இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0106



மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் குறள் எண்:106)

பொழிப்பு (மு வரதராசன்): குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறத்தலாகாது, துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடலாகாது

மணக்குடவர் உரை: தனக்குத் துன்பம் வந்தகாலத்து வலியாயினர் நட்பை விடாதொழிக: எக்காலத்துங் குற்றமற்றாரது நட்பை மறவாதொழிக.

பரிமேலழகர் உரை: துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க - துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக; மாசு அற்றார் கேண்மை மறவற்க - அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவா தொழிக.
(கேண்மை: கேள் ஆம் தன்மை. இம்மைக்கு உறுதி கூறுவார், மறுமைக்கு உறுதியும் உடன் கூறினார்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: குற்றமற்ற நல்லவர்களுடைய சினேகத்தை மறந்து விடாதே. உன்னுடைய துன்ப காலத்தில் உதவி செய்தவர்கள் குற்றமுடையவர்களானாலும் அதற்காக வெறுப்புக்காட்டி அவர்களுடைய நட்பைத் தள்ளிவிடாதே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு .

பதவுரை: மறவற்க-மறவாதீர், மறக்கவேண்டா; மாசு-குற்றம்; அற்றார்-நீங்கியவர்; கேண்மை-சுற்றமாய் நடந்து கொள்ளுந்தன்மை, நட்பு; துறவற்க-விட்டுவிடவேண்டா, விடாதொழிக; துன்பத்துள்-துயரத்துள், துன்பம் வந்தபொழுது; துப்புஆயார்-பற்றுக்கோடு ஆகியவர், ஆதரவாகியவர் அதாவது துணை நின்றார்; நட்பு-தோழமை.


மறவற்க மாசற்றார் கேண்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எக்காலத்துங் குற்றமற்றாரது நட்பை மறவாதொழிக;
பரிப்பெருமாள்: எக்காலத்துங் குற்றமற்றாரது நட்பை மறவாதொழிக;
பரிதி: நன்றி என்றும் விடக்கடவன் அல்லன்; நல்லோர் சினேகமும் என்றென்றும் விடக் கடவன் அல்லன்;
காலிங்கர்: தமது உள்ளத்து மாசற்ற பெரியோர் செய்த நட்பின் மிகுதியையும் எஞ்ஞான்றும் மறவாது ஒழிக'
பரிமேலழகர்: அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவா தொழிக.
பரிமேலழகர் குறிப்புரை: கேண்மை: கேள் ஆம் தன்மை. [கேளாந்தன்மை - நட்பாம் தன்மை]

'குற்றமற்றாரது நட்பை மறவாதொழிக' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தூயவர் நட்பை மறவாதே', 'குற்றமற்ற நல்லவரின் உறவை மறவாதொழிக. (நல்லவரின் உறவும் உதவியிருக்கும் என்பதால் அந்நன்றியும் மறத்தலாகாது என்பதனால் அதனையும் சேர்த்துக் கூறப்பட்டது)', 'அறவொழுக்கங்களிற் குற்றமற்றவரது நட்பினை மறவாதொழிக', 'அறிவு ஒழுக்கங்களில் குற்றமில்லாதவருடைய நட்பை மறந்து விடாதே', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

குற்றமற்றாரது நட்பை மறவாதீர் என்பது இப்பகுதியின் பொருள்.

துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு.:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்குத் துன்பம் வந்தகாலத்து வலியாயினார் நட்பை விடாதொழிக: [வலியாயினார்- துணையாயினார்]
பரிப்பெருமாள்: தனக்குத் துன்பம் வந்தகாலத்து வலியாயினார் நட்பை விடாதொழிக:
பரிப்பெருமாள் குறிப்புரை: மாசற்றாரது நட்பைத் துறவாமை இருமைக்கும் நன்மை பயக்குமாறு போலத் துப்பாயார் நட்பைத் துறவாமையும் இருமையின் கண்ணும் இன்பம் பயத்தலின் அதனை மறவற்க என்றது.
பரிதி: துன்பம் வந்தபோது பலமாயினார் நட்பினை விடக்கடவன் அல்லன் என்றவாறு. [பலமாயினார்- துணையாயினார்]
காலிங்கர்: அன்றியும் தாம் ஒரு துயருற்றவிடத்து அதற்கொரு வலியாநின்று உதவியாரது நட்பினையும் கைவிடாது ஒழிக.
காலிங்கர் குறிப்புரை இங்குச் சொன்ன இருவகைப்பட்ட நன்றியையும் மறவாதவர் இம்மையின்கண் இன்பமும் மறுமையின்கண் இன்பமும் பெறுவர் என்றவாறு.
பரிமேலழகர்: துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக;
பரிமேலழகர் குறிப்புரை: இம்மைக்கு உறுதி கூறுவார், மறுமைக்கு உறுதியும் உடன் கூறினார்.

'தனக்குத் துன்பம் வந்தகாலத்து பலமாயினர் நட்பை விடாதொழிக' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துன்பத்தில் துணைசெய்தார் நட்பைத் துறவாதே', 'துன்பக் காலத்துத் துணையாயினார் நட்பை விடாதொழிக', 'துன்பக் காலத்தே தனக்கு ஆதரவாயிருந்தவர்களது நட்பினைக் கைவிடாதிருக்க', 'துன்பம் வந்தபோது துணையாய் இருந்தவர் நட்பை விட்டு விடாதே' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

துன்பம் வந்தகாலத்து துணையாய் நின்றவர் நட்பைக் கைவிடாதீர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மாசற்றார் கேண்மையை மறவாதீர்; துன்பம் வந்தகாலத்து துணையாய் நின்றவர் நட்பைக் கைவிடாதீர் என்பது பாடலின் பொருள்.
'மாசற்றார் கேண்மை' இங்கு ஏன் பேசப்படுகிறது?

உதவி செய்தோர் யாராயிருந்தாலும் நன்றியுணர்வோடு நட்பைத் தொடர்க.

மாசற்றார் என்பவர் மனமாசு இல்லாதவர் அதாவது குற்றமற்ற நல்லவர்; இவர் அறன் அறிந்து முதிர்ந்த அறிவு பெற்ற பெரியாராக இருப்பர். அதிகாரம் கருதி அவர் நன்மை செய்த மாசற்றார் எனக் கொள்ளலாம். அவரது உறவு கிடைத்தவர் அந்த உறவையும் செய்த நன்றியையும் மறவாது பேணிக் கொள்ளவேண்டும்; அதுபோல தமக்குத் துன்பம் நேர்ந்த காலத்தில் உறுதுணையாக உதவியவரின் நட்பை ஒருபோதும் நீங்காமல் பற்றிக்கொள்ள வேண்டும்.
மாசற்றார் நட்பு எக்காலத்திலும் நன்மையும், இன்பமுமே பயக்கும். நல்லோரின் உறவு சமூக வாழ்க்கையில் நல்லவை தொடர என்றும் தேவை. குற்றமற்ற அப்பெரியோரது உறவை மறக்காது நிலைத்திருக்கச் செய்யவேண்டும்.
முதலில் மாசற்றாரைப் பற்றி சொல்லியபின் அடுத்து குற்றமுடையவரைப் பற்றி வள்ளுவர் எண்ணுவதாகத் தோன்றுகிறது. உதவி செய்தவர் குற்றமுள்ளவர் என வெளிப்படையாக இக்குறளில் சொல்லப்படவில்லை. எனினும் துறவற்க என்ற சொல்லாட்சி பிரிதற்குரிய தீமை உண்டு என்பதைத் தெரிவிப்பதாகவே கொள்வர். துன்பத்திற்கு துணையாவார் அரிதாகவே காணப்படுவர். துயரப்பட்ட சமயத்தில் ஒருவர்க்குச் செய்யப்பட்ட உதவியானது தெய்வமே வந்து உதவியது என நன்மை பெறுவாரை எண்ணச்செய்யும். அவ்விதம் வலிமை தந்து உறுதுணையுடன் இருந்தவர் வேறுவகைகளில் குற்றமுள்ளவர் எனத் தெரியவந்தால் இவரிடமா நன்மை பெற்றோம் என இகழ்ந்து அவருடனான தொடர்பைத் துண்டித்துக்கொள்ள நினைக்கலாம். வள்ளுவர் அது கூடாது என்கிறார். துன்பத்துள் துணையாய் நின்றது காலத்தினாற் செய்த நன்றியாகும்; அது ஞாலத்தினும் மாணப்பெரிது என்பதால் அந்நட்பைத் துறக்கவே கூடாது. செய்யப்பட்ட எந்த உதவியும் பெரிதாக மதிக்கப்பட வேண்டும்; அதுவும் துன்பத்தில் அழுந்தும்காலை செய்யப்பட்ட நன்மை யாரிடமிருந்து பெறப்பட்டாலும் அது மிகப்பெரிது என்று நினைக்கப்பட வேண்டும். அவரது உதவி இனி தேவையில்லையென்பதலால் நட்புறவு தேவையில்லை என்றும் எண்ணக்கூடாது; அவர் செய்த நன்றியை மறக்காமல் இருப்பதோடு நட்பினையும் கைவிடாமல் தொடர வேண்டும் என்பது குறள் கூறும் அறிவுரை. நட்பை விடாதிருத்தல் வேண்டும் என்றது நன்றியறிவை வற்புறுத்தியதாம்.

குற்றமுடையவரிடமிருந்து பெற்ற உதவி பற்றிக் கருத்தாடல் செய்வதாகவே உள்ளது இப்பாடல். மருவுக மாசற்றார் கேண்மை என்று குற்றமற்றவர் உறவை மிகவும் மதித்துப் போற்ற வலியுறுத்தும் வள்ளுவர், இடுக்கண் களைந்தவரது, அவர் நட்பை ஒரு காலத்திலும் விடக்கூடாது எனவும் கூறுகிறார். துன்பத்துள் வலியாய் நின்றார் என்பதால், உதவி பெற்றவரைப் பொறுத்தவரை, அவர் நல்லவராகிறார். எனவே அவரது நட்பைக் கைவிடக் கூடாது என்கிறது பாடல்.

'மாசற்றார் கேண்மை' இங்கு ஏன் பேசப்படுகிறது?

இங்கு‌ செய்ந்நன்றியறிதலுக்குத்‌ தொடர்பாக உதவி செய்தவரின்‌ நட்பு போற்றத்தக்கது எனச் சொல்லப்படுகிறது. 'துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு' என்ற பகுதி நன்றி மறவாமையைச் சொல்வதால் இது 'செய்ந்நன்றியறிதல்' அதிகாரத்திற்குரியதாகிறது. ஆனால் நட்பு தொடர்பான அதிகாரத்தில் வரவேண்டிய 'மறவற்க மாசற்றார் கேண்மை' என்ற பகுதி இங்கு ஏன் கூறப்பட்டது? மாசற்றார் கேண்மைக்கும் செய்ந்நன்றி யறிதலுக்கும் என்ன இயைபு?
பரிப்பெருமாள், காலிங்கர், பரிமேலழகர் ஆகிய தொல்லாசிரியர்கள் அவை இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் தருவன என்று கூறினர். இம்மைக்குறுதியாயது துன்பத்துள் துப்பாயர் நட்பு, மறுமைக்கு ஊறுதியாயது மாசற்றார் கேண்மை என்றனர்.

மருவுக மாசற்றார் கேண்மைஒன்று ஈத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு (நட்புஆராய்தல் 800 பொருள்: குற்றமிலார் நட்பைக் கொள்க; ஏதாவது கொடுத்தாயினும் தமது தன்மைக்கு ஒவ்வாதாராது தொடர்பினின்று நீங்குக) எனச் சிலரது நட்பு -- விலக்கிக்கொள்ளத்தக்கது எனப் பின்வரும் நட்பாராய்தல் அதிகாரத்தில் சொல்லப்படும். அப்பாடல் மருவுக மாசற்றார் கேண்மை என உடன்பாட்டு முகத்தான் மாசற்ற நல்லோரின் நட்பை நாட வேண்டும் என்று வலியுறுத்தி நமக்குஒத்துவராத நட்பினை ஏதாவது ஒன்றினைக் கொடுத்தாவது விலக்கிக்கொள்க எனவும் கூறுகிறது.
ஆனால் ஒருவர் துன்பத்தில் நமக்கு உதவியிருந்தால் அவர் நீக்கத்தக்கவரானாலும் அவரைப் புறக்கணிக்க வேண்டாம்; துன்பத்துள் துப்பாயர் நட்பு மாசற்றார் கேண்மைக்கு இணையாக வைத்து எண்ணப்படத் தக்கது என்கிறது இக்குறள்.
மாசற்ற கேண்மையினால் பெற்ற நன்மையையும் துன்பத்தில் உதவியவர் நட்பையும் மறத்தல் ஆகாது என இக்குறள் கூறுவதில் துன்பத்துள் துப்பாயார் நட்புபோல் மாசற்றார் கேண்மையையும் செய்ந்நன்றிக்குரியது என்ற நுட்பம் பெறப்படுகிறது.

தண்டபாணி தேசிகர் 'இராமலிங்கனார் 'மாசற்றார் கேண்மை மறவற்க' என்பதை அடுத்து துன்பத்துள் துப்பாயார் நட்பு துறவற்க' என வந்தமையின் 'துன்பத்துள் துப்பாயார் எவ்வளவு தீயராயினும் அவரிடமுள்ள தீமை கருதி விலகலாகாது அவன் உதவி செய்த கால அருமை நோக்கி எப்போதும் பழகுதல் வேண்டும்' என்று உரை வகுப்பது அதிகாரத்தோடு பெரிதும் இயைபுடைத்தாதலேயன்றி நயமுடையதும் ஆகும்' என நாமக்கல்லார் உரையை ஏற்கிறார். ஆனால் 'இந்த உரை வலிந்து கோடலாகும்' என்று கூறி 'இக்கொண்டு கூட்டுப் போலவே துப்பின்மையை மாசற்றாரோடு கூட்டிப் பொருள் செய்தால் வரம்பில் பொருள் கோளாய் முடியும்' என நாமக்கல் இராமலிங்கத்தின் உரையை மறுப்பார் இரா சாரங்கபாணி. ஆயினும் நாமக்கல் இராமலிங்கம் கூறும் விளக்கம் ஏற்கத் தக்கதாகவே உள்ளது.

'அதிகாரம் நோக்கி மாசற்றார் என்றது நன்றி செய்த மாசற்றாரையே நோக்கியதாம். அவரை மறவற்க. எனவே அவர் செய்த நன்றியையும் மறவற்க என்றவாறாயிற்று. துறக்கத்தக்க தீமை செய்தாராயினும் முன்செய்த நன்றி காரணமாகப் போற்றுக என்பதாம். கேண்மை-உறவு. நன்றி செய்த மாசற்றார் கேளாவர். துன்பத்துள் துப்பாயார் நண்பராவர் என்ற நயம் காண்க' எனச் செய்ந்நன்றியறிதல் அதிகாரத்தில் நட்பறம் கூறப்படும் பொருத்தத்தைத் தெளிவுபடுத்துவார் தண்டபாணி தேசிகர்.

குற்றமற்றாரது கேண்மையை மறவாதீர்; துன்பம் வந்தகாலத்து துணையாய் நின்றவர் நட்பைக் கைவிடாதீர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உதவியரது குற்றத்தை நீக்கி அவர் நட்பைத் தொடர்தல் செய்ந்நன்றியறிதலாம்.

பொழிப்பு

குற்றமற்ற தூயவரின் நட்பை மறவாதீர்! துன்பத்தில் துணைநின்றார் நட்பைக் கைவிடாதீர்!