இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1132நோனா உடம்பும் உயிரும் மடல்ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து

(அதிகாரம்:நாணுத்துறவுரைத்தல் குறள் எண்:1132)

பொழிப்பு: (காதலியின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்திவிட்டு மடலூரத் துணிந்தன.

மணக்குடவர் உரை: பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும் மடலேறும்: நாணினை நீக்கி நின்று.
இஃது உடம்போடு உயிரும் மடலேறுமெனத் தலைமகன் கூறியது.

பரிமேலழகர் உரை: ('நாணுடைய நுமக்கு அது முடியாது', என மடல் விலக்கல் உற்றாட்குச் சொல்லியது) நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - அவ் வருத்தத்தினைப் பொறாத உடம்பும் உயிரும் அதற்கு ஏமமாய மடல் மாவினை ஊரக் கருதாநின்றன; நாணினை நீக்கி நிறுத்து - அதனை விலக்குவதாய நாணினை அகற்றி.
('வருந்தினார்க்கு' என மேல் வந்தமையின், செயப்படு பொருள் ஈண்டுக் கூறார் ஆயினார். மடல் - ஆகுபெயர். 'நீக்கி நிறுத்து' என்பது ஒரு சொல் நீர்மைத்து. அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடி முதலிய முன்னே நீங்கவும் நாண் நீங்காது நின்றது. அதுவும் இது பொழுது நீங்கிற்று என்பான், 'உடம்பும் உயிரும்' என்றான், அவைதாம் தம்முள் நீங்காமற்பொருட்டு. 'மடலேறும்' என்றது, அவள் தன் ஆற்றாமையறிந்து கடிதிற்குறை நேர்தல் நோக்கி.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: தலைமகளைக் காணப் பெறாமையால் வந்த வருத்தத்தைத் தாங்க முடியாத உடம்பும் உயிரும், வெட்கத்தை விலக்கித் தூர நிறுத்திவிட்டு மடற் குதிரையை ஏறத் துணிகின்றன.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நோனா உடம்பும் உயிரும் மடல்ஏறும் நாணினை நீக்கி நிறுத்து.


நோனா உடம்பும் உயிரும் மடல்ஏறும்:
பதவுரை: நோனா-வலி பொறாத; உடம்பும்-யாக்கையும்; உயிரும்-உயிரும்; மடல்-பனங்கருக்கு (குதிரை); ஏறும்-ஊரும்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும் மடலேறும்:
பரிப்பெருமாள்: பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும் மடலேறும்:
பரிதி: யாமுற்ற காமநோய் பொறுக்கலாவுடம்பும் உயிரும் மடலேறாயிருந்தது;
காலிங்கர்: யான் உற்ற காமநோய் பொறுக்கலா உடம்பும் உயிரும் இங்ஙனம் மடலேறுமாயிருந்தது;
பரிமேலழகர்: ('நாணுடைய நுமக்கு அது முடியாது', என மடல் விலக்கல் உற்றாட்குச் சொல்லியது) அவ் வருத்தத்தினைப் பொறாத உடம்பும் உயிரும் அதற்கு ஏமமாய மடல் மாவினை ஊரக் கருதாநின்றன;

'காமநோய் பொறுக்கலா உடம்பும் உயிரும் மடலேறும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமம் தாங்காத உடம்பும் உயிரும்', 'காம நோயினைப் பொறுக்க இயலாத உடம்பும் உயிரும் பாதுகாவலாக மடலேறும்', 'காதல் துன்பத்தைப் பொறுக்க முடியாத உடலும் உயிரும் அதற்குப் பாதுகாவலாகிய மடல் குதிரையை ஊரும் (ஏறும்)', 'காம நோயின் வேதனையைப் பொறுக்க முடியாமல் என் உடலும் உயிரும் மடலேறத் தூண்டுகின்றன' என்ற பொருளில் உரை தந்தனர்.

காமவலியைத் தாங்காத உடம்பும் உயிரும் மடலேறுமாயிருந்தன என்பது இத்தொடரின் பொருள்.

நாணினை நீக்கி நிறுத்து:
பதவுரை: நாணினை-வெட்கத்தை; நீக்கிநிறுத்து-அகற்றி.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாணினை நீக்கி நின்று.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உடம்போடு உயிரும் மடலேறுமெனத் தலைமகன் கூறியது.
பரிப்பெருமாள்: நாணினை நீக்கி நிறுத்தி.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது 'நீர் கூறிய மடலேறு நாணமுடையார்க்குக் கூடுமோ!' என்ற தோழிக்கு, நாணினை நீக்கி உடம்போடு உயிரும் மடலேறுமெனத் தலைமகன் கூறியது.
பரிதி: முன்னின்ற நாணினையும் எடுத்தெறிந்து இதிலே வலிபெறுகின்றது என்று உரைத்தான் தலைமகன் என்றவாறு.
காலிங்கர்: முன்னின்ற நாணினையும் எடுத்து எறிந்து;
காலிங்கர் குறிப்புரை: இனி என்னை செயற்பாலது என்று பின்னும் இதனையே வலிபெறுத்து உரைத்தான் தலைமகன் என்றவாறு.
பரிமேலழகர்: அதனை விலக்குவதாய நாணினை அகற்றி.
பரிமேலழகர் கருத்துரை: 'வருந்தினார்க்கு' என மேல் வந்தமையின், செயப்படு பொருள் ஈண்டுக் கூறார் ஆயினார். மடல் - ஆகுபெயர். 'நீக்கி நிறுத்து' என்பது ஒரு சொல் நீர்மைத்து. அதுவும் இது பொழுது நீங்கிற்று என்பான், 'உடம்பும் உயிரும்' என்றான், அவைதாம் தம்முள் நீங்காமற்பொருட்டு. 'மடலேறும்' என்றது, அவள் தன் ஆற்றாமையறிந்து கடிதிற்குறை நேர்தல் நோக்கி.

'நாணினை எடுத்து எறிந்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வெட்கத்தை விட்டு மடல் ஏறத் துணியும்', 'மடலேறத் தடையாக இருந்த நாணத்தைத் தள்ளி வைத்துவிட்டு', 'மடலேறுதலைத் தடுப்பதாகிய நாணினை அகற்றி விட்டு', 'வெட்கத்தையும் விட்டுவிட்டு' என்றபடி பொருள் உரைத்தனர்.

நாணத்தைத் தள்ளி வைத்துவிட்டு என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
காதலியை அடைவதைவிட நாணம் பெரிதில்லை என்று அதை அவன் தள்ளிவைப்பதைச் சொல்லும் பாடல்.

நாணத்தைத் தள்ளி வைத்துவிட்டு, காமவலியைத் தாங்காத உடம்பும் உயிரும் மடலேறுமாயிருந்தன என்பது பாடலின் பொருள்.
உடம்பும் உயிரும் மடலேறும் என்றால் என்ன?

நோனா என்ற சொல்லுக்கு நோவு தாங்காத என்பது பொருள்.
நீக்கிநிறுத்து - நீக்கி நிறுத்தி என்பதே நீக்கிநிறுத்து எனத் தொடர்மொழி ஆக வந்தது; 'தள்ளி வைத்துவிட்டு' என்பது இதன் பொருள். பரிதியும் காலிங்கரும் இத்தொடர்க்கு 'எடுத்தெறிந்து' எனப் பொருள் உரைத்தனர்.

என்ன முயன்றும் காதலியை அடைவதில் உள்ள தடைகள் நீடிக்கின்றன. இது தலைவனது உடலுக்கும் உயிருக்கும் மிகுந்த வலியைத் தருகிறது. இந்த நோவைத் தாங்க முடியாத தலைவன் நாண் பற்றி கருதாமல் மடலேறத் துணிகிறான். பிரிவால் உயிரும் இங்கே துன்பப்படுவதால் அந்த உயிரின் தூண்டுதலால் துன்பத்தைப் பொறுக்காத உடலும் உயிரும் ஒருங்கே, 'நாணத்தைத் தூக்கி எறிந்துவிட்டு மடல் ஏறத் துணிந்துவிட்டன என ஆற்றாமையால் அரற்றுகிறான் காதலன். .
மடலேறுதல் என்பது பனை மடலால் செய்யப்பட்ட குதிரை மீதேறிக் காதலியின் உருவம் எழுதிய கிழியுடன் தெருவில் திரிந்து ஊரார்க்குத் தன் காதலைத் தெரிவித்தல் ஆகும். ஊரறிய மடலேறுவது என்பது வெட்கத்தைவிட்ட செயலாகக் கருதப்படும்.

உடம்பும் உயிரும மடலேறும் என்றால் என்ன?

உற்றறிய முடியாத உடலும், அவளது பிரிவு பொறுக்காத உயிரும் காதல் கொண்டவனை மிகவும் வருத்துகின்றன. உடலுடன், உயிரும் வருந்துவதாகக் கூறப்பட்டுள்ளதால் அவனது காதலின் ஆழம் புலப்படுகிறது. காதல் என்பது உயிருடன் ஒன்றிய ஒன்று. அவளே அவனது உயிர் ஆகிவிட்டாளாதலால் அவளை அடையாவிட்டால் அவனது உயிர் போய்விடும் என்ற நிலை இப்பொழுது. அவளைப் பெறமுடியாமற் போய்விடுமோ என்ற வருத்தத்தின் நோவு தாங்கமாட்டாது உடலும் உயிரும் ஒன்றாக மடல் ஏறும் என்கிறான் காதலன்.

நாணத்தைத் தள்ளி வைத்துவிட்டு காமவலியைத் தாங்காத உடம்பும் உயிரும் மடலேறுமாயிருந்தன என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பெருகிய காமநோவு நாணத்தை நீக்கி மடலேறத் தூண்டுகிறது என்று சொல்லும் நாணுத்துறவுரைத்தல் பாடல்.

பொழிப்பு

நோவு பொறுக்க இயலாத உடம்பும் உயிரும் மடல் ஏறத் துணியும், நாணத்தைத் ஒதுக்கித் தள்ளிவிட்டு.