இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1139



அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு

(அதிகாரம்:நாணுத்துறவு உரைத்தல் குறள் எண்:1139)

பொழிப்பு (மு வரதராசன்): அமைதியாய் இருந்ததால் எல்லாரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

மணக்குடவர் உரை: என்னை யொழிந்த எல்லாரும் அறிவிலரென்றே சொல்லி என் காமமானது தலை மயங்கி மறுகின் கண்ணே வெளிப்படச் சுழலா நின்றது.
சுழல்தல் - இவ்வாறு சொல்லித் திரிதல்.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) எல்லாரும் அறிகிலார் என்று - யான் முன் அடங்கி நிற்றலான் எல்லாரும் என்னை அறிதல் இலர், இனி அவ்வாறு நில்லாது யானே வெளிப்பட்டு அறிவிப்பல் என்று கருதி; என் காமம் மறுகில் மருண்டு மறுகும் - என் காமம் இவ்வூர் மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாநின்றது.
(மயங்குதல் - அம்பலாதல், மறுகுதல் - அலராதல், 'அம்பலும் அலருமாயிற்று'. இனி 'அறத்தொடு நிற்றல் வேண்டும்', என்பதாம். 'அறிவிலார்' என்பதூஉம் பாடம்.)

வ சுப மாணிக்கம் உரை: இதுவரை யாருக்கும் தெரியாது என்பதனால் என்காமம் மயங்கித் தெருவெல்லாம் திரியும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எல்லாரும் அறிகிலார் என்றே என் காமம் மறுகின் மருண்டு மறுகும்.

பதவுரை: அறிகிலார்-அறிய மாட்டார்; எல்லாரும்-அனைவரும்; என்றே-என்று, என்பதாகவே; என்-எனது; காமம்-காதல், காமச்செய்தி; மறுகின்-தெருவில்; மறுகும்-சுழலும்; மருண்டு-மயங்கி.


அறிகிலார் எல்லாரும் என்றே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('அறிவிலார்' பாடம்): என்னை யொழிந்த எல்லாரும் அறிவிலரென்றே சொல்லி;
பரிப்பெருமாள் ('அறிவிலார்' பாடம்): என்னை யொழிந்த எல்லாரும் அறிவிலரென்றே சொல்லி;
பரிதி ('அறிவிலார்' பாடம்): எல்லோரும் அறிவிலாதார்;
காலிங்கர் ('அறிவிலார்' பாடம்): இங்கு யான் உறு துயரினைக் கண்டும் உணர்ந்தும் இனி மற்று இது தீர்ப்போம் யாம் என்னும் அறிவில்லாதாராய் இருந்தார் இத்தலைக்கண் எல்லாரும் என்று கொண்டே;
பரிமேலழகர்: (இதுவும் அது.) யான் முன் அடங்கி நிற்றலான் எல்லாரும் என்னை அறிதல் இலர், இனி அவ்வாறு நில்லாது யானே வெளிப்பட்டு அறிவிப்பல் என்று கருதி;
பரிமேலழகர் குறிப்புரை: 'அறிவிலார்' என்பதூஉம் பாடம்.

மணக்குடவரும் பரிப்பெருமாளும் கூறும் பொருள்: 'என்னையொழிந்த எல்லாரும் அறிவிலர்'. பரிதி உரை 'எல்லோரும் அறிவிலாதார்' என்பது. காலிங்கர் 'எல்லோரும் அறிவில்லார்' என்று கூறி அதற்குக் காரணமாக 'தான் உற்ற துயரை அறிந்து அதைத் தீர்க்க முன்வராத எல்லாரும் அறிவிலாதார்' என்று விளக்கம் செய்கிறார். பரிமேலழகர் 'தலைவி தான் அடங்கி இருந்ததால் அவளை யாரும் அறியமாட்டாதாராய் இருந்தனர் என்று சொல்வதாக'க் கூறுகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'முன் அடக்கமாக இருந்ததால் பலரும் அறியவில்லை. இனி அவ்வாறு இல்லாமல் வெளிப்பட்டு அறிவிப்பேன் எனக் கருதி', 'எல்லாரும் என்னை அறியாதிருக்கின்றார்', 'எல்லோரும் என்னை அறிதல் இலர் என்று', 'வீட்டிலுள்ளவர்கள் மட்டுமன்றி ஊரிலுள்ள எல்லாரும் என் நிலைமையை அறிந்துகொள்ளும்படியாக' என்ற பொருளில் உரை தந்தனர்.

யாருமே அறிந்ததில்லை என்பதால் என்பது இப்பகுதியின் பொருள்.

என் காமம் மறுகின் மறுகும் மருண்டு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என் காமமானது தலை மயங்கி மறுகின் கண்ணே வெளிப்படச் சுழலா நின்றது.
மணக்குடவர் குறிப்புரை: சுழல்தல் - இவ்வாறு சொல்லித் திரிதல்.
பரிப்பெருமாள்: என் காமமானது தலை மயங்கி மறுகின் கண்ணே வெளிப்பட்டுச் சுழலா நின்றது.
பரிப்பெருமாள் குறிப்புரை: சுழலுதல் - இவ்வாறு சொல்லிச் சாற்றித் திரிதல். 'நீர் அறிவுடையீர் ஆதலான் மடலேறுதல் கூடாது. இஃது அறிவுடையார் செயலின்மையான்; என்ற தோழிக்கு, என்னைப் போல மடலேறக் கருதாதாரே அறிவிலாதார். யான் அறிவுடையேன் என்று தலைமகன் கூறியது.
பரிதி: என் காமத்துயரை அறியாது போனார்கள் என்று வீதிதோறும் மறுகும் என் மயல் என்றவாறு.
காலிங்கர்: இங்கு யானுற்ற காம நோயானது ஒரு மனறத்து உரைத்தலுமன்றிப் பின்னும் மறுகுதொறும் தடுமாறும் போலும் மாலுற்று என்றவாறு.
பரிமேலழகர்: என் காமம் மறுகில் மருண்டு மறுகும் - என் காமம் இவ்வூர் மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாநின்றது. [மறுகு-தெரு]
பரிமேலழகர் குறிப்புரை: மயங்குதல் - அம்பலாதல், மறுகுதல் - அலராதல், 'அம்பலும் அலருமாயிற்று'. இனி 'அறத்தொடு நிற்றல் வேண்டும்', என்பதாம். [அம்பல்-சொல் நிகழாது முகிழ் முகிழ்த்துத் தம்முள் (மறைவாகச்) சொல்லுதல்]

என் காமம் தெருக்களில் வெளிப்பட்டுச் சுழல்கிறது என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'அம்பலும் அலரும் ஆயிற்று' என்னும் குறிப்பும் தருகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமம் தெருவிடத்து யாவரும் அறிய மயங்கிச் சுழல்கின்றது', 'நானே வெளிப்படுவேனென்று என் காமம் இந்த ஊர்த் தெருவில் நின்று மயங்கிச் சுழல்கின்றது', 'என் காதல் இவ்வூர்த் தெருவில் மயங்கிச் சுழலுகின்றது', 'என்னுடைய காமநோய் என்னை வீதிக்குச் சென்று (என் காதலர் வரமாட்டாரா என்று) வெறி பிடித்தது போல அங்குமிங்கும் பார்த்துத் தவிக்கச் செய்துவிட்டது' என்றபடி பொருள் உரைத்தனர்.

என் காதல்செய்தி தெருவெங்கும் மயங்கிச் சுழன்று திரிகிறது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
யாருமே அறிந்ததில்லை என்பதால் என் காதல்செய்தி மறுகின் மறுகும் மயங்கி என்பது பாடலின் பொருள்.
'மறுகின் மறுகும்' என்றால் என்ன ?

காதலன் மடலூர்தலால் அவனது களவுக்காதல் செய்தி ஊரெங்கும் கன்னாபின்னாவென்று பரவுகிறது.

எல்லாரும் அறிந்தாரில்லை என்று எண்ணியே, என் காமச்செய்தி, தெருவிலே பலருக்கும் தெரியுமாறு சுழன்று திரிகின்றது போலும்!
காட்சிப் பின்புலம்:
தலைவியின் களவுக்காதல் பெற்றோர்க்குத் தெரியவர அவர்கள் அவளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர். அவள் இல்லத்திலிருந்து வெளியே செல்ல முடியவில்லை. அதனால் காதலர்கள் சந்தித்துக் கொள்ள இயலவில்லை. தலைவனுக்கோ அவளப் பார்க்காத துன்பம் பொறுக்கவொண்ணாததாக இருக்கிறது. எவ்வளவோ முயன்றும் அவளைச் சந்திக்க முடியவில்லை. இதனால் மடலேறுவது ஒன்றே அவளை அடைவதற்குண்டான வழி என்ற முடிவுக்கு வருகிறான். மடலூர்தலில் அவன் நாணையும் நல்லாண்மையும் இழக்க வேண்டிவரும்; மடலேறும் எண்ணத்தையும் மாலைநேரம் தரும் துயரையும் தனக்குத் தந்துவிட்டாளே எனப் புலம்புகிறான்; அவளையே நாள்முழுக்க நினைத்துக் கொண்டிருப்பதால் அவன் உறக்கமும் இழந்தான்; எப்படிப் பெண்களால் மடலேறமல் இருக்க முடிகிறது என எண்ணி வியக்கின்கிறான்; மடலேறும் முன்னர், நாண் துறந்து தான் மடலில் ஊருக்குள் செல்லும்பொழுது தன் களவுக் காதல் மறைப்பொழிந்து ஊரார் முன் வெளிப்பட்டுவிடுமே! அப்பொழுது தான் நிறைகுணம் கொண்டவன் என்பதையும் மிகவும் இரங்கத் தக்கவன் என்பதையும் கருதி இவரை நாம் எளிமைப்படுத்தலாகாது என்று ஊர் எண்ணுமா என்பதை நினைத்துப் பார்த்தான். இப்பொழுது மடல் ஏறிவிட்டான்.

இக்காட்சி:
தலைவன் ஏறிய மடல் ஊருக்குள் செல்கிறது. பளை ஓலையினால்‌ குதிரை போல்‌ அமைத்து அதன்மீது காதலியை விட்டுப்‌ பிரிக்கப்பட்டிருக்கும்‌ காதலன்‌ தனது வருத்தத்தினைப்‌ பலரும்‌ அறியச்‌ செய்வது 'மடன்மா ஏறல்‌' அல்லது 'மடல்‌ ஊர்தல்‌" என்று கூறப்படும்‌, தலைவன் மடலேறியதால் அதுவரை தலைமக்களின் காதலை அறிந்திராத ஊரார்க்கு இப்பொழுது எல்லாமே தெரிந்துவிட்டது. அவர்களது களவுக்காதல் செய்தி ஒருவர் அறிந்து இருவராகப் பேசி மூவராக ஆராய்ந்து நால்வராக உரையாடும் நிலையை எட்டி விட்டது. தெருவுக்குத் தெரு அதையே பேசினர். வெளிப்படக் கூறாது முகிழ் முகிழ்த்துத் தம்முள் (மறைவாகச்) சொல்லிக்கொண்டனர். பின் அது பலராக வெளிப்பட அறிந்துள்ள அலர் நிலையை அடைந்தது. அதாவது தலைவன்-தலைவி களவுக்காதல் செய்தி ஊரெங்கும் விரைவாகப் பரவுகிறது.
மருண்டு என்றது மயங்கி எனப் பொருள்படும். காமம் என்ற சொல் இங்கு காதல்செய்தியையும் மயங்குதல் என்பதையும் தம்முள் (மறைவாகச்) சொல்லுதல் என்பதையும் குறித்தன.

'அறிகிலார்' என்றும் 'அறிவிலார்' என்றும் இருதிறமாகப் பாடம் கொண்டனர். 'அறிகிலார்' என்பது பரிமேலழகர் கொண்ட பாடம். தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரணர் உள்ளிட்ட மற்ற தொல்லாசிரியர்கள் அறிவில்லாதவர்கள் என்ற பொருள் தரும் 'அறிவிலார்' என்று பாடம் கொள்வர். பாடவேறுபாடு தவிர்த்து யார் கூற்றாக இப்பாடல் கொள்ளப்பட்டது என்பதிலும் உரையாசீயர்கள் வேறுபட்டனர். தலைவி கூற்றாகப் பரிமேலழகரும் தலைவன் கூற்றாகப் பரிப்பெருமாளும் கொண்டனர். அறிவும் அருளும் நாணமும் உடையார் மடலேறார் என்ற தோழிக்குத் தலைமகன் கூறியதற்கு மேற்கோள் காட்டுவர் இளம்பூரணர். (தொல்.பொருள்.99.)
'அறிகிலார்' என்ற பாடம் கொண்டவர்கள் இக்குறளைத் தலைவி கூற்றாகக் கருதுவர். இதன்படி ‘நான் அடங்கியிருப்பதால் என்னை ஊரார் எவரும் இதுவரை அறியார். ஆகவே இனி நானே வெளிப்பட்டு அறிவிப்பேன்’ என எண்ணி இந்தக்காமம் தெருவிலே மயங்கிச் சுழல்கிறது என்று தன் காமத்தின் வெளிப்பாட்டை (அம்பலப்படுத்தும் செயலை) வருந்திச் சொல்கிறாள் தலைவி. தலைவியினது நாண்துறவுரைத்தல் இப்பாடல் என்பது இவர்கள் கருத்து.
'அறிவிலார்' என்பதைப் பாடமாக ஏற்றவர்கள் இக்குறள் தலைமகனது நாண் துறவு உரைப்பது என்றனர். இவர்கள் தான் காதலியை அடையமுடியாதபடி உள்ள தடைகளைத் தலைமகனால் வெல்ல முடியவில்லை; தன் துயர் அறிந்து அதைத் தீர்த்து வைக்க ஊர்மக்கள் யாரும் முன்வராத ஏமாற்றத்தின் காரணமாக அவர்களை அறிவில்லாதவர்கள் என வசைபாடுகிறான் அவன்; மேலும் இதை உணர்ந்த அவனது காமம், மயங்கி, தெருவெல்லாம் சுற்றிவரத் தொடங்கிவிட்டது என்பர்.
இவற்றுள் 'அறிகிலார்' என்று பாடம் கொண்டு, தலைமகன் கூற்று என்று சொல்லும் உரைகள் ஏற்கத்தகுவனவாக உள்ளன.

'மறுகின் மறுகும்' என்றால் என்ன ?

'மறுகின் மறுகும்' என்றதற்கு மறுகின் கண்ணே வெளிப்படச் சுழலா நின்றது, வீதிதோறும் மறுகும், ஒரு மனறத்து உரைத்தலுமன்றிப் பின்னும் மறுகுதொறும் தடுமாறும் போலும், இவ்வூர் மறுகின்கண்ணே சுழலாநின்றது, தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது, நாற்சந்தி கூடும் தெருவிற்கு வந்து சுழல்கின்றது, தெருவெல்லாம் திரியும், தெருவிடத்து யாவரும் அறிய சுழல்கின்றது. வீதியில் போய் சுற்றுமுற்றும் பார்த்துக் குழம்பும், இவ்வூர்த் தெருவிலே சுழல்கின்றது போலும், இந்த ஊர்த் தெருவில் நின்று சுழல்கின்றது, இவ்வூர்த் தெருவில் மயங்கிச் சுழலுகின்றது, தெருவெல்லாம் தெரியும்படி சுற்றுகிறது, இவ்வூர்ப் பெருந் தெருவெல்லாம் மயங்கிச் சுழலும், தெருவின் நடுவில் பலரால் இரகசியமாகப் பேசப்பட்டு உழல்கிறது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மறுகு என்ற சொல் ஊரிலுள்ள இல்லங்களிடையே அமைக்கப்பட்டிருந்த. தெருக்களைக் குறிக்கும். மறுகும் என்றது சுழலும் என்ற பொருள் தருவது. மறுகின் மறுகும் என்ற தொடர்க்கு தெருக்களுக்குள்ளே தலைமக்களின் காதல்செய்தி சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது என்பது பொருள்.
தலைவன், தலைவி இடையே உண்டான காதல் மெதுவாக ஊருக்குள் தெரிய வருகிறது. மக்கள் ஆங்ஙாங்கு அது குறித்து மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ பேசுகின்றனர். இதை உணர்த்துவதற்கு வள்ளுவர் 'மறுகில் மருண்டு மறுகும்' என்ற பொருள் பொதிந்த தொடரை ஆண்டார். 'Rumours Doing The Rounds' என்ற ஆங்கில வழக்குத் தொடர் நினைவுக்கு வரலாம். பரிமேலழகர் இதை 'மயங்குதல் - அம்பலாதல், மறுகுதல் - அலராதல், 'அம்பலும் அலருமாயிற்று'' என விளக்குவார். அதாவது அவர்கள் காதலுற்ற செய்தி ஊரார் அனைவருக்கும் தெரிந்துவிட்டது என்பது பொருள்.

'மறுகின் மறுகும்' என்பது தெருவில் சுழலும் என்ற பொருள் தரும்.

யாருமே அறிந்ததில்லை என்பதால் என் காதல்செய்தி மயங்கி தெருவெங்கும் சுழன்று திரிகிறது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மடலூர்ந்து தலைவன் நாணுத்துறவுரைத்தல்.

பொழிப்பு

யாருமே அறிந்ததில்லை என்பதால் என்காமம் மயங்கித் தெருவெல்லாம் சுற்றித் திரியும்.