இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1138நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறைஇறந்து மன்று படும்

(அதிகாரம்:நாணுத்துறவு உரைத்தல் குறள் எண்:1138)

பொழிப்பு: இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே!

மணக்குடவர் உரை: நிறையிலர், மிக அளிக்கத்தக்கா ரென்னாது என் காமமானது மறைத்தலைக் கடத்தலுமன்றி மன்றின்கண் படரா நின்றது.
இஃது அம்பலும் அலரும் ஆகாவென்று தோழி பகற்குறி மறுத்தது.

பரிமேலழகர் உரை: (காப்புச் சிறைமிக்குக் காமம் பெருகியவழிச் சொல்லியது.) நிறை அரியர் - இவர் நிறையால் நாம் மீதூர்தற்கு அரியர் என்று அஞ்சுதல் செய்யாது; மன் அளியர் என்னாது - மிகவும் அளிக்கத்தக்கார் என்று இரங்குதல் செய்யாது; காமம் மறை இறந்து மன்றுபடும் - மகளிர் காமமும் அவர் மறைத்தலைக் கடந்து மன்றின் கண்ணே வெளிப்படுவதாயிருந்தது.
('என்னாது' என்பது முன்னும் கூட்டி மகளிர் என்பது வருவிக்கப்பட்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'மன்று'என்பது தந்தை தன்னையரை நோக்கி. உலகத்துப் பெண் பாலார் காமத்து இயல்பு கூறுவாள் போன்று தன் காமம் பெருகியவாறும், இனிஅறத்தோடு நிற்றல் வேண்டும் என்பதும் குறிப்பால் கூறியவாறாயிற்று ).

இரா சாரங்கபாணி உரை: மனத்தை கண்டபடி ஓடவிடாமல் தடுத்து நிறுத்தும் தன்மையால் சிறந்தவர். மிகவும் இரங்கத்தக்கவர் என்று என்னிடம் அன்பு காட்டாமல் இக்காமம் மறைத்தலைக் கடந்து தெருவிலே வெளிப்படுத்தி விட்டதே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறைஇறந்து மன்று படும்.


நிறையரியர் மன்அளியர் என்னாது:
பதவுரை: நிறை-(நிலை) நிறுத்திய குணம்; அரியர்-மேற்கொள்ளுதற்கு முடியாதவர்; மன்-மிகுதி; அளியர்-அன்பு காட்டத் தக்கவர்; என்னாது-என்று செய்யாது.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிறையிலர், மிக அளிக்கத்தக்கா ரென்னாது;
பரிப்பெருமாள்: நிறையிலர், நனி அளிக்கத்தக்கார் என்னாது;
பரிதி: செங்கோல் அறியாது அரசின் கொடுமை அறியாது வங்கிஷம் அறியாது உயிர்பாராது;
காலிங்கர்: அறிவு நிறை ஓர்ப்பு கடைப்பிடி என்னும் நாற்பெருங் குணத்துள்ளும் நிறை என்கின்றது ஒருவன் தான் தன்னைச் சமைத்துக் கொள்ளும் வன்மையுடைமை யாதலால் மற்று அதன் இறப்பானது சாலப் பெறுதற்கு அரிதாயுள்ள தொன்று. மிகவும் அதனால் அளிக்கத்தக்கார் . இவரை நாம் எளிமைப்படுத்தலாகாது என்னாது;
பரிமேலழகர்: (காப்புச் சிறைமிக்குக் காமம் பெருகியவழிச் சொல்லியது.) இவர் நிறையால் நாம் மீதூர்தற்கு அரியர் என்று அஞ்சுதல் செய்யாது; மிகவும் அளிக்கத்தக்கார் என்று இரங்குதல் செய்யாது;
பரிமேலழகர் குறிப்புரை: 'என்னாது' என்பது முன்னும் கூட்டி மகளிர் என்பது வருவிக்கப்பட்டது.

பரிதியின் உரை தெளிவில்லாதது. காலிங்கர் தலைமகன் கூற்று எனக் கொண்டு நிறை என்பதை ஆடவருக்குரிய நாற்குணங்களுள் ஒன்றாகக் கருதி உரை எழுதியுள்ளார். மணக்குடவர்/பரிப்பெருமாள் 'திட்பமற்றவர் அருளத்தக்கவர் என்னாது' என்றும், பரிமேலழகர் 'நிறையால் நாம் மேற்கொள்ளுதற்கு அரியர் என்று அஞ்சுதல் செய்யாது; மிகவும் அளிக்கத்தக்கார் என்று இரங்குதல் செய்யாது' என்றும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'திட்பமற்றவர் அருளத்தக்கவர் என்னாது', 'இவர் கற்புடையராதலின் மேற்பட்டு வெல்லுதல் இயலாதென்று அஞ்சாது இரங்கத் தக்கார் இவரென்று இரக்கம் வையாது', 'இவர் கற்பைக் கடப்பதற்கு அரியராவார் என்று அஞ்சாது மிகவும் இரக்கத்துகுரியர் என்று இரங்காது', 'பெண்கள் காமத்தை அடக்கிக் கொள்ளும் தன்மை மிகுந்தவர்கள் என்பதையும் இரக்கமுடையவர்கள் என்பதையுங்கூட மதிக்காமல்' என்ற பொருளில் உரை தந்தனர்.

நிறைகுணத்தான், அருளத்தக்கவன் என்று பாராமல் என்பது இத்தொடரின் பொருள்.

காமம் மறைஇறந்து மன்று படும்:
பதவுரை: காமம்-காதல்; மறை-மறைத்தல்; இறந்து-கடந்து; மன்று-சபை; படும்-உண்டாகும்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என் காமமானது மறைத்தலைக் கடத்தலுமன்றி மன்றின்கண் படரா நின்றது.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அம்பலும் அலரும் ஆகாவென்று தோழி பகற்குறி மறுத்தது.
பரிப்பெருமாள்: காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் படா நின்றது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அம்பலும் அலரும் ஆகாவென்று தோழி பகற்குறி மறுத்தது.
பரிதி: இவள் கொடுத்த மடல் மன்றுபடும் என்றவாறு.
காலிங்கர்: என்வயிற் காமமானது என்னையும் கொண்டு அங்குப்பட்ட களவியலைக் கடந்து சென்று யாவரும் அறிய மன்றத்து வெளிப்படும் ஆயின் யான் செயற்பாலது என்னை எனத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது என்றவாறு.
பரிமேலழகர்: மகளிர் காமமும் அவர் மறைத்தலைக் கடந்து மன்றின் கண்ணே வெளிப்படுவதாயிருந்தது.
பரிமேலழகர் குறிப்புரை: எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'மன்று' என்பது தந்தை தன்னையரை நோக்கி. உலகத்துப் பெண் பாலார் காமத்து இயல்பு கூறுவாள் போன்று தன் காமம் பெருகியவாறும், இனிஅறத்தோடு நிற்றல் வேண்டும் என்பதும் குறிப்பால் கூறியவாறாயிற்று.

'என் காமமானது மறைத்தலைக் கடந்து மன்றின் கண்ணே வெளிப்படுவதாயிருந்தது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமம் ஒளிக்க முடியாமல் அம்பலப்படும்', 'காமமானது மறைப்பைக் கடந்து அவைக்கண்ணே வெளிப்படக்கூடியது ஆயிற்று', 'காமம் மறைத்தலைக் கடந்து மன்றின் கண்ணே வெளிப்படுவதாய் இருந்தது (தலைவி கூற்று.)', 'இதுவரைக்கும் என் மனதுக்குள்ளேயே மறைவாக இருந்த என் காமம் இப்போது வெளிப்படையாகவும் வந்துவிட்டது' என்றபடி பொருள் உரைத்தனர்.

என் காதல் ஒளிக்க முடியாமல் மற்றவர்முன் வெளிப்படுமே என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
நிறைகுணம் கொண்டவன், இரக்கம் மிக உடையவன் நான் என்பதைக் கருதாமல் என் காதல் ஊரார் முன் வெளிப்பட்டு நான் நாணிழக்க நேரிடுமே என்று காதலன் வருந்துவதைச் சொல்லும் பாடல்.

நிறையரியர், அருளத்தக்கவன் என்று பாராமல் என் காமம் ஒளிக்க முடியாமல் மன்றத்தில் வெளிப்படுமே என்பது பாடலின் பொருள்.
நிறையரியர் என்றால் என்ன?

நிறையரியர் என்பதற்கு நிறை குணத்தில் சிறந்தவர் என்று பொருள் கூறுவர்.
மன் அளியர் என்றதற்கு மிகவும் இரங்கத்தக்கவர் என்பது பொருள். இதற்கு மன் எளியர் என்ற பாடமும் உண்டு.
மறை என்பது ஒளித்தல் அல்லது மறைத்தலைக் குறிக்கும்.
இறந்து என்ற சொல் கடந்து என்ற பொருள்படும்.
மன்று என்பதற்கு பொதுஇடம், சபை என்பது நேர் பொருள். இங்கு வெளிப்படையாய், மற்றவர் முன்னிலையில் என்ற பொருளில் ஆளப்பட்டது.

இக்குறளைத் தலைவி கூற்றாகக் கொண்டு இது பெண் நாண் துறத்தல் பற்றியது என்று கிட்டத்தட்ட அனைத்து உரையாசிரியர்களும் எழுதினர். காலிங்கர் மட்டும் தலைவனது கூற்றாகக் கொண்டு ஆணினது நாண் துறவு பற்றி இப்பாடல் கூறுகிறது என்கிறார். இப்பாடலில் குறிக்கப்பெற்ற நிறை என்னும் சொல் ஆண்களுக்குண்டான நான்கு குணங்களுள் ஒன்றான நிறை அதாவது 'காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம்' பற்றிச் சொல்வதாக இவர் உரை அமைத்தார். இவ்வுரை ஏற்கத் தக்கதே.

தான் காதலித்த பெண்ணைப் பெறமுடியாததால் மடலேற முடிவு செய்கிறான் தலைவன். தன்னுடைய நாணும் நல்லாண்மையும் நீங்கும் என்று உணர்ந்தும் இம்முடிவை மேற்கொள்கிறான். அவளைக் காணமுடியாமல் காமமும் மாலைப்பொழுதுகளும் அவனது உடலையும் உயிரையும் அழுத்துகின்றன. அவனது உறக்கமும் கெட்டுவிட்டது. இந்நிலையில் அவன், தான் நிறைகுணம் கொண்டவன் என்றும் மிகவும் இரக்க உள்ளம் கொண்டவன் என்றும் பாராமல் தன் காதல் ஊரார் முன் வெளிப்பட்டு, நாண் நீங்கி ,அவமானம் அடைய வேண்டியிருக்குமே என்று எண்ணி வேதனைப்படுகிறான்.

நிறையரியர் என்றால் என்ன?

நிறை அரியர் என்ற தொடரை விளக்குவதில் உரையாசிரியரகள் இடர்ப்படுவது தெரிகிறது.
‘நிறையரியர்’ என்பதற்கு நிறையிலர் என மணக்குடவரும் நிறையால் நாம் மீதூர்தற்கு அரியர் என்று அஞ்சுதல் செய்யாது எனப் பரிமேலழகரும் பொருள் கண்டனர். அடக்கத்தில் மிகுந்தார், அறநெறியில் நிற்பவர், உள்ளத்தை நிறுத்தும் தன்மையால் சிறந்தவர் என இன்றைய ஆசிரியர்கள் பொருள் கொள்வர்.
காலிங்கர் 'அறிவு நிறை ஓர்ப்பு கடைப்பிடி என்னும் நாற்பெருங் குணத்துள்ளும் நிறை என்கின்றது ஒருவன் தான் தன்னைச் சமைத்துக் கொள்ளும் வன்மையுடைமை யாதலால் மற்று அதன் இறப்பானது சாலப் பெறுதற்கு அரிதாயுள்ள தொன்று' என இத்தொடர்க்கு விரிவான விளக்கந் தருகிறார். நிறையரியர் என்னும் தொடர் 'நிறைகுணம் கொண்டவன்' என்ற பொருள் தரும்.

நிறைகுணம் கொண்டவன், இரக்கம் மிக உடையவன் நான் என்பதைக் கருதாமல் என் காதல் ஊரார் முன் வெளிப்பட்டு நான் நாணிழக்க நேரிடுமே என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதல் வெட்கமறியாது என்பதைச் சொல்லும் நாணுத்துறவுரைத்தல் பாடல்.

பொழிப்பு

நிறைகுணத்தான், மிகவும் இரக்கமுள்ளவன் என்று பாராமல் என் காதல் ஒளிக்கமுடியாமல் எல்லோர்முன் வெளிப்பட்டுவிடுமே,பின்னூட்டங்கள் இட்டவரது தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும், குறள்.திறன் அவற்றிற்கு பொறுப்பேற்காது.
கருத்துரைகள் சீர்மைப்படுத்த பின்னர் பதிப்பிக்கப்படும்.