இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1293கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்

(அதிகாரம்:நெஞ்சோடுபுலத்தல் குறள் எண்:1293)

பொழிப்பு (மு வரதராசன்): நெஞ்சே! நீ உன் விருப்பத்தின் படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்க்கு நண்பர் இல்லை என்னும் எண்ணமோ?

மணக்குடவர் உரை: நெஞ்சே! நீ என்னிடத்து நில்லாது வேண்டின வண்ணமே அவர் பின்பே செல்கின்றது, கெட்டார்க்கு நட்டார் இல்லையென்பதனானேயோ?

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; நீ பெட்டாங்கு அவர்பின் செலல் - என்மாட்டு நில்லாது நீ விரும்பியவாறே அவர்மாட்டுச் செல்லுதற்குக் காரணம்; கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ? - கெட்டார்க்கு நட்டார் உலகத்து இல்லை என்னும் நினைவோ? நின்னியல்போ? கூறுவாயாக.
('என்னை விட்டு அவர்மாட்டுச் சேறல் நீ பண்டே பயின்றது', என்பாள், 'பெட்டாங்கு' என்றும், தான் இதுபொழுது மானமிலளாகலின், 'கெட்டார்க்கு' என்றும் கூறினாள். 'பின்' என்பது ஈண்டு இடப் பொருட்டு. 'செலல்' என்பது ஆகுபெயர். 'ஒல்கிடத்து உலப்பிலா உணர்விலார் தொடர்பு' (கலித்,பாலை 25)ஆயிற்று, நின் தொடர்பு என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: மனமே! என் பக்கம் நில்லாமல் விரும்பியவாறே அவர் பக்கம் செல்லக் காரணம் கேடுற்றவர்க்கு நண்பர் இல்லை என்னும் பழமொழி கருதியோ?


பொருள்கோள் வரிஅமைப்பு:
நெஞ்சே! நீ பெட்டாங்கு அவர் பின் செலல் கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ?

பதவுரை:
கெட்டார்க்கு-தன் நிலையில் குறைந்தவர்க்கு; நட்டார்-நண்பர்கள்; இல்-இல்லை; என்பதோ-என்பதனாலாயோ?; நெஞ்சே-உள்ளமே; நீ-நீ; பெட்ட-விரும்பிய; ஆங்கு-போல; அவர்-அவர்; பின்-பின்னால்; செலல்-செல்லுதல்.


கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கெட்டார்க்கு நட்டார் இல்லையென்பதனானேயோ?
பரிப்பெருமாள்: கெட்டார்க்கு நட்டார் இல்லையென்பதனானேயோ?
பரிதி: கெட்டார்க்கு உற்றாரில்லை என்பது உன்னளவிலே கண்டேன்;
காலிங்கர்: 'உலகில் கெட்டார்க்கு நட்டார் இல்' என்று சொல்லும் முதுசொல் வழக்கேதான். எனவே யான் இங்ஙனம் எம்மை விரும்பாதாவர் தம்மேல் விழுதல் முறைமையோதான் என்றவாறு.
பரிமேலழகர்: (இதுவும் அது.) கெட்டார்க்கு நட்டார் உலகத்து இல்லை என்னும் நினைவோ? நின்னியல்போ? கூறுவாயாக.

'கெட்டார்க்கு நட்டார் இல்லையென்பதனானேயோ?' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கெட்டவர்க்கு நண்பரில்லை என்பது கருத்தோ?', 'தரித்திரமடைந்தவர்களுக்கு நண்பர்கள் இருக்கமாட்டார்கள் என்ற நியாயத்தைச் சேர்ந்ததோ?', 'நீ அவர்பின் என்னைக் கேளாது விரும்பியபடி செல்லுதல்', 'கெட்டுப்போனவர்க்கு நண்பர் இலர் என்னும் நினைவோ?', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கேடுற்றவர்க்கு நண்பர் இல்லை என்பதனாலேயோ? என்பது இப்பகுதியின் பொருள்.

நெஞ்சேநீ பெட்டாங்கு அவர்பின் செலல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெஞ்சே! நீ என்னிடத்து நில்லாது வேண்டின வண்ணமே அவர் பின்பே செல்கின்றது,
பரிப்பெருமாள்: நெஞ்சே! நீ என்வரை நில்லாது வேண்டின வண்ணமே அவர் பின் செல்கின்றது,
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வாயில் மறுத்த தலைமகள் அவனோடு கூட்டம் வேண்டிய நெஞ்சோடு புலந்து கூறியது.
பரிதி: நெஞ்சே, நீ என்னைவிட்டும் நாயகர் பின் செல்லுவதால் என்றவாறு.
காலிங்கர்: நெஞ்சே! அவர்க்கு நம்மோடு அன்பு இல்லை; ஆயினும் பின்னும் நீ அவரைக் காதலித்து அவர்பின் செல்லுதல்.
பரிமேலழகர்: (இதுவும் அது.) நெஞ்சே! என்மாட்டு நில்லாது நீ விரும்பியவாறே அவர்மாட்டுச் செல்லுதற்குக் காரணம்.
பரிமேலழகர் குறிப்புரை: 'என்னை விட்டு அவர்மாட்டுச் சேறல் நீ பண்டே பயின்றது', என்பாள், 'பெட்டாங்கு' என்றும், தான் இதுபொழுது மானமிலளாகலின், 'கெட்டார்க்கு' என்றும் கூறினாள். 'பின்' என்பது ஈண்டு இடப் பொருட்டு. 'செலல்' என்பது ஆகுபெயர். 'ஒல்கிடத்து உலப்பிலா உணர்விலார் தொடர்பு' (கலித்,பாலை 25)ஆயிற்று, நின் தொடர்பு என்பதாம்.

'நெஞ்சே! என்மாட்டு நில்லாது நீ விரும்பியவாறே அவர்மாட்டுச் செல்லுதற்குக் காரணம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெஞ்சே! உன்நோக்கப்படி அவரிடம் செல்லுதல்', 'மனமே! நீ (என் விருப்பத்தை மதிக்காமல்) உன் விருப்பத்தின்படியே அவரிடம் தஞ்சமடையப் போவது', 'நெஞ்சே! கெட்டவர்க்கு உலகத்தில் நட்பினர் இல்லை என்கிற நினைவினாலோ?', 'நெஞ்சே! நீ விரும்பியவாறு அவரிடம் செல்லுதற்குக் காரணம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நெஞ்சே! நீ விரும்பியபடி அவரிடம் செல்லுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நெஞ்சே! நீ விரும்பியபடி அவரிடம் செல்லுதல் கெட்டார்க்கு நட்டார்இல் என்பதனாலேயோ? என்பது பாடலின் பொருள்.
'கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ' என்பதன் விளக்கம் என்ன?

'என் நெஞ்சே! நீ விரும்பியபடி அவரிடம் சென்றுவிடுகிறாயே. கெட்டார்க்கு நண்பர் இல்லை என்று சொல்வார்களே, அது போன்றதா இது?' எனத் தலைவி கேட்கிறாள்.
தொழில் காரணமாகச் சென்ற தலைமகன் இன்று இல்லம் திரும்பியிருக்கிறான். அவனை வரவேற்கத் தன்னை நன்கு ஒப்பனை செய்து மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன், பெண்மை நிறைந்த பொலிவுடன் இல்லத்துள் வலம் வருகிறாள் தலைவி. வீட்டினுள் மற்றவர்களும் இருந்த சூழலில் கணவன் மனைவி இருவரும் தனிமையில் சந்திக்க முடியாதிருக்கின்றனர். இன்னும் சிறுது நேரத்தில் அச்சந்திப்பு நிகழவிருக்கிறது. இதற்கிடையில் தன் நெஞ்சோடு பிணங்குவதுபோல் பேசி அவனை விரைவில் நெருங்க வேண்டும் என்ற அவளது விருப்பை வெளிப்படுத்துகிறாள் தலைமகள்.

இப்பொழுது தலைவனைக் கண்ட காதலியின் நெஞ்சு அவன்பால் விரைந்து சென்றுவிட்டதாகப் பாவனை செய்கிறாள். 'அவரைக் கண்டவுடன் என்னைக் கைவிட்டு நீயும் அவரிடமே செல்லுகிறாய்' என்று கூறிய தலைவி, 'துன்பத்தால் கெட்டு நொந்தவர்களை உலகத்தில் உறவினர்களும் நண்பர்களும் கைவிட்டு ஒதுங்குவார்கள். அதைப்போல நான் காதலரை பிரிந்து நீண்டகாலம் துன்புற்றிருக்கிறேன். இந்த வேளையில் என்னை விட்டு உன் விருப்பப்படி அவருடன் போய்விட்டாயே! 'கெட்டார்க்கு நட்டாரில்லை' என்று உலகியலைச் எனக்கு சொல்வதற்காக இப்படிச் செய்கிறாய் போலும்' எனத் தன் நெஞ்சைப் புலந்து கூறுகிறாள்.

வாயில் மறுத்த தலைமகள் அவனோடு கூட்டம் வேண்டிய நெஞ்சோடு புலந்து கூறியது என்பார் பரிப்பெருமாள். தலைமகன்கண் தவறுண்டாய வழியும் புலவி கருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது என்று கூறுவார் பரிமேலழகர்.

'கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ' என்பதன் விளக்கம் என்ன?

காமத்துப்பாலிலும் அறக்கருத்துகளும் பழமொழிகளும் காணப்படுகின்றன. இங்கு 'கெட்டார்க்கு நட்டார் இல்லை' என்ற முதுமொழி (பழமொழி நானூறு 59) வழக்கு சொல்லப்படுகிறது. ஒருவர் நலிவுற்றுத் காலத்தில், முன்பு கூட இருந்த நண்பர்கள் எல்லாம் மறைந்து விடுவர் என்பது இதன் பொருள். மற்று அவர் ஒல்கத்து நல்கிலா உணர்விலார் தொடர்பு போல் (கலித்தொகை 25 பொருள்: வறுமை நேர்ந்தவிடத்து அவர்க்கு ஒன்றை உதவுதல் இல்லாத அறிவில்லாதவருடைய உறவு போல) என்ற பாடல் வரியை இதற்கு ஒப்பு காட்டுகிறார் பரிமேலழகர்.
இப்பாடலில் இந்தப் பழமொழி மென்மையான வகையிலேதான் ஆளப்பட்டுள்ளது. கேடுற்றவரை அவரது நண்பர்களும் உறவுகளும் விட்டு அகன்று சென்றுவிடுவதுபோல தலைவியின் நெஞ்சு அவளைக் கைவிட்டுவிட்டது என்று அவளே தன் நெஞ்சு பற்றி நகைச்சுவையாகக் கூறுகிறாள்.

இது வருத்த மேலீட்டால் சொல்லப்பட்டது அல்ல; தலைவன் வரவால் களிப்பு மிகுந்த மனநிலையில் உள்ள தலைமகளது கூற்று இது.

நெஞ்சே! நீ விரும்பியபடி அவரிடம் செல்லுதல் கேடுற்றவர்க்கு நண்பர் இல்லை என்பதனாலேயோ? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தன்னைக் கைவிட்டுத் தலைவனிடம் சென்றுவிட்டதாகத் தன் நெஞ்சோடுபுலத்தல் செய்கிறாள் காதலி.

பொழிப்பு

நெஞ்சே! நீ விரும்பியவாறே அவர் பக்கம் செல்லல் கெட்டவர்க்கு நண்பரில்லை என்பதனாலேயோ?