இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1294இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று

(அதிகாரம்:நெஞ்சோடுபுலத்தல் குறள் எண்:1294)

பொழிப்பு (மு வரதராசன்): நெஞ்சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப்பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?

மணக்குடவர் உரை: நெஞ்சே! நீ புலவியை நீளச்செய்து பின்னை நுகரமாட்டாய்: ஆதலான் இனி அப்பெற்றிப்பட்ட எண்ணத்தை நின்னோடு எண்ணுவார் யார்? இல்லை.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; துனி செய்து மற்றுத் துவ்வாய் - நீ அவரைக் கண்ட பொழுதே இன்பம் நுகரக் கருதுவதல்லது அவர் தவறு நோக்கி, முன் புலவியை உண்டாக்கி அதனை அளவறிந்து பின் நுகரக் கருதாய்; இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் - ஆகலான், இனி அப்பெற்றிப்பட்டவற்றை நின்னொடு எண்ணுவார் யார்? யான் அது செய்யேன். (அப்பெற்றிப்பட்டன - புலக்கும் திறங்கள். 'காண்' என்பது உரையசை. 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது. முன்னெல்லாம் புலப்பதாக எண்ணியிருந்து, பின் புணர்ச்சி விதும்பலின், இவ்வாறு கூறினாள்.)

இரா சாரங்கபாணி உரை: நெஞ்சே! நீ அவரைக் கண்டதும் இன்பம் நுகரக் கருதுவதல்லது தவறு நோக்கிப் புலந்து பின் இன்புறக் கருதவில்லை. இனி, அத்தன்மையனவற்றை நின்னோடு கலந்து எண்ணுவார் யாரே?


பொருள்கோள் வரிஅமைப்பு:
நெஞ்சே துனிசெய்து மற்றுத் துவ்வாய் காண் இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார்.

பதவுரை:
இனி-இப்பொழுது; அன்ன-அத்தன்மையான; நின்னொடு-உன்னுடன்; சூழ்வார்-எண்ணுபவர்; யார்யார்?; நெஞ்சே-உள்ளமே; துனி-புலவி; செய்து-இயற்றி; துவ்வாய்-நுகரக்கருதாய்; காண்-(உரையசை); மற்று-வினைமாற்று=அவ்வாறன்றி, ஆனால், பின் என்னும் பொருளது.


இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆதலான் இனி அப்பெற்றிப்பட்ட எண்ணத்தை நின்னோடு எண்ணுவார் யார்? இல்லை.
பரிப்பெருமாள்: ஆதலான் இனி அப்பெற்றிப்பட்ட எண்ணம் நின்னோடு எண்ணுவார் யார்? இல்லை.
பரிதி: உன்னை எங்ஙனம் நம்புவேன் என்றவாறு.
காலிங்கர்: ஆதலால் இனி அன்னவை நின்னொடு சூழ்வார் யார் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: (இதுவும் அது.) ஆகலான், இனி அப்பெற்றிப்பட்டவற்றை நின்னொடு எண்ணுவார் யார்? யான் அது செய்யேன்.
பரிமேலழகர் குறிப்புரை: அப்பெற்றிப்பட்டன - புலக்கும் திறங்கள்.

'இனி அப்பெற்றிப்பட்டவற்றை நின்னொடு எண்ணுவார் யார்?' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இனி அத்தகைய உன்னோடு யார் ஆராய்வார்?', 'இனிமேல் இப்படி (உன்னை நம்பி) உன் ஆலோசனையைக் கேட்கப் போகிறவர்கள் யாருமில்லை', 'நீ அவரைக் கண்டவுடன் அவரைச் சேர நினைப்பதன்றி', 'இனி அத்தகையனவற்றை உன்னோடு எண்ணுவார் யார்?', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இனி அத்தகையனவற்றை உன்னோடு கலந்து பேசுவார் யார்? என்பது இப்பகுதியின் பொருள்.

நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெஞ்சே! நீ புலவியை நீளச்செய்து பின்னை நுகரமாட்டாய்
பரிப்பெருமாள்: நெஞ்சே! நீ புலவியை நீளச்செய்து பின்னை நுகரமாட்டாய்.
பரிப்பெருமாள் குறிப்புரை: தலைமகனோடு புலக்க நினைத்த நெஞ்சினை, 'முன்பும் ஒருநாள் புலந்து முடிய நில்லாவாயினாய்; இன்னும் புலப்பேன் ஆயின் அறை போகுவை; ஆதலான் தனியே எண்ணிக்கொள்கிறேன்; நின்னோடு எண்ணென்' என்று அதனோடு புலந்து கூறியது.
பரிதி: இனி யாருடனே ஒத்திருப்பாய். நாயகருடனே ஊடற் பிணக்கானால் நீ கூட்டிக்கொள்ளுகிறாய்.
காலிங்கர்: நெஞ்சே! மற்று அவரிடத்து வந்த காலத்து நாம் அவர் தம்மை எதிர் ஏற்றுகொள்ளாது சிறிது வலிந்து நின்று மற்று அவரோடு முன்னம் துனி செய்து பின்னர்க்கூடி நுகர்கம்; அத்துணையும் அவர்வயின் சென்று மண்டாது நிற்பாயாக, என இவை நினக்கு யான் சொல்ல இயைந்தன போன்று இருந்து மற்று அவரைக் கண்ட பொழுதே எதிர் ஏற்று அவை மறந்து துனி கருதாது துய்த்தலைப் பேணினை.
பரிமேலழகர்: நெஞ்சே, நீ அவரைக் கண்ட பொழுதே இன்பம் நுகரக் கருதுவதல்லது அவர் தவறு நோக்கி, முன் புலவியை உண்டாக்கி அதனை அளவறிந்து பின் நுகரக் கருதாய்
பரிமேலழகர் குறிப்புரை: 'காண்' என்பது உரையசை. 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது. முன்னெல்லாம் புலப்பதாக எண்ணியிருந்து, பின் புணர்ச்சி விதும்பலின், இவ்வாறு கூறினாள்.

'முன் புலவியை உண்டாக்கி அதனை அளவறிந்து பின் நுகரக் கருதாய்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெஞ்சே! முதலில் பிணங்கிப் பின் கூடாய்', 'மனமே! பிணங்க வேண்டுமென்று (நாம் இருவரும் ஆலோசித்துத் தீர்மானம் செய்தோம்; ஆனால் நீ அதன்படி நடந்துகொள்ள மறுக்கிறாய்', 'நெஞ்சே! பிணங்கிப் பின் அவரைத் துய்க்க நினைக்கமாட்டாய்', 'நெஞ்சே! புலவியைச் செய்து பின் அவரிடம் இன்பம் நுகராய்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நெஞ்சே! முதலில் பிணங்கிப் பின் கூட நினைக்கமாட்டாதிருக்கிறாயே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நெஞ்சே! துனிசெய்து துவ்வாய் மற்று; இனி அத்தகையனவற்றை உன்னோடு கலந்து பேசுவார் யார்? என்பது பாடலின் பொருள்.
'துனிசெய்து துவ்வாய்' என்றதன் பொருள் என்ன?

'காதலருடன் நன்றாக சண்டை போடுவதுபோல் நடித்துப் பின் அவனைக் கூட வேண்டும் என்பது உனக்குத் தெரியாமல் போயிற்று. இதுபோன்றவற்றை உன்னிடம் இனி நான் எப்படிக் கலந்துபேசுவேன்?' எனத் தலைவி தன் நெஞ்சைக் கடிந்து கொள்கிறாள். .
தொழில் காரணமாகச் சென்றிருந்த தலைவன் வீடு திரும்பி வந்துவிட்டான். பிரிவால் துயருற்றிருந்த தலைவி அவனைப் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சி அடைந்து பெண்மைப் பொலிவுடன் காட்சி அளிக்கிறாள். அவனைத் தனிமையில் கூடும் வேளையை எதிர்நோக்கி இருக்கிறாள். அவன் இல்லம் திரும்பும் முன்னர், பிரிவினால் தனக்குண்டான கொடுமைகளுக்காகக் கணவன் அவன் மீது சினம் கொண்டிருந்தாள். அவன் வந்தால் அவனுடன் நன்றாகச் சண்டை போடவேண்டுமென்று உறுதி பூண்டாள். ஆனால் கணவனை நேரில் கண்டதும் அவனது தவறுகள் ஒன்றுமே அவளுக்குத் தெரியவில்லை. அவனுடன் கூடினாலும் அதற்கு முன் ஊடவேண்டும் என்று வஞ்சினம் கொண்டிருந்தவள் அதையும் முற்றிலும் மறந்துவிட்டாள்.
அவளால் பிணங்கியது போல் நடிக்க முடியவில்லை. ஊடலின்றிக் காதலனுடன் நெருங்கி இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவளிடம் உள்ளது. தன் முயற்சி தோற்று விட்டதால், இப்போது அவளுக்குத் தன் நெஞ்சின்மீது சினம் உண்டாகிறது. 'நெஞ்சே இதுவரை உன்னோடு கலந்து எண்ணித்தான் எல்லாமே செய்து வந்திருக்கிறேன். இப்பொழுதும் அவர் வந்தவுடன் ஊடுவதுபோல் நடித்துப் பின் அவரைச் சேரலாம் எனச் சொல்லியிருந்தேன். ஆனால் நீ உறுதியாக இருக்காமல் அவரைக் கண்டதும் நெகிழ்ந்து குடுகுடுவென்று ஓடி அவரிடம் சென்று சேர்ந்துவிட்டாயே; இனிமேல் உன்னுடன் கலந்து செய்வதில் பயன் இல்லை' என அதனுடன் புலக்கிறாள்.

இப்பாடலிலுள்ள அன்ன என்ற சொல்லுக்கு அப்பெற்றிப்பட்டன என உரையாசிரியர்கள் பொருள் கொண்டனர்- மேலும் அவை புலக்கும் திறங்களை அதாவது முகங்கொடுத்துப் பேசாமை. கவிழ்ந்து படுத்துக் கொள்ளுதல், எழுந்து சென்று ஒரு புறத்து ஒதுங்கித் தலைகுனிந்து நிற்றல் முதலியனவற்றைக் குறிக்கும் எனவும் விளக்குவர்.
‘துனி’ என்பதற்குப் புலவி என்றும் புலவித்துன்பம் என்றும் பொருள் கூறியுள்ளனர். இரண்டும் பொருந்தும் என்பார் இரா சாரங்கபாணி. இச்சொல் பயின்று வரும் இடங்களை நோக்கின், தெளிவிக்க முடியாத எல்லை இகந்த காதற்பூசலே துனி என்பது பெறப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

'துனிசெய்து துவ்வாய்' என்றதன் பொருள் என்ன?

'துனிசெய்து துவ்வாய்' என்ற தொடர்க்குப் புலவியை நீளச்செய்து பின்னை நுகரமாட்டாய், துனி கருதாது துய்த்தலைப் பேணினை, முன் புலவியை உண்டாக்கி அதனை அளவறிந்து பின் நுகரக் கருதாய், ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய், முதலில் சற்றே ஊடுவோம், பிறகு கூடுவோம் எனப் பொறுத்திருந்து இன்பம் அனுபவிக்கக் கருதமாட்டாய், முதலில் பிணங்கிப் பின் கூடாய், நீ புலந்து பின் இன்புறக் கருதவில்லை, பிணங்கி அவரோடு கலந்து கூடி மகிழ மாட்டாய், பிணங்கிப் பின் அவரைத் துய்க்க நினைக்கமாட்டாய், புலவியைச் செய்து பின் அவரிடம் இன்பம் நுகராய், அவரோடு ஊடல் செய்து, பின் கூடி இன்புறலாம் என்று எண்ணமாட்டாய் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பணி முடிந்து திரும்பி வந்துள்ள தலைவனுடன் பிணங்கிக் கொண்டு பின் கூடலுக்கு இசையவேண்டும்; அப்பொழுதுதான் காமம் இனிக்கும் என்பதைத் தலைவி தெரிந்து வைத்திருந்தாள். ஆனால் அவனக் கண்டவுடன் எல்லாம் மாறிவிட்டது- விரைந்து காதலன்பால் கூடற்குச் சென்றுவிட எண்ணம் தோன்றிவிட்டது. அப்பொழுது நெஞ்சைக் கடிவதுபோல் தன்னையே கடிந்து 'உள்ளமே! அவரோடு முதலில் ஊடிப் பின்னர் கூடுவோமே என்று நினைக்கிறாயில்லை. அவரைக்கண்டதும் உடனே கூட விழைந்து விரைகிறாயே! என்று தன்னைக் கைவிடும் நெஞ்சோடு எங்ஙனம் கலந்து எண்ண முடியும் எனத் தலைவி சொல்கிறாள்.

'துனிசெய்து துவ்வாய்' என்ற தொடர்க்குப் 'பிணங்கிப் பின் கூடாய்' என்பது பொருள்.

நெஞ்சே! முதலில் பிணங்கிப் பின் கூட நினைக்கமாட்டாதிருக்கிறாயே; இனி அத்தகையனவற்றை உன்னோடு கலந்து பேசுவார் யார்? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஊடலின் பயன் பெறாமல் கூட நினைக்கும் தன் நெஞ்சோடுபுலத்தல் செய்கிறாள் காதலி.

பொழிப்பு

நெஞ்சே! முதலில் பிணங்கிப் பின் கூட எண்ணமாட்டாய்; இனி அத்தன்மையனவற்றை உன்னோடு யார் கலந்து பேசுவார்?