இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0104



தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் குறள் எண்:104)

பொழிப்பு: ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்

மணக்குடவர் உரை: தினையளவு நன்றி செய்தாராயினும், அதனை யவ்வளவிற்றென்று நினையாது, பனையளவாகக் கொள்வார் அதன் பயனை யறிபவர்.
பனையளவு- அதனுயர்ச்சி

பரிமேலழகர் உரை: தினைத்துணை நன்றி செயினும் - தமக்குத் தினையளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும்; பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் - அதனை அவ்வளவிற்றாகக் கருதாது, பனையளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார்.
('தினை', 'பனை' என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டுவன சில அளவை. அக்கருத்தின் பயனாவது அங்ஙனம் கருதுவார்க்கு வரும் பயன்.)

இரா சாரங்கபாணி உரை: சிறு தினையளவு நன்மை செய்தாலும் அதனால் உண்டாகும் பயனை ஆராய்ந்துணர்பவர்கள் அந்நன்மையைப் பெரும் பனையளவாக மதிப்பார்கள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்.


தினைத்துணை நன்றி செயினும்:
பதவுரை: தினை-தினைப்பயிரின் அலகு; துணை-அளவு; நன்றி-உதவி; செயினும்-செய்தாலும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தினையளவு நன்றி செய்தாராயினும், அதனை யவ்வளவிற்றென்று நினையாது;
பரிப்பெருமாள்: தினையளவு நன்றி செய்தாராயினும், அதனை யவ்வளவிற்றென்று நினையாது;
பரிதி: ஆபத்துக் காலத்திலே தினையத்தனை நன்றி செயினும் அதனை;
காலிங்கர்: தமக்கு ஒருவர் தினையளவு நன்மை செயினும் மற்று அதனை;.
பரிமேலழகர்: தமக்குத் தினையளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும் அதனை அவ்வளவிற்றாகக் கருதாது, ;

'தமக்கு ஒருவர் தினையளவு நன்மை செயினும் அதனை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சிறிதளவு நன்மை செய்தாலும்.', 'ஒருவர் தமக்குச் செய்த உதவி தினையளவு சிறியதாயினும் அதை', 'ஒருவன் தமக்குத் தினையளவு நன்மை செய்தாலும் ', தமக்குத் தினையளவு நன்மை செய்தாலும் அதனை)', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தமக்கு ஒருவர் தினையளவு நன்மை செய்தாலும் அதனை என்பது இப்பகுதியின் பொருள்.

பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்:
பதவுரை: பனை--பனைமரம்; துணையா-அளவா; கொள்வர்-கருதுவர்; பயன்-நன்மை; தெரிவார்-அறிபவர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பனையளவாகக் கொள்வார் அதன் பயனை யறிபவர். (பனையளவு- அதனுயர்ச்சி).
பரிப்பெருமாள்: பனையளவாகக் கொள்வார் அதன் பயனை யறிபவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: பனையளவு- அதனுயர்ச்சி. பனை எண் எனினும் அமையும். இது மேற் காலத்தாற் செய்தார் முதலிய போலன்றிப் பிறவாற்றாற் செய்தெனவும் பெரிது என்றது.
பரிதி: பனையத்தனையாகக் கொள்வர் பயனறிவார் என்றவாறு.
காலிங்கர்: பனையளவாகக் கொண்டிருப்பர் செய்ந்நன்றி பயனறிவார் என்றவாறு.
பரிமேலழகர்: பனையளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார்.
பரிமேலழகர் குறிப்புரை: 'தினை', 'பனை' என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டுவன சில அளவை. அக்கருத்தின் பயனாவது அங்ஙனம் கருதுவார்க்கு வரும் பயன்.

'பனையளவாகக் கொண்டிருப்பர் செய்ந்நன்றி பயனறிவார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் ' பயனறிந்தோர் பெரிய நன்மையாகக் கருதுவர்', 'பனையளவாக உயர்த்திப் பாராட்டுவார்கள்உதவியின் பயனை உணரக்கூடியவர்கள் ', 'அதனால் விளையும் நன்மை முழுவதையும் ஆழ்ந்தறிகின்றவர்கள் அதனைப் பனையளவாகக் கருதுவர். (ஏனைய மரங்கள் போலாது பனை சிறிய உதவி கொண்டு பெரும் பயன் விளைத்தல் காண்க.) ', 'பனையளவாகக் கருதுவர்' உதவியின் பயனை அறியக்கூடியவர்கள் . (தினை-பனை யென்பன அளவுப் பெயர்கள் ' என்றபடி பொருள் இப்பகுதிக்கு உரைத்தனர்.

பனையளவு பெரிய நன்மையாகக் கருதுவர் 'உதவியின் பயனை அறியக்கூடியவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

-

நிறையுரை:
செய்யப்பட்ட உதவி சிறியதானாலும் நன்றியுணர்வு கொண்டவர்கள் அதைப் பெரிதாகப் போற்றுவர் என்னும் பாடல்.

தமக்கு ஒருவர் தினையளவு நன்மை செய்தாலும் அதனைப் பனையளவு பெரிய நன்மையாகக் கருதுவர் 'உதவியின் பயனை அறியக்கூடியவர்கள் என்பது பாடலின் பொருள்.
;தினை' 'பனை' குறிப்பன எவை?

துணை என்ற சொல் அளவு என்ற பொருள் தரும்.
நன்றி என்ற சொல்லுக்கு நன்மை என்று பொருள்.
செயினும் என்ற் சொல்லுக்குச் செய்தாலும் என்பது பொருள். .
கொள்வர் என்ற சொல் கருதுவர் என்ற பொருள் தருவது.
பயன் தெரிவார் என்ற தொடர் நன்மையை அறியக்கூடியவர் எனப் பொருள்படும்..

தினை போலும் ஒரு சிறிஅ அளவிலான உதவியைச் செயினும், அதன் பயனை அறிந்தவர் அதைப் பனை அளவு உயர்வாகக் கருதுவர்.

செய்யப்படும் எல்லா நற்செயல்களும் பயன்பாடுடையனவே. ஆனால் எல்லா உதவிகளும் நினைக்கப்படுவதில்லை. நன்றி பாராட்டப்படுவதும் இல்லை. அப்படி இருப்பவர்கள் நன்றி கொன்றவர்களாக இல்லாவிட்டாலும் நன்றியின் பயன் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.. உதவியின் பயன் அறியக்கூடியவர்கள் அவர்கள் பெற்ற உதவி தினை அளவே போலும் இருப்பினும், அதைப் பெரிதாக மதிப்பர். அப்படி நடந்து கொள்பவர்கள் சிறந்த பண்பாளர்கள் ஆவர். வெளிப்பார்வைக்கும், பயனுறாதாருக்கும் அவை சிறு உதவியாகத் தோன்றினாலும் அவ்வுதவியின் பயனை அடைந்தவர்கள் அதை மிக உயர்வாகப் போற்றுவர். எவ்வித உதவியானாலும் அதைச் சிறிதெனச் சிறுமைப் படுத்தக்கூடாது என்பது கருத்து.

தினை-பனை உவமையை ஆண்டு
தினை அனைத்தே ஆயினும் செய்த நன்று உண்டால்.
பனை அனைத்தா உள்ளுவர், சான்றோர்; பனை அனைத்து.
என்றும் செயினும்,-இலங்கு அருவி நல் நாட!-.
நன்று இல, நன்று அறியார்மாட்டு.
என்றது நாலடியார். 344 :(பொருள்: தினையளவினதேயாயினும் செய்த உதவிமுன் இருக்குமானால் அதனைப் பனையளவினதாகக்கருதிக் கனிந்திருப்பர் மேலோர்; நாளும் பனையளவுஉதவிசெயினும், விளங்குகின்ற அருவிகளையுடையஉயர்ந்த மலைநாடனே, நன்மையறியாக்கீழோரிடத்தில் அவை சிறிதளவும் நன்றிபாராட்டுதல் இல்லாதனவாகும்.)

;தினை' 'பனை' குறிப்பன எவை?

தினை என்ற சொல் சீறிய அளவையை அல்லது நெல்அரிசியைப் போன்றதொரு சிறிய அளவிலான தானியத்தைக் குறிக்கும். பனை என்பது பெரிய அளவையை அல்லது நெடிதாய் உயர்ந்து நிற்கும் மரத்தைக் குறித்த சொல்லாகும்.. சிற்றளவைக்கும் பேரளவைக்கும் வள்ளுவர் எடுத்தாளும் உவமை தினை-பனை என்பன. மிக மிகச் சிறியதும் மிக மிகப் பெரியது என்கிற வேற்றுமையைக் காட்ட அமைந்த தினை-பனை ஒப்புமை வள்ளுவருக்குப் பிடித்தமானதாகத் தெரிகிறது. இவ்வுவமையைக் குறளில் மூன்று இடங்களில் (குறள் 104, 433, 1282) வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். கண்ட அளவிலே வேறுபாடு புலனாகக்கூடிய இவ்விரண்டு பொருள்களைக் கொண்டு எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வண்ணம் இந்த உவமை கையாளப்பட்டது.

பனை எண் எனினும் அமையும். என்றார் பரிப்பெருமாள்.
தினையும் பனையும் அளவுப் பெயர்கள் என்று சிலர் கூறுவர். தினை பனை என்பவை அளவைகள். குறிப்பாக மருந்து விற்பனை செய்பவர்கள் மருந்துக்கான பொருள்களை நிறுத்துக் காட்டும்போது தினையெடை, பனையெடை எனக் கூறுவதுண்டு என்பர் இவர்கள். மேலும் இவர்கள் நிறுத்தல் அளவுக்குரியவாகத் தினை பனை ஆளப்படுகின்றன. குன்றி மணி அளவு தங்கம் என்பது போல். மருந்துக் கடைகளில் தினைஎடை, பனைஎடைஎன வழக்குண்டு. ஆதலால்,தினை அரிசியையோ பனை மரத்தையோ குறிக்க வேண்டுவதில்லை என்று தெரிவிப்பர்.. பனையெடை என வழக்கிருப்பதாகக் கூறலின், தினை பனைகளை நிறுத்தலளவையாகக் கொள்ளல் பொருந்தும்.. (இரா சாரங்கபாணி)..
ஏனைய மரங்கள் போலாது பனை சிறிய உதவி கொண்டு பெரும் பயன் விளைத்தல் காண்க.என்பது கா சுப்பிரமணியம் பிள்ளை: உரை. இவ்வுரை பனையின் உயர முதலிய அளவைகளைக் குறிக்காமல் சிறுபயன் கொண்டு பெரும்பயனை நெடுங்காலம் தருவதைச் சொல்வது. -

தமக்கு ஒருவர் தினையளவு நன்மை செய்தாலும் அதனைப் பனையளவு பெரிய நன்மையாகக் கருதுவர் 'உதவியின் பயனை அறியக்கூடியவர்கள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

எல்லா உதவியுமே பெரிய உதவிகள்தாம் என்ற செய்ந்நன்றியறிதல் வேண்டும் என்னும் பாடல்.

பொழிப்பு

தினையளவு சிறுநன்மை செய்யப்பட்டாலும் அதனால் உண்டாகும் பயனை உணர்பவர்கள் அந்நன்மையை பனையளவு பெரிதாகக் கருதுவர்.