இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1292உறாஅ தவர்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅர்எனச் சேறிஎன் நெஞ்சு

(அதிகாரம்:நெஞ்சோடுபுலத்தல் குறள் எண்:1292)

பொழிப்பு (மு வரதராசன்): என் நெஞ்சே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!

மணக்குடவர் உரை: என்னெஞ்சே! நீ அன்புறாதாரைக் கண்ட விடத்தும் செற்றம் நீங்குவாரென அவர்மாட்டுச் செல்லாநின்றாய்.
இது தலைமகள் தலைமகன்மாட்டுச் செல்லக் கருதிய நெஞ்சோடு புலந்து கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) என் நெஞ்சு - என் நெஞ்சே; உறாதவர்க்கண்ட கண்ணும் - மேலும் நம்மாட்டு அன்புடையராகாதவரை உள்ளவாறு அறிந்த இடத்தும்; செறார் என அவரைச் சேறி - நாம் சென்றால் வெகுளார் என்பது பற்றி நீ அவர் மாட்டுச் செல்லாநின்றாய், இப்பெற்றியது மேலும் ஓர் அறியாமையுண்டோ?
('அவரை' என்பது வேற்றுமை மயக்கம் 'பழங்கண்ணோட்டம்பற்றி வெகுளார் என்பது கந்தாகச் சென்றாய், நீ கருதியது முடியுமோ'? என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: பொருந்தாவரின் நிலைதெரிந்த பின்னும் வெறுக்கார் என்று என் நெஞ்சே! போகின்றாய்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
என் நெஞ்சு உறாஅதவர்க் கண்ட கண்ணும் செறாஅர்எனச் அவரைச் சேறி.

பதவுரை:
உறாஅதவர்-(அன்பால் வந்து) பொருந்தாதவர்; கண்ட-அறிந்த; கண்ணும்-இடத்தும்; அவரை-அவரை; செறாஅர்-வெகுளார்; என-என்று கருதி; சேறி-செல்லுவாய்; என்-எனது; நெஞ்சு--உள்ளம்.


உறாஅதவர்க் கண்ட கண்ணும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நீ அன்புறாதாரைக் கண்ட விடத்தும்;
பரிப்பெருமாள்: அன்புறாதாரைக் கண்ட இடத்திலும்;
பரிதி: நாயகரைக் கண்டால் உறாதவரைப் போலக் கோபித்துப் பார்த்த பார்வை தவிர்த்து;
காலிங்கர்: நீ நம்மோடு அன்பில்லாதவரைக் கண்ட இடத்து மற்று அப்பொழுதே அவர் குணம் அறிந்து வைத்தும்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) மேலும் நம்மாட்டு அன்புடையராகாதவரை உள்ளவாறு அறிந்த இடத்தும்;

'அன்புறாதாரைக் கண்ட இடத்திலும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நம்மிடம் அன்புறாதவரைக் கண்ட இடத்தும்', 'நம்மிடத்தில் அவர் ஆசை கொள்ளவில்லை என்பதைக் கண்டு கொண்ட பின்னும்', 'நம்மிடத்து அன்பில்லாதவரைக் கண்டாலும்', 'நம்மிடம் அன்பு பொருந்தாதவரை உள்ளவாறு அறிந்த பிறகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அன்புறாதவர் என அறிந்தபொழுதும் என்பது இப்பகுதியின் பொருள்.

அவரைச் செறாஅர்எனச் சேறிஎன் நெஞ்சு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்னெஞ்சே! செற்றம் நீங்குவாரென அவர்மாட்டுச் செல்லாநின்றாய்.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் தலைமகன்மாட்டுச் செல்லக் கருதிய நெஞ்சோடு புலந்து கூறியது.
பரிப்பெருமாள்: என்னெஞ்சே! அவர் செற்றம் நீங்குவார் எனச் செல்லாநின்றாய், என்னே என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் புலந்த வழி 'இன்னும் ஒருகால் உணர்த்துவோம்' என்று கருதின நெஞ்சோடு புலந்து கூறியது. இவை மூன்றும் புலவியின்கண் நிகழ்வதே ஆயினும் நெஞ்சோடு புலத்தல் சொல்கின்றாராதலின் ஈண்டுக் கூறப்பட்டன. [உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் - தலைமகள் தணியாத பிணக்குடையள் ஆகிய இடத்து]
பரிதி: கிருபைப் பார்வை பார்ப்பித்தாய், நீ என்ன நெஞ்சு என்றவாறு.
காலிங்கர்: 'இவர் நம்மைச் செறுப்பார் அல்லர்; உவப்பார் போலும்' என்று உட்கொண்டு மேன்மேல் செல்லுகின்ற நெஞ்சமே என்று இங்ஙனம் தன் நெஞ்சோடு புலந்தாள் என்றவாறு.
பரிமேலழகர்: என் நெஞ்சே! நாம் சென்றால் வெகுளார் என்பது பற்றி நீ அவர் மாட்டுச் செல்லாநின்றாய், இப்பெற்றியது மேலும் ஓர் அறியாமையுண்டோ?
பரிமேலழகர் குறிப்புரை: 'அவரை' என்பது வேற்றுமை மயக்கம் 'பழங்கண்ணோட்டம்பற்றி வெகுளார் என்பது கந்தாகச் சென்றாய், நீ கருதியது முடியுமோ'? என்பதாம். [கந்தாக - பற்றுக் கோடாக]

'என் நெஞ்சே! நாம் சென்றால் வெகுளார் என்பது பற்றி நீ அவர் மாட்டுச் செல்லாநின்றாய்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என் நெஞ்சமே! வெறுக்கமாட்டார் எனக் கருதி அவரிடம் செல்கின்றாய்! இவ்வறியாமையை என்னென்பது?', 'என்னுடைய மனமே! அவர் நம்மை வெறுக்க மாட்டாரென்று அவரிடமே போகின்றாயே?', 'என் நெஞ்சே! நம்மை வெகுளாரென் றெண்ணி அவரிடஞ் செல்லுகின்றாய். அதுவும் அறியாமையே', 'நெஞ்சே! நம்மை வெறுக்கமாட்டார் என்று கருதி அவரிடம் செல்கின்றாய். என்ன காரணம்?' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

என் நெஞ்சமே! வெகுளமாட்டார் எனக் கருதி அவரிடம் செல்கின்றாய்! என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
என் நெஞ்சமே! உறாஅதவர் என அறிந்தபொழுதும் வெகுளமாட்டார் எனக் கருதி அவரிடம் செல்கின்றாய்! என்பது பாடலின் பொருள்.
'உறாஅதவர்' யார்?

என் நெஞ்சே! காதலர்தான் நம்மிடம் அன்பில்லாதவர்போல் காட்டிக் கொள்கிறாரே பின் ஏன் அவர் வெகுளார் என எண்ணி அவர் அருகிலேயே செல்கிறாய்? எனத் தலைவி தன் நெஞ்சைக் கடிந்து கொள்கிறாள்.
நீண்ட காலப் பிரிவிற்குப் பின் தலைவன் இல்லம் திரும்பியுள்ளான். பிரிந்திருந்தபொழுது மிகுந்த துயருற்று அவனையே நினைத்துக் கொண்டிருந்தவள் அவன் வரவால் இப்பொழுது மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகிறாள். வீட்டினுள் உறவினரும் மற்றவர்களும் இருந்ததால் கணவன்,மனைவி இருவரும் இன்னும் தனிமையில் சந்திக்க முடியாதிருக்கின்றனர். கூடும் வேளைக்காகக் காத்திருக்கின்றனர். ஒரே வீட்டில் இருந்தாலும் தலைமகன் அவளைப் பார்க்காததுபோல் உள்ளான். அதனால் அவனை அன்பில்லாதவன் என்று கற்பனை செய்து காதலி அவனுடன் பிணங்குவதுபோல் தன் நெஞ்சுடன் புலக்கிறாள்.

'தலைவர் நம்மேல் அன்பு இல்லாதவர் என்று அறிந்திருந்தும் அவரைக் கண்டதும் நம்மை வெறுக்க மாட்டார் என்று அவரிடம் செல்கிறாயே' எனத் தன் நெஞ்சைக் கடிக்கிறாள் தலைவி. அவர் நம்மிடம் வாராததிலிருந்து அவர் நம்பால் அன்பு கொள்ளாதவர் என்று எண்ண வேண்டும். ஆனால் நீயோ அவர் நம்மை வெகுளமாட்டார் என்று நம்பி அவரிடம் செல்கிறாயே! என்று தலைவி தன் நெஞ்சை நோக்கிக் கூறுகின்றாள். தலைவர் அன்பில்லாதவர் என்று நெஞ்சோடு பிணங்கிக் கூறினாலும், அவர் தன்மேல் மிகுந்த காதல் கொண்டவர் என்பது அவளுக்கு நன்கு தெரியும்.

உறாஅதவர், செறாஅர் என்னும் சொற்களில் வந்துள்ள அளபெடைகள் அசை நிறை அளபெடைகள் ஆகும்.
தொல்லாசிரியர்கள் ஐவரும் இப்பாடலைத் தலைவி கூற்றாகக் கொண்டனர்.
தலைமகள் தலைமகன்மாட்டுச் செல்லக் கருதிய நெஞ்சோடு புலந்து கூறியது என்று மணக்குடவரும் உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் புலந்த வழி 'இன்னும் ஒருகால் உணர்த்துவோம்' என்று கருதின நெஞ்சோடு புலந்து கூறியது என்று பரிப்பெருமாளும் தலைமகன்கண் தவறுண்டாய வழியும் புலவி கருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது என்று பரிமேலழகரும் காட்சி அமைப்பர்.

'உறாஅதவர்' யார்?

'உறாஅதவர்' என்ற சொல்லுக்கு அன்புறாதார், உறாதவரைப் போலக் கோபித்துப் பார்த்தவர், நம்மோடு அன்பில்லாதவர், நம்மாட்டு அன்புடையராகாதவர், நம்மேல் அன்பு கொள்ளாத காதலர், நம்முடன் உறவுகொள்ள விரும்பாதவர், பொருந்தாவர், நம்மிடம் அன்புறாதவர், நம்மிடத்தில் அவர் ஆசை கொள்ளாதவர், நம்மோடு பொருந்தாத துணைவர், நம்மிடத்து அன்பில்லாதவர், நம்மிடம் அன்பு பொருந்தாதவர், நம்மிடம் அன்பு காட்டாதவர் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

உறாஅதவர் என்ற சொல்லுக்கு (நம்மிடம்) அன்புறாதவர் என்று பொருள். 'உறாஅதவர்' என்றது இங்கு காதலனைக் குறிக்கும்.

என் நெஞ்சமே! அன்புறாதவர் என அறிந்தபொழுதும் வெகுளமாட்டார் எனக் கருதி அவரிடம் செல்கின்றாயே! என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நம்மை வெகுளமாட்டார் தலைவர் என்று எவ்வாறு நம்பிச் செல்கிறாய் என்று தன் நெஞ்சோடுபுலத்தல் கொள்கிறாள் தலைமகள்.

பொழிப்பு

என் நெஞ்சமே! அன்பு பொருந்தாவர் என அறிந்தபொழுதும் வெகுளமாட்டார் எனக் கருதி அவரிடம் செல்கின்றாய்!.