இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1134



காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை

(அதிகாரம்:நாணுத்துறவுரைத்தல் குறள் எண்:1134)

பொழிப்பு (மு வரதராசன்): நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றது.

மணக்குடவர் உரை: ...............மணக்குடவர் உரை கிடைக்கவில்லை................

பரிமேலழகர் உரை: (நாணும் நல்லாண்மையும் காமவெள்ளத்திற்குப் புணையாகலின்,அதனால் அவை நீங்குவன அல்ல என்றாட்குச் சொல்லியது) நாணொடு நல்லாண்மை என்னும் புணை - யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையும் ஆகிய புணைகளை; காமக்கடும் புனல் உய்க்குமே - என்னின் பிரித்துக் காமமாகிய கடிய புனல் கொண்டு போகாநின்றது.
(அது செய்யமாட்டாத ஏனைப் புனலின் நீக்குதற்கு, 'கடும்புனல்' என்றான். 'இப்புனற்கு அவை புணையாகா; அதனான் அவை நீங்கும்', என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: நாணமும் வீரமும் என்று கூறப்படும் புணைகளைக் காமமாகிய பெருவெள்ளம் அடித்துச் செல்லும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நாணொடு நல்லாண்மை என்னும் புணை காமக் கடும்புனல் உய்க்குமே.

பதவுரை: காமக்-காமமாகியக்; கடும்-கடிய; புனல்-நீர்; உய்க்குமே-அடித்துச் செல்லுமே, செலுத்துமே; நாணொடு-வெட்கத்துடன்; நல்-நல்ல; ஆண்மை-திட்பம்; என்னும்-என்கின்ற; புணை-தெப்பம்.


காமக் கடும்புனல் உய்க்குமே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: காமமாகிய பெரும்புனல் ஈர்த்தது;
காலிங்கர்: இக்காமம் என்னும் கடுவாற்று பெருவெள்ளத்தை நீந்த முயன்றேனுக்கு அதனையும் தள்ளித் தான் மேற்பட்டுச் செல்லுமாயிருந்த;.
பரிமேலழகர்: (நாணும் நல்லாண்மையும் காமவெள்ளத்திற்குப் புணையாகலின், அதனால் அவை நீங்குவன அல்ல என்றாட்குச் சொல்லியது) என்னிற் பிரித்துக் காமமாகிய கடிய புனல் கொண்டு போகாநின்றது; [அதனால்-காம வெள்ளத்தினால்; அவை-நாணும் நல்லாண்மையும்]
பரிமேலழகர் குறிப்புரை: அது செய்யமாட்டாத ஏனைப் புனலின் நீக்குதற்கு, 'கடும்புனல்' என்றான். 'இப்புனற்கு அவை புணையாகா; அதனான் அவை நீங்கும்', என்பதாம். [அது-நாணும் நல்லாண்மையுமாகிய புணைகளை என்னிற் பிரித்தல்; அவை-நாணும் நல்லாண்மையும்; அதனால்-காமக் கடும்புனலால்; அவை-நாணும் நல்லாண்மையும்]

'காமமாகிய பெருவெள்ளம் கொண்டு போனதே' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என்னைக் காமப் பெருவெள்ளத்தில் தள்ளிவிடுமே', 'காமமாகிய வலிய வெள்ளமானது என்னிடமிருந்து பிரித்துக் கொண்டு போய்விட்டது', 'காதலாகிய மிக்க புனலின்கண் கொண்டு செலுத்துமே என் செய்வேன்?', 'காம ஆசை என்ற வேகமான ஆற்று வெள்ளத்தைக் கடந்து கரையேற முடியுமா?' என்ற பொருளில் உரை தந்தனர்.

காமம் என்னும் காட்டாற்றுப் பெருவெள்ளம் ஈர்த்துவிடுமே என்பது இப்பகுதியின் பொருள்.

நாணொடு நல்லாண்மை என்னும் புணை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: நாணமும் ஆண்மையும் ஆகிய புணைதனை என்றவாறு.
காலிங்கர்: நாணும் ஆண்மைப்பாடு என்னும் பெருமிதம் இவை இரண்டும் கொண்டு.
காலிங்கர் குறிப்புரை: இனி என்னை மற்று ஆவது என்று இங்ஙனம் தோழி கேட்பத் தலைமகன் சொல்லினான் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையும் ஆகிய புணைகளை. [தன்னை-காமமாகிய கடிய (வேகமுள்ள) புனலை]

'நாணும் நல்லாண்மையும் ஆகிய புணைகளை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாணமும் வீரமும் ஆகிய தெப்பம்', 'வெட்கம், வீரம் என்னுந் தெப்பங்களை', 'நாணமும் நல்ல ஆண் தன்மையும் என்று சொல்லப்படும் தெப்பங்கள்', 'வெட்கம், நாணம் என்ற தெப்பங்களைக் கொண்டு' என்றபடி பொருள் உரைத்தனர்.

நாணம், நல்லாண்மை என்னும் புணையை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நாணம், நல்லாண்மை என்னும் புணையை காமம் என்னும் கடும்புனல் உய்க்குமே என்பது பாடலின் பொருள்.
'கடும்புனல் உய்க்குமே' என்றால் என்ன?

காமவெள்ளத்தின் முன் நாண், ஆண்மைப்பாடு நிலைநிற்கமுடியுமா?

நாண் நல்லாண்மை என்னும் தோணியைக் காமநோய் என்கின்ற வீறுகொண்ட வெள்ளம் அடித்துக் கொண்டு போகின்றதே!
காட்சிப் பின்புலம்:
களவுக்காதலில் ஈடுபட்ட தலைவன் - தலைவியின் களவுக்காதலை அறிந்த தலைவியின் பெற்றோர் இவர்களது காதலுக்கு உடன்படாமல் அவர்கள் சந்திப்பதற்கும் இடர் உண்டாக்குகின்றனர். தலைவி இற்செறிக்கப்படுகிறாள். அவன் பலவழிகளில் முயன்றும் அவளைப் பார்க்க முடியவில்லை. எந்த நேரமும் அவளையே நினைந்து கொண்டிருக்கிறான். காதல் நோய் அவனை மிகவும் வருத்துகிறது. இந்நிலையில் அவளை அடைவதற்கு மடலூர்தலே உறுதியான வழி எனத்துணிகிறான். மடலூர்தல் நாண் துறந்த செயல் என அறிந்திருந்தும் அவனது உயிரும் உடலும் ஒருங்கே உறும் துயரத்தை வெல்ல தன் நாண் குணத்தைத் தூக்கி எறிந்துவிட்டு மடல்மாவில் ஏறுகிறான். நாண்மட்டுமா நீங்கும்? அவனுடைய ஆண்மைப் பெருமிதமும் மறைந்துவிடுமே என்றாலும் மடல் ஒன்றே அப்போதைக்குத் தான் கொண்டுள்ள உடைமை எனத் தன்னிரக்கமாகக் கூறிக்கொண்டிருக்கிறான்.

இக்காட்சி:
தனது காதலியை அடைவதில் அவன் செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதைக் காதலன் காண்கிறான். தனக்குண்டான காதல் என்னும் ஆற்றை நாணமும், நல்லாண்மையையும் இழக்காமல் கடந்துவிடலாம் என நம்பி இதுவரை பொறுமை காத்தான் காதலன். இப்பொழுது தன்னுள்ளே பொங்கிவரும் காதல் முற்றிக் காட்டாற்று வெள்ளமாகப் பெருகிவிட்டதை அறிகிறான். இன்னும் நாணத்தையும், நல்லாண்மையையும் போற்றிக்கொண்டு பொறுத்திருப்பதில் பயனில்லை. காமம் என்னும் வெள்ள நீரைக் கடந்து காதலியை அடைய அவை தடையாயிருக்கின்றன என்பதால் அவற்றைத் துறந்து மடலேறவும் துணிகிறான். காதல் உந்துதலில் விம்மிப் பெருகி விரைந்தோடும் காமப்பெருவெள்ளம் தன்னுடன் நிற்கும் நற்பண்புகளைப் புணைபோல் தள்ளிக் கொண்டு போகின்றதே என உரைக்கிறான்.

தம்முள் இயைபுடைய நாண் ஆண்மைத்தன்மை இவற்றின் துணைகொண்டு வாழ்க்கையை மாண்புடன் நடத்திவந்தான் தலைவன். ஆனால் தன் காதலியைச் சந்திக்கமுடியாமல் போனபின் காம உணர்வு மேலோங்கியது. அது வெள்ளம்போல் வீறுகொண்டதால், அந்நற்பண்புகளும் எங்கோ இழுத்துச் செல்லப்பட்டுவிட்டதாக உணர்கிறான். இவற்றைக் கருதிக் கொண்டு இருந்தால் தான் விரும்பும் காதலியை அடைய இயலாது என நினைக்கிறான். தன் காதல் வெற்றி பெற இவ்விரண்டையும் இழக்க முன்வருகிறான். காதல்‌ மிகுவதால் நாணம்‌ துறந்து போகின்ற தன்மை புலனாகிறது‌.
காமத்தின் முன் நாணமும் நல்லாண்மையும் நில்லா என்பது செய்தி.

புணை என்ற சொல்லுக்குச் சிறு படகு, தெப்பம், தோணி, மிதவை, கட்டுமரம், பரிசல் எனப் பொருள் உரைத்தனர். இவை யாவும் நீர்ப்பரப்பைக் கடக்கத் துணை செய்யும் கருவி குறித்தன. தோளால் அணைத்து நீந்துவதற்கு உதவியாகப் பயன்படும் நீரில் மிதக்கும் மரக்கட்டையையும் இச்சொல் குறிக்கும்

'கடும்புனல் உய்க்குமே' என்றால் என்ன?

'கடும்புனல் உய்க்குமே' என்றதற்குப் பெரும்புனல் ஈர்த்தது, கடுவாற்று பெருவெள்ளம் தள்ளித் தான் மேற்பட்டுச் செல்லுமாயிருந்தது, என்னின் பிரித்துக் கடிய புனல் கொண்டு போகாநின்றது, கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றது, வேகம்மிக்க பெருவெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது, பெருவெள்ளத்தில் தள்ளிவிடுமே, பெருவெள்ளம் அடித்துச் செல்லும், வேகமான ஆற்று வெள்ளத்தைக் கடந்து கரையேற முடியுமா?, பெருவெள்ளம் அடித்துக் கொண்டே போய்விடுமே!, வலிய வெள்ளமானது என்னிடமிருந்து பிரித்துக் கொண்டு போய்விட்டது, மிக்க புனலின்கண் கொண்டு செலுத்துமே, பெருவெள்ளத்தில் அந்தோ, அடித்துச் செல்லப்பட்டு விட்டனவே, பெரு வெள்ளம் அடித்துக்கொண்டு போகின்றதே!, கொடிய கடலில் சிக்கிவிடுமானால் தப்பாது மூழ்கிவிடும் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

கடும்புனல் என்பதற்கு நேர் பொருள் கடிய நீர் என்பது. இவ்வுருவகத் தொடர் கடுமையான வெள்ளத்தைக் குறிக்க வந்தது; சீறிப்பாய்ந்து விரைந்து செல்லும் வெள்ளம் என்பது பொருள். உய்த்தல் என்ற சொல் இங்கு தன் வழியில் இழுத்துக் கொண்டு போதல் குறித்து வந்தது.
காதலில் வீழ்ந்த ஒருவன் தான் அதில் தோல்வியுறுவதை ஒப்புக்கொள்ள மறுப்பான். நாணம், வீரம் இவற்றை இயல்பாகக் கொண்டிருந்தாலும் தோல்வியைத் தழுவாதிருக்க இவற்றையும் இழக்க ஆயத்தப்படுவான். எப்படி காட்டாற்று வெள்ளத்தை எதிர்கொள்ள முடியாமல் ஒரு எளிய புணை இழுத்துக்கொண்டு செல்லப்படுமோ அதுபோல காமம் என்னும் கடுமையான நீரோட்டம் அவனிடமுள்ள நற்பண்புகளான நாண் நல்லாண்மை என்னுமிவற்றைத் தன்னிடமிருந்து பிரித்துக் கொண்டு போகிறதே என்கிறான் தலைவன். நாண், வீரம் என்பவற்றைத் தக்கவைத்துக்கொண்டு காதல் வாழ்க்கையை எல்லாராலும் கடக்க முடியாது போலிருக்கிறது; அவற்றை இழந்தேனும் மடலேறும் முயற்சியில் இறங்குவேன் என்கிறான்.

ஏகாரம் இரங்கற் பொருட்டு வந்தது என்பார் தேவநேயப் பாவாணர்.

'கடும்புனல் உய்க்குமே' என்ற தொடர் பெருக்கும் வேகமுங் கொண்ட வெள்ளம் அடித்துக்கொண்டு போகுமே என்ற பொருள் தரும்.

நாணம், நல்லாண்மை என்னும் புணையை காமம் என்னும் காட்டாற்றுப் பெருவெள்ளம் தள்ளிக்கொண்டு போய்விடுமே என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

காமப் பெருவௌ்ளத்தை எதிர்கொள்ள நற்குணங்களையும் இழப்பேன் என்னும் நாணுத்துறவுரைத்தல்.

பொழிப்பு

நாணம் நல்லாண்மை ஆகிய படகுகளைக் காமப் பெருவெள்ளம் அடித்துச் செல்லுமே.