ஒருவர்க்கொருவர் உதவி செய்வதாலேயே உலகம் இயங்குகிறது. பலருதவியும் தன் முயற்சியும் இயைந்த சேர்க்கையே வாழ்க்கையாகிறது. ஒருவரது வாழ்வில் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத வாயில்கள் வழியாக ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன. துன்பங்கள் நேர்கின்றன. அதுபோன்ற வேளைகளில் பிறர் உதவியில்லாமல் அவற்றிலிருந்து மீள்வது கடினம். ஆனாலும் யாராவது எங்கிருந்தாவது உதவுவர். அவ்விதம் எண்ணிப்பாராமல் அதாவது இயல்பாக நமக்குச் செய்யப்பட்ட நன்மைகளை மறவாமல் நினைந்து போற்றவேண்டும். உதவி என்பது பொருளுதவி மட்டுமன்றி எல்லாவகையான உதவிகளையும் குறிக்கும்.
நன்றி என்ற சொல் இன்று ஒருவர் செய்த உதவிக்கு நன்றியுணர்ச்சி காட்டுதல் அல்லது திரும்ப உதவுதல் என்ற பொருள்களில் பயன்பாட்டில் உள்ளது.
ஆனால் இவ்வதிகாரத்தில் நன்றி என்ற சொல் நன்மை அல்லது உதவி என்ற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. செய்யப்பட்ட உதவி நினைக்கப்படவேண்டும் என்றுதான் இங்கு சொல்லப்படுகிறது; நன்றிக்கு நன்றி செய்வது அல்ல. அதாவது செய்யப்பட்ட நன்றியை மறவாது இருப்பது பற்றியதே இவ்வதிகாரம். செய்ந்நன்றியறிதலை உதவியறிதல் எனவும் கொள்ளலாம். செய்த நன்றி அதாவது செய்யப்பட்ட நன்றி என்பது செய்ந்நன்றி எனச் சுருங்கியது.
'ஒருவர் நமக்குச் செய்த உதவியை மறவாது நினைவிற்கொள்ளவேண்டும்.என்றால் ஏதோ செய்ததற்குச் செய்வது அல்ல. இன்ன காலத்து இவர் இன்ன செய்தார் எனப் பாராட்டிப் பேசினும் செய்ந்நன்றி தாழும் என்னும் கருத்தை எண்ணி ‘நன்றி கூறல்’ என்னாது ‘நன்றியறிதல்’ என்று கூறப்பட்டது (தண்டபாணி தேசிகர்).
உதவி பற்றியும் உதவி பெற்றோர் பற்றியும் பேசும் அதிகாரம் உதவி செய்தோர் பற்றி ஒன்றும் குறிக்கவில்லை.
நன்மையின் அளவை எண்ணாது செய்யப்பட்ட உதவிக்காகவே அதைப் பெரிதாகப் போற்றுவர் நன்றியுணர்வுள்ளவர்கள்; நன்மை செய்தவர்களை எப்பொழுதும் மறக்காமல் தொடர்பிலேயே வைத்திருக்க வேண்டும்; நன்மையல்லாதவற்றை மறக்கப் பயிற்சி கொள்ளவேண்டும்; சிறு உதவியையும் பெரிதாகப் போற்ற வேண்டும்; ஒருவன் கொல்வது போன்ற துன்பத்தை செய்தாலும் அவன் செய்த ஒரு சிறு நன்மையின் நினைவு அதை மறக்கடிக்கும்; உதவியைப் பெற்ற பிறகு, மனதின் சிறுமையால், செய்யப்பட்ட நன்மையை மறந்துவிடக்கூடாது; செய்ந்நன்றி மறத்தல் கொடிய செயலாகும்; ஒருவன் எந்த நன்மையை மறந்தாலும் மீட்சி பெறலாம், ஆனால் செய்த நன்றியை மறந்தால் அத்தீச் செயலிலிருந்து மீட்சியே இல்லை; இவை இவ்வதிகாரம்..தரும் செய்திகள்.