இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0108



நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் குறள் எண்:108)

பொழிப்பு: ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்

மணக்குடவர் உரை: பிறர் செய்த நன்றியை மறப்பது என்றும் நன்றல்ல: பிறர் செய்த தீமையை அன்றே மறப்பதன்றே நன்றாம்.
இது தீமையை மறக்க வேண்டுமென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: நன்றி மறப்பது நன்று அன்று -ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறன் அன்று; நன்று அல்லது அன்றே மறப்பது நன்று - அவன் செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது அறன்.
(இரண்டும் ஒருவனாற் செய்யப்பட்ட வழி, மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு.)

வ சுப மாணிக்கம் உரை: உதவியை மறப்பது என்றும் நல்லதில்லை. உதவாமையை உடனே மறப்பது நல்லது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது.அன்றே மறப்பது நன்று


நன்றி மறப்பது நன்றன்று:
பதவுரை: நன்றி-உதவி; மறப்பது-மறத்தல்; நன்று-நன்மை; அன்று-இல்லை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர் செய்த நன்றியை மறப்பது என்றும் நன்றல்ல;
பரிதி: ஒருவர் செய்த நன்றியை மறப்பது நன்றல்ல;
காலிங்கர்: உலகத்து ஒருவர் செய்த நன்றி பெரும்பயனைத் தரும். ஆதலால், தமக்கு ஒருவர் செய்த நன்மையைத் தாம் மறப்பது தமக்கு நன்மை அல்ல'.
பரிமேலழகர்: -ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறன் அன்று;

ஒருவர் செய்த நன்றியை மறப்பது நன்றல்ல' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் ' ஒருவனர் செய்த நன்மையை மறப்பது அறமாகாது', 'துன்பக் காலத்தில் செய்த உதவியை மறப்பது நல்லதல்ல', ' ஒருவன் செய்த நன்மையை மறப்பது நல்லதன்று', 'ஒருவர் செய்த உதவியை மறப்பது அறமன்று ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவர் செய்த உதவியை மறப்பது நல்லதல்ல என்பது இப்பகுதியின் பொருள்.

நன்றல்லது அன்றே மறப்பது நன்று:
பதவுரை: நன்று-நன்மை; அல்லதுஅல்லாதது; அன்றே=அக்கணமே; மறப்பது-மறத்தல்; நன்று-நன்மை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர் செய்த தீமையை அன்றே மறப்பதன்றே நன்றாம்.
மணக்குடவர் கருத்துரை: இது தீமையை மறக்க வேண்டுமென்று கூறிற்று
பரிதி: ஒருவர் செய்த குற்றத்தை அன்றே மறப்பது நன்று என்றவாறு.
காலிங்கர்: அதனால், நன்மை அல்லாதது ஒருவர் செய்யின் அதனை அப்பொழுதே மறந்து விடுவதே நன்மை என்றவாறு.
பரிமேலழகர்: அவன் செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது அறன்.
பரிமேலழகர் கருத்துரை: இரண்டும் ஒருவனாற் செய்யப்பட்ட வழி, மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு.

'அவர் செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது நன்று' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆனால் அவர் செய்த நன்றல்லாத தீமையைச் செய்த அப்பொழுதே மறப்பது அறமாகும் ', '.பின்னால் அவர்கள் செய்யும் குற்றத்தை உடனே மறந்துவிடுவது நல்லது', '.ஆனால் அவன் செய்த தீமையை செய்த பொழுதே மறப்பது நன்று','. ஒருவர் செய்த தீமையை அப்பொழுதே மறப்பது அறம் ' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அவர் செய்த நன்மையல்லாததை அப்பொழுதே மறந்துவிடுவது நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செய்யப்பட்ட உதவியை நினைவில் நிறுத்திக் கொள்வதும் நன்மையல்லாதனவற்றை நிகழ்ந்த பொழுதே மறந்துவிடுவதும் நற்செய்கைகள் எனச் சொல்லும் பாடல்.

ஒருவர் செய்த நன்றியை மறப்பது நல்லதல்ல; அவர் செய்த நன்மையல்லாததை அன்றே மறந்துவிடுவது நல்லது என்பது பாடலின் பொருள்.
அன்றே என்ற சொல் குறிப்பது என்ன?

நன்றி என்ற சொல்லுக்கு உதவி என்று இங்கு பொருள்.
மறப்பது என்ற சொல் மறந்துவிடுவது என்ற பொருளது
நன்றன்று என்ற தொடர்க்கு நல்லதல்ல என்பது பொருள்.
நன்றல்லது என்ற தொடர் நன்மையல்லாதது என்ற பொருள் தரும்.
நன்று என்ற சொல் நல்லது குறித்தது.

தனக்குச் செய்யப்பட்ட உதவியை மறப்பது நல்லதல்ல. அதுபோல நன்று அல்லாதவற்றை அப்பொழுதே மறந்து விடுவது நல்லது. .

பிறர் செய்த உதவியை மறப்பதும், பிறர் செய்த தீங்கை நினைத்திருப்பதும் நல்லதல்ல. நன்றி மறப்பது அறத்துக்குப் புறம்பானது.; பிறர் செய்த தீங்கை மறக்காது இருந்தால் மனம் அமைதியுறாமல் நம்மையும் பதிலுக்குத் தீங்கு செய்யத் தூண்டும்.. இன்னா செய்தாருக்கு அவர் நாணும்படி நன்மை செய்து ஒறுக்க்வேண்டும் என்று பிறிதோர் இடத்தில் வள்ளுவர் அறவுரை கூறியுள்ளார். குற்றத்தை மறந்துவிடுவதால் கேடு நேராது என்பது உறுதி.. நன்றல்லது மறத்தல் என்பது மறந்து எதிர்த் தீமை செய்யாமையாம். .

நன்றி செய்தவரும் நன்மையில்லாததைச் செய்பவரும் ஒருவரே என்ற வகையில் சில உரையாளர்கள் பொரூள் கூறினர். செய்த நன்றியை மறப்பது நன்றன்று. நன்மையல்லாததை மறப்பது நன்று என்று மற்ற உரையாசிரியர்கள் பொதுவகையில் கூறினர். இரண்டுமே ஏற்கத்தக்கன என்றாலும் பொதுவகையில் சொல்லப்பட்ட பொருள் சிறந்தது.
நன்றல்லது என்பதற்கு வ சுப மாணிக்கம்: உதவாமை .என்று பொருள் கூறுவார். இதுவும் பொருத்தமாகவே உள்ளது.
உடன்பாடு எதிர்மறை என்ற இருவகை நடைகளையும் இக்குறளில் வல்ளுவர் பயனபடுத்தியுள்ளார்.. ஒரே போன்ற கருத்துக்களை மீண்டும் மீண்டும் கூறுவது அவை நம் மனதில் ஆழமாக வேறூன்றி விடும் என்பது இதன் நோக்கம்.

அன்றே என்ற சொல் குறிப்பது என்ன?

.அன்றே என்ற சொல்லுக்கு அப்பொழுதே என்று இங்கு பொருள்.கொள்வர்.
தாம் அடைந்த உதவிகளை என்றும் நினைப்பதுபோல், நல்லதல்லாதவற்றை நிகழ்ந்தபொழுதே மறக்க வேண்டும்!
ஒருவர் நமக்கு உதவாததையும் அல்லது ஒருவர் நமக்கு செய்த தீமையையோ மனத்துட் கொள்ளாது அப்பொழுதே மறந்துவிடவேண்டும். ஒருவர் பல நன்மைகளைச் செய்து வந்து ஒரு தீமை செய்வாராயின், அவ்வளவு நன்மையையும் மறந்து தீமையை மட்டும் நினைப்பது உலகியல்பு. நமக்குத் தீமை செய்தோர்க்கு நாமும் தீமை செய்வதற்கான காலத்தை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருப்போம். இதனால் பகைதான் வளரும். எனவே தீங்கை அன்றே, அப்பொழுதே மறந்து விடுக எனச் சொல்லப்பட்டது. பொறுமை என்ற பெயரில் அடக்கிவைத்து, சினம் பெருகுவதைவிட குற்றத்தை மறந்துவிட்டால், உள்ளே கனன்று கொண்டிருப்பது அடங்கிவிடும் என்பதனால் 'உடன்' மறத்தல் வற்புறுத்தப்பட்டது

ஒருவர் செய்த உதவியை மறப்பது நல்லதல்ல; அவர் செய்த நன்மையல்லாததை அப்பொழுதே மறந்துவிடுவது நல்லது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செய்ந்நன்றியறிதலு ம் தீமை பாராட்டாமையும் நல்லன எனக் கூறும் பாடல்.

பொழிப்பு

ஒருவர் செய்த உதவியை மறப்பது நல்லதல்ல; நன்மையல்லாததை அப்பொழுதே மறந்துவிடுவது நல்லது.