இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0107எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு

(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் குறள் எண்:107)

பொழிப்பு: தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்

மணக்குடவர் உரை: தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை அப்பிறப்பிலே யன்றி எழுமையிலுந் தோற்றும் பிறப்பெல்லாம் நினைப்பர் சான்றோர்.

பரிமேலழகர் உரை: தம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு - தம்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை; எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் - எழுமையினையுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர்.
('எழுமை' என்றது வினைப்பயன் தொடரும் ஏழு பிறப்பினை: அது வளையாபதியுள் கண்டது. எழுவகைப் பிறப்பு மேலே உரைத்தாம் (குறள் 62) விரைவு தோன்றத் 'துடைத்தவர்' என்றார். நினைத்தலாவது துன்பம் துடைத்தலான், அவர்மாட்டு உளதாகிய அன்பு பிறப்புத்தோறும் தொடர்ந்து அன்புடையராதல். இவை இரண்டுபாட்டானும் நன்றி செய்தாரது நட்பு விடலாகாது என்பது கூறப்பட்டது,)

தமிழண்ணல் உரை: தம்மிடம் நேர்ந்த கடுந்துன்பங்களைப் போக்கியவர் நட்பினை, ஏழேழு பிறப்பிற்கும் நல்லோர் நினைத்துக்கொள்வர்.
என்றென்றும் மறக்கக்கூடாது என்பதை இங்ஙனம் கூறுவது ஒரு மொழிநடை மரபு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
.தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்


எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்:
பதவுரை: எழுமை-எழுந்தன்மையுடையது; எழு-ஏழு வகையாகிய; பிறப்பும்-பிறப்பும்; உள்ளுவர்-நினைப்பர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அப்பிறப்பிலே யன்றி எழுமையிலுந் தோற்றும் பிறப்பெல்லாம் நினைப்பர் சான்றோர்;
பரிப்பெருமாள்: அப்பிறப்பிலே யன்றி எழுமையிலுந் தோற்றும் பிறப்பெல்லாம் நினைப்பர் சான்றோர்;
பரிதி: செனனம் தோறும் நினைக்கப்படும்;
காலிங்கர்: எழுவகையாகத் தோன்றி வருகின்ற பிறப்புதோறும் ஈண்டுச் செயலாகும் நன்றியைக் கொண்டே பிறவிதோறும் இடருறும் காலத்துப் பெரியோர் செய்த நன்றிகள் என்று இங்ஙனம் எழுவகைப் பிறப்பினும் தமக்குச் செய்தார் செய்தநன்றிகளைச் சிந்திப்பச் செய்ந்நன்றி அறிவார் என்றவாறு.
பரிமேலழகர்: எழுமையினையுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர்.
பரிமேலழகர் குறிப்புரை: 'எழுமை' என்றது வினைப்பயன் தொடரும் ஏழு பிறப்பினை: அது வளையாபதியுள் கண்டது. எழுவகைப் பிறப்பு மேலே உரைத்தாம் (குறள் 62)

''எழுமையினையுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர்'' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். யார் நினைப்பர் என்றதற்கு சான்றோர் என்று மணக்குடவரும் செய்ந்நன்றி அறிவார் என்று காலிங்கரும் நல்லோர் என்று பரிமேலழகரும் குறித்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் ' எடுக்கின்ற பிறப்பெல்லாம் எண்ணுவர்', 'தம்முடைய தொடர்கின்ற எழுவகைப் பிறப்புகளிலும் சான்றோர் மறவாது போற்றுவர். (எழுபிறப்பு என்பதற்கு ஏழு தலைமுரை என்றும் கூறுவர்', 'நன்றியுள்ளவர்கள் எழேழு தலைமுறைக்கும் நினைத்துப் பார்ப்பார்கள்', 'எழுமையினையுடைய எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர். (எழுமை-எழு. பிறப்பு-தமக்கு உண்டாகும் பலவகை நிலைமைகள்.)', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஏழேழு பிறப்பிற்கும் நினைத்துக்கொள்வர் என்பது இப்பகுதியின் பொருள்.

தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு:
பதவுரை: தங்கண்-தம்மிடத்தில்; விழுமம்-துன்பம்;- துடைத்தவர்-நீக்கினவர்; நட்பு-தோழமை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை .
பரிப்பெருமாள்: தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மாற்றுதவி செய்யுங்கால் நிலத்தினும் நீரினும் உளவான பொருளாற் செய்யுங்கால் அதற்கு நேர் ஒவ்வாமையின் எக்காலத்திலும் அவரை ஒழிவின்றி நினைத்தலேயாவது என்று கூறப்பட்டது..
பரிதி: தம்முடைய மனக்கிலேசத்தைத் துடைத்தவர் நடபை என்றவாறு
காலிங்கர்: தம்மாட்டு வந்து எய்தும் இடுக்கண் துடைத்தவர் நட்பை .
பரிமேலழகர்: தம்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை;
பரிமேலழகர் குறிப்புரை: விரைவு தோன்றத் 'துடைத்தவர்' என்றார். நினைத்தலாவது துன்பம் துடைத்தலான், அவர்மாட்டு உளதாகிய அன்பு பிறப்புத்தோறும் தொடர்ந்து அன்புடையராதல். இவை இரண்டுபாட்டானும் நன்றி செய்தாரது நட்பு விடலாகாது என்பது கூறப்பட்டது.

'தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துன்பக் கண்ணீரைத் துடைத்தவர் நட்பினை', 'துன்பத்தைப் போக்கியவரது நட்பினை', 'துன்பக் காலத்தில் வந்து உதவி செய்து துன்பங்களைத் துடைத்துவிட்டவர்களுடைய உறவை', 'தம்மிடம் உண்டாகிய துன்பத்தைப் போக்கியவர் நட்பினை' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

தம்மிடம் உண்டாகிய துன்பத்தை நீக்கியவர் நட்பினை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
துன்ப்ம் துடைத்தவர் உறவை கழிநெடுங்காலம் நினைத்தல் வேண்டும் என்னும் குறள்!.

தம்மிடம் உண்டாகிய துன்பத்தை நீக்கியவர் நட்பினை எழுமை எழுபிறப்பும் நினைத்துக்கொள்வர் என்பது பாடலின் பொருள்.
எழுமை எழுபிறப்பும் என்றால் என்ன?

உள்ளுவர் என்ற சொல்லுக்கு நினைப்பர் என்று பொருள்.
தங்கண் என்றது தம்மிடம் என்ற பொருள் தரும்.
விழுமம் என்றது துன்பம் குறித்தது.
துடைத்தவர் என்ற சொல் நீக்கியவர் எம்ற பொருளது.
நட்பு என்பது நட்பு, உறவு என்ற பொருள் தருவது.

தமது துன்பத்தைப் போக்கியவரின் நட்பைச் செய்ந்நன்றி அறிவார் ஏழேழ் பிறவிக்கும் மறவாது நினைத்துப் போற்றுவர்.

செய்யப்பட்ட எல்லா உதவிகளும் நினைக்கத்தக்கவனவே. ஆனால் துன்ப காலத்தில் துயர் துடைக்க விரைந்து வந்து உதவியவரின் நற்செய்கை நெடுங்காலம் மறவாதிருக்கச் செய்யும். இதை அழுத்தமாக உணர்த்த ஏழேழு பிறவிக்கும் மறக்கமாட்டார்கள் என்று கூறப்பட்டது. துடைத்தல் என்ற சொல் விரைவும் நிறைவுந் தோன்றச் சொல்லப்பட்டது என்பர். இச்சொல் கண்ணீர் துடைத்தலைக் குறிக்கக் கூறப்பட்டது என்று சில் உரையார்லர்கள் கருதுவர். துன்பம் நீங்கியவுடன் துன்ப நீக்கத்திற்கு உதவி செய்தவரை மறத்தல் கூடாது என்பதும் செய்தி..

எழுமை எழுபிறப்பும் என்றால்ம் என்ன?

எழுமை என்ற சொல்லுக்கு ஏழு என்பது பொருள். எழுபிறப்பும் என்ற் சொல் ஏழு பிறப்பு என்ற பொருள் தரும். எழுமை எழுபிறப்பும் என அதையே அழுத்தம் பெற இரட்டித்துக் கூறப்பட்டது.
எழுபிறப்பு என்பது எழுவகைப் பிறப்பைக் குறிக்கும். இது செடிகொடிகள், ஊர்வன, நீர் வாழ்வன, பறப்பன, விலங்கு, மானுடர், தேவர் என்பனவற்றைக் குறிக்கும் என்பர். எழுபிறப்பு என்பதற்கு இனிவரும் பிறப்பு அதாவது இனி உண்டாகப்போகிற பிறவி என்று பொருள் கூறுவோரும் உண்டு. இனிவரும் பிறப்பு அல்லது எழுந்த பிறப்பு என்றாலும் இரண்டுமே பிறப்பு-இறப்புத் தொடர்கள் அதாவது மறுபிறவி, பலபிறவி, பற்றிக் கூறும் சமயக்கருத்து பற்றியது ஆகும். ஒருவர் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப, அவர்களுக்கு பல பிறவிகள் உண்டு என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உண்டானது..
எழுமை எழுபிறப்பு என்பது பலநிலை வாய்ந்த அல்லது பலதன்மை கொண்ட பல தலைமுறை' என்று பொருள் தருகிறது என்றும் கூறுவர்.. .
வள்ளுவர் கூறியது சமயக் கருத்து என்பதை உடன்படாதவர்கள் எழுபிறப்பு என்பது வழிவழிப் பிறப்பு, பல தலைமுறை, ஏழு பரம்பரை, என்னும் விளக்கங்களைக் கூறுவர். இவையனைத்தும் அடுத்தடுத்த தலைமுறையையே குறிக்கும்.
குழந்தை 'நாலைந்து எடு, ஏழெட்டுப்பேர்' என்னும் வழக்குப் போல எழுமை என்னும் எண்ணுப் பெயரைப் பல என்னும் பொருளிலேயே ஆளுகின்றார் வள்ளுவர் என்றார். மறுபிறவி உண்டெனக் கொண்டாலும், ஒரு பிறப்பில் நிகழ்ந்தன பற்றி மறு பிறப்பில் எவரும் அறிதல் இல்லை. ஒருவர் இறந்தபின் உண்டாகும் பிறப்புகளில் என்ன நடக்கும் என்பதையும் ஒருவர் அறியமுடியாது. எனவே உலக வழக்குக் கருதி ஏழு தலைமுறை, ஏழேழு தலைமுறை, எனக் கூறும் உரைகளும் ஏற்கத்தக்கனவே..
இக்குறளில் எழுமை எழுபிறப்பு என்றது உயர்வு நவிற்சியாகவே, நீண்ட காலத்தைக் குறிப்பதற்காகச் சொல்லப்பட்டது.

தம்மிடம் உண்டாகிய துன்பத்தை நீக்கியவர் நட்பினை ஏழேழு பிறப்பிற்கும் செய்ந்நன்றிஅறிவார் நினைத்துக்கொள்வர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

துன்பக் காலத்தில் கண்ணீரைத் துடைத்தவர் செய்த் நன்றியினை எக்காலத்தும் நினைக்க என்று கூறும் செய்ந்நன்றியறிதல் பாடல்

பொழிப்பு

தம்முடைய துன்பத்தைப் போக்கியவரது நட்பினை ஏழேழு பிறப்பிற்கும் நினைத்துக்கொள்வர் செய்ந்நன்றிஅறிவார்