இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1297நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சில் பட்டு

(அதிகாரம்:நெஞ்சோடுபுலத்தல் குறள் எண்:1297)

பொழிப்பு (மு வரதராசன்): காதலரை மறக்கமுடியாத என்னுடைய சிறப்பில்லாத மடநெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்துவிட்டேன்.

மணக்குடவர் உரை: என்கண் நெறிவர நினையும் நாணத்தையும் கடைப்பிடித்திலேன்: அவரை மறக்கமாட்டாத என் நன்மையில்லாத பேதை நெஞ்சோடு கூட்டுப்பட்டு.
இது தலைமகள் யான் நாணாது தூதுவிட்டது, பின்நெஞ்சு மறவாமையாலேயென்று அதனோடு புலந்து கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சிற்பட்டு - தன்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லாத மடநெஞ்சுடனே கூடி; நாணும் மறந்தேன் - என் உயிரினும் சிறந்த நாண் தன்னையும் மறந்துவிட்டேன்.
(மாணாமை - ஒரு நிலையில் நில்லாமை. மடமை - கண்டவழி நினைந்து காணாதவழி மறக்குந் தவற்றைக் காணாவழி நினைந்து கண்டவழி மறத்தல். நாண் - எஞ்ஞான்றும் கூடியொழுகினும் அஞ்ஞான்று கண்டார் போன்று ஒடுங்குதல், 'கண்ட பொழுதே புணர்ச்சி விதும்பலின், அதனையும் மறந்தேன்', என்றாள்.)

வ சுப மாணிக்கம் உரை: அவரை மறக்கமுடியாத மடமையுடைய சிறிய நெஞ்சின்வயப்பட்டு நாணை விட்டேன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அவர்மறக் கல்லாஎன் மாணா மடநெஞ்சில் பட்டு நாணும் மறந்தேன்.

பதவுரை:
நாணும்-நாணையும்; மறந்தேன்-மறந்து விட்டேன்; அவர்-அவரை (காதலரை); மறக்கல்லா-மறக்க முடியாத; என்-எனது; மாணா-மாட்சிமையில்லாத; மட-அறியாமை மிகுந்த; நெஞ்சில்-உள்ளத்தில்; பட்டு-கூட்டுப்பட்டு.


நாணும் மறந்தேன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்கண் நெறிவர நினையும் நாணத்தையும் கடைப்பிடித்திலேன்;
பரிப்பெருமாள்: எனக்கு இன்றியமையாத நாணினையும் கடைப்பிடிக்கிலேன்;
பரிதி: என் நாயகர் என்னை மறக்க நான் நாண் மறந்தேன்;
காலிங்கர்: தோழீ! முன்னம்போல நம்மை அருளாதவர் தம்மை நாம் இனி நெருங்குதல் தீது என்று நாணுதல் நமக்குக் கடன் அன்றே; மற்று அந்நாணினையும் மறந்தேன்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) என் உயிரினும் சிறந்த நாண் தன்னையும் மறந்துவிட்டேன்.
பரிமேலழகர் குறிப்புரை: நாண் - எஞ்ஞான்றும் கூடியொழுகினும் அஞ்ஞான்று கண்டார் போன்று ஒடுங்குதல், 'கண்ட பொழுதே புணர்ச்சி விதும்பலின், அதனையும் மறந்தேன்', என்றாள்.

'நாண் தன்னையும் மறந்துவிட்டேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உயிரிற் சிறந்த நாணத்தையும் மறந்து விட்டேன்', 'நான் என்னுடைய நாணத்தைக் கூட மறந்துவிட்டேன்', 'நான் வெட்கத்தை மறந்தவளாயினேன்', 'என் உயிரினும் சிறந்த நாணினையும் மறந்தேன் ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

என் நாணினையும் மறந்தேன் என்பது இப்பகுதியின் பொருள்.

அவர்மறக் கல்லாஎன் மாணா மடநெஞ்சில் பட்டு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவரை மறக்கமாட்டாத என் நன்மையில்லாத பேதை நெஞ்சோடு கூட்டுப்பட்டு.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் யான் நாணாது தூதுவிட்டது, பின்நெஞ்சு மறவாமையாலேயென்று அதனோடு புலந்து கூறியது.
பரிப்பெருமாள்: அவரை மறக்கமாட்டாத நன்மையில்லாத பேதை நெஞ்சோடு கூட்டப்பட்டு என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகள் 'யான் நாணாது தூதுவிட்டதும் என் நெஞ்சு மறவாமையாலே' என்று அதனோடு புலந்து கூறியது.
பரிதி: அறிவிலா நெஞ்சு என்வசம் வாராதபடியால் என்றவாறு.
காலிங்கர்: அக்கொடியார் தம்மை ஒரு பொழுதும் மறக்கவல்லாத என் தீய நெஞ்சின்கண் அகப்பட்டு என்றவாறு.
பரிமேலழகர்: தன்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லாத மடநெஞ்சுடனே கூடி;
பரிமேலழகர் குறிப்புரை: மாணாமை - ஒரு நிலையில் நில்லாமை. மடமை - கண்டவழி நினைந்து காணாதவழி மறக்குந் தவற்றைக் காணாவழி நினைந்து கண்டவழி மறத்தல்.

'காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லாத மடநெஞ்சுடனே கூடி' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன்னை மறந்த காதலரை மறக்க இயலாத என் மாண்பில்லாத மட நெஞ்சுடனே சேர்ந்து', 'பெருமையற்ற அறிவில்லாத மனதில் சிக்கிக் கொண்டு', 'அன்பில்லாத அவரை மறக்கமாட்டாத எனது இழிந்த அழிவில்லாத நெஞ்சோடு சேர்ந்து', 'அவரை மறக்கமுடியாத என் மாட்சிமையில்லாத அறியாமை பொருந்திய நெஞ்சுடனே கூடி' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவரை மறக்கமுடியாத, குணம்கெட்ட என் மட, நெஞ்சுடனே சேர்ந்து என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அவரை மறக்கமுடியாத, குணம்கெட்ட என் மட, நெஞ்சுடனே சேர்ந்து நாணும் மறந்தேன் என்பது பாடலின் பொருள்.
'நாணும் மறந்தேன்' என்ற தொடர் குறிப்பது என்ன?

என் சிறிய நெஞ்சுக்கு அதன் மடத்தனத்தால் அவரை மறக்க முடியாமலிருக்கிறது. அதனுடன் சேர்ந்து நானும் என் நாணை விட்டுவிட்டேனே!
பணி காரணமாக அயல் சென்றிருந்த தலைவன் நீண்டநாட்களுக்குப் பின் இல்லம் திரும்பி வந்திருக்கிறான். பிரிவால் துயருற்றிருந்த தலைவி அவன் வரவால் பூரிப்படைந்து இன்முகத்துடன் தோற்றம் தருகிறாள். கணவனை நேரில் கண்டதால் மிக்க மகிழ்ச்சியுடன் காணப்படுகிறாள். வீட்டில் மற்றவர்களும் இருப்பதால் அவனை நெருங்கிச் சந்திக்க இயலாதிருக்கிறாள். இன்னும் சிறுது நேரத்தில் அந்தக் கூட்டம் நிகழவிருக்கிறது. இந்த இடைநேரத்தில் பிரிவுக் காலத்தில் நடந்தவைகளை நினைவுபடுத்திக் கொள்கிறாள்.
தன்னைப் 'பிரிந்த கொடுமை' செய்த காதலரைத் தன் நெஞ்சால் மறக்க முடியாமல் அவரையே நினைத்துக்கொண்டு இருந்தது. அதனால் அது மாட்சிமையற்ற மட நெஞ்சமாம். அந்நெஞ்சுடன் சேர்ந்ததாலேயே தானும் தன் காதலரை விரைந்து கூட எண்ணி தன் நாணினையும் இழந்துவிட்டதாக 'மட நெஞ்சமே! உன்னால்தான் நான் கெட்டேன்' என நெஞ்சைக் குறைகூறி அதனுடன் புலக்கிறாள் தலைவி.
காதலனை மறக்க முடியாத தன்னுடைய நெஞ்சோடு சேர்ந்து மறக்கக் கூடாததாகிய நாணத்தையும் மறந்து விட்டதாக அவள் கூறுகிறாள். தான் அறிவற்றவளாகி விட்டதாகவும் குணம் கெட்டுப் போனதாகவும் நாணத்தை இழந்தவளாகவும் ஆகி விட்டதாகத் தலைவி புலம்புகிறாள்.
கூப்பிடு தொலைவில் உள்ள தலைவனுடன் விரைந்து சேரத் துடிக்கிறாள் காதலி என்பது கருத்து.

தலைமகள் யான் நாணாது தூது விட்டது பின் நெஞ்சு மறவாமையாலே என்று அதனோடு புலந்து கூறியதாக மணக்குடவரும் வாயிலாகச் சென்ற தோழி கேட்பத் தலைவி கூறுவதாகப் பரிமேலழகரும் காட்சிப் பின்னணி அமைப்பர்.

'நாணும் மறந்தேன்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'நாணும் மறந்தேன்' என்ற தொடர்க்கு என்கண் நெறிவர நினையும் நாணத்தையும் கடைப்பிடித்திலேன், எனக்கு இன்றியமையாத நாணினையும் கடைப்பிடிக்கிலேன், நான் நாண் மறந்தேன், நாணினையும் மறந்தேன், என் உயிரினும் சிறந்த நாண் தன்னையும் மறந்துவிட்டேன், மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்துவிட்டேன், நான் என் உயிரனைய நாணத்தையும் மறந்துவிட்டேன், நாணை விட்டேன், உயிரிற் சிறந்த நாணத்தையும் மறந்து விட்டேன், நான் என்னுடைய நாணத்தைக் கூட மறந்துவிட்டேன், யான் விடக்கூடாத நாணத்தையும் விட்டுவிட்டேன், நான் வெட்கத்தை மறந்தவளாயினேன், என் உயிரினும் சிறந்த நாணினையும் மறந்தேன் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'நாண்' என்பதற்கு 'எப்பொழுதும் கூடி ஒழுகினாலும் அப்பொழுதுதான் கண்டார் போன்று ஒடுங்குதல்' என்ற பொருள் தந்தார் பரிமேலழகர், எஞ்ஞான்றும், எம் கணவர் எம் தோள்மேல் சேர்ந்து எழினும், அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால் (கற்புடை மகளிர்,.385 பொருள்: எம் கணவர் எந்நாளும்எம் தோள்மேல் முயங்கியெழுந்தாலும் அன்றுகண்டேம்போல் அவர்பால் யாம் நாணமுடையமாயிருக்கின்றேம்) என்று சொன்னது நாலடியார்.
'கண்ட பொழுதே புணர்ச்சி விதும்பலின், அந்த நாணினையும் மறந்தேன்' என்றாள்' என்று 'மறந்தேன்' என்பதற்கும் பரிமேலழகர் விளக்கம் செய்தார்.

அவன் பிரிந்து சென்று வந்தமைக்காக ஊடல் செய்யாது அவனைக் கண்ட பொழுதே அவனைக் கூடநினைப்பதை நாணிழந்துவிட்டதாகத் தலைவி கருதுகிறாள்.

அவரை மறக்கமுடியாத, குணம்கெட்ட என் மட, நெஞ்சுடனே சேர்ந்து என் நாணினையும் மறந்தேன் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

'உன்னோடு கூட்டுப்பட்டதாலேயே நான் நாணிழக்க நேர்ந்தது' என்று தன் நெஞ்சோடுபுலத்தல் செய்கிறாள் தலைவி.

பொழிப்பு

காதலரை மறக்கமுடியாத மடமையுடைய சிறிய நெஞ்சுடனே சேர்ந்து நாணை மறந்தேன்.