இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0102காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் குறள் எண்:102)

பொழிப்பு: உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அக்காலத்தைக் கருத உலகத்தைவிட மிகப் பெரிதாகும்

மணக்குடவர் உரை: உதவவேண்டுங்காலந் தப்பாமற் செய்தவுதவி தான்சிறிதாயிருந்ததாயினும், உலகத்தினும் மிகப் பெரிது.
இது காலந் தப்பாமற் செய்த வுதவி உலகத்தினும் பெரிதென்றது.

பரிமேலழகர் உரை: காலத்தினால் செய்த நன்றி - ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம்; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது - தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது.
(அக்காலம் நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம். 'காலத்தினால்' என்பது வேற்றுமை மயக்கம்.)

தமிழண்ணல் உரை: உதவி தேவைப்படும் காலத்துச் செய்த உதவி ஆபத்துக் காலத்தில் செய்த உதவி, இறுதி நேரும் காலத்தில் காப்பாற்றச் செய்த உதவி என்பன தக்க காலத்தால் செய்த உதவிகளாகும். அது அளவால் சிறிதாயினும் அக்காலத்தை நோக்க, இந்த ஞாலத்தை விட மிகப் பெரியதாகும்.
அவ்வுதவியின்றேல், அவர் இந்த ஞாலத்தை இழக்க நேருமல்லவா? எனவே அவரைப் பொறுத்தவரை அது இஞ்ஞாலத்தைவிடப் பெரிதுதானே?


பொருள்கோள் வரிஅமைப்பு:
காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும். ஞாலத்தின் மாணப் பெரிது


காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்:
பதவுரை: காலத்தினால்-காலத்தோடு; செய்த-இயற்றிய; நன்றி-உதவி; சிறிது-சின்னது; எனினும்-என்றாலும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உதவவேண்டுங்காலந் தப்பாமற் செய்தவுதவி தான்சிறிதாயிருந்ததாயினும்;
பரிப்பெருமாள்: உதவவேண்டுங்காலந் தப்பாமற் செய்தவுதவி தான்சிறிதாயிருந்ததாயினும்;
பரிதி: ஒருவர்க்கு ஆபத்துக் காலத்திலே செய்த உதவிக்கு;
காலிங்கர்: தாம் இடருறுங் காலத்தின்கண் தமக்கு ஒருவர் செய்த நன்மைப் பொருளானது சிறிதே ஆயினும் அஃது இறுதிக்கண் உதவியது ஆகலான் ;
பரிமேலழகர்: ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம் தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க
பரிமேலழகர் கருத்துரை:( அக்காலம் நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம். 'காலத்தினால்' என்பது வேற்றுமை மயக்கம்.

'உதவவேண்டுங்காலந் தப்பாமற் செய்த உதவி சிறிதாயிருந்ததாயினும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நற்சமயத்துச் செய்த உதவி சிறியதாயினும்', 'இடருற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறியதாக இருந்தாலும்', 'ஒருவர் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அது செய்யப்பட்ட சமய சந்தர்ப்பத்தை ஒட்டி அதை ', 'ஒருவனுக்கு இன்றியமையாது வேண்டப்பட்ட காலத்தில் செய்த உதவி அளவிற் சிறிதாயிருந்தாலும் அதன் தன்மையைக் கருதும்போது அது ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தேவைப்பட்ட காலத்தில் செய்த உதவி சிறியதாயினும் என்பது இப்பகுதியின் பொருள்.

ஞாலத்தின் மாணப் பெரிது:
பதவுரை: ஞாலத்தின்-நிலவுலகத்தைக் காட்டிலும்; மாணப்-மிகப்; பெரிது-பெரியது.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்தினும் மிகப் பெரிது.
மணக்குடவர் கருத்துரை: இது காலந் தப்பாமற் செய்த வுதவி உலகத்தினும் பெரிதென்றது
பரிப்பெருமாள்: உலகத்தினும் மிகப் பெரிது.
பரிப்பெருமாள் கருத்துரை இது காலத்திற் செய்தது உலகினும் பெரிது என்றது
பரிதி: பூவுலகமும் நிகரல்ல என்றவாறு.
காலிங்கர்: ஞாலத்தினும் மாட்சிமைப்பட பெரிது செய்ந்நன்றி அறிவார்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: நிலவுலகத்தினும் மிகப் பெரியது.

'உலகத்தினும் மிகப் பெரிது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் ஞாலத்தினும் மாட்சிமைப்பட பெரிது என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் ' உலகத்தைவிடச் சிறந்தது', ' அக்காலத்தை நோக்க அஃது உலகத்தினும் மிகப் பெரிதாம்.', ' இந்த உலகத்தை விடப் பெரிதாக மதிக்க வேண்டும்', 'நிலஉலகத்தினும் மிகப் பெரிது' என்றபடி பொருள் இப்பகுதிக்கு உரைத்தனர்.

உலகத்தைவிட மிகப் பெரியது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நற்சமயத்துச் செய்த உதவி சிறியதாயிருப்பினும் அது செய்ந்நன்றி அறிவார்க்கு உலகத்தைவிட மாட்சிமை பொருந்தியது என்னும் பாடல்.

தேவைப்பட்ட காலத்தில் செய்த உதவி சிறியதாயினும் அது உலகத்தைவிட மிகப் பெரிது என்பது பாடலின் பொருள்.
'மாணப் பெரிது' கூறும் பொருள் என்ன?

காலத்தினால் செய்த என்ற தொடர்க்கு உற்ற நேரத்தில் செய்யப்பட்ட என்பது பொருள்.
நன்றி என்ற சொல் உதவி அல்லது நன்மை என்ற பொருள் தரும்.
சிறிதுஎனினும் என்றது சிறிதாக இருந்தாலும் என்று பொருள்படும்.
ஞாலத்தின் என்ற சொல் நிலவுலகைவிட என்ற பொருளது.

தக்க சமயத்தில் செய்த உதவி அளவில் சிறிது எனினும், அது உலகைக் காட்டிலும் மிகப் பெரியது.

காலத்தினால் என்பது காலத்தின்கண் என்ற பொருளில் (ஆலுருபு மயங்கி) வந்தது.. காலத்தினால் செய்த உதவி காலத்தின்கண் செய்த உதவி என்பதைக் குறிக்கும்.
காலத்தினால் செய்த உதவி என்பதிலுள்ள காலம் என்பதற்கு, உதவ வேண்டுங்காலம், ஆபத்துக் காலம், இடருறுங்காலம், இறுடிவந்த எல்லைக்கண் அதாவது ஒருவரது உயிருக்கு முடிவு நேர இருந்தகாலம், இடையூறு வந்த காலம், இன்றியமையாது வேண்டும் காலம், தக்க காலம். உற்ற காலம், இக்கட்டானகாலம், நெருக்கடியானகாலம் ,என உரையாளர்கள் விளக்கம் தந்தனர். தக்க சமயம் என்பது பொருத்தமானது.

.

உதவி சிறியதாக இருந்தாலும் தக்க சமயத்தில் செய்யப்பட்டதாதலால் அது மண்ணுலகத்தைவிடப் பெரியதாகப் போர்றப்படும்.
விபத்தில் மாட்டிக்கொண்டு மயங்கிக் கிடப்பவருக்கு தண்ணீர் கொடுப்பது அவர் உயிரைக் காக்கும். ஒரு குவளைத் தண்ணீர்தான் என்றாலும் அது உயிரையே கொடுத்தது. இது காலத்தினால் செய்த உதவிக்கு ஓர் எடுத்துக்காட்டு. மேலும் உயிர் காக்கக் செய்யப்படும் இரத்தக்கொடை, உயிருக்குப் போராடும் ஒருவரை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லல் மகப்பேற்று வலியில் துடிக்கும் பெண்டிருக்குச் செய்யும் உதவிகள் போன்றவை தக்க சமயத்தில் செய்யப்படும் உதவிகளாகும். உயிர் காக்கும் வேளைகளில் மட்டுமன்றி இக்கட்டான நெருக்கடியான காலத்தே, தேவை அறிந்து செய்யப்பட்ட உதவிகள் எல்லாமே நற்சமய உதவிகளாம். இவ்வுதவிகள் பொருளளவாலும் நேர அளவாலும் முயற்சியின் அளவாலும் பெரிதாக இல்லாவிட்டாலும் காலந்தப்பாது செய்யப்பட்டதால் நன்றி உணர்வு மிக்கவர்கள் அவற்றைப், பன் மடங்கு பெரியதாக மதிப்பர். செய்யப்பட்ட காலம் நோக்கப்படவேண்டுவதல்லது பொருள் அளவு கூடாது என்பது கருத்து..
தேவையான நேரத்தில் உதவியைச் செய்தவரிடம் எந்த அளவு நன்றியுணர்ச்சியோடு இருக்கவேண்டும் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

'மாணப் பெரிது' கூறும் பொருள் என்ன?

மாண் என்ற சொல்லுக்கு மாட்சிமை, பெருமை, மடங்கு போன்ற பல பொருள் உண்டு
மாணப் பெரிது என்பதற்கு மிகப் பெரிது என்றே பெரும்பான்மையினர் பொருள் கூறினர். செய்யப்பட்ட காலம் நோக்கி உதவியை மிதிப்பீடு செய்ய வேண்டும் என்பது இக்குற்ட் கருத்து. உலகம் பெருமைக்குரியது. தக்க சமயத்தில் செய்யப்பட்ட உதவி .பொருளளவிலும் முயற்சியளவிலும் சிறிதாயிருந்தாலும், அக்கால நிலைநோக்க நிலவுலகத்தினும் பெருமைப்படத் தக்கதாம். அவ்வுதவியின்றேல், அவர் இந்த ஞாலத்தை இழக்க நேருமல்லவா? எனவே அவரைப் பொறுத்தவரை அது இஞ்ஞாலத்தைவிடப் பெரிது என விளக்குவார் தமிழண்ணல்.
மாணப் பெரிது என்பதற்கு மிகப் பெரிது அல்லது பெருமையில் பெரியது என்று பொருள்.

தேவைப்பட்ட காலத்தில் செய்த உதவி சிறியதாயினும் செய்ந்நன்றி அறிவார்க்கு அது உலகத்தைவிட மாட்சிமையில் பெரியது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

உரிய நேரத்தில் செய்யப்பட்ட உதவியின் பெருமைக்கு உலகமே எல்லை என்னும் செய்ந்நன்றியறிதல் பாடல்.

-
பொழிப்பு

தக்க சமயத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அது உலகத்தினும் மிகப் பெரிதாம்