இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1300தஞ்சம் தமர்அல்லர் ஏதிலார் தாம்உடைய
நெஞ்சம் தமரல் வழி

(அதிகாரம்:நெஞ்சோடுபுலத்தல் குறள் எண்:1300)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவர்க்குத் தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.

மணக்குடவர் உரை: தம்முடைய நெஞ்சும் தமக்குச் சுற்றமல்ல வாகுங்காலத்து, ஏதிலார் சுற்றமல்லாராவது சொல்லல் வேண்டுமோ?

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) தாம் உடைய நெஞ்சம் தமர் அல்வழி - தாம் உரித்தாக உடைய நெஞ்சம் ஒருவர்க்குத் தமர் அல்லாவழி; ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம் - அயலார் தமர் அல்லராதல் சொல்ல வேண்டுமோ?
('பிறளொருத்தியைக் காதலி என்று கருதி என் நெஞ்சே என்னை வருத்தாநின்ற பின் அப்பிறள் புலக்கின்றது எளிது', என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: தன்னுடைய நெஞ்சமே உறவாகாத போது அயலவர் உறவாகாமை இயல்புதானே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தாம்உடைய நெஞ்சம் தமரல் வழி ஏதிலார் தமர்அல்லர் தஞ்சம்.

பதவுரை:
தஞ்சம்-எளிது; தமர்உறவினர்; அல்லர்-ஆகமாட்டார்; ஏதிலார்-அயலார்; தாம்உடைய-தம்முடைய; நெஞ்சம்-உள்ளம்; தமரல்-உறவாக இல்லாத; வழி-பொழுது.


தஞ்சம் தமர்அல்லர் ஏதிலார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஏதிலார் சுற்றமல்லாராவது சொல்லல் வேண்டுமோ?
பரிப்பெருமாள்: ஏதிலார் சுற்றமல்லார் ஆகுதல் எளிது;
காலிங்கர்: தோழீ! மற்று அயலார் தமக்குத் தஞ்சமும் அல்லார், துணி;
காலிங்கர் குறிப்புரை: தஞ்சம் என்பது எளிமைப் பொருட்டு இடுக்கண் உற்றவிடத்து எய்துதல் என்பது.
பரிமேலழகர்: (இதுவும் அது.) அயலார் தமர் அல்லராதல் சொல்ல வேண்டுமோ?

'ஏதிலார் சுற்றமல்லார் ஆகுதல் எளிது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அயலார், உறவினர் அல்லராதல் (உதவாதிருத்தல்) எளியதே', 'மற்ற யாரும் அவருக்கு உறவாக மாட்டார்கள்; (ஆகையால் நீதான் எனக்கு உறுதுணை; நான் உன்னை) தஞ்சமடைகிறேன்', 'அயலவர் தம்மவராகாமை எளிதே', 'அயலார் உறவினர் அல்லாராதல் எளிது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அயலார் உறவினர் அல்லாராதல் இயல்பு என்பது இப்பகுதியின் பொருள்.

தாம்உடைய நெஞ்சம் தமரல் வழி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்முடைய நெஞ்சும் தமக்குச் சுற்றமல்ல வாகுங்காலத்து.
பரிப்பெருமாள்: தம்முடைய நெஞ்சும் தமக்குச் சுற்றமல்ல ஆகுங்காலத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: 'தலைமகன் யாண்டு உளன்' என்று குற்றேவல் மகளிரை அறியவிட, அவர் 'பரத்தையர் சேரியுளாள்' என்று கூறியவழி, 'அவர் வந்த காலத்தில் நெஞ்சு நம்வழி ஒழுகாது அவர் வழி ஒழுகினால் அவர் ஏதிலர் ஆகுவது எளிதன்றோ'' என்று நெஞ்சோடு புலந்து கூறியது. ஏதிலார் என்றாள், பிறர் மனையிற் செல்லுதலான்.
காலிங்கர்: தோழீ! இவ்வுலகத்தில் தாம் தமக்கு உரிமையாக நெஞ்சம்கூடத் தமக்குத் துணை இல்லாத இடத்தினில், மற்று அயலார் தமக்குத் தஞ்சமும் அல்லார், துணி என்றவாறு.
பரிமேலழகர்: தாம் உரித்தாக உடைய நெஞ்சம் ஒருவர்க்குத் தமர் அல்லாவழி;
பரிமேலழகர் குறிப்புரை: 'பிறளொருத்தியைக் காதலி என்று கருதி என் நெஞ்சே என்னை வருத்தாநின்ற பின் அப்பிறள் புலக்கின்றது எளிது', என்பதாம்.

'தம்முடைய நெஞ்சும் தமக்குச் சுற்றமல்ல ஆகுங்காலத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தாம் உரிமையாகக் கொண்ட நெஞ்சம் தமக்கு உறவினர் அல்லாதபோது (உதவாதபோது)', 'மனமே! ஒருவருக்கு அவருடைய மனமே உறவற்றுப் போய்விட்டால்', 'தாம் உடைத்தாயிருக்கிற தமது மனம் தம்மோடிணங்காதவழி', 'தம்முடைய நெஞ்சம் உறவாகப் பொருந்தி நில்லாத போது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தம்முடைய நெஞ்சம் உறவாகாத போது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தம்முடைய நெஞ்சம் உறவாகாத போது, அயலார் உறவினர் அல்லாராதல் இயல்பு என்பது பாடலின் பொருள்.
'தஞ்சம்' என்ற சொல்லின் பொருள் என்ன?

'என் நெஞ்சமே எனக்கு உதாவாதபோது வெளியார் எப்படி நமக்கு உதவுவர்? எங்குமே எனக்குத் துணைசெய்ய ஆளில்லை' என்கிறாள் தலைவி.
பொருள் தேடிப் பிரிவில் சென்றிருந்த தலைவன் இல்லம் திரும்பி வந்துவிட்டான். அவன் வருகை அறிந்து தன்னை நன்கு அணி செய்து பெண்மைப் பொலிவுடன் இருக்கிறாள் தலைவி. அவனைக் கண்டவுடன் பேருவகை கொள்கிறாள். வீட்டில் மற்றவர்களும் இருந்ததால் கணவர் அருகில் நெருங்கிச் செல்ல இயலவில்லை. அவனைக் கூடும் வேளைக்காகக் காத்திருக்கிறாள். இடையில் தன் நெஞ்சுடன் புலக்க எண்ணுகிறாள். ஆனால் நெஞ்சோ தலைவரைக் கண்டபொழுது ஓடோடி அவனிடம் சென்றுவிட்டது. நெஞ்சே தனக்கு உதவியாக இல்லாதபோது தனக்கு யார் துணையாவார் என முன்னர் கேட்டாள் அவள். இங்கு தமக்குரிய நெஞ்சமே தம்பக்கமிருந்து தனக்கு உறவாக நில்லாமல் அவருடன் சென்றுவிட்டது; அயலார் உறவாக நின்று உதவுவது எங்ஙனம்? இது மிக எளிதாகக் காணக்கூடிய செய்தியாகும்' எனச் சொல்கிறாள்.
தனக்கு உறவான தன் நெஞ்சம்தானே அவரிடம் சென்றது எனத் தலைவி ஆற்றிக்கொள்கிறாள் போலும்!

தலைவி தன் நெஞ்சொடு புலந்து கூறியது என்று பரிப்பெருமாளும் தலைவி தோழிக்குச் சொல்லியது எனக் காலிங்கரும் உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது என்று பரிமேலழகரும் காட்சிப் பின்னணி கூறினர்.

'தஞ்சம்' என்ற சொல்லின் பொருள் என்ன?

'தஞ்சம்' என்ற சொல்லுக்குச் சொல்லல் வேண்டுமோ? எளிது, தஞ்சமும், சொல்ல வேண்டுமோ?, எளிதே, இயல்புதானே, எளியதே, அடைக்கலம், எளிது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்,

காலிங்கர் 'தஞ்சம் என்பது எளிமைப் பொருட்டு இடுக்கண் உற்றவிடத்து எய்துதல் என்பது' எனப் பதவுரை தருகிறார். நாமக்கல் இராமலிங்கம் 'ஒருவருக்கு அவருடைய மனமே உறவற்றுப் போய்விட்டால் மற்ற யாரும் அவருக்கு உறவாகமாட்டார்கள். ஆகையால் நீதான், எனக்கு உறுதுணை நான் உன்னைத் தஞ்சம் அடைகிறேன்' எனத் தஞ்சம் என்ற சொல்லுக்கு அடைக்கலம் என்ற பொருள் கூறி உரை செய்வார். ஆனால் தஞ்சம்-புகலிடம் (அடைக்கலம்) என்பது பிற்கால வழக்கு என இப்பொருளை இக்குறளுக்கு ஏற்க மறுப்பார் இரா சாரங்கபாணி.
பெரும்பான்மை உரையாளர்கள் 'தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே' (தொல். சொல். இடை. 18.) என்றதன் அடிப்படையில் எளிது எனப் பொருள் கொண்டனர். சிலர் இயல்பு எனவும் பொருள் கண்டனர்.

'தஞ்சம்' என்ற சொல்லுக்கு எளிது அல்லது இயல்பு என்பது பொருள்.

தம்முடைய நெஞ்சம் உறவாகாத போது, அயலார் உறவினர் அல்லாராதல் இயல்பு என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தனக்கு உறவான நெஞ்சம் விரைந்தோடி காதலரிடம் சென்றுவிட்டது எனத் தலைவி கூறும் நெஞ்சோடுபுலத்தல் பாடல்.

பொழிப்பு

தன்னுடைய நெஞ்சம் உறவாகாத போது அயலவர் உதவாதிருத்தல் இயல்பு.