இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1291



அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது

(அதிகாரம்:நெஞ்சொடுபுலத்தல் குறள் எண்:1291)

பொழிப்பு (மு வரதராசன்): நெஞ்சே! அவருடைய நெஞ்சம் (நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?

மணக்குடவர் உரை: அவருடைய நெஞ்சம் அவர்வழி நின்று நம்மை நினையாமையைக் கண்டு வைத்தும் நெஞ்சே! நீ எம்வழி நில்லாது அவரை நினைத்தல் யாதினைக் கருதியோ?
இது தலைமகள் வருங்காலத்து வாராத தலைமகனை உள்ளிய நெஞ்சோடு புலந்து கூறியது.

பரிமேலழகர் உரை: (தலைமகன்கண் தவறுண்டாய வழியும் புலவி கருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.) நெஞ்சு - நெஞ்சே; அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் - அவருடைய நெஞ்சு நம்மை நினையாது அவர்க்காய் நிற்றல் கண்டு வைத்தும்; நீ எமக்கு ஆகாதது எவன் - நீ எமக்காய் நில்லாது, அவரை நினைத்தற் காரணம் யாது?
(அவர்க்கு ஆதல் - அவர் கருதியதற்கு உடம்படுதல். எமக்காகாதது என்றது, புலவிக்கு உடம்பாடாமையை. 'ஒரு கருமத்தைத் தாமாக அறிந்து செய்யமாட்டாதார் செய்வாரைக் கண்டாயினும் செய்வர். நீ அதுவும் செய்கின்றிலை' என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: அவர்மனம் அவர்பக்கம் இருப்பதைப் பார்த்தும் என்மனமே! நீ என்பக்கம் இராதது ஏன்?


பொருள்கோள் வரிஅமைப்பு:
நெஞ்சே! அவர்நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும், நீஎமக்கு ஆகாதது எவன்?.

பதவுரை: அவர்-அவர் (இங்கு கணவர்); நெஞ்சு-உள்ளம்; அவர்க்கு-அவர்க்கு; ஆதல்-ஆகுதல்; கண்டும்-அறிந்தும்; எவன்-யாது?, எதற்காக?; நெஞ்சே-உள்ளமே; நீ-நீ; எமக்கு-நமக்கு; ஆகாதது-ஆகாதிருத்தல்.


அவர்நெஞ்சு அவர்க்குஆதல் கண்டும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவருடைய நெஞ்சம் அவர்வழி நின்று நம்மை நினையாமையைக் கண்டு வைத்தும்;
பரிப்பெருமாள்: அவருடைய நெஞ்சு அவர்வழி நின்று நம்மை நினையாமை கண்டு வைத்தும்; .
பரிதி: அவர் நெஞ்சு அவர்க்குக் கைவந்தது கண்டிருந்தும்;
காலிங்கர்: நம் காதலராகியவர் நெஞ்சம் அவர்க்கு உரித்தாதல் கண்டு வைத்தும்;
பரிமேலழகர்: (தலைமகன்கண் தவறுண்டாய வழியும் புலவி கருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.) அவருடைய நெஞ்சு நம்மை நினையாது அவர்க்காய் நிற்றல் கண்டு வைத்தும்;
பரிமேலழகர் குறிப்புரை: அவர்க்கு ஆதல் - அவர் கருதியதற்கு உடம்படுதல். [அவர் கருதியதற்கு உடம்படுதல்- காதலர் நினைத்த காரியத்திற்கு இசைதல்] .

'அவருடைய நெஞ்சம் அவர்வழி நின்று நம்மை நினையாமையைக் கண்டு வைத்தும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவருடைய நெஞ்சம் நம்மை நினைக்காமல் அவர் வழி நின்று உதவுதலைக் கண்டும்', 'என் காதலருடைய மனம் அவருக்கு அடங்கியிருப்பதை நீ பார்க்கிறாய்', 'தலைவர் மனம் நமக்கு ஆகாது, அவர்க்கே பயன்படுவது கண்டும்', 'அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாதலைப் பார்த்தும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாதலைக் கண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

எவன் நெஞ்சே நீ எமக்கு ஆகாதது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெஞ்சே! நீ எம்வழி நில்லாது அவரை நினைத்தல் யாதினைக் கருதியோ?
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் வருங்காலத்து வாராத தலைமகனை உள்ளிய நெஞ்சோடு புலந்து கூறியது.
பரிப்பெருமாள்: நெஞ்சே! நீ எம்வழி நில்லாது அவரை நினைத்தல் யாதினைக் கருதியோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகள் வருங்காலத்து வாராத தலைமகனை உள்ளிய நெஞ்சோடு புலந்து கூறியது.
பரிதி: எந்தன் நெஞ்சே, நீ நமக்கு வசம் வாராயில்லை என்றவாறு.
காலிங்கர்: அங்ஙனம் நீ எனக்கு உரியை ஆகாது எம்மோடு எதிர்மலைவது எவனோ? நெஞ்சே! இது தகாது உனக்கு என்றவாறு.
பரிமேலழகர்: நெஞ்சே! நீ எமக்காய் நில்லாது, அவரை நினைத்தற் காரணம் யாது?
பரிமேலழகர் குறிப்புரை: எமக்காகாதது என்றது, புலவிக்கு உடம்பாடாமையை. 'ஒரு கருமத்தைத் தாமாக அறிந்து செய்யமாட்டாதார் செய்வாரைக் கண்டாயினும் செய்வர். நீ அதுவும் செய்கின்றிலை' என்பதாம். [நீ அதுவும் செய்கின்றிலை - நீ அக்காரியத்தையும் (பிணங்குதலையும்) செய்யவில்லை]

'நெஞ்சே! நீ எமக்காய் நில்லாது, அவரை நினைத்தற் காரணம் யாது?' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெஞ்சமே! நீ என்வழி நின்று எனக்குதவாது அவரை நினைத்தற்குக் காரணம் என்ன?', 'மனமே! பார்த்த பின்னும் நீ அதைப்போல் எனக்கு அடங்கியிருக்க மறுப்பது ஏன்?', 'நீ எமக்கு ஆகாமல் அவரையே கருதுவதாற் பயன் என்ன? (நம்மை நினையாதவரை நாம் நினைப்பதாற் பயன் என்ன?)', 'நெஞ்சே! நீ எமக்குத் துணையாகாதது எதனால்?' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

என் நெஞ்சே! நீ என்பக்கம் நில்லாதது எதனால்? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும், என் நெஞ்சே! நீ என்பக்கம் நில்லாதது எதனால்? என்பது பாடலின் பொருள்.
'அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல்' என்பதன் பொருள் என்ன?

என் மடநெஞ்சே! உனக்குத்தான் தெரியவில்ல என்றால் தலைவர் நெஞ்சு செயல்படுவதைப் பார்த்தாவது அறிந்து கொண்டிருக்கலாமே!

'தலைவர் நெஞ்சம் என்னை நினைக்காமல் அவர் பக்கமே நிற்கிறது. அப்படியிருக்கும்போது, என் நெஞ்சே! நீ ஏன் எனக்குத் துணையாகாது அவருடன் சென்று சேரத் துடிக்கிறாய்?' எனத் தன் மனத்திடம் சினந்து கூறுகிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
கணவர் கடமை முடிந்து இல்லம் திரும்பிவிட்டார்.. தலைவி மிக்க மகிழ்ச்சியுடன் காணப்படுகிறாள். தன்னை நன்கு அழகுபடுத்திக்கொண்டு படுக்கை அறையில் அவருக்காகக் காத்திருக்கிறாள். கூடுவதற்கு முன் ஊடுவதா வேண்டாமா எனப் புணர்ச்சியை விழைகின்ற அவளுக்குள் ஒரு போராட்டம் நெடுநாட்களாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இக்காட்சி:
புணர்ச்சி விதுப்புடன் தலைவி இருக்கிறாள். இன்னும் சிறுது நேரத்தில் தலைமக்கள் கூடப்போகிறார்கள். இதனிடையில் தலைவி தன் நெஞ்சத்தோடு மாறுபட்டுப் பேசத் தொடங்குகிறாள். தலைவரது நெஞ்சு எப்பொழுதும் அவருக்குத் துணையாயிருப்பதாகவும் ஆனால் தன் நெஞ்சு தன்னைவிட்டு எந்த நேரமும் தலைவரையே நாடி அவர்பின் சென்றுவிடுவதாகவும் தலைவிக்கு ஒரு நினைப்பு உண்டு; தனக்குத் தன் நெஞ்சு துணையாகாததாய் உள்ளதாகவும் காதலி எண்ணுகிறாள். தன் விருப்பப்படி நடக்காத நெஞ்சின் மேல் சினம் கொண்டவள்போல் உரையாடுகிறாள். 'நெஞ்சே! காதலருடைய நெஞ்சம் அவரை விட்டு நம்மிடம் வருகின்றதில்லையே! அவர் பக்கமே நின்று அவர்க்கே துணையாக இருக்கின்றதே! நீ மட்டும் என் பக்கமாய் நில்லாதது ஏன்?' என தன் நெஞ்சைப் பார்த்துக் கேட்கிறாள்.

செயல்மேற் சென்ற கணவர் பிரிவில் தன்னை நினைக்கவில்லை என்று தலைவி கருதிக் கொண்டு நெஞ்சோடு புலக்கிறாள். ஒரு பெண் தன் தலைவர் அவளை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள். அவளை விரைந்து காண வர வேண்டும் என்று எப்போதும் விரும்புவாள். அது தான் ஒரு பெண்ணின் நெஞ்சமாகும். இங்கு அவள் தன் எண்ணத்திற்கு மாறாகத் தன் நெஞ்சு செயலாற்றுவதாகக் கற்பனை செய்து அதைக் கடிவதுபோல் அதனுடன் உரையாடுகிறாள்.

'அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல்' என்பதன் பொருள் என்ன?

'அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல்' என்ற பகுதிக்கு அவருடைய நெஞ்சம் அவர்வழி நின்று நம்மை நினையாமை, அவருடைய நெஞ்சு அவர்வழி நின்று நம்மை நினையாமை, அவர் நெஞ்சு அவர்க்குக் கைவந்தது, நம் காதலராகியவர் நெஞ்சம் அவர்க்கு உரித்தாதல், அவருடைய நெஞ்சம் (நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதல். அவர் நெஞ்சம் அவர் பக்கமே நின்று நம்மை நினையாதிருப்பது, அவர்மனம் அவர்பக்கம் இருப்பது, அவருடைய நெஞ்சம் நம்மை நினைக்காமல் அவர் வழி நின்று உதவுதல், என் காதலருடைய மனம் அவருக்கு அடங்கியிருப்பது, துணைவரின் நெஞ்சம், அவர்க்காகவே அமைந்து இருப்பது, தலைவர் மனம் நமக்கு ஆகாது, அவர்க்கே பயன்படுவதல், அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாதல், அவர் நெஞ்சம் என்னை நினையாமல் அவரிடமே இருப்பது, அவருடைய உள்ளம் நம்மை நினையாது. அவருக்கே யுதவுதல், நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருத்தல், அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பது, அவருடைய நெஞ்சம் அவருக்கு உதவி செய்து அவர் சொற்படி நிற்பது என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'நெஞ்சே! தலைவரின் நெஞ்சம், அவர்க்காகவே அமைந்து இருப்பதைக் கண்டபின்னும் நீ எமக்கு ஆகாததாக இருப்பது ஏன்?' எனத் தலைவி கேட்கிறாள். காலிங்கர் என்ற பழைய உரையாசிரியர்: 'நம் காதலராகியவர் நெஞ்சம் அவர்க்கு உரித்தாதல் கண்டு வைத்தும் அங்ஙனம் நீ எனக்கு உரியை ஆகாது எம்மோடு எதிர்மலைவது எவனோ? நெஞ்சே! இது தகாது உனக்கு' எனத் தலைவி கூறுவதாக உரைக்கிறார்.
தன் நெஞ்சு மட்டும் தன் நெஞ்சமாய் தன்னிடம் நில்லாதது ஏன்? எனத் தலைவி வியக்கிறாள். அவரவர் நெஞ்சு அவரவர்க்கு உதவுதல் இயல்பு. ஆனால், அவள் நெஞ்சோ தலைவரை விரும்பி அவர்பால் செல்லுகின்றதாம். அவர் நெஞ்சு தலைவிபால் வருவதாக இருந்தால், அவர் அவளிடம் விரைந்து வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் அங்ஙனம் வரவில்லை. எனவே அவர் நெஞ்சு அவருக்கே உதவுகின்றது. ஆகவே, அவள் தன் நெஞ்சம் மட்டும் தன் பக்கமாய் நில்லாதது ஏன்? எனக் கேட்கின்றாள். தன் நெஞ்சை கணவர் பக்கம் ஏன் சென்றது என வினவியது அவள் மனம் ஏற்கனவே அவரிடம் சென்றுவிட்டது என்பதை அறிவிப்பதாகிறது. தலைவர் நெஞ்சு அவர்வழி நின்று தம்மை நினைக்கவில்லை. எனவேதான் அவர் தன்னிடம் விரைந்து வரவில்லை எனக் கருதுகிறாள் தலைவி. அதே சமயம் தலைமகள் தலைவரை விரைவில் சென்றடைய விரும்புகிறாள் என்பதும் தெரிவிக்கப்படுகிறது.

'அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல்' என்றதற்கு அவர் நெஞ்சு அவர் பக்கம் நிற்பதாதல் என்பது பொருள்.

அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாதலைக் கண்டும், என் நெஞ்சே! நீ என்பக்கம் நில்லாதது எதனால்? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தன்னை நினையாத தலைவனை எண்ணித் தலைவி தன் நெஞ்சோடுபுலத்தல்.

பொழிப்பு

என் நெஞ்சமே! அவர் நெஞ்சம் அவர் வழி இருப்பதைப் பார்த்தும் நீ என்வழி நில்லாதது எதனால்?