தொழில் காரணமாக நீண்டகாலம் பிரிந்து சென்று திரும்பி வந்துள்ள கணவனை அவனது காதல் மனைவி இன்னும் நெருங்கிச் சந்திக்கவில்லை. எப்பொழுது அருகில் சென்று அவனை அரவணைப்பேனோ என ஏங்கி நிற்கிறாள். பிரிவாற்றாமையில் உண்டான வருத்தத்தை உணர்த்தி ஊடுவதா அல்லது நேராக அவனுடன் கூடிவிடுவதா என்ற மனப் போராட்டம் கொள்கிறாள். அவனை நேரில் கண்டவுடன் அவன் தவறுகள் ஒன்றும் தெரிவதில்லை அவளுக்கு. கண்ணாலேயே தன் மீதான வருத்தத்தைக் காட்டும் அதேநேரம் அவனைத் தழுவிக் கொள்வதை எதிர்நோக்கித் தலைவி பரபரத்துக் காணப்படுவதையும் காதலன் உணர்ந்து கொள்கிறான்.
புணர்ச்சிவிதும்பல்
பிரிவில் சென்றிருந்த கணவன் இல்லம் வந்துவிட்டான். கண்ணுக்கு மையெழுதி மணிமாலை யணிந்து, கைநிறைய வளைஏந்தி, புன்னகை பூத்த முகத்துடன், பெண்மை நிறைந்த பொலிவுடன் விளங்கும் தலைவி தன் காமநோயினைத் தீர்க்குமாறு கண்களால் இறைஞ்சி நின்றாள் எனக் கூறி சென்ற அதிகாரம் முடிந்தது. வீட்டில் மற்றவர்கள் இருந்ததால் கணவனும் மனைவியும் இன்னும் நெருங்கிக் கொள்ளமுடியாதிருக்கிறது, பிரிவுக் காலத்தில் ஒருவரையொருவர் நினைத்து மட்டுந்தான் களிப்படைய முடிந்தது; இப்பொழுது நேருக்குநேர் பார்த்து மகிழ்கின்றனர். தலைவிக்குக் கணவனை நெருங்கிக் காதல் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மிக மேலோங்கி நிற்கிறது. அந்த நிலையில் அவனுடன் ஊடி காம இன்பத்தைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது என நினைவும் வருகிறது. அவள் கண்கள் அவன் செல்லும் பக்கமெல்லாம் சென்று சுழன்று கொண்டிருக்கின்றன. அவனுடன் சிறு சண்டை போடவேண்டும் என மனம் கூற நெஞ்சோ அவனைக் கூடவேண்டும் என்றே விரும்புகிறது. அவனை நேரில் கண்டவுடன் அவனது பழிகள் எல்லாம் மறைந்து போய்விட்டன; அவனைப் பார்ப்பதற்கு முன் அவன் செய்வன எல்லாமே தவறானதாகவே அவளுக்குப் பட்டது. அவனைக் கண்டபின் அவனுடைய தவறுகள் எதுவுமே அவளுக்கு தெரிவதில்லை. எனக்கு இழிவு உண்டாக்ககூடிய அளவு பிரிந்து சென்று துன்பம் தந்தாலும் அவன் மார்பைத் தழுவுதல் எக்காலுத்தும் எனக்குக் களிப்பு தருவதுதான். பொய்த்துப் போகும் என்பதை அறிந்தும் ஏன் இப்பொழுது ஊடி நிற்கவேண்டும்? கூடலுக்கு முன் ஊடல் என்பது உதவாது. இவ்வாறு தலைவியின் எண்ணஒட்டங்கள் செல்கின்றன. அவள் எப்படி அவனைப் பணிகளுக்கிடையே நோக்கிக் கொண்டிருக்கிறாளோ அவ்வாறே அவனும் தலைவியின் மேல் கண் கொண்டவனாகவே இருக்கிறான். அவள் அவனை நோக்கி ஊடல் கொண்டு சினப்பார்வை வீசினாலும் அவன் அரவணைப்புக்காக அவள் துடிதுடித்துக் கொண்டிருப்பதையும் தலைவன் கவனிக்கத் தவறவில்லை. காமம் மலரினும் மென்மையானது. எனவே அதன் செவ்வியைப் பெற பக்குவமாக நடந்து கொள்ளவேண்டும். இவை இவ்வதிகாரம் தரும் செய்திகள்.
இவ்வதிகாரத்துப் பாடல்கள் மகளிரின் உள்ளத்துணர்வுகளில் புதியவற்றை வெளிப்படுத்துவனவாகவும் உளவியல் அடிப்படையில் அமைந்தனவாகவும் உள்ளன.
பனையளவு காமம் கொண்டிருந்தால் தினையளவுகூட ஊடல் கொள்ளக் கூடாது எனச் சொல்லப்படுகிறது. அன்புடை நெஞ்சங்கள் காமம் மிகு நிலையில் கலக்கும்போது, அன்பு நிறைவேயன்றி உள்ள நிறைவும் உயிர் நிறைவும் பெற வாய்ப்பு ஏற்படுகின்றது, அப்படிப்பட்ட காலத்தில் தினையளவும் ஊடுதல் கூடாது என்று தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின் (குறள் 1282) என்று காமஉளவியல் நோக்கில் அறிவுரை தருகிறது.
பிரிவிலிருந்து திரும்பி வந்த காதலனுடைய தவறு நினைந்து ஊட வேண்டும் என்று சென்றாளாம். ஆனால் அவளுடைய நெஞ்சு அதை மறந்து கூடவேண்டும் என்று எண்ணியதாம். ஊடல் கொள்வதா ஊடல் இல்லாமல் கூடி விடுவதா என்ற மனப்போராட்டத்தை சுற்றியே இவ்வதிகாரம் அமைகிறது. ஊடல்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றது என் நெஞ்சு (குறள் 1284) என்ற பாடல் ஊடல் கொள்ள நினைத்த நிலையிலும் உள்ளம் ஒன்றுபட்டிருந்ததைக் காட்டுகிறது. கணவனை நேரில் காணாத போது அவன் செய்யும் தவறுகளே நினைவுக்கு வருகின்றன என்றும் கண்டபோது தவறுகளாக எதுவுமே தெரிவதில்லை என்றும் மேலும் கூறுகிறாள் தலைவி.
காமத்துப்பாலின் பருப்பெருளாக அமைவது மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் (குறள் 1289) என்ற புகழ் பெற்ற பாடல். இது 'காதலில் கடின மனம் இல்லை. காமம் மக்கள் உணர்வுகளுள் மிக மென்மையானது. அதன் மென்மையின் மேன்மையைப் போற்றுவர் சிலருக்கே அதன் சிறப்புத் தன்மைகள் தெரியும்' எனக் கூறுகிறது. பாலியல் பயிலும்போது அதன் முழுச்சுவை காண எவ்வாறு நடந்து கொள்ளவேண்டுமென உளவியல் பாடம் தருகிறது. இடமும், காலமும், நுட்பமும் அறிந்து தக்க பக்குவத்துடன் காம இன்பத்தைத் துய்க்க வேண்டும் என அறிவுரை பகர்கிறது.
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான் விதுப்புற்று (குறள் 1290) என்ற பாடல் இன்பத்திற்கு மாறான துன்பந்தரும் முதிர்ந்த ஊடல் நிலை(துனி)க்கும் காதலனின் அணைப்புக்காக விரையும் விழைவுக்கும் இடையில் தத்தளிக்கும் தலைவியின் உள்ளத்தை உணர்ச்சி மிக்கதாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.