இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1133நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்

(அதிகாரம்:நாணுத்துறவுரைத்தல் குறள் எண்:1133)

பொழிப்பு: நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; (காதலியைப் பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்

மணக்குடவர் உரை: நாணமிக்க நிலைமையும் சிறந்த ஆண்மையும் யான் பண்டுடையேன்; காமமிக்கார் ஏறும் மடலினை இன்றுடையேனானேன்.

பரிமேலழகர் உரை: ('நாணேயன்றி நல்லாண்மையும் உடைமையின் முடியாது' என்றாட்குச் சொல்லியது.) நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் - நாணும் மிக்க ஆண் தகைமையும் யான் பண்டு உடையேன்; காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன் - அவை காமத்தான் நீங்குதலான், அக்காமமிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன்.
(நாண்: இழிவாயின செய்தற்கண் விலக்குவது. ஆண்மை: ஒன்றற்கும் தளராது நிற்றல். 'அவை பண்டு உள்ளன: இன்று உள்ளது இதுவேயாகலின் கடிதின் முடியும்', என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: நாணமும் நல்ல வீரமும் யான் முன்னர்ப் பெற்றிருந்தேன். இப்பொழுது காமம் கொண்டவர் துணை எனக் கருதி ஊரும் மடலைத் துணையாகக் கொண்டுள்ளேன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் காமுற்றார் ஏறும் மடல் இன்றுடையேன்.


நாணொடு நல்லாண்மை பண்டுடையேன்:
பதவுரை: நாணொடு-வெட்கத்துடன்; நல்-நல்ல; ஆண்மை-திட்பம்; பண்டு-முன்பு; உடையேன்-உடைத்தாயிருக்கின்றேன்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாணமிக்க நிலைமையும் சிறந்த ஆண்மையும் யான் பண்டுடையேன்;
பரிப்பெருமாள்: நாணமிக்க நிலைமையும் சிறந்த ஆண்மையும் யான் பண்டுடையேன்;
பரிதி: நாணமும் நல்லாண்மையும் எமக்குப் பண்டு துணையாயிருந்தன.
காலிங்கர்: நாணொடு நல்லாண்மைப்பாடு என்னும் இவை இரண்டுமாய் யான் பண்டு உடையேன்.
பரிமேலழகர்: ('நாணேயன்றி நல்லாண்மையும் உடைமையின் முடியாது' என்றாட்குச் சொல்லியது.) நாணும் மிக்க ஆண் தகைமையும் யான் பண்டு உடையேன்;

'நாணமும் நல்லாண்மையும் நான் பண்டு உடையேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாணமும் வீரமும் முன்பிருந்தன', 'வெட்கமும் மிகுந்த வீரமும் முன்நாள் உடையவனாயிருந்தேன்', 'நாணமும் மிக்க ஆண்தன்மையும் முன்பு பெற்றிருந்தேன்', 'இதுவரையிலும் வெட்கமுள்ளவனாகவும் நல்ல ஆண்மையுள்ளவனாகவும் இருந்த நான்' என்ற பொருளில் உரை தந்தனர்.

நாணமும் நல்லாண்மையும் முன்பு உடையவனாயிருந்தேன் என்பது இத்தொடரின் பொருள்.

இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல்:
பதவுரை: இன்று-இன்றைக்கு; உடையேன்-உடைத்தாயிருக்கின்றேன்; காமுற்றார்-காதல் மிக்கவர்; ஏறும்-ஊருகின்ற; மடல்-பனங்கருக்கு (குதிரை).

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காமமிக்கார் ஏறும் மடலினை இன்றுடையேனானேன்.
பரிப்பெருமாள்: காமமிக்கார் ஏறும் மடலினை இன்றுடையேனானேன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறிய சொற்கேட்டு, 'நீர் உலகத்துப் பன்மக்களோடு ஒப்பார் ஒருவரன்றே. நாணமும் ஆண்மையும் இயல்பாக உடையீர். ஆதலான் நுமக்கு இது கூடாது' என்ற தோழிக்கு, 'இவை இரண்டும் இப்பொழுது இல்லேன்' என்று தலைமகன் கூறியது.
பரிதி: இன்று இப்பேதை தந்த ஆசையினாலே மடலே துணையானது என்றவாறு.
காலிங்கர்: அதனால் என்னை பயன்? அவை விடுத்து இன்று உடையேனாவேன்; யாதினை எனில் இவ்வுலகத்துக் காமுற்றவர் ஏறும் மடலினை என்றவாறு.
பரிமேலழகர்: அவை காமத்தான் நீங்குதலான், அக்காமமிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன்.
பரிமேலழகர் கருத்துரை: நாண்: இழிவாயின செய்தற்கண் விலக்குவது. ஆண்மை: ஒன்றற்கும் தளராது நிற்றல். 'அவை பண்டு உள்ளன: இன்று உள்ளது இதுவேயாகலின் கடிதின் முடியும்', என்பதாம்.

'காமமிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இன்றோ காமங்கொண்டார் ஏறும் மடற்குதிரை உண்டு', 'இப்போது காமமிகுந்தவர் ஏறும் மடலினைத்தான் உடையேன்', 'காதல் உற்றார் ஏறும் மடல் குதிரையை இப்பொழுது உடையேன்', 'இப்போது அவற்றை விட்டுவிட்டு மடலேறுவதை எண்ண வேண்டியவனாக இருக்கிறேனே!' என்றபடி பொருள் உரைத்தனர்.

இன்று காமங்கொண்டார் ஏறும் மடல் குதிரையை உடையேன் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
நேற்றிருந்த நாணும் உளத்திண்மையும் இழந்து இன்று இந்த மடல் மாவை உடையேன் என்று காதலன் சொல்வதைக் கூறும் பாடல்.

நாணமும் நல்லாண்மையும் முன்பு உடையவனாயிருந்தேன்; இன்று காமுற்றார் ஏறும் மடல் குதிரையை உடையேன் என்பது பாடலின் பொருள்.
காமுற்றார் என்றால் என்ன?

நாணொடு என்ற சொல் நாணத்துடன் என்று பொருள்படும்.
நல்லாண்மையும் என்பது திண்மையான உள்ளமும் என்ற பொருள் தரும்.

காதலி கிடைப்பாளோ மாட்டாளோ என்ற ஐயமுற்ற நிலையில் தலைவன் இப்பொழுது இருக்கிறான். மனக்கசப்புற்ற வேளையில் எப்படியாவது அவளை அடைந்தே தீருவது என்ற நோக்கில் இறுதி முயற்சியாக, மடலேறத் துணிகிறான். தன் ஆற்றல் எல்லாம் நீங்கி விட்டதுபோல் உணர்கிறான். வெட்கமும் தறுகண்மையும் அவனிடமிருந்து போய்விட்டனதாக நினைக்கிறான். அப்பொழுது வெறித்தநிலையில் 'என்னிடமுள்ள நாணையும் நல்ல ஆண்மையையும் தொலைத்துவிட்டேன். என்னிடமிருப்பது இந்த மடல் குதிரைதான்' என்று கூறுகிறான்.
மடல் என்பது பனங்கருக்கால் செய்த குதிரை. அதன் மேல் (குறைவான ஆடை அணிந்து) ஏறி ஊர்ந்து, உடல் காயமுற்று, ஊர்மன்றம் சென்று தன் காதலுக்கு ஓர் தீர்வு காணமுயற்சிப்பது மடல் ஊர்தல் அல்லது மடலேறுதல் எனப்பட்டது. மடலேறுதல் என்பது வெட்கம் கெட்ட செயல்; நல்ல ஆணுக்கு அது அழகல்ல; காமம் ஒன்றே உள்ளத்தில் நிறைந்திருப்போர் நாடும் புகலிடம் அது என்பதும் தெரிகிறது.

காமுற்றார் என்றால் என்ன?

காதலில் துயறுபவர்கள் என்ற பொருளில் காமுற்றார் இங்கு ஆளப்படுகிறது. காதல் மிகுதியால் இழிவானதைச் செய்ய விலக்கும் நாணமும், எதற்கும் தளராத துணிவாண்மையும் அவனிடமிருந்து நீங்கிவிட்டன; தளர்ந்து போன நெஞ்சம் கொண்டவனானான்; காதல் முற்றி, நம்பிக்கை இழந்த நிலையில், மடல் ஊர்தலைச் செய்துவிட விரும்புகின்றான். ஆனால் ஊரார் கண்ணுக்கு அவன் கழி காமம் உற்றானாகத் தோன்றுகிறான்; காம வேட்கையாலேயே மடலேறடத துணிந்தான் என் அவர்கள் சொல்வர். ஊர்மக்கள அவனைப்பற்றி காமுற்றார் என்று கருதுவர் என்பதால் அச்சொல்லாட்சி வந்தது.

நாணமும் நல்லாண்மையும் முன்பு உடையவனாயிருந்தேன்; இன்று காமம் கொண்டார் ஏறும் மடல் குதிரையை உடையேன் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காமஉணர்வு மிகுந்தவுடன் என்னிடமிருந்த நாணும் ஆண்மையும் விடைபெற்றுச் சென்றுவிட்டன என்று தலைவன் புலம்பும் நாணுத்துறவுரைத்தல் பாடல்.

பொழிப்பு

நாணமும் நல்ல தளராத உள்ளமும் நான் முன்னர்ப் பெற்றிருந்தேன்; இன்றோ காமங்கொண்டார் ஏறும் மடல் குதிரையைக் கொண்டுள்ளேன்.