இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1136மடல்ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்குஎன் கண்

(அதிகாரம்:>நாணுத்துறவுரைத்தல் குறள் எண்:1136)

பொழிப்பு: மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன்; காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.

மணக்குடவர் உரை: பேதை பொருட்டு என்கண் உறங்குதலை இசையாது: ஆதலானே மடலூர்தலை ஒருதலையாக யாமத்தினும் நினைப்பேன்.
இது மடலேறுவது நாளையன்றே; இராவுறக்கத்திலே மறந்துவிடுகின்றீர் என்ற தோழிக்கு என் கண் உறங்காது ஆதலான் மறவேனென்று தலைமகன் கூறியது.

பரிமேலழகர் உரை: ('மடலூரும் பொழுது இற்றைக்கும் கழிந்தது' என்றாட்குச் சொல்லியது) பேதைக்கு என் கண் படல் ஒல்லா - நின்பேதை காரணமாக என் கண்கள் ஒருகாலுந் துயிலைப் பொருந்தா; யாமத்தும் மன்ற மடலூர்தல் உள்ளுவேன் - அதனால் எல்லாரும் துயிலும் இடையாமத்தும் யான் இருந்து மடலூர்தலையே கருதாநிற்பேன்.
('பேதை' என்றது பருவம் பற்றி அன்று, மடமை பற்றி. 'இனிக் குறை முடிப்பது நாளை என வேண்டா' என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: மடலேறுதலை நடுயாமத்தும் நினைப்பேன்; ஏன்? காதலியை நினைத்து என் கண்கள் மூடா.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பேதைக்குஎன் கண் படல்ஒல்லா யாமத்தும் மன்ற மடல்ஊர்தல் உள்ளுவேன்.


மடல்ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற:
பதவுரை: மடல்-பனங்கருக்கு; ஊர்தல்-ஏறிச் செலுத்துதல்; யாமத்தும்-நள்ளிரவிலும்; உள்ளுவேன்-நினைப்பேன்; மன்ற=திண்ணமாக.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆதலானே மடலூர்தலை ஒருதலையாக யாமத்தினும் நினைப்பேன்;
பரிப்பெருமாள்: ஆதலானே மடலூர்தலை ஒருதலையாக யாமத்தினும் நினைப்பேன்.
பரிதி: (மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன்;
காலிங்கர்: இன்று யான் மடலூர்தலைச் சென்ற நள்ளிருள் யாமத்துங்கூடக் கருதுவேன்;
பரிமேலழகர்: ('மடலூரும் பொழுது இற்றைக்கும் கழிந்தது' என்றாட்குச் சொல்லியது) அதனால் எல்லாரும் துயிலும் இடையாமத்தும் யான் இருந்து மடலூர்தலையே கருதாநிற்பேன்.

'மடலூர்தலை ஒருதலையாக யாமத்தினும் நினைப்பேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உறுதியாக எல்லாரும் உறங்கும் நள்ளிரவிலும் யான் மடலூர்தலை நினைந்திருப்பேன்', 'நள்இரவிலும் மடலூர்தலையே நினைத்துக் கொண்டிருப்பேன்', 'அதனால் எல்லாம் உறங்கும் நடு இரவிலும் மடலேறுதலையே கருதுவேன்', 'அதனால் நடுச்சாமத்திலும்கூட மடலூர்வதையே எண்ணுகிறேன்' என்ற பொருளில் உரை தந்தனர்.

மடலூர்தலை உறுதியாக நள்ளிரவிலும் நினைத்துக் கொண்டிருப்பேன் என்பது இத்தொடரின் பொருள்.

படல்ஒல்லா பேதைக்குஎன் கண்:
பதவுரை: படல்-துயிறல்; ஒல்லா-பொருந்தா; பேதைக்கு-பெண்ணுக்கு; என்-எனது; கண்-விழி.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பேதை பொருட்டு என்கண் உறங்குதலை இசையாது.
மணக்குடவர் கருத்துரை: இது மடலேறுவது நாளையன்றே; இராவுறக்கத்திலே மறந்துவிடுகின்றீர் என்ற தோழிக்கு என் கண் உறங்காது ஆதலான் மறவேனென்று தலைமகன் கூறியது.
பரிப்பெருமாள்: பேதை பொருட்டு என் கண்கள் உறங்குதலை இசையா.
பரிப்பெருமாள் கருத்துரை: இது மடலேறுவது நாளையன்றே; இராவுறக்கத்திலே மறந்துவிடுகின்றீர் என்ற தோழிக்கு என் கண் உறங்கா ஆதலான் மறவேனென்று தலைமகன் கூறியது.
பரிதி: என்னை மயல் செய்து கூடாமல் போன பேதைக்கு என் கண்.
காலிங்கர்: மற்று என்னை காரணம் எனின், என்னுயிராகிய அப்பேதை பொருட்டுக் கழிந்த யாமம் எல்லாம் என் கண் படல் ஒல்லா ஆகலான் என்றவாறு.
பரிமேலழகர்: நின்பேதை காரணமாக என் கண்கள் ஒருகாலுந் துயிலைப் பொருந்தா.
பரிமேலழகர் குறிப்புரை: 'பேதை' என்றது பருவம் பற்றி அன்று, மடமை பற்றி. 'இனிக் குறை முடிப்பது நாளை என வேண்டா' என்பதாம்.

'பேதை பொருட்டு என் கண்கள் உறங்குதலை இசையா' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இப்பெண் காரணமாக என் கண்கள் ஒருகாலும் உறக்கம் கொள்ளவில்லை', 'இம்மடந்தைக் காரணமாக என் கண்கள் தூக்கத்தைப் பொருந்தமாட்டா', 'அறியாப் பெண் காரணமாக என் கண்கள் ஒருகாலும் உறங்குதலைப் பெறா', 'என் காதலியை நினைத்திரங்கி என்னுடைய கண்கள் எப்போதும் உறங்குவதே இல்லை' என்றபடி பொருள் உரைத்தனர்.

இப்பெண்ணின் பொருட்டு என் கண்கள் ஒருகாலும் உறங்குதலைப் பெறா என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
அவளைப் பெறும்வரை எப்படித் தூங்கும் என் கண்கள்? என்று காதலன் சொல்வதாக அமைந்த குறட்பா.

மடலூர்தலை உறுதியாக யாமத்தும் உள்ளுவேன்; இப்பெண்ணின் பொருட்டு என் கண்கள் ஒருகாலும் உறங்குதலைப் பெறா என்பது பாடலின் பொருள்.
யாமத்தும் உள்ளுவேன் என்றால் என்ன?

மன்ற என்றது துணிவுப் பொருளில் வந்தது. உறுதியாக என்று பொருள்படும்.
படல்ஒல்லா என்பதற்கு பொருந்தா என்பது பொருள்.
பேதை என்பது ஐந்து முதல் எட்டு வயதுள்ள பெண்ணைக் குறிக்கும் சொல். இங்கு பருவம் குறியாது பெண் என்ற அளவில் நின்றது.

தான் காதல் கொண்ட பெண்ணைச் சந்திக்க முடியவில்லை. காதல் நிறைவேறுவதில் நிறைய இடர்கள் உண்டாயின. இறுதியில் மடலேறுவது ஒன்றே வழி என்று தெளிவுறுகிறான் காதலன். தனது நாணையும் நல்லாண்மையையும் இழந்துதான் மடல் ஊர்தல் மேற்கொள்ள இயலும். அவற்றையும் துறக்கத் துணிந்துவிட்டான். அவளை எப்படியும் அடைந்தே தீர்வது என்று உறுதி கொண்டுவிட்டான். மடலூர்தல் எந்த நேரமும் அவன் சிந்தனையில் உறைந்து நிற்கின்றது. ஊர் உறங்கும் வேளையில் கூட அது பற்றிய நினைப்புத்தான். இதனால் தூக்கமும் தொலைந்தது.
'இவளுக்காக எதையும் செய்வேன். மடல்ஊர்தலின் இழிவையும் ஏற்றுக்கொள்ளத் துணிந்தபின் இரவு பகல் எந்த நேரமும் சிந்தனை எல்லாம் அதுபற்றித்தான். இவளுக்காக என் கண்கள் உறங்குதலும் போயிற்று' என்று வருந்தியுரைக்கிறான்.

யாமத்தும் உள்ளுவேன் என்றால் என்ன?

யாமத்தும் உள்ளுவேன் என்பதற்கு இரவிலும் நினைப்பேன் என்பது பொருள். இங்கு மடல் ஊர்தல் பற்றி இரவிலும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று காதலன் சொல்வதாக அமைந்தது. மடல் ஊர்தல் என்பது இளம் வயதான தலைமகனுக்குப் பல வழிகளில் துயரம் தருவது. உடல் துன்பம் உறுவது மட்டுமல்லாமல் அவன் தனது மானத்தையும் ஆண்மைக் குணத்தையும் இழக்க வேண்டியவனாயிருக்கிறான். ஆனாலும் மடலேறுதல் ஒன்றுதான் இப்பொழுதுள்ள நிலைமையில் ஒரே தீர்வாக உள்ளது. எனவே மடலூர்தல் பற்றிய எண்ணங்கள் இரவு பகல் எந்நேரமும் நினைவில் சுழன்று உளைச்சல் தந்து கொண்டிருக்கின்றன. இரவிலும் நினைப்பதால் தனது தூக்கம் கெட்டுப் போய்விட்டது என்று சொல்கிறான்.

மடலூர்தலை உறுதியாக நள்ளிரவிலும் நினைத்துக் கொண்டிருப்பேன்; இப்பெண்ணின் பொருட்டு என் கண்கள் ஒருகாலும் உறங்குதலைப் பெறாஎன்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நள்ளிரவில் கூட மடலேறுதலையே நினைந்திருப்பேன் என்று காதலன் சொல்லும் நாணுத்துறவுரைத்தல் பாடல்.

பொழிப்பு

மடலேறுதலை நள்ளிரவிலும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்; காதலிக்காக என் கண்கள் தூங்குவதும் இல்லை.பின்னூட்டங்கள் இட்டவரது தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும், குறள்.திறன் அவற்றிற்கு பொறுப்பேற்காது.
கருத்துரைகள் சீர்மைப்படுத்த பின்னர் பதிப்பிக்கப்படும்.