கண்ணுக்கு மையெழுதி மணிமாலை யணிந்து, கைநிறைய வளைஏந்தி, புன்னகை பூத்த முகத்துடன், பெண்மை நிறைந்த பொலிவுடன் விளங்குகிறாள் தலைவி. இன்னும் சிறுது நேரத்தில் அவர்கள் தனிமையில் படுக்கையறையில் சந்திக்க இருக்கிறார்கள். கூடுவதற்கு முன் அவனுடன் ஊடுவதா வேண்டாமா என்ற தடுமாற்ற நிலையில் தலைவி இருக்கிறாள். ஊடுதலுக்கு முன்னால் இங்கு தன் நெஞ்சுடன் விளையாட்டுத்தனமாக உரையாடுகிறாள்.
இவ்வதிகாரம் முழுக்க தலைமகளின் பேச்சுத்தான். பிரிவு நிலையில் படர் மெலிந்திரங்கல், கண் விதுப்பழிதல், பசப்புறுபருவரல், தனிப்படர்மிகுதி, நினைந்தவர் புலம்பல், கனவுநிலையுரைத்தல், பொழுதுகண்டிரங்கல், உறுப்புநலனழிதல் இவற்றில் தலைவி அவலம் நிறைந்த மொழியில் பேசினாள். நீண்டகாலப் பிரிவிற் சென்ற தலைவன் இன்று இல்லம் திரும்பி வந்துள்ளவேளையில், தலைவன், தலைவி இவர்கள் ஒருவர் குறிப்பினை ஒருவர்க்கு அறிவுறுத்து விட்டபின் புணர்ச்சிக்காக விரைகின்ற மனநிலையில் உள்ளனர். இவ்வதிகாரத்தில், தன் துன்பநிலை நீங்கி, காதலனுடன் கூடுவதற்கு முன், பதற்றமற்ற உளநிலையில், தலைவி புணர்ச்சி விதும்புகின்ற நெஞ்சைக் கொஞ்சலாகக் கடிந்து புலக்கிறாள்.
அவரிடம் சென்றுவிட்டாயே என்று திரும்பத் திரும்பத் தன் கருத்துக்கு மாறாகத் தன் நெஞ்சு செயலாற்றுவதாகக் கற்பனை செய்து அதைக் கடிகிறாள். இது காதலன் அருகே தான் நெருங்கிப்போவதற்காக ஏங்குவதை உணர்த்துவதாகும்.