்றிலேம் என்றும்
கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும் தீவினையாட்டியர் ஆவர் என்றும்
அவர் அன்பில்லாதவரே. என்றும்
விரும்பிய மகளிர் எவ்வுறவும் இல்லாதவர் என்றும்
அம்மகளிரால் விரும்பப்படுவர் பழந்தொடர்புடையவர் அல்லர் என்றும்
காதலிக்கப் படவேண்டிய மகளிர் காதல் உரிமையற்றவராகிறார் என்றும்
உலகமே நம்மை விரும்பினாலும் பயனில்லை என்றும்
பலவாறாக உரை கூறினர்.
இவற்றுள் 'அவர்மாட்டு நாமே காதலை வைக்கப்பட்டோம் ஆயின் முன்னமே அவரோடு நட்புப் பூண்டிருப்பதற்குப் பேறு பெற்றிலேம்'' (காலிங்கர்) என்பதுவும் 'விரும்பப்படுகின்றவர் பழந்தொடர்புடையவர் அல்லர் என்பதை யன்றி என்ன செய்வது?'' (இரா இளங்குமரனார்) என்பதும் பொருத்தமாகத் தோன்றுகின்றன.

‘வீழப்படுவார்’ என்பதற்கு உலகத்தாரால் விரும்பப்படுவார் என உலகத்தின் மேலதாக மணக்குடவரும், கற்புடைமகளிரால் மதிக்கப்படுவார் என மகளிர் மேலதாகப் பரிமேலழகரும், வருவித்துரைக்கின்றனர். இவர்கள் இருவருமே பின்வரும் வீழப்படாரெனின் என்பதற்கு கணவரான் விரும்பப் படாராயின் என்கின்றனர். பின்னுள்ள வீழப்படார் என்பது கணவரைக் குறிப்பதாகக் கொண்டதால் முதலில் உள்ள வீழப்படுவார் என்பதற்கு உலகத்தாரால் விரும்பப்படுவார்/மதிக்கப்படுவர் என்றனர் போலும்.

'கெழீஇயிலர்' யார்?

'கெழீஇயிலர்' என்றதற்கு விருப்பமில்லாராவர், முன்னமே அவரோடு நட்புப் பூண்டிருப்பதற்குப் பேறு பெற்றிலேம், தீவினையாட்டியர், நல்வினை பொருந்தியவர் அல்லர், உலகில் மற்றவர் எவராலும் மதிக்கப்படாத நிலையை அடைவர், எவ்வுறவும் இல்லாதவர், பழந்தொடர்புடையவர் அல்லர், அன்பில்லாதவர், நல்வினைப் பயனைப் பொருந்தினவரல்லர், காதல் உரிமையற்றவராகிறார், ஆசைப்பட்ட நமக்கு அன்புக்குரிய உறவு என்று எதுவும் இல்லை, நல்வினை செய்யாதவர் ஆவர் என்று வேறுபட்ட வகையில் உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'கெழீஇ இலர் என்பது கெழுதகைமை இலர் என்பதன் சுருக்கமெனக் கருதலாம். கெழுதகைமை, பெருங்கிழமை (805) என்றும் அன்பின் வழிவந்த கேண்மை (807) என்றும் ‘பழைமை; அதிகாரத்துச் சுட்டப்பெறும். ஆகவே ‘கெழீஇயிலர்’ என்பது அன்பின் வழிவந்த கேண்மையாகிய பெருங்கிழமையைக் குறிப்பதாகக் கோடல் பொருந்தும்' என்பார் இரா சாரங்கபாணி. பெருங்கிழமை என்பது மிகுந்த உரிமை எனப் பொருள்படும். இது நீண்டகாலத் தொடர்பையும் குறிக்கிறது. 'அன்பின் வழிவந்த கேண்மையவர்’ என்றது அன்புடனே நெடுங்காலம் தொடர்ந்து வந்த பழைய நட்பினை உடையவர் என்பதைச் சொல்வது.
இங்கு 'கெழீஇஇலர்' என்று எல்லாராலும் விரும்பப்படும் தம்மை விரும்பாத கணவரை எவ்வுறவுமில்லா அன்பற்றவர் எனத் தலைவி குறிக்கிறாள்.

'கெழீஇயிலர்' என்றதற்கு எவ்வுறவும் இல்லாதவர் என்ற பொருள் பொருந்தும்.

தாம் விரும்புகின்றவரால் விரும்பப்படார் என்றால் விரும்பப்படுவர் அவர் எவ்வுறவுமில்லா அன்பற்றவர் எனக் கொள்ளவேண்டியதுதான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தனிப்படர் மிகுதியில் ஒருதலைக் காதலாக அமைந்த இல்வாழ்க்கையை இரங்குகிறாள் தலைவி.

பொழிப்பு

தாம் விரும்புகின்றவரால் விரும்பப்படார் என்றால் விரும்பப்படுவர் எவ்வுறவும் இல்லாதவர் என்பதாம்.