இவ்வதிகாரம் ஆடவனின் நாண் துறவு பற்றிச் சொல்கிறது. அதிகாரத்தின் 1-7 குறள்கள் ஆற்றானாகிய தலைவன்தன் நாண்துறவுஉரைத்தல் என்றும்
8, -10 குறள்கள் அறத்தொடுநிற்றலை மேற்கொள்ளக் கருதும் தலைமகள்தன் நாண்துறவு உரைத்தல் என்றும் பெரும்பானமை உரையாளர்கள்
கூறுவர். ஆனால் பாக்கள் அனைத்தையும் தலைவன் கூற்றாகக் கொள்வதே பொருத்தம். தலைவியைக் காண முடியாத துயரைப் பொறுக்கமாட்டாத தலைவன்,
தன் காதலை ஊரார் அறியச் சொல்லித் தலைவியை மணப்பதற்காகத் தன் நாணத்தை விட்டு மடல் ஏறுவேன் என்பதைக் கூறுவது 'நாணுத்துறவுரைத்தல்' அதிகாரம்.
அதிகாரம் முழுமையுமே மடலேறுதல் பற்றிய ஒரு கருத்தாடலாக அமைந்துள்ளது.
மடலேறுதல் என்பது மடல், மடலூர்தல் என்றும் அறியப்படும்.
மடல் பற்றி குறுந்தொகை, நற்றிணை, கலித்தொகை ஆகிய சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
தன் உள்ளங் கவர்ந்த பெண்ணை அடைவதில் சிக்கல் ஏற்படுவதை உணர்ந்த காதலன், அதை வெல்ல, எல்லா வழிகளையும் முயன்று,
ஏமாற்றம் அடைந்து, இறுதியாக மடலேறுதலே தனக்கு தீர்வு என்ற தீர்மானத்திற்கு வருகிறான். உடலுக்கும் உள்ளத்திற்கும் வரூத்தம் உண்டாக்கும் மடலூர்தல்
ஒரு கடினமான முடிவுதான். இதனால் அவனது தனிப்பட்ட மானம், உள்ளத்திண்மை இவற்றை இழக்க நேரிடும். ஊர்மக்கள் மடலேறுவோரைப் பரிவுடன்
நோக்குவதில்லை. இகழ்ச்சிக் குறிப்புடனே பார்ப்பர்.
மடலேறுதல் என்பது காதலன், பனை மரத்தின் கிளையான மட்டையால் செய்யப்பட்ட குதிரையின் மீதேறி அதைச் செலுத்துவதைக் குறிக்கும். இக்குதிரையின்
கீழ் உருளைகளைப் பொருத்தி கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்வர். தன் காதலி யார் என்று ஊருக்குச் சொல்லும் வகையில் கையில் அவள் உருவம்
வரையப்பட்ட ஒரு கிழியை (கிழி = ஓவியம் வரையப்பட்ட துணி). ஏந்திக் கொண்டு காதலன் ஊர் மன்றம் செல்வான். மடலூர்பவன் உடம்பெங்கும் சாமபல் பூசி
எருக்கம் பூ மாலை அணிந்து, அரைகுறை ஆடையில் வீதிகளில் திரிவான். பனங்கருக்கு உடலெங்கும் குத்திக் காயங்களை உண்டாக்கும். மடலேறுதல்
ஒரு தற்கொலை முயற்சி என்றும் சிலர் கூறியுள்ளனர்.
தலைவனின் காதல் வன்மையை ஊருக்கு உணர்த்துதலே மடல் ஏறுவதன் நோக்கம் ஆகும். தலைவனின் துன்பத்தை ஊர் மன்றத்தோர்
கண்டு, அவனுடைய துன்பம் தீர்வதற்காகத் தலைவியை அவனுடன் சேர்த்து வைக்க முயல்வார்கள். மடலூர்தல் வழி தலைவன் தலைவியை
அடைய வாய்ப்பு உள்ளது. மேலும் தலைவனின் காமத்துயரம் நீங்க மடல் உதவும் என்று கருதப்படுவதால் மடல் என்பதைக்
காமக்கடலை நீந்துவதற்குரிய தெப்பம் என்று இலக்கியங்கள் கூறுகின்றன.
மடல் ஊர்வேன் என்று கருதுதலும் சொல்லுதலும் மடல் ஊர்தலும் ஆடவர்க்கு உரிய என்றும், மடல் ஊர்வேன் என்று கருதுதலும்
சொல்லுதலும் மகளிர்க்கு உரிய என்றும் அறியத் தக்கன எனக் குறித்துள்ளார் இரா சாரங்கபாணி.
மடல் ஏறுவேன் எனக் கூறுதல் அகத்திணைக்கும், மடலேறுதல் பெருந்திணைக்கும் உரியவாம் என்பர்.
இங்கு காதலன் மடலேறுவது பற்றிப் பேசுகிறானே ஒழிய மடலேறினான் என்று சொல்லப்படவில்லை. வள்ளுவர் ஒருதலைக் காதலை குறளில் எங்கும்
பேசவில்லை. எனவே இவ்வதிகாரம் மனம் ஒன்றிய காதலர்களைப் பற்றியே சொல்கிறது; இது பொருந்தாக் காமம் ஆகாது எனக் கொள்ளலாம்.
மடலூர்தலை பெண்ணானவள் ஏற்றுச் செய்யாமையும், காமத்தால் தன் உடலும் உள்ளமும் உணர்வும்
அழுத்தப்படுகின்ற நிலையை வெளிப்படுத்தாமையும் பெண்ணுக்குள்ள சிறந்த குண நலன்களாகக் கருதப்பட்டன. இன்னொரு வகையில் சொல்வதானால்,
ஒரு பெண் தன்னுடைய காதலுணர்வைப் போர்க்குணத்துடன் ஊரார்க்கு வெளிக்காட்டாத பண்பு சிறப்பிக்கப்பட்டது.
மடலேறுதல் மனம் ஒத்த காதலர்கள் தடைகளை மீறி இணைய மடல் பயன்படுகிறது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது என்பார் தெ பொ மீ..
மடலேறுதல் குரூரமான முறையாகத் தோன்றினாலும் இது ஒரு நேர்மையான அணுகுமுறை எனலாம். ஒருவன் தான் மணக்க விரும்பும்
பெண்ணைப் பெறுதல் அரியது என்ற நிலை உருவாகும் போது பெற்றோரால் பாதுகாக்கப்படும் பெண்ணைச் சிறைஎடுத்தல் போன்ற வன்செயல்களில்
ஈடுபடாது அமைதியான வழியில் அவளைப் பெற முயற்சிக்கிறான். ஆயினும் செப்பமற்ற அணுகுநெறி என்பதாலும் காதலி, அவரது வீட்டார் ஆகியோரது
நற்பெயர் களங்கப்பட வாய்ப்பு உள்ளதால் மடலேறல் விரும்பத்தக்கது அல்ல என்பது விளங்கும்.
நாண், நல்லாண்மை இவற்றைக் காதலன் இழப்பான் என்றும், ஊரார்முன் அவன் நகைப்புக்குள்ளாகிறான் என்றும் குறட்பாக்கள் சொல்வதால்,
மடலேறுதலைப் பொதுவாக வள்ளுவர் ஏற்கவில்லை என்றே தெரிகிறது.
மடலேறுதல் காமநோயைத் தணிக்கும் என்று சங்கப்பாடலும் குறளும் கூறுகின்றன. அது எந்தவகையில் காமநோயைக் குறைக்கும் என்று தெரியவில்லை.