இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1137



கடலன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்

(அதிகாரம்:நாணுத்துறவு உரைத்தல் குறள் எண்:1137)

பொழிப்பு (மு வரதராசன்): கடல்போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தைப் பொறுத்துக்கொண்டிருக்கும் பெண் பிறப்பைப் போல் பெருமையுடைய பிறவி இல்லை.



மணக்குடவர் உரை: கடலையொத்த காமநோயாலே வருந்தியும், மடலேற நினையாத பெண்பிறப்புப்போல மேம்பட்டது இல்லை.
இது நும்மாற் காதலிக்கப்பட்டாள் தனக்கும் இவ்வருத்த மொக்கும்: பெண்டிர்க்கு இப்பெண்மையான் மடலேறாததே குறையென்று தலைமகன் ஆற்றாமை நீங்குதற்பொருட்டுத் தோழி கூறியது.

பரிமேலழகர் உரை: ('பேதைக்கு என் கண் படல் ஒல்லா', என்பது பற்றி 'அறிவிலராய மகளிரினும் அஃது உடையராய ஆடவரன்றே ஆற்றற்பாலர்', என்றாட்குச் சொல்லியது.)
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப் பெண்ணின் - கடல்போலக் கரையற்ற காம நோயினை அனுபவித்தும் மடலூர்தலைச் செய்யாது ஆற்றியிருக்கும் பெண் பிறப்புப்போல; பெருந்தக்கது இல் - மிக்க தகுதியுடைய பிறப்பு உலகத்து இல்லை.
('பிறப்பு விசேடத்தால் அவ்வடக்கம் எனக்கு இல்லையாகா நின்றது, நீ அஃது அறிகின்றிலை', என்பதாம், இத்துணையும் தலைமகன் கூற்று. மேல் தலைமகள் கூற்று.)

இரா சாரங்கபாணி உரை: கரை இல்லாத கடல்போன்ற எல்லையற்ற காம நோயினால் வருந்தியும் மடலூராமல் அதனைப் பொறுத்துத் தாங்கிக் கொள்ளும் பெண்பிறப்புப் போல பெருமை மிக்க பிறப்பு வேறில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப் பெண்ணின் பெருந்தக்கது இல்.

பதவுரை: கடலன்ன-கடல் போன்ற; காமம்-காதல்; உழந்தும்-வருத்தியும், துன்பம் அனுபவித்தும்; மடல்-பனைஓலை(பனங்கருக்குளால் செய்யப்பட்ட) குதிரை; ஏறா-ஊர்தலைச் செய்யாத; பெண்ணின்-பெண் பிறப்புப் போல, பெண்ணைக் காட்டிலும்; பெருந்தக்கது-மேம்பட்டது, பெரும் தகுதி வாய்ந்தது; இல்-இல்லை.


கடலன்ன காமம் உழந்தும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கடலையொத்த காமநோயாலே வருந்தியும்;
பரிப்பெருமாள்: கடலையொத்த காமநோயாலே வருந்தியும்;
பரிதி: கடலொத்த காம சமுத்திரத்தில் வீழ்ந்து;
காலிங்கர்: கடல்போலும் காமத்தை உழந்தேயும்;
பரிமேலழகர்: ('பேதைக்கு என் கண் படல் ஒல்லா', என்பது பற்றி 'அறிவிலராய மகளிரினும் அஃது உடையராய ஆடவரன்றே ஆற்றற்பாலர்', என்றாட்குச் சொல்லியது.) கடல்போலக் கரையற்ற காம நோயினை அனுபவித்தும்; [பேதைக்கு என் கண் படல் ஒல்லா - நின் பேதை காரணமாக என் கண்கள் ஒரு காலும் துயிலுதலைப் பொருந்தா]

'கடல்போலும் காமநோயாலே வருந்தியும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கடல்போன்ற காமத்து வருந்தினும்', 'கடல்போலக் கரையற்ற காமநோயால் வருந்தியும்', 'கடல் போலக் கரையற்ற காதல் நோயினால் வருந்தியும்', 'கடல் போல மிகுந்த காம வேதனை அடைந்தாலும்' என்ற பொருளில் உரை தந்தனர்.

கடல்போல மிகுந்த காமநோயால் வருந்தியும் என்பது இப்பகுதியின் பொருள்.

மடல்ஏறாப் பெண்ணின் பெருந்தக்கது இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மடலேற நினையாத பெண்பிறப்புப்போல மேம்பட்டது இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: இது நும்மாற் காதலிக்கப்பட்டாள் தனக்கும் இவ்வருத்த மொக்கும்: பெண்டிர்க்கு இப்பெண்மையான் மடலேறாததே குறையென்று தலைமகன் ஆற்றாமை நீங்குதற்பொருட்டுத் தோழி கூறியது.
பரிப்பெருமாள்: மடலேற நினையாத பெண்பிறப்புப்போல மேம்பட்டது இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நும்மாற் காதலிக்கப்பட்டாள் தனக்கும் இவ்வருத்த மொக்கும்: பெண்டிர்க்கு இப்பெண்மையான் மடலேறாததே குறையென்று தலைமகன் ஆற்றாமை நீங்குதற்பொருட்டுத் தோழி கூறியது.
பரிதி: மடல் என்னும் கப்பல்கொண்டு ஏறினும் ஏறவொண்ணாது; ஆதலால் ஆசைக்கடல் போலக் கடலும் பெருமையும் இல்லை.
காலிங்கர்: பின்னும் பெண்டிர் மடலேறல் பெரிதும் இன்றே. அதனால் அங்ஙனம் இம்மடல் ஏற்றந்தராப் பெண்மை பெருந் தகுதி உடையது; பிறிது ஒன்றும் இல்லை என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: எனவே இனி, 'யான் மடல் ஏறல் திண்ணிது',என்றான். இவள் விலக்குதல் காரணமாக என்றவாறு.
பரிமேலழகர்: மடலூர்தலைச் செய்யாது ஆற்றியிருக்கும் பெண் பிறப்புப்போல மிக்க தகுதியுடைய பிறப்பு உலகத்து இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: 'பிறப்பு விசேடத்தால் அவ்வடக்கம் எனக்கு இல்லையாகா நின்றது, நீ அஃது அறிகின்றிலை', என்பதாம், இத்துணையும் தலைமகன் கூற்று. மேல் தலைமகள் கூற்று. [பிறப்பு விசேடத்தால் - ஆணாகப் பிறந்திருத்தலால்]

'மடலேற நினையாத பெண்பிறப்புப்போல மேம்பட்டது இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மடலேறாப் பெண்பிறவியே பெருமைக்கு உரியது', 'மடல் ஏறாத பெண்ணைப்போல மிக்க தகுதியுடைய பிறப்பு வேறில்லை', 'மடலேறுதலைச் செய்யாது ஆற்றியிருக்கும் பெண் பிறப்புப் போல மிக்க தகுதியை உடைய பிறப்பு உலகத்தில் இல்லை', '(ஆண்களைப் போல் வெட்கம் கெடும்படி) பெண்கள் மடலேறுவதில்லை என்பதனால் அந்தப் பெண்ணியல்பைப் போல் சிறந்தது வேறில்லை' என்றபடி பொருள் உரைத்தனர்.

மடலூர்தலைச் செய்யாத பெண்பிறப்புப்போல மேம்பட்டது இல்லை என்பது இத்தொடரின் பொருள்.



நிறையுரை:
கடல்போல மிகுந்த காமநோயால் வருந்தியும் மடல்ஏறாப் பெண்ணின் மேம்பட்டது இல்லை என்பது பாடலின் பொருள்.
நாண்துறவா பெண்ணின் பெருமை இங்கு ஏன் சொல்லப்படுகிறது?

ஆண்தான் வெட்கங்கெட்டுத் தன் காமநோயை வெளியுலகத்துக்குக் காட்டிக்கொள்வான்.

கடலைப் போன்ற காம நோயால் வருத்தமடைந்த போதும், மடலேறாமல், அதைப் பொறுத்துக் கொள்ளும் பெண்மையினும் மேம்பட்டது வேறொன்றும் இல்லை.
காட்சிப் பின்புலம்:
காதலர்களான தலைவனும் தலைவியும் சந்திக்க முடியாமல் இடர்கள் உண்டாகின்றன. தன் உள்ளத்தை ஈர்த்த பெண்ணை அடைவதில் உள்ள தடைகளை உணர்ந்த காதலன், அவற்றை வெல்ல, எல்லா வழிகளையும் முயன்று, ஏமாற்றம் அடைந்து, இறுதியாக மடலேறுதலே தனக்கு தீர்வு என்ற நிலையை எட்டுகிறான். உடலுக்கும் உள்ளத்திற்கும் வருத்தம் உண்டாக்கும் மடலூர்தல் ஒரு கடினமான முடிவுதான். மடலேறுதல் செய்தால் தன் நாணையும் ஆண்மைப் பெருமிதத்தையும் இழக்க நேரிடும் என்பதையும் அறிந்தவன்தான் காதலன். மடலேறும் எண்ணத்தினால் உண்டான துன்பத்துடன் மாலைப்பொழுது தரும் காமத்துயரும் சேர்ந்து காதலனை வாட்டுவதால் அவளைப் பெறும்வரை எப்படித் தூங்கும் என் கண்கள்? என்று காதலன் சொல்லிக்கொண்டிருக்கிறான்.

இக்காட்சி:
தாம் மட்டுமே காதல்நோயால் வருந்துகிறோமா? தன் காதலிக்கும் அது வருத்துமே? அவள் என்ன செய்வாள்? என நினைக்கிறான். பின் அவன் 'கடலைப் போன்ற காம நோயால் வருத்தமடைந்த போதும், மடலேறாமல், அதை அடக்கி ஆற்றிக் கொள்ளும் ஆற்றல் பெண்களுக்கு உண்டு; இத்தன்மை கொண்ட பெண்மையினும் மேம்பட்டது வேறில்லை' எனத் தன் எண்ணத்தை வெளியிடுகிறான்.
கடல் போல என்றால் அதன் மிகப் பெரிய அளவு, ஆழம், வற்றாத தன்மை, கரை காண முடியாத தொலைவுகள் இவற்றைக் குறிக்கும்.
பெண்ணுக்கும் காதலனைக் காணமுடியாத ஏக்கத்தில் கடல் அளவு மிகுந்து காணப்படும் காதல் நோய் மனத்தை வருத்தினாலும் அவள் வேறுவகையில் அதைக் கையாள்கிறாள். அவள் தன் காம அழுத்தத்தைப் புறம் தெரியாத வகையில் அடக்கிக் கொள்கிறாள். தெருவிற்கு வந்து போராடவும்- மடலேறவும் இல்லை.

இக்குறட்கருத்தைத் தழுவி எழுதப்பட்ட சிந்தாமணிச் செய்யுள் வரி இது: எண்இல் காமம் எரிப்பினும் மேல்செலாப் பெண்ணின் மிக்கது பெண் அலது இல்லையே(சிந்தாமணி-குணமாலையார் இலம்பகம்-192(998)) (பொருள்: எல்லையற்ற காமம் சுடினும் (மடலூர்தல் முதலியவற்றிற்கு) நடவாத பெண்ணினத்தினும் கொடுமை மிக்கது பெண்ணல்லதில்லையாயிருந்தது.)

நாண்துறவா பெண்ணின் பெருமை இங்கு ஏன் சொல்லப்படுகிறது?

இது நாணுத்துறவுரைத்தல் அதிகாரம். இவ்வதிகாரப் பாடல்கள் அனைத்தும் தலைமகன் நாண்துறந்து மடலேறத் துணிவது பற்றிச் சொல்வன. பின் ஏன் இங்குமட்டும் நாண்துறவா பெண்பற்றிப் பேசப்படுகிறது?
காதலர்கள் தங்களுக்குள் இணைந்து நின்றாலும் உலகத்தார் அவர்கள் காதலை ஏற்றுக்கொள்ளும்வரை பிரிந்தே இருப்பர். நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன என்று காதலன் காமநோயை வெல்லமுடியாமல் இருக்கிறான் என்று இவ்வதிகாரத்து முந்தைய குறள் ஒன்று கூறியது. அதற்கு நேர்மாறாக 'கடலன்ன காமம் உழந்தும்' அதாவது வேட்கை மிக்க நிலையிலும், 'மடலேறாப் பெண்' என்று அவளது நாண் நீங்கா நிலையையும் காமத்தை அடக்கும் ஆற்றலையும் இப்பாடல் சொல்கிறது.

மடலேறுதல் என்பது மடலூர்தல் என்றும் அறியப்படும். காதலன் தன் காதல் நிறைவேறாத நிலையில், தான் விரும்பிய பெண்ணின் உருவம் தீட்டிய துணியைக் கொடி போல் பிடித்துக் கொண்டு, பனங் கருக்குகளால் செய்யப்பட்ட குதிரை மேல் ஏறி ஊரறியத் தெருவில் உலா வருதல் மடலேறுதல் ஆகும். இதைக்கண்ட ஊரார் துணியில் வரையப்பட்டிருக்கும் பெண்ணிடமும், அவள் பெற்றோரிடமும் தலைவனின் காதலை அவர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு எடுத்துக் கூறி அவன் காதலித்த பெண்னை அவனுக்கு மணமுடித்து வைக்க முயல்வர்.
எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேற் பொற்புடை நெறிமை இன்மை யான(தொல்காப்பியம். அகத்திணை இயல்.38 பொருள்: எல்லாக் குலத்தினிடத்தினும், பெண்பால் மடலேறுதல் இல்லை; பொலிவுபெறு நெறிமை-நாணம் முதலாயின- இல்லாமையால்) என்று பொருந்தாக் காமமாகிய பெருந்திணையின் பகுதியாக மடலேறுதலைத் தொல்காப்பியம் கூறும். அதாவது மடலேறுதல் ஆண் மக்கட்கே உரியது என்றும் பெண்களுக்கு உரியதுஅன்று என்றும் மரபு வகுத்தனர்.
சங்ககாலத்துக்குப் பிந்தைய பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் எழுதிய இரண்டு பிரபந்தங்கள் பெரிய திருமடல், சிறிய திருமடல் என்பன. இவற்றில் தன்னைத் தலைவியாகவும் இறைவனை(திருமாலை)த் தன் உள்ளம் கவர்ந்த தலைவனாகவும் கற்பனை செய்து, அவனை அடையமுடியாத நிலையில்- 'இறைவன் தன்னை ஆட்கொள்ளவில்லை என்றால் மடலூர்வேன்'- என்று இவர் பாடியுள்ளார். இது (ஆடவரே மடல் ஏறுவர் என்ற) மரபுக்கு மாறானது என்றும், ஆயினும் வடவர் மரபை நோக்கிச் செய்தனம் என்றும் அவரே பெரிய திருமடலில் (36-39) கூறுகின்றார்.

ஆடவன் தன் காதலை ஊரறியச் செய்வதற்காக மடலேறுதலை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறான் என்றும் அது இழிவான செயற்பாடு என்றும் இவ்வதிகாரப் பாடல்கள் வழி அறிய முடிகிறது.
தொல்லாசிரியர்கள் 'மடலேறுதல் பெண்ணியல்புக்கேற்றதன்று' என்றும் 'பெண்ணாயிருப்பதாலே மடல் ஏறமாட்டாள்' என்றும் பெண்ணியல்பால் மடலேறத் துணியமாட்டாள் என இக்குறளின் விளக்கவுரைகளில் சொல்வதால் பெண் மடலேறுதல் உலக வழக்கு இல்லை என்று அறியலாம். மடல் ஊர்வேன் என்று கருதுதலும் சொல்லுதலும் ஆடவர், மகளிர் இருவர்க்கும் உரிய ஆனால் மடல் ஊர்தல் ஆடவர்க்கு மட்டுமே உரியது என்று இரா சாரங்கபாணி கருத்துரைப்பார்.
தன் காதலை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியில் தெருவில் இறங்கி, இழிபாடுகளை எதிர்கொள்ளக் காதலன் ஆயத்தமாக இருக்கிறான். காதல் நிறைவேறுவதற்காக அவன் எதையும் செய்வான்; நாணத்தைத் துறப்பான்; பலர் பார்த்து நகைப்பார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் மடலேறுவான். ஆனால் தலைவியோ வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே இருப்பாள். அவள் காமத்துன்பத்தை அமைதியாகத் தாங்கிக்கொண்டுத் தன் நெஞ்சின் அளவில் நிறுத்தித் தானே தனித்து வருந்துவாள். அவளது காதலுணர்வைப் போர்க்குணத்துடன் ஊரார்க்கு வெளிக்காட்டாத பண்பு மேம்பட்டது என்று இங்கு சிறப்பித்து உரைக்கப்படுகிறது. பொறுமை காத்து நிற்கும் மகளிர் நாண்துறந்து மடலேறத் துணியார் என்று பெண்ணினத்தின் பெருமை பேசப்பட்டது.
நாணுத்துறவுரைத்தல் அதிகாரத்தில் நாண்துறவா பெண்ணின் பெருமை பேசப்படுவதால் தொல்காப்பியர் போலவே வள்ளுவரும் பெண் நாண்துறந்து தெருவுக்கு வரக்கூடாது என்றே விரும்புகிறார் எனத் தெரிகிறது.

கடல்போல மிகுந்த காமநோயால் வருந்தியும் மடலூர்தலைச் செய்யாத பெண்பிறப்புப்போல மேம்பட்டது இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

காதலிபோன்று காமத்துன்பத்தை ஆற்றமுடியாத தலைவனின் நாணுத்துறவுரைத்தல்.

பொழிப்பு

கடல் அளவு காமத் துன்பம் வாட்டியபோதும் மடலேறாப் பெண்பிறவி போல் பெருமைக்கு உரியது வேறில்லை.