இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0110



எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

(அதிகாரம்:செய்ந்நன்றி அறிதல் குறள் எண்: 110 )

பொழிப்பு (மு வரதராசன்): எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.



மணக்குடவர் உரை: எல்லா நன்மைகளையுஞ் சிதைத்தார்க்கும் பின்பொரு காலத்தேயாயினும் உய்வுண்டாம்: ஒருவன் செய்த நன்றியைச் சாவாக்கின மகனுக்கு ஒரு காலத்தினும் உய்தலில்லை.

பரிமேலழகர் உரை: எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் - பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை - ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃது இல்லை.
(பெரிய அறங்களைச் சிதைத்தலாவது, ஆன்முலை அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்த்தப்புதலும் (புறநா.34) முதலிய பாதகங்களைச் செய்தல். இதனால் செய்ந்நன்றி கோறலின் கொடுமை கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: எவ்வகைப்பட்ட பெரிய நன்மையைச் சிதைத்தவர்க்கும் கடைத்தேறும் வழியுண்டு. தனக்குச் செய்த நன்றியைச் சிதைத்தவனுக்கு அப்பாவத்தினின்றுங் கரையேறும் வழியில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை.

பதவுரை: எந்நன்றி-எவ்வகை நன்மை; கொன்றார்க்கும்-சிதைத்தவர்க்கும்; உய்வு-வாழ்வு, தீச்செயல் நீங்கும் வாயில், தப்பிப்பு; உண்டாம்-உளதாகும். உய்வு-கழுவாய்; இல்லை-இல்லை; செய்ந்நன்றி-செய்த உதவி; கொன்ற-மறுத்த/மறந்த, நன்றியுணர்வைக் கொன்ற; மகற்கு-மகனுக்கு.


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா நன்மைகளையுஞ் சிதைத்தார்க்கும் பின்பொரு காலத்தேயாயினும் உய்வுண்டாம்;
பரிப்பெருமாள்: எல்லா நன்மைகளையுஞ் சிதைத்தார்க்கும் பின்பொரு காலத்தேயாயினும் உய்வுண்டாம்;
பரிதியார்: எந்த நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டு;
காலிங்கர்: அருள், அறம், வாய்மை முதலாகிய எல்லா நன்மைகளையும் கொன்ற பாவிக்குங் கொடுநரகத்திலின்று யாதானும் ஒரு காரணத்தினால் உய்வுண்டாம்;
பரிமேலழகர்: பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்;
பரிமேலழகர் குறிப்புரை: பெரிய அறங்களைச் சிதைத்தலாவது, ஆன்முலை அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்த்தப்புதலும் (புறநா.34) முதலிய பாதகங்களைச் செய்தல். [ஆன்முலையறுத்தல்-பசுவின் அடியை அறுத்தல்; கருவினைச் சிதைத்தல்-கருப்பத்தைக் கலைத்தல்; குரவர்த்தப்புதல்-பெரியோர்க்குத் தவறிழைத்தல்; பாதகங்கள் - தீச்செயல்கள் (பாவங்கள்)]

'எந்த நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டு' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'அருள், அறம், வாய்மை முதலா நன்மைகளைக் கொன்றவரைச் சொல்கிறார்; பரிமேலழகர் 'ஆன்முலை அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், குரவர்த்தப்புதலும் ஆகிய பெரிய அறங்களைச் சிதைத்தார்' என்று கூறி. உய்வு என்ற சொல்லுக்கு பாவத்தின் நீங்கும் வாயில் எனப் பிராயச்சித்தம்' என்ற பொருளும் கூறுகிறார். இவர் கூறும் ‘பார்ப்பார்த் தப்புதலும்’ என்பதற்குக் ‘குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்’ என்ற பாடமும் உண்டு.

இன்றைய ஆசிரியர்கள் 'எந்த நலத்தை அழித்தாலும் பிழைக்கலாம்', 'எவ்வளவு பெரிய அறங்களைச் சிதைத்தவர்க்கும் தப்பிக்க வழியுண்டு', 'எவ்வகைப்பட்ட பெரிய நன்மையைச் சிதைத்தவர்க்கும் கடைத்தேறும் வழியுண்டு', 'பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பிழைக்கும் வழி உண்டு' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எவ்வகைப்பட்ட நன்மையையும் சிதைத்தவர்க்கு மீட்சி கிடைக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் செய்த நன்றியைச் சாவாக்கின மகனுக்கு ஒரு காலத்தினும் உய்தலில்லை
பரிப்பெருமாள்: ஒருவன் செய்த நன்றியைச் சாவாக்கின மகனுக்கு ஒரு காலத்தினும் உய்தலில்லை
பரிப்பெருமாள் குறிப்புரை: பெண்டிர்க்கும் இது வேண்டுமாயினும் தலைமைபற்றி மகன் என்றார்.
பரிதியார்: செய்ந்நன்றி கொன்றாற்கு எந்தக் காலத்தினும் பிழைப்பில்லை என்றவாறு.
காலிங்கர்: மற்றும் தனக்கு ஒருவர் செய்த செய்ந்நன்றியைக் கொன்ற மகனாகிய கொடும்பாவிக்குக் கொடிய நரகத்தினின்றும் ஒரு காலத்தும் உய்வில்லை என்றவாறு.
பரிமேலழகர்: ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃது இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: இதனால் செய்ந்நன்றி கோறலின் கொடுமை கூறப்பட்டது.

'செய்ந்நன்றி கொன்றாற்கு எந்தக் காலத்தினும் உய்வில்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நன்றி கெட்டால் பிழைப்பில்லை', 'ஆனால் ஒருவர் செய்த நன்றியைச் சிதைத்தவனுக்குத் தப்பிக்க வழியே இல்லை', 'தனக்குச் செய்த நன்றியைச் சிதைத்தவனுக்கு அப்பாவத்தினின்றும் கரையேறும் வழியில்லை', 'ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தவனுக்குக் கடைத்தேறும் வழி இல்லை' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

செய்தஉதவிக்கான நன்றியுணர்வைக் கொன்றவனுக்கு மீள வழியில்லை என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
எவ்வகைப்பட்ட நன்மையையும் சிதைத்தவர்க்கு மீட்சி கிடைக்கும்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு மீள வழியில்லை என்பது பாடலின் பொருள்.
'செய்ந்நன்றி கொன்ற மகன்' யார்?

செய்தஉதவியை உணர மறுத்தவரை அறம் காயும்.

எந்த நற்செயல்களை அழித்தவர்களுக்கும் அத்தீச்செயல்களிலிருந்து மீட்சி கிடைக்கும்; ஆனால் ஒருவர் செய்த உதவிக்கான நன்றியுணர்ச்சியை அழித்தவர்க்கு மீள வழியே இல்லை.
இப்பாடலில் முதலில் வந்த நன்றி என்ற சொல் நன்மை என்ற பொருளில் வந்தது; ஈற்றடிக்கண் உள்ள நன்றி என்றது பிறர் தனக்கு நன்மை செய்ததில் தோன்றவேண்டிய நன்றியுணர்வைக் குறிக்க நின்றது.
நன்றியுணர்ச்சி என்பது தனக்குச் செய்யப்பட்ட உதவியின் பயன் அடைந்தவர்கள் செய்தார்க்குத் தப்பாமல் காட்ட வேண்டிய பண்பு ஆகும். நன்றியுணர்வைக் கெடுத்துத் தொலைத்தவர்க்குத் தப்புகின்ற வாயில் எங்கும், என்றும், எந்த வகையிலும் இல்லை எனச் செய்ந்நன்றியறிதலின் இன்றியமையாமையை வலியுறுத்தும் பாடல் இது. ஒருவர் செய்த நன்மையை மறப்பது அறமன்று; மறந்து அதை மறுப்பது மாசு நிறைந்த குணமாகும். நன்றி மறத்தல் என்பது செய்யப்பட்ட நன்மையை நினைவில் நிறுத்தாத குற்றம் குறிப்பது. நன்றி மறுத்தல் அல்லது நன்றி கொல்தல் என்பது தனக்குச் செய்யப்பட்ட உதவியைப் பாராட்டாமல் இருப்பதும் அதன் பயனை முற்றிலும் துய்த்தபின்னர் உதவியர் என்ன பெரிதாகச் செய்துவிட்டார் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்வதும் அந்நன்மையைத் தான் பெறவே இல்லை என்று மறுப்பதும் ஆகும். செய்த நன்றியை அன்றே மறுப்பவர்களும் உண்டு.

உய்வு என்பதற்கு நேர் பொருள் 'தப்பிப்பிழைத்தல்' என்பதாகும். இது ஒறுத்தலுக்கான குற்றத்திலிருந்து காப்பாற்றப்படுதலைக் குறிக்கும் சொல். இச்சொல்லுக்குப் பாவக்கழிவு எனவும் பொருள் கூறுவர்.
நன்றி கொன்ற மகற்கு உய்தியில்லை என்பதற்குச் செய்ந்நன்றியைக் கொன்ற மகனாகிய கொடும்பாவிக்குக் கொடிய நரகத்தினின்றும் ஒரு காலத்தும் உய்வில்லை என நரகத்தைத் தொடர்பு படுத்தியும், நன்றி கெட்டால் பிழைப்பில்லை, செய்ந்நன்றி கொன்றார் தப்பித் திருந்தவழியேயில்லை, தனக்குச் செய்த உதவியைச் சிதைத்தவனுக்கு கரையேறும் வழியில்லை, கயமைக் குழியில் வீழ்ந்து மீளா அழிவெய்துவர், நன்றி கொன்றவர்க்கு நல்வாழ்வு இல்லை, எதிர்வினை விளவுகளிலிருந்து பிழைக்க முடியாது, திருத்தநெறிக்கு மீளும் வழிவகைகள் இல்லை எனவும் பொருள் கூறினர்.
'செய்த குற்றங்களுக்கு அவ்வப்பொழுது பிராயச்சித்தம் இயற்றவேண்டும்; இல்லையேல் மறுமையில் நரகம்தான் கிடைக்கும்' என்பது போன்ற பாவக்கழிவுகள் வடவர் அறநுல்களில் கூறப்பட்டுள்ளன. 'பாவப் பிராயச்சித்தமாகத் தானம் செய்யலாம் அல்லது தனித்து வாழ்ந்து நோன்பும் மேற்கொள்ளலாம், கொலையுண்டவனுடைய மண்டை ஓட்டையோ அல்லது மற்றொன்றையோ கையில் ஏந்தி நாள்தோறும் ஏழுவீடுகளில் பிச்சை ஏற்று உண்டு பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் குடிசைகட்டி வாழ்ந்தால் குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த கொலைகாரனது குற்றம் நீங்கிவிடும்' என்பது போன்ற பிராயச்சித்தங்கள் அதாவது கழுவாய்கள் அவற்றில் சொல்லப்பட்டுள்ளன.
கழுவாய் அல்லது பாவத்தின் நீங்கும் வாயில்கள் வெவ்வேறு வடிவங்களில் மக்களால் நம்பப்படுகின்றன. குற்றச்செயல்களுக்குத் தகுந்தவாறு கழுவாய் மாற்றீடுகள் மாறுபடும். இவ்வாறு கழுவாய் என்பது அறநூல்களில் விதிக்கப்பட்டனவும் மக்களிடம் பரவலாக உள்ள அறம் சார்ந்த நம்பிக்கைகளுமாகவும் அறியப்படுவனவாம்.

செய்ந்நன்றியைக் கொல்வது மன்னிப்பே இல்லாத குற்றம் என்று அழுத்திச் சொல்லும் குறள் இது. நன்றிகொல்லுதலை தீச்செயல்களுக்கு இணையாகக் குறள் கருதுகிறது. செய்ந்நன்றி கொன்றவன் கொடிய தீர்ப்புக்கு உளவாகின்றான். கழுவாய் தேடி உய்தி பெறும் நிலைமை இவனுக்கு அறவே இல்லை என்கிறது பாடல். நன்றி பாராட்டுவது என்பது ஒரு அடிப்படை மனிதப் பண்பு, இது அற்றுப்போகிறவர்கள் மற்ற அறச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள். அவர்கள் எவ்விதத் தீச்செயல்களைச் செய்யவும் அஞ்ச மாட்டார்கள். அதுவே நன்றியை மறுப்பவர்களின் மற்ற தீச்செயல்களுக்குத் தோற்றுவாயாக அமைந்துவிடுமாதலால், செய்ந்நன்றி கொல்தல் மீட்சி இல்லாத தீவினைகளுள் ஒன்றாக வைக்கப்பட்டது.
உய்வுண்டாம் என்ற தொடர்வழி 'உய்தல் கூடும்' என்று பொருள் பெறமுடிகிறதே யன்றி, உறுதிப்பாடு இல்லை. ஆனால் 'செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை' என்பதில் தெளிவும் உறுதியும் இருக்கிறது. குற்றம் நீங்க பல வழிகள் உலகில் உண்டு. ஆனால் உதவி செய்ததற்கான நன்றியுணர்வை அழித்த மக்களுக்கு இறைவனது அருளுக்கும் வாய்ப்பு இல்லை என்பதும் சொல்லப்படுகிறது என்பது தெரிகிறது.
வள்ளுவர் மாந்தரிடம் காணப்படும் மற்ற மன மாசுகளையும் அவற்றிற்கான அற ஒறுத்தல்களையும் பல பாக்களில் கூறியுள்ளார். அவற்றிலிருந்து சில:
.... அன்பிலதனை அறம் காயும் (77)
கெடுவல் யான் என்பதறிக நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் (116)
.... அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் (121)
மனச்சான்று இருப்பவருக்கு 'உள்ளே உறுத்தும் தண்டனை'யில் இருந்து தப்ப வழியில்லை என்ற கருத்தாகவும். 'நன்றி கெட்டவர்களை இறைவன் காக்க மாட்டான்' என்றும் 'உய்வில்லை' என்பதற்கு விளக்கம் தருவர்.

'செய்ந்நன்றி கொன்ற மகன்' யார்?

'செய்ந்நன்றி கொன்ற மகன்' என்றதற்கு ஒருவன் செய்த நன்றியை சாவாக்கின மகன், செய்ந்நன்றி கொன்றார், தனக்கு ஒருவர் செய்த செய்ந்நன்றியைக் கொன்ற மகன், ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகன், ஒருவன் செய்த நன்றியைக் கெடுத்தவன், ஒருவன் செய்த செவ்விய நன்றியைக் கொன்ற மகன், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவன், பிறன் தனக்கு செய்த நன்மையினை மறப்பான், ஒருவன்‌ செய்த உதவியைத் தன்‌ உள்ளத்தில்‌ இல்லாதபடி அழித்த மகன், பிறர் செய்த நன்றியைக் கொன்றவர், ஒருவர் செய்த நன்றியைக் கெடுத்தவன், நன்றி கெட்டவன், ஒருவர் செய்த நன்றியைச் சிதைத்தவன், துன்பகாலத்தில் தனக்கு உதவி செய்த நன்றியை அழித்து உதவி செய்தவனுக்குத் தீங்கு செய்கிற ஒருவன், ஒருவர் தனக்குச் செய்த நன்றியை அழித்தவன், தனக்குச் செய்த நன்றியைச் சிதைத்தவன், ஒருவர் செய்த உதவியை மறந்தவன், ஒருவர் செய்த உதவியை மறந்து அவருக்குத் துன்பத்தைச் செய்தவன், ஒருவர் செய்த நன்றியைக் கெடுத்தவன், ஒருவன் தனக்குச் செய்த உதவியை மறந்தவன், தனக்குப் பிறர்) செய்த நன்றியை மறந்த மனிதன், ஒருவர் தனக்குக் செய்த வேண்டிய காலத்தில் செய்த உதவியினை மறந்து, நன்றிகெட்டு நடந்துகொள்ளும் மக்கள், உதவி செய்ததற்கான நன்றியுணர்வை அழித்த மக்கள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

செய்ந்நன்றி கொன்ற மகன் என்றது செய்த உதவியைப் பாராட்ட மனமில்லாதவனைக் குறிப்பது. இவன் நன்றி கெட்ட மனிதன். ஒருவர் செய்த உதவியை மறுப்பது செய்ந்நன்றி கொன்றல் ஆகும். தனக்குச் செய்யப்பட்ட நன்மைக்கு நன்றியுணச்சி இல்லாமல் ஒருவர் அந்த உதவியை மறுப்பது மிகவும் ஒறுக்கத்தக்க குணம். அவ்விதம் மறுத்தவனுக்கு கழுவாய் அறவே இல்லை.
செய்ந்நன்றி கொல்லுதல் என்பதற்கு நன்றி மறத்தல் என்றும் நன்றி மறந்து தீங்கு செய்தல் என்றும் பொருள் கூறினர். நன்றி மறத்தல் பற்றி நன்றி மறப்பது நன்றன்று ... என முந்தைய குறளில் (108) கூறப்பட்டுவிட்டது. எனவே அதற்கு நன்றி மறுத்தல் அதாவது நன்றியுணர்வை நினைவிற்கொள்ள மனமில்லாமல் அதை அழித்துவிடல் எனக் கொள்வதே பொருத்தம்.

'மகற்கு' என ஆண்பாலாற் கூறப்பட்டிருந்தாலும் பெண்பாலும் கொள்ளப்படும்.
'ஒருவன்', 'ஒருவற்கு' என்பவை பல இடங்களில் பயிலப்பட்டிருக்க, மகன் என்ற சொல் மிக அரிதாகவே குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மனிதர்க்கு என்று பொதுவாக குறிக்கத்தான் 'மகற்கு' எனப்பட்டதா? 'ஒருவற்கு' என்று கூறுவதை விடுத்து இங்கு 'மகற்கு' என்று ஏன் சொல்லப்பட்டது? பெற்றோர்க்குச் செய்யவேண்டிய நன்றியிலிருந்து அதாவது மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி... (மக்கட்பேறு 70) யிலிருந்து தவறிய மகனை இங்கு குறிப்பிட்டிருக்கலாம் என்பது ஒரு சிலர் கருத்து. இது சிந்தனைக்குரியது.

புறநானூற்றுப்பாடலும் இக்குறளும்:
'ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும்,
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்,
குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்,
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள' என,
'நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என,
அறம் பாடின்றே ஆயிழை கணவ!
(புறநானூறு 34 பொருள்: ஆனினது முலையாற் பெறும்பயனைக் கெடுத்த தீவினையாளர்க்கும் மாட்சிமைப்பட்ட ஆபரணத்தையுடைய பெண்டிரது கருப்பத்தை அழித்தோர்க்கும் தந்தை தாயாரைப் பிழைத்த கொடுந்தொழிலை யுடையோர்க்கும் அவர்செய்த பாதகத்தினை ஆராயுமிடத்து அவற்றைப் போக்கும் வழியுமுளவெனவும், நிலம் கீழ்மேலாம் காலமாயினும் (நிலம் கீழ் மேலாங் காலமாவது நில நடுக்கத்தால் மேடுபள்ள மாதலும், பள்ள மேடாதலுமாகிய காலம்) ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்தோர்க்கு நரகம் நீங்குதலில்லையெனவும் அறநூல் கூறிற்று; தேர்வுசெய்த ஆபரணத்தையுடையாள் தலைவ!)
-ஆலந்தூர் கிழார் பாடிய இப்புறப்பாட்டில் உள்ள "செய்தி கொன்றார்க்கு உய்தி இல்லென" என்னும் வரி இக்குறளின் சொல்லாட்சியுடன் பொருந்தி வருகிறது. மேலும் இச்செய்யுளின் முதல் நான்கு அடிகள் 'எந்நன்றி கொன்றார்க்கும்' என்ற தொடர்க்கு விளக்கங்களாக அமைந்துள்ளன. 'அறம்பாடிற்றே' என்ற தொடர்வழி இப்பாடல் கூறும் கருத்து வேறொரு நூலிருந்து எடுத்தாளப்பட்டது என்று இப்பாடலாசிரியரே கூறுகிறார். இவற்றால் இதில் சொல்லப்பட்ட "அறம்பாடிற்றே" என்ற தொடர் 'அறநூல்' எனப்பொருள் கொள்ளும் முறையில் திருக்குறளைச் சுட்டுவதே எனச் சொல்வர். ஆனால் வள்ளுவர் காலத்தை நிறுவ முயலும் ஆய்வாளர்கள் புறநானூற்றுப் பாடல்கள் எல்லாம் சங்க காலத்தில் பாடப்பெற்றன; எனவே சங்கம் மருவிய காலத்தில் படைக்கப் பெற்ற குறளை அது சொல்லியிருக்க முடியாது; வள்ளுவர் தான் புறநானூற்றுப் பாடலின் சொற்களை தம் செய்யுளில் ஆண்டு கொண்டிருக்கிறார் என்கின்றனர்.
அப்படியென்றால் "அறம்பாடிற்றே" என்பது எதைக் குறிக்கிறது? "அறம்" என்ற பெயரில் வேறொரு நூல் இருந்ததா? சங்கப் பாடல் தொகுப்பிலுள்ள பாக்கள் எல்லாம் சங்க காலத்திலேயே தோன்றியன என்றும் சொல்வதிற்கில்லை என்ற கருத்தும் உண்டு. சங்க மருவிய காலத்தில்-அதாவது குறள் எழுதப்பட்ட காலத்திற்கு பின் தோன்றிய மேற்சொன்ன பாடலும் புறநானூற்றுத் தொகுதிக்குள் இடம் பெற்றிருக்க வாய்ப்பு உண்டா? அப்படியிருப்பின் குறளைப் பின்பற்றி புறநானூறு 34 எழுதப்பட்டிருக்கலாம். இவ்வாறாக இப்புறநானூற்று பாடல் குறளுக்கு முந்தையதா அன்றி பிந்தையதா என்ற ஆய்வு இன்னும் முடிவு காணமுடியாததாகவே இருக்கிறது.
'இப்புறப் பாடலிலிருந்து இன்னொரு குறிப்பும் நாம் பெறுகிறோம். வள்ளுவர் நூலுக்குச் சங்கத் தொகைக் காலத்தில் 'அறம்' என்ற பெயரே வழங்கியிருக்கும் போலும். முப்பாலில் பொருளும் இன்பமுங்கூட அறத்தின் அடிப்படையுடையன அல்லவா? ஆதலின் திருக்குறளுக்கு 'அறம்' என்ற பெயர் அதன் உயிர்த்தன்மையைக் காட்டும் மெய்ப்பெயராகும்' என்பார் வ சுப மாணிக்கம்.

எவ்வகைப்பட்ட நன்மையையும் சிதைத்தவர்க்கு மீட்சி கிடைக்கும்; செய்தஉதவிக்கான நன்றியுணர்வைக் கொன்றவனுக்கு அதிலிருந்து மீள வழியில்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செய்ந்நன்றி அறிதல் இல்லார்க்கு மன்னிப்பு இல்லை.

பொழிப்பு

எவ்வகைப்பட்ட நன்மையைச் சிதைத்தவர்க்கும் கழுவாய் உண்டு. ஆனால் செய்தஉதவிக்கான நன்றியுணர்வைக் கொன்றவனுக்கு மீட்சியே இல்லை.