இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1131



காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல்அல்லது இல்லை வலி

(அதிகாரம்:நாணுத்துறவுரைத்தல் குறள் எண்:1131)

பொழிப்பு (மு வரதராசன்): காமத்தால் துன்புற்று (காதலியின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையான துணை வேறொன்றும் இல்லை.

மணக்குடவர் உரை: காமம் காரணமாக முயன்று வருந்தினார்க்கு ஏமமாவது மடல் ஏறுவதல்லது மற்றும் வலி யில்லை.
இது தலைமகனை தோழி சேட்படுத்தியவிடத்து மடலேறுவேனென்று தலைமகன் கூறியது.

பரிமேலழகர் உரை: (சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.) காமம் உழந்து வருந்தினார்க்கு - அரியராய மகளிரோடு காமத்தை அனுபவித்துப் பின் அது பெறாது துன்புற்ற ஆடவர்க்கு; ஏமம் மடல் அல்லது வலி இல்லை - பண்டும் ஏமமாய் வருகின்ற மடல் அல்லது, இனி எனக்கு வலியாவதில்லை.
(ஏமமாதல்: அத்துன்பம் நீங்கும் வகை அவ்வனுபவத்தினைக் கொடுத்தல். வலி: ஆகுபெயர். 'பண்டும் ஆடவராயினார் இன்பம் எய்திவருகின்றவாறு நிற்க, நின்னை அதற்குத் துணை என்று கருதிக் கொன்னே முயன்ற யான், இது பொழுது அல்லாமையை அறிந்தேன் ஆகலான், இனி யானும் அவ்வாற்றான் அதனை எய்துவல்', என்பது கருத்து.)

இரா சாரங்கபாணி உரை: காமத்தினால் உடல்வாடி உள்ளம் வருந்தினார்க்குப் பாதுகாப்பாக மடலேறுதல் அல்லது வேறு உறுதியான துணையில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடல் அல்லது வலி இல்லை.

பதவுரை: காமம்-காதல்; உழந்து-முயன்று; வருந்தினார்க்கு-துன்புற்றவர்க்கு; ஏமம்-உறுதி, பாதுகாப்பு, அரண் (உறுதி என்பது இங்கு பொருத்தம்); மடல்-பனைமடல்; அல்லது-அல்லாமல்; இல்லை-இல்லை; வலி-வலிமை, பற்றுக்கோடு, நோவு (வலிமை என்பது இங்கு பொருந்தும்).


காமம் உழந்து வருந்தினார்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காமம் காரணமாக முயன்று வருந்தினார்க்கு;
பரிப்பெருமாள்: காமம் காரணமாக முயன்று வருந்தினார்க்கு;
பரிதி: மதத்தினாலே துயரமுற்று வருந்தினார்க்கு;
காலிங்கர்: தாம் கருதிய இன்பம் கையுறாமையால் காம நோய் உழந்து மற்று அதனாலே தமது பெருநாணினைக் கைவிட்டுப் பெரிதும் வருந்துவார் யாவர்;
பரிமேலழகர்: (சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.) அரியராய மகளிரோடு காமத்தை அனுபவித்துப் பின் அது பெறாது துன்புற்ற ஆடவர்க்கு; [அது பெறாது-அக்காமத்தைத் துய்த்தல் பெறாமல்]

'காமம் காரணமாக முயன்று வருந்தினார்க்கு' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'மகளிரொடு காமத்தை அனுபவித்துப் பின் அது பெறாது துன்புற்றவர்க்கு' எனக் கூறுகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமத்தில் பட்டு வருந்தினவர்கட்கு', 'காதலின்பம் துய்த்து அது பெறாமல் வருந்தினவர்களுக்கு', 'காதலை நுகர்ந்து பின் அது பெறாது வருந்தினவர்க்கு', 'காதல் என்னும் நோயுற்று வருந்தினவர்க்கு' என்ற பொருளில் உரை தந்தனர்.

காதலுற்று முயன்று துன்புற்றவர்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.

ஏமம் மடல்அல்லது இல்லை வலி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஏமமாவது மடல் ஏறுவதல்லது மற்றும் வலி யில்லை.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகனை தோழி சேட்படுத்தியவிடத்து மடலேறுவேனென்று தலைமகன் கூறியது.
பரிப்பெருமாள்: ஏமமாவது மடல் எடுக்குமது மற்ற வலி யில்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இரந்து பின்னின்ற தலைமகனை தோழி சேட்படுத்தியவிடத்து 'மடலேறுவேன்' என்று தலைமகன் கூறியது.
பரிதி: சத்துமாவது மடலல்லது வலியில்லை என்றவாறு.
காலிங்கர்: மற்று அவர்க்கு இனிமேலுறுதி யாதோ எனின் மன்றத்துப் போந்து மடல் ஊர்தலேயல்லது பிறிது இல்லை என்று தன் கையுறை வாங்காத தோழிக்குத் தலைமகன் மடல் ஏற்று உலகின்மேல வைத்து உணர்த்தினான் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: பண்டும் ஏமமாய் வருகின்ற மடல் அல்லது, இனி எனக்கு வலியாவதில்லை. [மடல் - பனைமடலாற் செய்த குதிரை]
பரிமேலழகர் குறிப்புரை: ஏமமாதல்: அத்துன்பம் நீங்கும் வகை அவ்வனுபவத்தினைக் கொடுத்தல். வலி: ஆகுபெயர். 'பண்டும் ஆடவராயினார் இன்பம் எய்திவருகின்றவாறு நிற்க, நின்னை அதற்குத் துணை என்று கருதிக் கொன்னே முயன்ற யான், இது பொழுது அல்லாமையை அறிந்தேன் ஆகலான், இனி யானும் அவ்வாற்றான் அதனை எய்துவல்', என்பது கருத்து. [அத்துன்பம்-காமத்தை அனுபவித்தலைப் பெறாமையால் உண்டாகிய துன்பம்; அவ்வனுபவித்தினை-அரியராய் மகளிரோடு காமத்தை அனுபவித்தலை; அதற்கு-அவ்வின்பம் அடைதற்கு; கொன்னே-பயனின்றி; அவ்வாற்றான் - முன்னும் ஆடவராயினார் மடன்மா ஏறி இன்பமடைந்து வருகின்ற வழியாய்; அதனை - அவ்வின்பத்தை; எய்துவல் - அடைவேன்]

'பாதுகாப்பான வலி மடலேறுவது தவிர வேறில்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மடல் ஏறுதலல்லது வேறு பற்றுக்கோடு இல்லை', 'பாதுகாப்பு மடலேறுதலல்லாது வேறு உறுதியான ஆதரவு யாதும் இல்லை', 'காவலாய் உள்ளதாகிய மடலேறுதலல்லது வேறு வலிமை எனக்கு இல்லை. (தலைவன் கூற்று)', 'பாதுகாப்பானது நாணமின்றிக் காதலை வெளிப்படுத்தலே. அதனை அல்லது வலிமையான பாதுகாவல் வேறு இல்லை' என்றபடி பொருள் உரைத்தனர்.

உறுதியான வலிமை மடல்ஊர்தலேயல்லது பிறிது இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காதலுற்று முயன்று துன்புற்றவர்க்கு உறுதியான வலிமை மடல்ஊர்தலேயல்லது பிறிது இல்லை என்பது பாடலின் பொருள்.
'மடல்ஊர்தல்' என்றால் என்ன?

காதலில் இடர் எதிர்கொள்பவர் தம் காதலை ஊரறியச் செய்வது அவர்க்கு வலிமையூட்டும்.

காமநோயால் துன்புற்று, தம் காதலியின் அன்பைப் பெறமுடியாமல் வருந்துபவருக்கு மடலேறுதல் அல்லாமல் வலிமையான பாதுகாப்பு வேறு எதுவும் இல்லை
காட்சிப் பின்புலம்:
காதலர் பிரிவில் உள்ளனர் என்பதைச் சென்ற அதிகாரமான 'காதற்சிறப்பு உரைத்தல்' குறிப்பால் காட்டிற்று. தலைவனும் தலைவியும் ஒருவர்க்கொருவர் விரும்பி களவுக் காதலில் ஈடுபட்டனர். இவர்களது காதலை அறிந்த தலைவியின் பெற்றோர், சிலபல காரணங்களுக்காக மணவினைக்கு உடன்படவில்லை. தலைவி இற்செறிப்பாகிறாள் (தலைவி வெளிவிடாமல் வீட்டினுள் வைத்துக் காக்கப்படுகிறாள்). தலைவன் சேட்படுத்தப்படுகிறான் அதாவது தலைமகளைக் காண முடியாமல் புறத்திலேயே இருக்கும்படியான நிலைமை தலைவனுக்கு ஏற்பட்டு விட்டது. அவன் பலவேறு வழிகளில் அவளைச் சந்திக்க முயன்றும் பயன் கிட்டவில்லை. காமநோயோ அவனை மிகவும் வருத்துகிறது. அவளைப் பெறுவதற்கு எவ்வழியாயினும் மேற்கொள்வேன் என உறுதி எடுக்கிறான். என்ன செய்யப்போகிறான் அவன்?

இக்காட்சி:
பெறற்கரிய காதலியோடு காமவின்பம் நுகர்ந்தான் தலைமகன். இப்பொழுது அவளைச் சந்திக்கக்கூட முடியாத நிலையில் உள்ளான். ஆனால் அவனது காதல் அடங்கவில்லை. எப்பொழுதும் அவள் நினைவாகவே இருக்கிறான். அவளை அடைந்தே தீருவேன் என்பதில் ஆற்றாமையும் துடிப்பும் நிறைந்த உள்ளத்துடன் அலைகிறான். வெறி மிகுந்து அவளை அடைவதற்கு உறுதியான வழி நாணத்தைக்‌ கைவிட்டு மடலேறுவதுதான் எனத்‌ துணிகிறான். மடலேறுவது என்பது தனது துன்பத்தினை, நாண்துறந்து, பலரும்‌ அறியும்படிச்‌ செய்வது. தன்னைத் தான் வருத்தி அழித்துக் கொள்ளும் வன்முறை உள்ளடக்கிய முரட்டுத்தனமான இச்செயல் இழிவானதாகவே கருதப்பட்டது.

மடலேறுதலை ஏம மடல் என்கிறது பாடல். அவனது துன்பத்தைப் போக்கத் துணையாக மடலேறுதல் இருக்கும் என்று நம்பியதால் அது ஏம மடலானது. மடல் தனக்கு நன்மை பயக்கும் என்று எண்ணுவதால் அதனினும் 'வலி' அதாவது வலிமை மிக்கது வேறொன்றும் இல்லை என நினைக்கிறான் தலைவன். வலி என்ற சொல் இங்கு உறுதியாக நன்மை பயப்பதைக் குறித்து நிற்கின்றது.
இக்குறட் கருத்தை ஒட்டிய தொகைச் செய்யுள் ஒன்றுளது. அது: காமக் கடும் பகையின் தோன்றினேற்கு ஏமம் எழிநுதல் ஈத்த இம் மா (கலித்தொகை 139: 24-25: பொருள்: காமமாகிய கடியபகை உள்ளும்புறம்பும் அழித்தலாலே, இங்ஙனம் வடிவுகொண்டு தோன்றின எனக்கு, அழகிய நெற்றியை உடையவள் தந்த இம்மடன்மா, பாதுகாப்பாயிற்று.)

'மடல்ஊர்தல்' என்றால் என்ன?

பனை மடலால் குதிரை போல் செய்து அதன்மீது ஏறி ஊர் முழுதும் வலம் வருதலே மடல் ஏறுதல் ஆகும். இது மடலூர்தல் என்றும் பெயர்பெறும். இம்மடலேற்றம் காமத்தின் எல்லை தாண்டும்போது நிகழ்வது.
தன் காதலை உலகுக்கு உணர்த்தும் வண்ணம், தலைவன், உடல் முழுவதும் சாம்பல் பூசி, எருக்குமாலை முதலியன அணிந்து, மடல் குதிரை மேல் ஏறித் தான் காதல் கொண்ட பெண்ணின் உருவம் தீட்டிய துணியை ஏந்திக் கொடி போல் பிடித்துக் கொண்டு, ஊர் மன்றம் செல்வான். அது சமயம் அக்குதிரையின் பனை மடல்களின் கருக்குகள் அவன் உடம்பைக் கிழித்துப் புண்படுத்தும். அத்துன்பத்தைப் பொறுத்துக்கொண்டு, தன் உயிரையும்விடத் துணிந்து, தனது வருத்தத்தினைப்‌ பலரும்‌ அறிய முறையிடுவான். இதைக்கண்ட ஊரார், துணியில் வரையப்பட்டிருக்கும் பெற்றோரிடம், தலைவனின் காதலை ஏற்றுக் கொள்ளுமாறு எடுத்துக் கூறி அவன் காதலித்த பெண்ணை அவனுக்கு மணமுடித்து வைக்க முயல்வர்.
மனம் ஒத்த காதலர்கள் தடைகளை மீறி மணவினை காண மடல் பயன்பட்டது என்று சொல்வர். மடலூர்தல் ஊர்நடுவே நிகழ்வதாலும் காதலின் அழகியலைக் குலைத்து விடுகிறது என்பதாலும் இகழப்படுவதாகவும் இருந்தது.
மடலேறுதல் ஆண் மக்கட்கே உரியது என்றும் பெண்களுக்கு உரியது அன்று என்றும் மரபு வகுத்தனர்.

காதலுற்று முயன்று துன்புற்றவர்க்கு உறுதியான வலிமை மடல்ஊர்தலே யல்லது பிறிது இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மானம் முதலியன கருதாது மடலேறுவேன் எனத் தலைவன் நாணுத்துறவுரைத்தல்.

பொழிப்பு

காதல் கொண்டு முயன்று துன்புற்றவர்க்கு உறுதியான துணை மடலேறுதல் அல்லது வேறு இல்லை.