இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0109கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்

(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் குறள் எண்:109)

பொழிப்பு: முன் செய்த உதவி செய்தவர் பின்பு கொன்றாற் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்

மணக்குடவர் உரை: தமக்கு முன்பு நன்மை செய்தார் தம்மைக் கொன்றாலொத்த இன்னாமையைப் பின்பு செய்யினும் அவர் முன்பு செய்த நன்றி யொன்றை நினைக்க அவ்வின்னாமை யெல்லாங் கெடும்

பரிமேலழகர் உரை: கொன்று அன்ன இன்னா செயினும் - தமக்கு முன் ஒரு நன்மை செய்தவர், பின் கொன்றால் ஒத்த இன்னாதவற்றைச் செய்தாராயினும்; அவர் செய்த நன்று ஒன்று உள்ளக் கெடும் - அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றனையும் நினைக்க இல்லையாம்.
(தினைத்துணை பனைத்துணையாகக் கொள்ளப்படுதலின், அவ்வொன்றுமே அவற்றையெல்லாம் கெடுக்கும் என்பதாம். இதனால் நன்றல்லது அன்றே மறக்கும் திறம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: ஒரு நன்மை செய்தவர் பெருந்தீமை செய்தாலும் அந்நன்மையை நினைக்கவே தீமை மறையும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
.கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்


கொன்றன்ன இன்னா செயினும்:
பதவுரை: கொன்றன்ன-கொன்றாலொத்த; இன்னா-தீங்குகள்; செயினும்-செய்தாலும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்கு முன்பு நன்மை செய்தார் தம்மைக் கொன்றாலொத்த இன்னாமையைப் பின்பு செய்யினும்;
பரிப்பெருமாள்: தமக்கு முன்பு நன்மை செய்தார் தம்மைக் கொன்றாலொத்த இன்னாமையைப் பின்பு செய்யினும்;
பரிதி: தன்னைக் கொன்றாற்போல் ஒத்த பொல்லாங்கு செய்தாலும்;
காலிங்கர்: ஒருவர் தம்மைக் கொல்லும் கொலைக்கு மேற்பட்டதோர் இன்னாமை இல்லை; மற்று அது போலவே தத்தம் பொல்லாங்கு செயினும்; .
பரிமேலழகர்: தமக்கு முன் ஒரு நன்மை செய்தவர், பின் கொன்றால் ஒத்த இன்னாதவற்றைச் செய்தாராயினும்;

'தமக்கு முன்பு நன்மை செய்தார் தம்மைக் கொன்றாலொத்த இன்னாமையைப் பின்பு செய்யினும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முன் ஒரு நன்மை செய்தவர் பின் கொன்றாலொத்த தீமை செய்யினும் ', 'ஒருவன் கொலை செய்துவிடுவதைப் போன்ற துன்பத்தைச் செய்துவிட்டாலும்', 'தனக்கு ஒரு நன்மை செய்தவர் பின் தன்னைக் கொல்வது போன்ற தீமையைச் செய்தாலும்', 'தமக்கு முன் நன்மை செய்தவர் பின்னர் கொல்லுதல் போன்ற தீமையைச் செய்தாலும்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

முன் ஒரு நன்மை செய்தவர், பின் கொன்றால் ஒத்த தீங்கைச் செய்தாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்:
பதவுரை: அவர்செய்த-அவர் இயற்றியஒன்று-ஒன்று; நன்று-நன்மை; உள்ளக்-நினைக்கக்; கெடும்-அழியும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் முன்பு செய்த நன்றி யொன்றை நினைக்க அவ்வின்னாமை யெல்லாங் கெடும்
பரிப்பெருமாள்: அவர் முன்பு செய்த நன்றி யொன்றை நினைக்க அவ்வின்னாமை யெல்லாங் கெடும்
பரிப்பெருமாள் குறிப்புரை :ஒருமுறை நன்மை செய்தார் பலகால் தீமை செய்வார் ஆயின் அதற்குச் செய்வது என்னை என்றார்க்கு இது கூறப்பெர்ரது.
பரிதி: தினையத்தனை நன்றி செய்ததை நினைத்து அதனை விடுக என்றவாறு.
காலிங்கர்: அவர் முன்பு செய்தது ஒன்றே ஆயினும் நன்றி உளதாயின் அதனைச் சிந்திக்கவே எல்லாக் குற்றமும் தீரும் செய்ந்நன்றி அறிவார்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றனையும் நினைக்க இல்லையாம்.
பரிமேலழகர் குறிப்புரை: தினைத்துணை பனைத்துணையாகக் கொள்ளப்படுதலின், அவ்வொன்றுமே அவற்றையெல்லாம் கெடுக்கும் என்பதாம். இதனால் நன்றல்லது அன்றே மறக்கும் திறம் கூறப்பட்டது.

'அவர் முன்பு செய்த நன்றி யொன்றை நினைக்க அவ்வின்னாமை யெல்லாங் கெடும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் ' அவர் செய்த நன்மையைப் பனைத்துணையாகக் கருதி மதிக்கவே அத்தீமை மறைந்தொழியும்', 'அவன் முன் நம்முடைய துன்பக் காலத்தில் உதவி செய்த அந்த ஒன்றை நினைத்துப் பார்த்தால் இப்போது அவன் செய்த துன்பங்கள் மறைந்துவிடும்', 'அவர்செய்த நன்மை யொன்றினை நினைத்துப் போற்ற, அத்தீமைகளெல்லாம் கெட்டொழியும்', 'அவர் செய்துள்ள நன்மை ஒன்றை நினைக்க அத்தீமை மறக்கப்படும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அவர் செய்த நன்மை ஒன்றை நினைக்க தீங்கு மறைந்து போகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவர் முன் செய்த நன்றியை நினைவுகூர்வது, அவரால் உறும் இன்னாமையை மறக்க வழிசெய்யும் என்னும் குறள்.

முன் ஒரு நன்மை செய்தவர், பின் கொன்றால் ஒத்த தீங்கைச் செய்தாலும் அவர் செய்த நன்மை ஒன்றை நினைக்க தீங்கு மறைந்து போகும் என்பது பாடலின் பொருள்.
'கொன்றன்ன இன்னா' குறிப்பது என்ன?

செயினும் என்ற சொல்லுக்கு செய்தாலும் என்பது பொருள்.
அவர்செய்த என்ற தொடர் அவர் முன் செய்திருந்த என்ற பொருள் தரும்.
ஒன்றுநன்று என்ற தொடர் ஒரு நன்மை என்ற பொருளது.
உள்ள என்ற் சொல் நினைக்க என்று பொருள்படும்.
கெடும் என்ற சொல்லுக்கு அழியும் அல்லது மறையும் என்பது பொருள்.

ஒருவர் கொல்வதைப் போன்ற தீங்கைச் செய்தாலும் அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைக்க அத்தீமை இல்லாமல் போய்விடும்.

ஒருவரைக் கொல்லும் கொலைக்கு மேற்பட்டதோர் இன்னாமை2 இல்லை; கொலைசெய்தலுக்கு ஒப்பான, உயிரை வாட்டும் துன்பம் ஒருவன் தந்தாலும் அவன் செய்த தினைத்துணையான உதவியானாலும் அதை நினைத்துப் பார்த்தாலே அவன் செய்த கொலைத்துன்பம் தானாகவே மறக்கப்படும். அவன் செய்த துன்பத்தை மறைந்தொழியச் செய்வதற்கு அவன் செய்த நன்மையை மனத்துட் கொண்டு பாராட்டினால் போதும் என்கிறது இப்பாடல். . இது நன்றல்லதை மறப்பதற்கு ஒரு நல்ல வழியுமாகிறது.
இங்கு இன்னாமையின் மேல்எல்லையாய் இருக்கும் கொலைத்துன்பத்தைச் சொல்லி அத்தீமையையும் மறந்து விடுக என்று .இன்னா செய்பவரை மறப்பதை,, எல்லோருக்கும் இயலும் வகையில், ஒரு வழியாகச் சொல்லப்படுகிறது. அவன் முன் எந்த வகையிலாவது நன்மை செய்திருந்தால் அந்த நன்மையை நினைத்துக் கொண்டால்; இத்தீமை தானே மறைந்து போகும் என்கிறது குறள். அந்த நன்மையை எண்ண எண்ண நமக்குச் செய்யப்பட்ட தீமையை நினைக்க மனத்திற்கு இடமில்லாது போகும். அவர் துன்பம் செய்கிறார் என்ற நினைப்பும் நீங்கும்.

கொன்றன்ன இன்னா' குறிப்பது என்ன?

கொன்றன்ன என்பது கொன்றால் அன்ன’ என விரியும். ‘ கொன்றன்ன இன்னா என்பதற்குக் கொலைக்குச் ஒத்த துன்பங்கள் அல்லது தீமைகள் என்பது பொருள்.. கொலை செய்யப்படுபவர் என்ன விதமான உச்ச நிலையான உயிர்வதைத் துன்பங்கள் அனுபவிப்பர் என்பது யாவரும் உணரக்கூடியதே. கொல்வது போன்ற கொடுமை இழைத்தாலும் செய்த நன்மையை மறவாதே என்று சொல்லப்பட்டதால் செய்த நன்றி அறிதலுக்கு வள்ளுவர் தரும் அழுத்தம் புலப்படுகிறது.!

வ சுப மாணிக்கம் ஓர் எடுத்துக்காட்டுடன் இக்குறட்பொருளை விளக்குகிறார். உதவி செய்தவரே நன்றி யுணர்ச்சியைக் கொல்வது பற்றிப் பேசுகிறார் அவர். . 'நன்றி செய்தவன் உதவி பெற்றவனைக் கைம்மாறு காட்டும்படி கட்டாயப்படுத்துகிறான். தினைத்துணை நன்றி செய்தவன் தானே பனைத்துணைக் கைம்மாறு வேண்டுகிறான். இவ்விதம் உதவி பெற்றானது நன்றியுணர்ச்சியைக் கொல்கிறான். நன்றி காட்டத் தவக்கஞ் செய்வானேல், பகைத்துச் சீறியெழுந்து, நெடுநாட் பகைவன் போல் உயிரை அழிக்கும் துன்பம் உறுத்துகிறான். இஃதோர் மனநிலை. இச்சூழலில் உதவி பெற்றவன் தன் மனத்தூய்மை கெடா வண்னம் நடப்பது யாங்ஙன்? சிறந்த மக்கட் பண்பான நன்றியுணர்ச்சியைக் காப்பது யாங்ஙனம்? ஒருவரே நமக்கு நன்மையும் அன்மையும் செய்த நிலையில், -நல்லது ஒன்றாக, தீயபலவாகச் செய்த நிலையில்-பண்பு வேண்டும் குறளிது. நினைவுப் படைப்பால் எதனையும் அழித்து ஆக்கிக் கொள்ளும் அகப்பெருவன்மை, வேண்டுங்கால், தம் நெஞ்சத்துப் பிறக்குமாதலின், 'இன்னா செயினும் உள்ளக் கெடும்' என வழி காட்டினார்'

முன் ஒரு நன்மை செய்தவர், பின் கொன்றால் ஒத்த தீங்கைச் செய்தாலும் அவர் செய்த நன்மை ஒன்றை நினைக்க தீங்கு மறைந்து போகும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நல்லதை நினைவு கொள்ளும்போது நன்மைஅல்லாதது மனதிலிருந்து மறையும். என்னும் செய்ந்நன்றியறிதல் பாடல்.

பொழிப்பு

முன் ஒரு உதவி செய்தவர் பின் கொன்றாலொத்த தீமை செய்யினும் அவர் செய்த நன்மையை நினைக்கவே அத்தீமை மறைந்தொழியும்