இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1296தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு

(அதிகாரம்:நெஞ்சோடுபுலத்தல் குறள் எண்:1296)

பொழிப்பு (மு வரதராசன்): காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பதுபோல் துன்பம் செய்வதாக இருந்தது.

மணக்குடவர் உரை: என்னெஞ்சு, யான் தனிப்பட்டிருந்து நினைத்தால் உடம்படாது என்னை நலிவதாக இருந்தது.
இது தலைமகள். நெஞ்சு அவர் செய்கின்ற கொடுமையை யுட்கொண்டு உள்ளாதே, யான்தனிப்பட்டால் நலிவதாக இருந்தது. நீ வருதலானே இப்பொழுது தப்பினேனென்று அதனோடு புலந்து தோழிக்குக் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) என் நெஞ்சு இருந்தது - என் நெஞ்சு ஈண்டு இருந்தது; தனியே இருந்து நினைத்தக்கால் - காதலரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால்; என்னைத் தினிய - அவ் அளவறிந்து என்னைத்தின்பது போன்று துன்பம் செய்தற்கே.
('என்மாட்டிருந்தது அன்று அவர் கொடுமைகளை உட்கொண்டு எனக்கு ஆற்றாமை செய்தற்கே, இன்று அவை நோக்கி அவரொடு புலத்தற்கன்று' என்பதாம்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: என் மனம் (காதலரை மறந்து என்னுடன் மட்டும்) தனியாக இருந்து எண்ணினபோது என்னைக் கொன்றுவிடும் போல் இருந்தது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
என் நெஞ்சு இருந்தது தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய .

பதவுரை:
தனியே-(பிரிந்து) தனியாக; இருந்து-இருந்து கொண்டு; நினைத்தக்கால்-எண்ணியபொழுது; என்னை-என்னை; தினிய-தின்னுதற் பொருட்டு; இருந்தது-இருந்தது; என்-எனது; நெஞ்சு-உள்ளம்.


தனியே இருந்து நினைத்தக்கால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யான் தனிப்பட்டிருந்து நினைத்தால்;
பரிப்பெருமாள்: தனிப்பட்டிருந்து நினைத்தால்;
பரிதி: தனியே இருந்து நாயகர் கொடுமையை நினைந்தால்;
காலிங்கர்: தோழீ! இப்பொழுது எனக்கு இனியது போன்று இருந்து மற்று அவர் பிரிந்த இடத்து விடாது நினைந்து கொண்ட காலத்து;
பரிமேலழகர்: (இதுவும் அது.) காதலரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால்;

'தனிப்பட்டிருந்து நினைத்தால்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதியும் பரிமேலழகரும் 'காதலரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால்' என்ற பொருளில் உரை செய்தனர். காலிங்கர் 'அவர் பிரிந்த இடத்து விடாது நினைந்து கொண்ட காலத்து' எனப் பொருள் தந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தனித்திருந்து அவரை நினைத்த போது', 'நான் பிறர் துணையின்றி என் நெஞ்சோடு தனியே இருந்து பிரிந்த அவரது கொடுமைகளை நினைத்தால்', 'அன்பரைப் பிரிந்து தனியேயிருந்து அவர் கொடுமைகளை நினைத்தபோது', 'நெஞ்சே தனியாக இருந்து நினைத்தபொழுது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தனித்திருந்து அவரை நினைத்த போது என்பது இப்பகுதியின் பொருள்.

என்னைத் தினிய இருந்ததுஎன் நெஞ்சு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்னெஞ்சு உடம்படாது என்னை நலிவதாக இருந்தது.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள். நெஞ்சு அவர் செய்கின்ற கொடுமையை யுட்கொண்டு உள்ளாதே, யான்தனிப்பட்டால் நலிவதாக இருந்தது. நீ வருதலானே இப்பொழுது தப்பினேனென்று அதனோடு புலந்து தோழிக்குக் கூறியது.
பரிப்பெருமாள்: என்னெஞ்சு இடம் பார்த்து என்னை நலிவதாக இருந்தது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது 'அவர் அவர் செய்கின்ற கொடுமையை யுட்கொண்டு உள்ள துயரம் யான்தனிப்பட்டால் நலிவதாக இருந்தது. நீ வருதலானே இப்பொழுது தப்பினேன்' என்று தலைமகள் நெஞ்சோடு புலந்து தோழிக்குக் கூறியது.
பரிதி: என்னைத் தின்னும்படி மயல் துயரம் பெருகும் என்றவாறு.
காலிங்கர்: என்னைத் தின்னற்கு இருந்தது என் நெஞ்சு.
காலிங்கர் குறிப்புரை: எனவே இப்பொழுது உறவு போன்றது என்று பொருளாயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: என் நெஞ்சு ஈண்டு இருந்தது; அவ் அளவறிந்து என்னைத்தின்பது போன்று துன்பம் செய்தற்கே.
பரிமேலழகர் குறிப்புரை: 'என்மாட்டிருந்தது அன்று அவர் கொடுமைகளை உட்கொண்டு எனக்கு ஆற்றாமை செய்தற்கே, இன்று அவை நோக்கி அவரொடு புலத்தற்கன்று' என்பதாம்.

'என்னெஞ்சு என்னை நலிவதாக இருந்தது' என்றபடி மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி, காலிங்கர், பரிமேலழகர் ஆகியோர் 'என் நெஞ்சு என்னைத் தின்பது போன்று இருந்தது' என்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என் நெஞ்சம் என்னைத் தின்ன உடனிருந்தது', 'அந் நெஞ்சம் என்னைத் தின்னுவதற்கு வந்து இருந்ததுபோல் கொடுமைப்படுத்தும்', 'என் நெஞ்சு என்னைத் தின்பதுபோலத் துன்புறுத்திக் கொண்டிருந்தது', 'என்னைத் தின்னுவதற்கு இருந்தது என்ன காரணம்?' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

என் நெஞ்சம் என்னைத் தின்னுவதற்கு வந்ததுபோல் இருந்தது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தனித்திருந்து அவரை நினைத்த போது என் நெஞ்சம் என்னைத் தினிய இருந்தது என்பது பாடலின் பொருள்.
'என்னைத் தினிய இருந்தது' என்றால் என்ன?

'நான் தனியே இருந்தபொழுது என் நெஞ்சு அவரை நினைப்பூட்டி நினப்பூட்டி எனக்கு மேலும் வேதனை தந்து என்னைத் தின்றது' என்று முன்னர் நிகழ்ந்ததை நினைவு கூர்கிறாள் தலைவி.
கடமை காரணமாகச் சென்றிருந்த தலைவன் இல்லம் திரும்பி வந்துவிட்டான். பிரிவால் துயருற்றிருந்த தலைவி அவனைக் கண்டவுடன் மிக்க மகிழ்ச்சி அடைகிறாள். அவனைத் தனிமையில் சந்திக்கும் வேளையை எதிர்நோக்கி இருக்கிறாள். இன்னும் சிறுது பொழுதில் அவர்களது கூட்டம் நிகழப்போகிறது. இதனிடை அவள் அவன் வருவதற்குமுன் இருந்த நிலைமையை எண்ணிப் பார்த்துத் தன் நெஞ்சைப் புலக்கிறாள். 'நான் தனித்திருந்து அவரை நினைத்த போது என் நெஞ்சமே நீ அவரை நினைக்கச் செய்து என்னைத் தின்பதுபோல என்னை வருத்தினாய்; இப்பொழுது அவரை நேரில் பார்த்தவுடன் அவரிடம் விரைந்து சென்றுவிட்டாயே!'
காதலர் தன்னுடன் இல்லாதபோது அவள் நெஞ்சு அவளுக்கு அவர் நினைவைக் கொணர்ந்து வருத்தியது. அவர் வந்தவுடனே அவர்பால் சென்று அவளைக் கை விட்டு விட்டது.
தனியாக இருந்தபோதும் இப்பொழுதும் அவர் நினைவுதான் தலைவிக்கு என்பது கருத்து.

தலைமகள் நெஞ்சு அவர் செய்கின்ற கொடுமையை உட்கொண்டு உள்ளாதே யான் தனிப்பட்டால் நலிவதாக இருந்தது; நீ வருதலானே இப்பொழுது தப்பினேன் என்று அதனோடு புலந்து தோழிக்குக் கூறியது என்பர் மணக்குடவர். வாயிலாகச் சென்ற தோழி கேட்பத் தலைமகள் சொல்லியது எனக் காட்சிப் பின்புலம் அமைப்பார் பரிமேலழகர்.

'என்னைத் தினிய இருந்தது' என்றால் என்ன?

'என்னைத் தினிய இருந்தது' என்றதற்கு உடம்படாது என்னை நலிவதாக இருந்தது, இடம் பார்த்து என்னை நலிவதாக இருந்தது, என்னைத் தின்னும்படி மயல் துயரம் பெருகும், என்னைத் தின்னற்கு இருந்தது என் நெஞ்சு, என்னைத்தின்பது போன்று துன்பம் செய்தற்கே, என்னைத் தின்பதுபோல் துன்பம் செய்வதாக இருந்தது, என்னைத் தின்று தொலைக்கவே உடன் இருந்தது, என்னைத் தின்ன உடனிருந்தது, என்னைத் தின்னுவதற்கு வந்து இருந்ததுபோல் கொடுமைப்படுத்தும், என் நெஞ்சம் என்னைத் தின்றுவிடும் போல் இருந்தது, என்னை அரித்துத் தின்பதற்கென்றே இருந்தது என் நெஞ்சு, என் நெஞ்சு என்னைத் தின்பதுபோலத் துன்புறுத்திக் கொண்டிருந்தது, நெஞ்சே என்னைத் தின்னுவதற்கு இருந்தது, என் மனம் எனக்கு ஆறுதல் செய்து உதவுவதற்கல்லாமல், என்னையே அரித்துத் தின்னுவதற்குத்தான் உள்ளது என்றவாறு உரையாசிரியரகள் பொருள் கூறினர்.

'என்னைத் தினிய இருந்தது' என்ற தொடர்க்கு என்னைத் தின்னுவதற்கு இருந்தது என்பது பொருள். காதலன் பிரிந்து சென்றுள்ள காலத்தில் காதலரைப் பற்றி எப்படி நினைத்தாலும் வேதனையுண்டாகிறதென்று என் மனதை, அவரை நினைக்காமல் சற்று என்னோடு இருக்கச் சொன்னேன். நான் மறந்திருந்தாலும் அவனை நினைக்கச் செய்து என்னைத் தின்றது என் நெஞ்சு என்று தலைவி கூறுகிறாள்.
இதே நடையில் அமைந்துள்ள மற்றொரு குறள் கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்காணல் உற்று (நெஞ்சொடுகிளத்தல் 1244 பொருள்: நெஞ்சே! நீ அவரிடம் செல்வாயானால் இக்கண்களையும் உடன் கொண்டு போ; 'அவரைக் காட்டு' என்று என்னைத் தின்பதுபோல இவைகள் என்னை வருத்துகின்றன) என்பது.

தனித்திருந்து அவரை நினைத்த போது என் நெஞ்சம் என்னைத் தின்னுவதற்கு வந்ததுபோல் இருந்தது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அன்று காதலரை நினைக்கச் செய்து வருத்தினாய்; இன்று அவரைக் கண்டவுடன் அவரிடம் விரைந்து சென்று நிற்கிறாய் என்று நெஞ்சோடுபுலத்தல் செய்கிறாள் தலைவி.

பொழிப்பு

தனித்திருந்து அவரை நினைத்த போது என் நெஞ்சம் என்னைத் தின்னுவதற்கு வந்து இருந்ததுபோல் துயரப்படுத்தியது.