இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1295



பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்துஎன் நெஞ்சு

(அதிகாரம்:நெஞ்சொடுபுலத்தல் குறள் எண்:1295)

பொழிப்பு (மு வரதராசன்): (காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைந்து அஞ்சும்; (இவ்வாறாக) என்நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.

மணக்குடவர் உரை: காதலரைப் பெறாதகாலத்துப் புணர்வு இல்லையோ என்று அஞ்சும்; பெற்றோமாயின் பிரிவாரோ என்று அஞ்சும்; ஆதலால் இடைவிடாத துன்பத்தை உடைத்து என்னெஞ்சு.
இது தலைமகள் ஆற்றாமைகண்டு தூதுவிடக் கருதிய தோழிக்கு அவர் வந்தாலும் இதற்குள்ளது துன்பமே யென்று அதனொடு புலந்து கூறியது.

பரிமேலழகர் உரை: (வாயிலாகச் சென்ற தோழி கேட்பத் தலைமகள் சொல்லியது.) பெறாமை அஞ்சும் - காதலரைப் பெறாத ஞான்று அப்பெறாமைக்கு அஞ்சாநின்றது; பெறின் பிரிவு அஞ்சும் - பெற்றக்கால் வரக்கடவ பிரிவினை உட்கொண்டு அதற்கு அஞ்சா நின்றது; என் நெஞ்சு அறா இடும்பைத்து - ஆகலான், என் நெஞ்சம் எஞ்ஞான்றும் நீங்காத இடும்பையை உடைத்தாயிற்று.
(காதலரைப் பெற்று வைத்துக் கலவியிழத்தல் உறுதியன்று என்னும் கருத்தான் வாயில் நேர்கின்றாளாகலின், 'பெறாமை அஞ்சும்' என்றும், 'கலவி ஆராமையின் இன்னும் இவர் பிரிவாராயின் யாது செய்தும்' என்பது நிகழ்தலின், 'பெறின் பிரிவு அஞ்சும்' என்றும், இவ்விரண்டுமல்லது பிறிது இன்மையின், 'எஞ்ஞான்றும் அறா இடும்பைத்து' என்றும் கூறினாள்.)

வ சுப மாணிக்கம் உரை: என் நெஞ்சம் என்றும் துன்பம் உடையது; கூடாமைக்கும் கூடின் பிரிவுக்கும் வருந்தும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் என் நெஞ்சு அறாஅ இடும்பைத்து.

பதவுரை: பெறாஅமை-(தலைவரை) அடையாமை, காணாமை; அஞ்சும்- (நினைத்து)பயப்படும், வருந்தும் ; பெறின்-(தலைவரை) அடைந்தால்; பிரிவு-நீங்குதல்; அஞ்சும்-(நினைத்துப்) பயப்படும், துன்புறும்; அறாஅ-ஒழியாது; இடும்பைத்து-துன்பத்தைப் பெற்றுளது; என்-எனது; நெஞ்சு-உள்ளம்.


பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காதலரைப் பெறாதகாலத்துப் புணர்வு இல்லையோ என்று அஞ்சும்; பெற்றோமாயின் பிரிவாரோ என்று அஞ்சும்;
பரிப்பெருமாள்: காதலரைப் பெறாதகாலத்துப் புணர்வு இல்லையோ என்று அஞ்சும்; பெற்றோமாயின் பிரிவாரோ என்று அஞ்சும்;
பரிதி: நாயகரைக் கூடாமல் அஞ்சும்; கூடினால் பிரிவார் என்று அஞ்சும்;
காலிங்கர்: தோழீ! அவரைப் பெறாமையைக் கொண்டு அஞ்சும், பெறுவது என்றுகொல் என்று; இனிப் பெற்றகாலத்துப் பிரிவினை நினைந்து அஞ்சும். பின் நுகர்ச்சி இன்பம் இழப்பேம் என்று;
பரிமேலழகர்: (வாயிலாகச் சென்ற தோழி கேட்பத் தலைமகள் சொல்லியது.) காதலரைப் பெறாத ஞான்று அப்பெறாமைக்கு அஞ்சாநின்றது; பெற்றக்கால் வரக்கடவ பிரிவினை உட்கொண்டு அதற்கு அஞ்சா நின்றது; [வாயிலாக - தூதாக]

'அவரைப் பெறாமையைக் கொண்டு அஞ்சும், பெறுவது என்றுகொல் என்று; இனிப் பெற்றகாலத்துப் பிரிவினை நினைந்து அஞ்சும். பின் நுகர்ச்சி இன்பம் இழப்பேம் என்று' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலரை எய்தாதபோது அவ்வெய்தாமைக்கு அஞ்சும். எய்தினால் அவர் பிரிந்து விடுவாரே என எண்ணி அதற்கு அஞ்சும்', '(என் மனம் காதலர் இல்லாதபோது) அவர் வரவில்லையே என்று என்னைத் துன்புறுத்திக் கொண்டிருந்தது. (இப்போது) அவர் வந்தபின் பிரிந்து போய்விடுவாரோ என்று (அவரிடத்திற்கே ஓடி என்னைத்) துன்புறுத்துகிறது', 'அவரைக் காணாதபோது அவரை யடையவில்லை யென்று என் நெஞ்சு அஞ்சுகின்றது. அவரையடைந்தபின் அவர் பிரிந்து விடுவாரோவென்று அஞ்சுகிறது', 'காதலரை அடையாதபொழுது அவரை அடையாமைக்கு அஞ்சும். அவரை அடைந்தால் உண்டாகப்போகும் பிரிவுக்கு அஞ்சும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பெறாமைக்காக வருந்தும்; பெற்றகாலத்துப் பிரிவினை நினைந்து அஞ்சும் என்பது இப்பகுதியின் பொருள்.

அறாஅ இடும்பைத்துஎன் நெஞ்சு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆதலால் இடைவிடாத துன்பத்தை உடைத்து என்னெஞ்சு.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் ஆற்றாமைகண்டு தூதுவிடக் கருதிய தோழிக்கு அவர் வந்தாலும் இதற்குள்ளது துன்பமே யென்று அதனொடு புலந்து கூறியது.
பரிப்பெருமாள்: ஆதலால் இடைவிடாத துன்பத்தை உடைத்து என்னெஞ்சு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகள் ஆற்றாமைகண்டு தூதுவிடக் கருதிய தோழிக்கு அவர் வந்தாலும் இதற்குள்ளது துன்பமே யென்று அதனொடு புலந்து கூறியது.
பரிதி: ஆதலால் மாறாத துன்பம் பெற்றாள் என்றவாறு.
காலிங்கர்: அதனால் இருவாற்றானும் இடையறாத இடும்பையினை உடைத்து; இனி எங்ஙனம் யாம் உய்வது என்றவாறு.
பரிமேலழகர்: ஆகலான், என் நெஞ்சம் எஞ்ஞான்றும் நீங்காத இடும்பையை உடைத்தாயிற்று. [இடும்பை-துன்பம்]
பரிமேலழகர் குறிப்புரை: காதலரைப் பெற்று வைத்துக் கலவியிழத்தல் உறுதியன்று என்னும் கருத்தான் வாயில் நேர்கின்றாளாகலின், 'பெறாமை அஞ்சும்' என்றும், 'கலவி ஆராமையின் இன்னும் இவர் பிரிவாராயின் யாது செய்தும்' என்பது நிகழ்தலின், 'பெறின் பிரிவு அஞ்சும்' என்றும், இவ்விரண்டுமல்லது பிறிது இன்மையின், 'எஞ்ஞான்றும் அறா இடும்பைத்து' என்றும் கூறினாள். [கலவி ஆராமையின் - புணர்ச்சி விருப்பம் தணியாமையால்; இவ்விரண்டும் அல்லது-பெறாஅமை அஞ்சுதல், பெறின் பிரிவஞ்சல் என்னும் இவ்விரண்டும் அல்லாமல்]

'ஆதலால் இடைவிடாத துன்பத்தை உடைத்து என்னெஞ்சு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆதலால், என் நெஞ்சம் எப்பொழுதும் நீங்காத துன்பமுடையது', 'என்னுடைய மனம் (எனக்கு) ஓயாத துன்பமுண்டாக்குவதாக இருக்கிறது', '.இதனால் எப்போதுந் தீராத துன்பத்தை யுடையது', 'ஆதலால் என் நெஞ்சம் என்றும் நீங்காத இடும்பையை உடையது-ஆகையால் என் நெஞ்சம் இடையறாத துன்பத்தை உடையது. வாயிலாகச் சென்ற தோழி கேட்பத் தலைமகள் சொல்லியது. வாயில்-தூது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஆதலால் என் நெஞ்சம் எப்போதும் தீராத துன்பத்தை யுடையது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தலைவரைக் காணப்பெறாமைக்காக வருந்தும்; பெற்றகாலத்துப் பிரிவினை நினைந்து அஞ்சும்; ஆதலால் என் நெஞ்சம் அறாஅ இடும்பைத்து என்பது பாடலின் பொருள்.
'அறாஅ இடும்பைத்து' என்ற தொடரின் பொருள் என்ன?

என் நெஞ்சம் எப்பொழுதும் கலக்கத்திலேயே இருக்கிறதே! கணவர் பிரிவின் ஆற்றாமையாலும், உடனிருந்தால் எப்பொழுது பிரிவு நேர்ந்திடுமோ என்கிற அச்சத்தாலும்.

அவர் இல்லாதபோது காணப்பெறாமைக்காக வருத்தம்; இருக்கும்போது எந்தநேரம் பிரிந்துசெல்வாரோ என்கிற அச்சம்; இவ்வாறு என் நெஞ்சம் நீங்காத துயரையே உடையதாகின்றது.
காட்சிப் பின்புலம்:
கணவர் கடமை முடிந்து இல்லம் திரும்பிவிட்டார். தலைவி மிக்க மகிழ்ச்சியுடன் காணப்படுகிறாள்; தன்னை நன்கு அணிசெய்துகொண்டிருக்கிறாள். இவர்கள் இருவரும் இன்னும் தனிமையில் சந்திக்க முடியாதிருக்கிறது. அவரை நெருங்கிக் கூடும் வேளைக்காகக் காத்திருக்கிறாள் மனைவி. கூடுவதற்கு முன் அவருடன் ஊடுவதா வேண்டாமா என்ற தடுமாற்ற நிலையில் அவள் இருக்கிறாள். அவ்விதம் ஊடுதலுக்கு முன்னால் புணர்ச்சி விதும்புகின்ற அவள் தன் நெஞ்சுடன் பேசுகிறாள். 'என் பக்கம் நில்லாமல் அவர் பக்கம் செல்கிறாயே! என்றும் 'அன்பற்று நம்மைப் பிரிந்து சென்றுவிட்டவர் என்று அறிந்தும் வெகுளமாட்டார் எனக் கருதி அவரிடம் செல்கின்றாயே!' என்றும் 'உன் விருப்பப்படி அவரிடம் செல்லுதல் கேடுற்றவர்க்கு நண்பர் இல்லை என்பதனாலேயா' என்றும் 'முதலில் ஊடிப் பின் கூட நினைக்கமாட்டாதிருக்கிறாயே; இவை போன்றனவற்றை உன்னோடு யார் கலந்து பேசுவார்' என்று தலைவி கொஞ்சலாகக் கடிவது போன்று நெஞ்சுடன் விளையாட்டாக உரையாடிக் கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
'என் நெஞ்சே! கணவரைக் காணாதபோது அவர் நம்முடன் இல்லையே என்று வருந்துகிறாய்; வந்து கலந்தபின் அவர் மீண்டும் பிரிந்து சென்றுவிடுவாரே என எண்ணி அஞ்சுகிறாய்; உன்னால் எப்பொழுதும் நான் துன்பப்பட்டுக் கொண்டே இருக்கிறேனே' என்று தலைவி நெஞ்சுடன் புலக்கிறாள்.
இன்னும் சிறு பொழுதில் அவர்களது கூட்டம் நிகழும். அவ்வேளைக்காகக் காத்து இருக்கிறாள். இதற்கிடையில் அவர் கடமை ஆற்றுதற்காக மீண்டும் பிரிந்து செல்லத்தானே வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறது. அப்பொழுது தன் நெஞ்சைப் புலந்து கூறுகிறாள்: 'அவர் இன்னும் வரவில்லையே, எப்பொழுதுதான் வந்து என் துயர் தீர்ப்பாரோ என்று எண்ணி எண்ணி என்னைத் துன்புறுத்திக் கொண்டிருந்தாய். அவர் வந்தபின் அவர் எப்பொழுது பணிக்காக மீண்டும் பிரியப் போகிறாரோ என்ற சிந்தனையில் என்னை வருத்துகிறாய். எப்பொழுதுமே என்னைத் தீராத் துயரில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறாயே என் நெஞ்சே?'
பிரிந்து சென்ற கணவர் வராதபோது வரவில்லையே என்றும், வந்தவுடன் மீண்டும் கடமை காரணமாகத் தன்னை விட்டுவிட்டு பிரிந்து சென்று விடுவாரே என்றும் அஞ்சிக்கொண்டே யிருக்கிறாள் காதல்மனைவி. தன் கணவர் எந்நேரமும் தன்னுடனே இருக்கவேண்டும் என்று விழைகிறாள்.

இக்குறளில் வெளிப்படுத்தப்பட்ட உணர்வை ஒத்த இன்னொரு பாடல் வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண் (கண்விதுப்பு அழிதல் 1179 பொருள்: காதலர் வராதபொழுது அவரை எதிர்நோக்கித் துயிலா. வந்தபொழுது அவர் பிரிந்து விடுவாரோ என அஞ்சித் துயிலா இருநிலையிலும் கண்கள் அரும் துயர் உற்றன) என்பது.

'அறாஅ இடும்பைத்து' என்ற தொடரின் பொருள் என்ன?

'அறாஅ இடும்பைத்து' என்றதற்கு இடைவிடாத துன்பத்தை உடைத்து, மாறாத துன்பம், இடையறாத இடும்பையினை உடைத்து, எஞ்ஞான்றும் நீங்காத இடும்பையை உடைத்தாயிற்று, தீராத துன்பம் உடையதாகின்றது, எப்பொழுதும் இடையறாத இடும்பையை உடையதாயுளது, என்றும் துன்பம் உடையது, எப்பொழுதும் நீங்காத துன்பமுடையது, தீராத துன்பமுடையதாக இருக்கிறது, நீங்காத் துன்பமுடையது, எப்போதுந் தீராத துன்பத்தை யுடையது, இடையறாத துன்பத்தை உடையது என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

கணவர் அருகில் இல்லாதபோது அவர் இன்னும் வந்திலரே என்று தலைவி வருந்துவாள்; அவர் வந்து விட்டாலோ எப்பொழுது பிரிந்து செல்லப்போகிறாரோ என்று அஞ்சிக் கொண்டிருப்பாள். எந்த நிலையிலும் துன்பம் தன்னை விட்டு நீங்காதோ என அப்பேதை மனம் அச்சம் உடையதாகவே இருக்கும்.
தலைவர் மீது அளவு கடந்த அன்பும் காதலும் கொண்ட மனைவிக்கே இவ்வகையான அச்சவுணர்வுகள் குடிகொண்டிருக்கும். அவரை விட்டு எதற்காகவும் பிரிய உள்ளம் இடம் தராததால் அவள் எப்பொழுதும் அச்ச உணர்வுடன் கூடிய துன்பத்தை உடையவளாயிருக்கிறாள்.

'அறாஅ இடும்பைத்து' என்ற தொடர்க்குத் தீராத துன்பத்தை யுடைத்து என்பது பொருள்.

தலைவரைக் காணப்பெறாமைக்காக வருந்தும்; பெற்றகாலத்துப் பிரிவினை நினைந்து அஞ்சும்; ஆதலால் என் நெஞ்சம் எப்போதும் தீராத துன்பத்தை யுடையது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தலைவரைக் காணாதபோதும் சரி கண்டபின்னும் சரி எப்பொழுதும் எனக்கு அச்சத்தை உண்டாக்குகிறாயே எனத் தலைவி தன் நெஞ்சொடுபுலத்தல்.

பொழிப்பு

காதல்கணவரைக் காணப் பெறாமைக்கு வருந்தும்; கண்டபின் பிரிவுக்கு அஞ்சும்; என் நெஞ்சம் தீராத துன்பம் உடையது.